Serial Stories நீயில்லாமல் வாழ்வது லேசா!

நீயில்லாமல் வாழ்வது லேசா!-7

7

‘‘பாப்பா இன்று வஜ்ரம் உன்னை வந்து பார்ப்பதாக சொல்லியிருக்கிறான். உனக்கு எந்த நேரம் ஃப்ரீயாக இருக்கும்டா” சந்திரகுமார் கேட்க, “அப்பா..” பற்களைக் கடித்தாள் சஷ்டிகா.

“நான் வேலையாக இங்கே வந்திருக்கிறேன்பா. இங்கே என்னுடைய பர்சனல் வேலைகளை பார்க்க முடியாது. புரிஞ்சுக்கோங்க. உங்க ஃப்ரெண்டு கிட்டயும் சொல்லுங்க. நான் அவரை சென்னை வந்து மீட் பண்ணுகிறேன்..”

“அதெல்லாம் சொல்லிவிட்டேன்டா. அவன் ஐந்து நிமிடம் ஜஸ்ட் பார்த்துட்டு போயிடுறேன்னு சொல்றான். நீ சாப்பிட ரெஸ்டாரென்ட் போவாயே.. அந்த நேரத்தில் வந்து ரெண்டு வார்த்தை பேசிட்டு போகட்டுமே. அதில் என்னடா இருக்கிறது?” தந்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்த, வேறு வழியின்றி தலையாட்டினாள் சஷ்டிகா.




“சரி.. ஆனால், மீட்டிங் எப்போது ஆரம்பித்து எப்போது முடிகிறது என்று எனக்குத் தெரியாது. மீட்டிங் இல்லாத நேரம் மேடம் எதுவும் ஒர்க் கொடுக்காத நேரம் பார்த்து நான் சொல்கிறேன். முடிந்தால் அப்போது அவர் வரட்டும்..” என்று அந்தப் பிரசனையை முடித்து காலை கட் செய்தாள்.

“பால்கனிக்கு வா..” என்ற நோட்டிபிகேஷன் அவள் போன் ஸ்கிரீனில் மேலேயே இருந்தது. எவ்வளவு தைரியம்! முதல் நாள் இரவு போல் இப்போதும் அவள் மனம் கொதித்தது. இரவு 11 மணி அளவில் வி.கே.வி அவளுக்கு இந்த மெசேஜ் அனுப்பியிருந்தான்.

அதனைத் திறந்து பார்க்காமலேயே விட்டவள், ‘இனி உன் மூஞ்சியில் விழித்தேனா பார்!’ என்று தனக்குள் சூளுரைத்துக் கொண்டு அறைக்கு வெளியே வந்தாள்.

“கொஞ்சமாவது டிரெஸ்ஸை மாற்றலாமே!” பக்கத்து அறையை ஓட்டிக்கொண்டு வெளியில் வந்த ஜெர்சி குறைபாடாக சொன்னாள். சஷ்டிகா குனிந்து தன்னை பார்த்துக் கொண்டாள். பெர் ப்ரூட் நிற சுடிதாரில் கழுத்தைச் சுற்றிலும் பொடிப்பொடியாக வெண்ணிற கற்கள் பதித்த உடை. அஃபீஷியலாக தெரிந்த அதே நேரத்தில் தனித்துவமாக வும் தெரியும் என்று அவள் தேர்ந்தெடுத்து உடுத்தியிருந்தாள்.

“ஏன் ஜெர்சி எப்போதும் அவளை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறாய்?” என்றபடி வந்தாள் சுமேரியா.

“இல்லை மேடம், ஃபாரின் கம்பெனியின் அஃபீஷியல் மீட்டிங். அங்கே இதுபோல் எப்போதும் சுடிதாரிலேயே வந்து நின்றால் எப்படி?”

“ஏன் சுடிதாருக்கு என்ன? நம்முடைய பாரம்பரிய உடை. இன்னும் சொல்லப்போனால் சஷ்டிகா நம் தமிழகத்தின் சேலை கட்டி கொண்டால்கூட சரிதான் என்று சொல்வேன்” சுமேரியா சொன்னதை கேட்டதும் சஷ்டிகாவின் முகம் மலர்ந்தது.

