lifestyles News

தனி ஒருவராக சாதித்த ருச்சி :எப்படி?

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாநிலமான பீகாரில் இருந்து வந்த ருச்சி வர்மா என்ற இளம்பெண் வெறும் 2.5 லட்ச ரூபாயில் ஆரம்பித்த தனது தொழிலை இன்று 5 கோடி ரூபாய் கொட்டும் வெற்றிகரமான தொழிலாக மாற்றியுள்ளார். பெண் தொழில்முனைவோருக்கு ரோல் மாடலாக மாறியுள்ள ருச்சி வர்மாவின் உத்வேகமூட்டும் கதையை அறிந்து கொள்வோம்.




யார் இந்த ருச்சி வர்மா:

ருச்சி வர்மா, பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி பயிலும் காலத்தில் இருந்தே ருச்சி வர்மாவிற்கு ஓவியம் வரைவதில் இருந்த ஆர்வம், வளர்ந்த பிறகு ஃபேஷன் டிசைனிங் துறை மீது திரும்பியது. மும்பையின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் (NIFT), இந்திய ஆடை வடிவமைப்பு குறித்து கற்றுகொண்டார். என்ஐஎஃப்டி-யில் படித்து முடித்த கையோடு ருச்சி வர்மாவிற்கு பார்பி பொம்மைகளுக்கு ஆடைகளை வடிவமைக்கும் வேலை கிடைத்தது. அதன் பின்னர் இந்தியாவிலேயே பிரபலமான ஆடை வடிவமைப்பு நிறுவனமான வெஸ்ட்சைடில் (Westside) இளம்பெண்களுக்கான ஆடை வடிவமைப்பாளராக பணிக்குச் சேர்ந்தார். இடையில் அவரது கணவருக்கு பணியிட மாற்றம் கிடைத்ததால் மும்பையில் இருந்து டெல்லி என்.சி.ஆருக்குச் செல்ல வேண்டியதாயிற்று. இதனால் ருச்சி வர்மா தனது வேலையை விட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார்.




வீட்டிலேயே உதயமான சொந்த தொழில்:

டெல்லிக்கு குடிபெயர்ந்த ருச்சி வர்மா, வீட்டில் இருந்தபடியே தனது ஆடை வடிவமைப்பு பணியை தொடர முடிவெடுத்தார். அந்த யோசனை மூலமாகவே 2020-ம் ஆண்டு “அருவி ருச்சி வர்மா” என்ற தனது புதிய பிராண்ட்டை உருவாக்கினார். ஆரம்பத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய முடியாததால் தான் வேலை பார்த்து சேர்த்து வைத்த 2.5 லட்சம் ரூபாயை முதலீடு செய்து தனது ஸ்டார்ட் அப் பயணத்தை தொடங்கினார். முதற்கட்டமாக 15 வகையான ஆடைகளை சந்தையில் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் ருச்சி வர்மாவிற்கு, மகப்பேறு காலத்தில் பெண்கள் அணிய பிரத்யேக ஆடைகளை தயாரிக்கும் பிராண்ட்கள் இந்தியாவில் அதிகம் இல்லாததை கவனித்தார். உடனே தனது கவனத்தை மகப்பேறு ஃபேஷன் டிசைனிங் மீது திருப்பிய ருச்சி வர்மா, கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு ஆடைகள் மற்றும் டூனிக்ஸை வடிவமைக்க ஆரம்பித்தார். தனது ஆடைகளுக்கு வரவேற்பு கிடைக்க ஆரம்பித்த நிலையில், டெல்லியில் மகப்பேறு ஆடைகளுக்கான பிரத்யேக கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளார். ஆனால், அந்த சமயத்தில் தான் கொரோனா தொற்று கோரத் தாண்டவம் ஆடியதால் வேறு வழியின்றி வீட்டில் இருந்த படியே ஆஃப் லைன் ஸ்டோரை ஆரம்பித்தார்.




களைக்கட்டிய ஆன்லைன் பிசினஸ்:

15-ல் இருந்து படிப்படியாக 50 விதமான ஆடைகளை அறிமுகப்படுத்திய ருச்சி, Ajio, Myntra, FirstCry மற்றும் Nykaa Fashion தளங்களில் ஆன்லைன் மூலமாக விற்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் வியாபாரம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் சில ஃபேஷன் டிசைனிங் நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் முறையில் வீட்டில் இருந்தபடியே டிசைனிங் செய்து கொடுத்து வந்துள்ளார். கடந்த ஆண்டு தனக்கான சொந்த இணையதளத்தை தொடங்கிய ருச்சி, மகப்பேறு உடைகளுக்கு அடுத்தபடியாக இளம் பெண்களுக்கான உடைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். கொஞ்சம், கொஞ்சமாக வியாபாரமும் நன்றாக சூடுபிடிக்க ஆரம்பித்தது. 2021-22 நிதியாண்டில் அருவியின் முதல் வருமானம் 1.8 கோடி ரூபாய் ஆகும். இந்த ஆண்டு ரூ.5 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் டாடா வெஸ்ட் சைட், ஸ்பென்சர்ஸ் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்தவர் இப்போது தனது திறமையாலும் உத்திகளாலும் குறிப்பிடத்தக்க ஏற்றம் கண்டுள்ளார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!