Serial Stories நீயில்லாமல் வாழ்வது லேசா!

நீயில்லாமல் வாழ்வது லேசா!-10

10

‘‘ஆமாம், உன்னைக் கவிழ்ப்பதை தவிர எங்களுக்கு வேறு வேலை இல்லை பார். சரிதான் போடா..” வஜ்ரவேல் சொல்ல, அவன் மூச்சில் அனல் பறந்தது.

“ஆனாலும் மிஸ்டர் வஜ்ரம், உங்களுடைய திட்டங்கள் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை!”




அவனது அலட்சியப் பேச்சில் அதிர்ந்தாள் சஷ்டிகா. அப்பாவை பெயர் சொல்கிறானே வெறுமையாக பார்த்தாள். இது தனக்கு புதிதல்ல என்பது போல அமைதியாக இருந்தார் வஜ்ரவேல்.

“பெரிய யானையை கவிழ்ப்பதற்கு இந்த சின்ன பட்டாம்பூச்சியா?” ஆட்காட்டி விரலை நீட்டி ஓங்கி அவள் தலையில் தட்டினான்.

சுளீரென வலிக்க, சஷ்டிகா “ஷ்..” என தலையைப் பிடித்தாள். சட்டென அவன் கையை தள்ளிய வஜ்ரவேல், “டேய், அவள் கிட்டே வரும் தகுதிகூட உனக்கு கிடையாது. தள்ளிப் போடா!”

“இல்லாமல் இவளை மடியில் தூக்கி வைத்து கொஞ்சுவேன் என்று நினைத்தீர்களா! ஆங்.. அதுதானே உங்கள் திட்டமும் கூட!”

“ஆமாம்டா, புதைகுழிக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் உன்னை எப்படியாவது மீட்டுவிட மாட்டோமா என்ற சிறு நப்பாசை. அந்த முருகப்பெருமான் சன்னதியில் சஷ்டி விரத வேளையில் சஷ்டிகாவைப் பார்த்ததும் என் மனதில் பட்டுவிட்ட எண்ணம் அது. சரியாகத்தான் இருக்கும் என்று முட்டாள்தனமாக மேலும் மேலும் திட்டங்கள் போட்டேன். ஆனால், உன் வீணாப் போன மகனுக்காக ஒரு அப்பாவியின் வாழ்க்கையை பாழடிப்பாயா என்று அந்த கந்தன் என் மூஞ்சிலேயே அடித்து உணர்த்திவிட்டான். இனி உன் மூச்சுக்காற்று கூட இவள்மீது பட நான் விட மாட்டேன். நாங்கள் இப்போதே கிளம்புகிறோம். வாடா பாப்பா போகலாம்..”

வஜ்ரவேல் சஷ்டிகாவின் கை கோர்த்துக்கொண்டு எழ, அவள் எழாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். “தயவுசெய்து என் கையை விடுங்கள் அங்கிள்..” மரத்த குரலில் பேசினாள்.

“பாப்பா..”

” வேண்டாம் அங்கிள், என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடுங்கள். இந்த அழைப்பு என்னை முட்டாளே என்று கூப்பிடுவதுபோல் தோன்றுகிறது!”

“இல்லாமல் இந்த பாப்பா பெரிய புத்திசாலியாக்கும்!” நக்கல் பேசிய வி.கே.வி இப்போது அந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான். சுவாரசியமாக இவர்கள் இருவரையும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.

“பாப்பா, எனக்கு பெண் குழந்தை கிடையாதுடா, உன்னை நான் பெறாமல் பெற்ற மகளாக நினைத்துத்தான் இப்படி கூப்பிடுகிறேன்!”

வஜ்ரவேல் கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்டாள் சஷ்டிகா. “வேண்டாம் அங்கிள், என்னுடைய வாழ்க்கையில் என்னை தவிர மற்ற எல்லோரும் முடிவெடுக்கிறீர்கள்!”

அவளது பார்வை அப்பா & மகன் இருவரையுமே தொட்டு நகர்ந்தது. சூன்யத்தில் நிலைத்தது.

“இந்த நிமிடத்தில் அடுத்தவர் கையில் குலுங்கும் சோழி போல் என்னை உணர்கிறேன். உங்கள் மனது சொல்லும் நம்பரை உருண்டு புரண்டு தெரிவிக்க நான் சோழி அல்ல. உயிரும் உணர்வும் நிறைந்த பெண். எனக்கென்று ஆசைகள், விருப்பங்கள், தேவைகள் உண்டு. இனி என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். என்னை நானே பார்த்துக் கொள்வேன்!”