“நிஜமாகவா மேடம்! சேலை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சேலை கட்டிக் கொள்ளவா?”

“கண்டிப்பாக, ஆனால் இப்போது நாம் டிபன் சாப்பிட்டுவிட்டு வந்து விடலாம். பிறகு மீட்டிங்கிற்கு உனக்கு பிடித்த சேலை மாற்றிக் கொள்..”

“ஃபீல் ஃப்ரீ சஷ்டிகா, வா சாப்பிடலாம்” உடன் நடந்து வந்தவளின் உடையை கவனித்தாள் சஷ்டிகா.

சுமேரியா எப்பொழுதுமே அலுவலகத்திற்கு மிகவும் நீட்டான கண்ணியமான உடைகளையே அணிந்து வருவாள். ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் என்று இருந்தாலும் மேலே கோட் ஒன்றை போட்டுக் கொள்வாள். இந்த மீட்டிங் முழுவதுமே அது போன்ற கோட்தான் அணிந்து கொண்டிருந்தாள். இன்று ஜீன்ஸ் கூட இல்லாமல் காலை ஓட்டினாற்போல் பாட்டில் கிரீன் பென்சில் ஃபிட் பேன்ட் அணிந்து மேலே அதே கலர் டி-ஷர்ட் அணிந்திருந்தாள். அந்த டீ சர்ட் மார்பு பகுதியில் மட்டுமே வெளியே தெரியுமாறு மேலே கிரீம் நிற கோட் அணிந்திருந்தாள். ஸ்பிரிங் போன்ற தனது தலைமுடியை கோதி ஒரு பேன்டுக்குள் அடக்கியிருந்தாள்.

அலுவலக கலந்துரையாடலுக்கு வரும் ஒரு உயர்தர கனவானின் தோற்றம். இவருக்கு காரியதரிசியாக உடன் வருபவர் குழைவான எளிமையான வெளிர் நிற பட்டுடுத்தி வந்தால் நன்றாக இருக்கும்தானே! தனது உடைகளில் ஒரு சேலையை அப்போதே செலக்ட் செய்து விட்டாள் சஷ்டிகா.

டிபன் முடித்துவிட்டு மீண்டும் அறைக்குள் வந்தவள், தனக்கு மிகவும் பிடித்தமான அந்த மல்பெரி நிற மென்பட்டை எடுத்து ஆசையுடன் உடுத்திக் கொண்டாள். கூந்தலை நீளமாக பின்னிக் கொண்டு ஹோட்டல் கார்டனில் மெருனும் பிங்கும் கலந்து பூத்திருந்த ரோஜாவை காதோரத்தில் வைத்துக் கொண்டாள். சற்று தாமதமாக மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தவளை அங்கிருந்த எல்லோரும் நிமிர்ந்துபார்ப்பது தெரிய.. ஒரு வகை கூச்சம் வர, வேக நடையுடன் சுமேரியா அருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.

“லுக் ப்ரெட்டி!” சுமேரியா பாராட்ட, “தேங்க்ஸ் மேடம்” என முணுமுணுத்தவளின் கண்கள் அடுத்த டேபிளுக்கு பாய்ந்தது.

நவீனன் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். வி.கே.வி&யோ எப்போதும் போல் முதுகு காட்டி அமர்ந்திருந்தான். அன்றைய மீட்டிங்கில் தங்கள் கம்பெனி கான்ட்ராக்ட் பெற விரும்புவதற்கான காரணங்களை பட்டியலிடுமாறு அமெரிக்க நிர்வாகிகள் கேட்க, எல்லோரும் மும்மரமாக தங்கள் லேப்டாப்பில் டைப் செய்து கொண்டிருந்தனர்.

சுமேரியாவிற்கு போன் வர தன் லேப்டாப்பில் டைப் செய்து கொண்டிருந்தவள் போனை ஸ்பீக்கரில் போட்டாள். “சுமேரியா, உன் அசிஸ்டன்ட்டை இங்கே வரச்சொல். அவளிடம் ஒரு விவரம் கேட்க வேண்டும்” & வி.கே.வி தான்.

