Cinema Entertainment விமர்சனம்

நிபுணன்: திரை விமர்சனம்

சி.ஐ.டி போலீஸ் அதிகாரியான அர்ஜுனுக்கு கீழ் பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இந்த மூவர் குழுவினரும் பல சிக்கல் நிறைந்த குற்ற வழக்குகளை வெற்றிகரமாக முடித்து வர, இவர்களுக்கு சவால் விடும் வகையில் தொடர் மர்ம கொலைகள் நடக்கிறது. கொடூரமான முறையில் சமூக ஆர்வலர் ஒருவர் கொலை செய்யப்பட, அவரை தொடர்ந்து ஒரு மருத்துவர், வழக்கறிஞர் என அடுத்ததடுத்த கொலைகள் அரங்கேற, ஒவ்வொரு கொலையிலும், அடுத்து கொலை செய்ய இருக்கும் நபர் எந்த துறையை சேர்ந்தவர் என்பதையும், கொலை செய்யப் போகும் தேதியையும் கொலையாளி மறைமுகமாக தெரிவிக்கிறார்.




கொலையாளியின் இந்த மறைமுக க்ளுவை புரிந்துக்கொள்ளும் அர்ஜூன், அதை வைத்து வழக்கை விசாரிக்கையில், கொலையாளியின் அடுத்த டார்கெட்டே அர்ஜூன் தான் என்பது தெரிய வரும் போது, அர்ஜூன் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையரங்கே ஷாக் அடித்தது போல் உரைந்துபோக, கொலையாளி யார்? என்று தெரிந்துக் கொல்வதைக் காட்டிலும், கொலைகளுக்கான காரணமும், நேர்மையான போலீஸ் அதிகாரியான அர்ஜூனை ஏன் கொலை செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கான விடையை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஒட்டு மொத்த ரசிகர்களிடமும் தொற்றிக்கொள்ள, அதற்கான விடையை சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையோடு சொல்லியிருப்பது தான் ‘நிபுணன்’ படத்தின் கதை.

சஸ்பன்ஸ் த்ரில்லர் படம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், என்று சொல்லும் அளவுக்கு காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸை வைத்திருக்கும் இயக்குநர் அருண் வைத்யநாதன், சிறு சிறு விஷயங்களையும் திரைக்கதையோடு சம்மந்தப்படுத்தியிருப்பது படத்திற்கு பெரும் பலம்.

ஆக்‌ஷன் கிங் என்ற தனது பட்டப் பெயர் தன்னை தவிர வேறு யாருக்கும் பொருந்தாத வகையில், 150 வது படத்திலும் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கும் அர்ஜுன், பல படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் ஸ்டைலிஸ் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவரது சிஷ்யர்களாக நடித்திருக்கும் பிரசன்னா மற்றும் வரலட்சுமிக்கு மட்டும் அல்ல, அவர்களை இப்படிப்பட்ட வேடத்தில் பார்க்கும் ரசிகர்களுக்கும் அவர்கள் புதிதாக தெரிகிறார்கள்.




கொலைகளுக்கான காரணம் தான் படத்தின் மிக முக்கிய சஸ்பென்ஸ், அந்த சஸ்பென்ஸை கிளைமாக்ஸ் வரை நகர்த்தி வரும் இயக்குநர் கொலையாளி யார்? என்பதில், இவராக இருக்குமோ!, என்று ரசிகர்கள் யூகிக்கும்படி ஒரு கதாபாத்திரத்தை காட்டி வந்து, இறுதியில் வேறு ஒரு கோணத்தில் கொலையாளியை அறிமுகம் செய்வது, படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பு கொடுத்திருக்கிறது.

இதுபோன்ற துப்பறிவு சம்மந்தமான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் நடிகர்கள் அவர்களது நடிப்பைக் காட்டிலும், புத்திசாலித்தனமான மர்மங்களும், அதன் மூலம் கிடைக்கும் விளக்கமும் ரொம்ப முக்கியம். அதை மிகச்சரியாக புரிந்து வைத்துள்ள இயக்குநர் அருண் வைத்யநாதன், மாதத்தை முதலில் எழுதும் அமெரிக்கர்களின் பழக்கத்தை இந்த படத்தில் திரைக்கதையின் திருப்புமுனைக்கான அம்சமாக பயன்படுத்தியிருக்கும் விதம் சபாஷ் சொல்ல வைக்கிறது. இப்படி படம் முழுவதுமே இயக்குநரின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது.

கொலை செய்யப்படுவதை காட்சியாக காட்டாவிட்டாலும், அந்த பிணத்தை முகமூடியோடு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கும் காட்சிகள் அனைத்தையும் படம் பார்ப்பவர்கள் பதறும் வகையில் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா. அவரது ஒளிப்பதிவுக்கு உயிர் கொடுக்கும் வகையில் இசையமைப்பாளர் எஸ்.நவீனின் பின்னணி இசை அமைந்துள்ளது.




இயக்குநர் அருண் வைத்யநாதன் தான் எடுத்துக்கொண்ட கருவுக்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்திருப்பதோடு, காட்சிகளை ரொம்ப ஸ்டைலிஸாக நகர்த்தியிருக்கிறார். இதுவரை வெளியான போலீஸ் படங்களில் இருந்து இப்படம் மாறுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காக அவர் நடிகர்களை காக்கி யூனிபார்மில் காட்டாமல், வேறுவிதமாக காட்டியிருப்பதோடு, ஆக்‌ஷன் கிங்கிடம் இருந்து வெறும் ஆக்‌ஷனை மட்டுமே வாங்காமல் நடிப்பையும் சேர்த்து வாங்கியிருப்பது, கமர்ஷியல் என்ற பெயரில் காதல் காட்சிகளை வைத்து படத்தின் மூடை கெடுக்காமல், படத்தின் தொடக்கும் முதல் முடியும் வரை ரசிகர்களை அங்கும் இங்கும் பார்க்கவிடாமல் கட்டிபோட்டுவிடுகிறார்.

மொத்தத்தில் ‘நிபுணன்’ சுவாரஸ்யம் நிறைந்த விறுவிறுப்பானவனாக மட்டும் இன்றி நேர்த்தியானவனாகவும் இருக்கிறான்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!