lifestyles

சுந்தர் பிச்சையை விட பணக்காரர் தாமஸ் குரியன்…யார் இவர்?

சமீபகால கூகுள் நிறுவன வளர்ச்சியில் கூகுள் கிளவுட்-ன் பங்கு முக்கியமானது. ஆனால் இந்த கூகுள் கிளவுட் வளர்ச்சியில் முக்கிய மூளையாக இருந்தவர் ஒரு இந்தியர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். அவர் பெயர் தாமஸ் குரியன். கடவுளின் பூமி என அழைக்கப்படும் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தின் பம்படி என்ற கிராமம் தான் இவரின் சொந்த ஊர். தாமஸ் குரியனின் மேற்பார்வையின் கீழ், கூகுள் கிளவுட்டின் வருவாய் இரு மடங்கிற்கும் அதிகமாகவும், அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தை விட விரைவாக வளர்ச்சி கண்டும் வருகிறது. 2018ல் கூகுள் கிளவுட்டின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார் தாமஸ் குரியன்.

டயான் கிரீனுக்கு பதிலாக தலைமை அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டது போது கூகுள் கிளவுட் குழு உறுப்பினர்களையே அந்த நியமனம் ஆச்சரியப்படுத்தியது. காரணம், இவரின் தாய் நிறுவனம் கூகுள் கிடையாது. கூகுளுடன் ஒப்பிடும்போது வித்தியாசமான கலாச்சாரத்தைக் கொண்ட ஆரக்கிள் நிறுவனத்தில் இருந்து வந்தவர் தாமஸ் குரியன். இதனால் ஆரம்பத்தில் அவரின் பணி நியமனத்தை கேள்வி எழுப்பியவர்கள் நிறைய பேர். இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளில் கூகுள் கிளவுட்டின் வளர்ச்சியில் திருப்புமுனை ஏற்படுத்தி, மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்களுக்கு எதிரான போட்டியில் நிறுவனத்தை முன்னணியில் கொண்டு வந்து தற்போது தனது தலைமை குறித்த அனைத்து அச்சங்களை நீக்கி வருவாயை பெருக்கி காண்பித்து இருக்கிறார் தாமஸ் குரியன். கிளவுட்டின் வருவாய் இரண்டாவது காலாண்டில் 45% அதிகரித்து 4.35 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.




தாமஸ் குரியன்

இதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்றுநோயால் மற்ற நிறுவனங்கள் எல்லாம் இருந்த பணியாளர்களை நீக்க, இவரின் தலைமையின் கீழ் செயல்பட்ட கூகுள் கிளவுட், புதிய பணியாளர்களை வேலைக்கு எடுத்தது. இதுபோன்ற குரியனின் நடவடிக்கைகளால், மற்ற நிறுவனங்கள் எல்லாம் சிக்கலை சந்திக்க கிளவுட் யூனிட் தொடர்ந்து முதலீட்டை விரைவாகப் பெற்றது. மூன்று தசாப்தங்களுக்கும் உயர்மட்ட அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் குரியன். மேலும், 2010ல் அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் ஐந்தாவது தொழில்நுட்ப நிர்வாகியாக இருந்தார்.

அவருக்கு முன், கூகுள் கிளவுட் கம்ப்யூட்டிங்கை ஒரு பொறியியல் மனநிலையுடனும் தொழில்நுட்பத்தின் ஆற்றலுக்கான நம்பிக்கையுடனும் அணுகியது. இருப்பினும், அது அதிக வெற்றியைப் பெறவில்லை. குரியன் பதவியேற்றவுடன், அதனை மாற்றி பழைய சேல்ஸ்மேன்ஷிப் பாணியை பின்பற்றத் தொடங்கினார். இந்த முயற்சி கைகொடுக்க இரண்டே ஆண்டுகளில் வளர்ச்சி இரட்டிப்பானது. ஒரு நேர்காணலில், தனது தலைமைத்துவ பாணி கூகுளில் மாறியதை வெளிப்படுத்தியதோடு, தன்னுடன் பணிபுரியும் நபர்களையும் தழுவிக்கொண்டதாகக் கூறினார் குரியன். நிறுவனத்தின் கவனத்தை வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை ஊழியர்களை ஈர்ப்பதற்காக திருப்பியபோது, கூகுள் தாராளமாக செலவு செய்யத் தொடங்கியது. இதன் விளைவாக மாற்றங்கள் வெகு சீக்கிரமாகவே நடக்கத் தொடங்கின.




தாமஸ் குரியன் யார்?

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் பிறந்த தாமஸ் குரியனின் தந்தை கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும், தாய் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த ஆசிரியர் ஆவார். இவரின் தந்தை தான் அந்தக் குடும்பத்திலேயே கல்லூரி வரை படித்த முதல் நபர். தந்தையே பின்பற்றியே குரியனும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார். அங்கு மின்சார பொறியியலில் பட்டம் பெற்றபின்னர் மெக்கின்சி அண்ட் கம்பெனியின் ஆலோசகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

லண்டன் மற்றும் பிரஸ்ஸல்ஸில் ஆறு ஆண்டுகள் மெக்கின்சி பணியாற்றிய குரியன், அதன்பின்னரே ஆரக்கிள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஆரக்கிள் நிறுவனத்தில் 22 ஆண்டுகள் கோலோச்சியவர், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்புடன், அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார். அப்படி தான் கூகுள் நிறுவனம் அவரை ஆரத்தழுவியது. கூகுள் கிளவுட்டில் குரியன் குழுவில் இப்போது 37,000 பணியாளர்கள் உள்ளனர். இது அவர் பொறுப்பேற்றபோது இருந்ததை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகம்.




article_image4

பொறுப்பேற்ற போது கிட்டத்தட்ட 25,000க்கும் குறைவானவர்களே இருந்தனர். பொறுப்பேற்ற பின் குரியன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் உள்ளிட்டவற்றிலிருந்து முக்கியப் பணியாளர்களை நியமித்தார். மேலும், கூகுளின் முந்தைய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மனப்பான்மை அணுகுமுறையிலிருந்து விலகிய பெருமை குரியனுக்கு உண்டு. முன்னதாக, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் கூகுள் கிளவுட்டை பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் அப்போது கூகுள் கிளவுட் அமேசான் (வலை சேவைகள்) மற்றும் மைக்ரோசாப்ட் (அஸூர்) ஐ விட பின்தங்கியிருந்தது. இதனால், கூகிள் கிளவுட் 2020 ஆம் ஆண்டில் 5.6 பில்லியன் டாலரையும், Q1 FY2021 இல் 974 மில்லியன் டாலரையும் இழந்தது. ஆனால் அதேநேரம் அமேசான் வெப் சர்வீசஸ் 4.16 பில்லியன் டாலர் லாபத்தை ஈட்டியுள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

பின்னர், குரியனின் தலைமையின் கீழ், கூகுள் கிளவுட் அதன் சந்தை பங்கை 2 சதவீதம் அதிகரித்தது. தொடர்ந்து அவரின் செயல்பாடுகள் வரவேற்கதக்கதாக அமைந்து வருகிறது. இந்த வளர்ச்சியின் காரணமாக கூகுள் கிளவுட் இரண்டாவது அல்லது முதல் இடத்திற்கு சென்றால், கூகுளின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக, அதாவது சுந்தர் பிச்சையின் இடத்துக்கு குரியன் வருவது உறுதி என்கிறார்கள் கூகுளின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிப்பவர்கள்!




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!