சுமேரியா நிமிர்ந்து சஷ்டிகாவைப் பார்க்க, அவள் மறுப்பாய் தலையசைத்தாள். “நான் போகவில்லை மேடம்..”

“ம்கூம், ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்கும். இல்லா விட்டாலும் அப்படி ஏதும் விஷயம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காக  நீ போகத்தான் வேண்டும்!”

எரிச்சலுடன் எழுந்துபோய் சர் என்று நாற்காலியை இழுத்துக் கொண்டு கோபமாக அவன் அருகில் அமர்ந்தாள். ஒரு வார்த்தை என் வாயிலிருந்து வாங்கி விடுகிறாயா பார்க்கலாம் என்ற எண்ணிக் கொண்டாள்.

நவீனன் குறிப்புகள் கொடுக்க, வேகமாக லேப்டாப்பில் டைப் செய்து கொண்டிருந்தவன், “எதற்கு இந்த டிரெஸ்? காலை டிபன் போது கூட ஒழுங்காக தானே உடுத்தியிருந்தாய்?” என்க, திகைத்தாள்.

எவ்வளவு முக்கியமான மீட்டிங்! எத்தனை கோடிகள் ப்ராஜெக்ட்! 6,000 கோடி என்று ஜெர்சி கணக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவ்வளவு முக்கியமான தருணத்தில் உட்கார்ந்துகொண்டு என் உடையை பற்றி கேள்வி கேட்கிறானே! நம்ப முடியாமல் அவனைப் பார்க்க அவன் லேப்டாப்பில் இருந்து கண்களை அகற்றவில்லை.

“உன்னைத்தான் கேட்கிறேன், சுடிதார் பரவாயில்லை ஒத்துக் கொள்ளலாம். இந்தச் சேலை எதற்காக?”

“என் உடை, என் இஷ்டம்!”

“பார் சஷ்டிகா.. இது ஃபேமிலி ஃபங்ஷனோ, ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டியோ இல்லை. இங்கே நமது உடை பிறர் கவனத்தை கவராமல் சாதாரணமாக, அதேசமயம் கண்ணியமாக இருக்கவேண்டும். அஃபிஷியல் மீட்டிங்கில் எதற்கு இந்த படோபடமான உடை?”




அடப்பாவிகளா! சாதாரண சேலையை இப்போது ஆடம்பரத்தில் சேர்த்து விட்டீர்களா? சஷ்டிகா தலையில் கை வைத்துக் கொண்டாள். சங்கோஜத்துடன் நவீனனை பார்க்க, அவன் இவர்கள் சண்டையில் சிறிதும் கவனம் பதிக்காமல் தனது வேலையில் கவனமாக இருந்தான்.

“இன்னமும் அரை மணி நேரத்தில் காபி ப்ரேக் இருக்கும்.அப்போது அறைக்கு போய் உடையை மாற்றிக்கொண்டு வந்துவிடு!”

“இன்று இரவு படுக்கும்போதுகூட இதே டிரஸ்ஸோடுதான் படுக்கப் போகிறேன்” அழுத்தமாய் அறிவித்துவிட்டு எழுந்து போய் சுமேரியா அருகில் அமர்ந்து கொண்டாள்.

“என்னவாம்?” லேப்டாப்பில் பார்வையை பதித்தபடி சுமேரியா கேட்க, “ஒன்றுமில்லை.. என்னிடமிருந்து ஏதாவது தகவல் கிடைக்குமா என்று ட்ரை பண்ணினார். நான் ஒன்றும் சொல்லவில்லை!”

“சரி சரி, அந்த டச் ஸ்கிரீன் சம்பந்தமான டீடைல்ஸ் சொல்லு..” சுமேரியா வேலைக்குள் நுழைய, கேட்ட விபரங்களை எடுத்து கொடுத்தபடி மீட்டிங் ஹாலை கண்களை சுழற்றி பார்த்தாள் சஷ்டிகா.