“சரிதான்டா, இனியும் நீ இங்கே இருக்க வேண்டாம்.வேலையை ரிசைன் செய்து விட்டு..” முடிக்கும் முன்பே அவரை நோக்கி கையை உயர்த்தி நிறுத்தினாள்.

“அதுவும் என் விருப்பம்தான் அங்கிள். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். என் பாதையை நான் பார்த்துக் கொள்கிறேன்!”

வஜ்ரவேல் தயங்கினார். கொஞ்சம் பயத்துடன் மகனை திரும்பிப் பார்த்தார். காட்டுப்புலியாக பலி வாங்க துடித்துக் கொண்டிருக்கும் இந்த மிருகத்திடம் அப்பாவி மான்குட்டியை விட்டுச் செல்வதா? மகனை நன்கு அறிந்த தந்தையின் உள்ளம் பதறியது.

“உன்னைப் பார்த்துக் கொள்வதாக உன் அப்பாவிற்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்டா!”

“ஆஹா, பிள்ளைகளை முன்னால் அனுப்பிவிட்டு என்னால் வந்து கண்காணிப்பதுதான் இந்த அப்பாக்களின் வேலை போல..” இவர்கள் வாக்குவாதத்தில் வி.கே.வி மிக உற்சாகமாக இருந்தான்.

“நீ வாயை மூடு..” மகனை முறைத்த வஜ்ரவேல், ஆதரவாய் சஷ்டிகாவின் தலையை வருடினார்.

“சரிடா, நீயே முடிவெடு, பிள்ளைகள் நீங்கள் வளர்ந்து விட்டீர்கள். உங்கள் முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் கொடுப்பதுதான் சரியானது. நான் சென்னை கிளம்புகிறேன். உன் கம்பெனி மீட்டிங் முடிந்ததும் நீ வா. நாம் சென்னையில் சந்திக்கலாம்..”

மகன் பக்கம் திரும்பிய வஜ்ரவேல் ஒற்றை விரல் ஆட்டினார். “பாப்பா பூ போன்றவள், உன் மூச்சுக்காற்றுகூட அவள் பக்கம் வீசக் கூடாது!”

“ஏய் பாரு, திரும்பவும் பாப்பாவாம்.. என்ன பேபி இது!” வி.கே.வி நக்கல் செய்ய, சஷ்டிகா வெடுக்கென எழுந்து நின்றாள்.

“மிஸ்டர் கனகவேல்..”

“ஏய், அந்தப் பெயர் சொல்லாதே.. ஒழுங்காக கூப்பிடு” அவனும் கோபத்துடன் எழுந்து நின்றான்.

“உங்கள் பெயர் அதுதானே! அப்படித்தானே கூப்பிட்டாக வேண்டும். மிஸ்டர் கனகவேல், உங்கள் கையில் வைத்து தூக்கிப் போட்டு விளையாட பேபி இல்லை நான். இனி என் விஷயத்தில் தலையிட்டீர்களானால், செக்ஸ் ஹாரஸ்ட்மென்ட் என்று போலீசில் கம்ப்ளைன்ட் கொடுப்பேன்!”

“என்ன..?” வி.கே.வி அதிர்ச்சியாய் பார்க்க, வஜ்ரவேல் வந்த சிரிப்பை உதடு மடித்து கடித்து அடக்கிக்கொண்டார். அதை கவனித்துவிட்ட கனகவேல் ஆத்திரத்துடன் ஒரு எட்டு வைக்க, “ம்..”  என்று அதிகார உறுமலுடன் கையை உயர்த்தினாள். பின்னால் போ என்று கையசைத்தாள்.

“லிமிட்டை தாண்டாதீர்கள் கனகவேல். எனக்காக பேச என் விஷயத்தில் முடிவெடுக்க யாருக்கும் உரிமை இல்லை..” இரு ஆண்களுக்கும் பொதுவாக சொல்லிவிட்டு நிமிர்ந்த நடையுடன் ஹோட்டலை நோக்கி சென்றாள். ஆத்திரமாய் மகனும் பெருமிதமாய் தந்தையும் அவளை பார்த்தனர்.

அடுத்து, “எனக்கு ஏழு மணிக்கு ப்ளைட். நான் கிளம்புகிறேன் மிஸ்டர். கனகவேல்..” என்று மகனை சீண்டிவிட்டு வஜ்ரவேல் செல்ல, வன்மம் நிறைந்த பார்வையோடு இருவரையும் பார்த்திருந்தான் கனகவேல்.




What’s your Reaction?
+1
27
+1
11
+1
2
+1
2
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!