அன்று அவள் மேல் வந்து மோதியவனை தேடினாள். அவன் பெயர் முரளிதரன். ஆந்திராவில் இருந்து வந்த கம்பெனி ஒன்றில் இருந்தான். இப்போது கண்ணில் படவில்லை.

மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகளில் ஒருவனனான க்ளிம்ஸ் ப்ரெட்ரிக் இவளையே பார்த்தபடி இருந்தான். இவள் பார்வையை சந்தித்ததும் அகலமாக புன்னகைத்து நான்கு விரல்களை அசைத்து ‘ஹாய்..’ என்றான் சத்தமின்றி. திடுக்கிட்ட சஷ்டிகா ஒரு அறிமுக புன்னகையுடன் திரும்பிக் கொண்டாள்.

மீட்டிங் முடிந்து வெளியேறும்போது நவீனனிடம் முரளிதரனை பற்றிக் கேட்டாள். “என்ன ஆனான்? கண்ணிலேயே படவில்லையே!”

“கண்ணால் பார்க்கும் அளவுக்கா இருக்கிறான்?” நவீனன் சொல்ல.. திகைத்தாள்.

“சரியான அடி, ஆனாலும் பாஸிற்கு இவ்வளவு கோபம் வரும் என்று எனக்கு தெரியவே தெரியாது. ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கிறான்!” பொங்கிய சிரிப்புடன் சொன்ன நவீனனை எரிச்சலாக பார்த்தாள்.

“இதென்ன ரவுடித்தனம்? ஒரு பொறுப்பானவர் செய்யும் வேலையா இது?”

“என்ன பொறுப்பில்லாத்தனம் செய்து விட்டேனாம்?” பின்னால் வந்து நின்று வி.கே.வி கேட்க, முகத்தை திருப்பிக்கொண்டு வந்து விட்டாள்.

அன்று மாலை வஜ்ரவேலிடம் இருந்து அவளுக்கு போன் வந்தது. “நீ தங்கியிருக்கும் ஹோட்டல் காபி ஷாப்பில்தான் இருக்கிறேன். வருகிறாயாம்மா?” அவர் கேட்க, நலுங்கியிருந்த தோற்றத்தை லேசாக சீர் செய்து கொண்டு கிளம்பினாள்.

கண்களால் அவரைத் தேடியபடி இருக்க, பின்னால் “பாப்பா” என்ற அழைப்பு கேட்டதும் இதமாக இருந்தது. திருச்செந்தூர் கோவிலில் சந்திரகுமார் அவளை பாப்பா என்று அழைப்பதை கேட்டு வஜ்ரவேலுவும் அப்படியே அழைக்க துவங்கியிருந்தார். ஒரு வாரத்திற்கும் மேலாக அப்பா அம்மாவை விட்டு தனித்திருந்தவளுக்கு இப்போது பாசமாய் அழைத்த இந்தச் செல்ல அழைப்பு மிகவும் பிடித்திருந்தது.

“வாங்க அங்கிள்..” மலர்ந்த முகத்துடன் அவர் முன் அமர்ந்தாள்.

“சேலையில் அழகாக இருக்கிறாய்டா” வஜ்ரவேல் சொல்ல, சஷ்டிகாவினுள் உற்சாகம் வந்தது.

“தேங்க்ஸ் அங்கிள்” என்றவளின் பார்வையில் அவன் பட்டான். வி.கே.வி. அப்போதுதான் காபி ஷாப்பிற்குள் நுழைந்தவனின் பார்வை இவர்கள் இருவர் மேலும் யோசனையாய் படிந்தது. வஜ்ரவேலுவை கூர்மையாக பார்த்தவன் நடந்துபோய் இவர்களை கவனிப்பதற்கு வசதியாக மூலையில் இருந்த டேபிளில் அமர்ந்துகொண்டான்.

சை! பார்த்து விட்டான்! இனி யார் என்னவென்று குடைவானே! சஷ்டிகா சலிப்புடன் பெருமூச்சு விட்டாள்.




What’s your Reaction?
+1
32
+1
12
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!