Serial Stories

சரணடைந்தேன் சகியே-7

7

“ஜப்பானுக்கா.. இனி உங்கள் வாழ்க்கையில் ஜப்பானை மறந்து விடுங்கள் ஆன்ட்டி..” பாலகுமரன் உறுதி தெரிவித்துக் கூற,

“எங்கள் நாட்டிற்கு நாங்கள் போகிறோம்..” பதில் கொடுத்தாள் சஸாக்கி..

“உங்கள் நாடு வேண்டுமானால் ஜப்பானாக இருக்கலாம்.. என் குழந்தையின் நாடு இந்தியா.. தமிழ்நாடு.. நீங்கள் இருவரும் உங்கள் நாட்டிற்கு போகலாம்.. என் குழந்தை என் நாட்டில் என்னுடன் தான் இருப்பான்.. அம்மா வாங்கம்மா.. கொஞ்சம் வெளியே போய்வருவோம்..” தாயை அழைத்துக் கொண்டு வெளியே போய்விட்டான் பாலகுமரன்..




“இப்படி நடக்குமென்று எனக்கு தெரியும்மா அதான் அவர்களுக்கு தகவல் தர வேண்டாமென்றேன்.. ஏன்மா இப்படி செய்தீர்கள்..?” சஸாக்கி துயரமாய் கேட்க, சீஸூகோ பெருமூச்சு விட்டாள்..

“வேறு வழியில்லைம்மா..”

“என்ன நடந்தது குமரா..?” தாயின் கேள்வி பாலகுமரன் எதிர்பார்த்ததுதான்..

“ப்ச்.. சொல்கிறேன்மா.. இப்போதல்ல.. நம் வீட்டிற்கு போய் எல்லாம் சொல்கிறேன்.. இப்போது என் மனம் ஒரு நிலையில் இல்லை..”சஸாக்கி ஜப்பான் போவதாக சொன்னது பாலகுமரனை மிகவும் பாதித்திருப்பதை அபிராமி உணர்ந்தாள்..

“எல்லாம் நல்லபடியாக முடிந்ததா பாலா..” கேட்டபடி வந்தான் கிரிதரன்..

“ம்.. எனக்கு ஆண் குழந்தைடா..” பெருமையாய் சொன்னான் பாலகுமரன்..

“கங்கிராட்ஸ்டா… ஆனால் எதற்குடா இந்த மறைவான குழந்தை பிறப்பு..? அத்தோடு இது உனக்கு கூட தெரியாது போலவே..”

“ஆமாம் சஸாக்கி குழந்தை உண்டானது எனக்கு தெரியாது.. தெரிந்திருந்தால் அவளை தனியே விட்டிருக்க மாட்டேன்..”

“அந்த பொண்ணு பாவம்டா.. ரொம்ப வீக்காக இருக்கிறார்களாம் பிரசவத்தில் கத்தக் கூட அவள் உடம்பில் சக்தி இல்லையாமே.. பிரேமா சொன்னார்கள்..”

“ம்..” வேறுபதிலில்லாமல் நடந்தவன்..

“அவர்கள் இங்கே எத்தனை மாதங்களாக செக்கிங் வருகிறார்கள்..?”

“நான்கு மாதங்களாக அதற்கு முன் திருச்சியில் இருந்திருக்கிறார்கள் அங்கே செக்கப் செய்த டீடெயில்ஸ் கொடுத்தார்கள்.. அதனால் இங்கே தொடர்ந்தோம்..”

“அவர்களுடன் வேறு யார் வந்தார்கள்..?”

“யாருமில்லை தாயும், மகளுமாக அவர்கள் இருவர் மட்டும்தான்.. இங்கேதான் பக்கத்தில்தான் ஏதோ வீடெடுத்து தங்கியிருக்கிறார்கள் போல.. அந்த அட்ரஸ்தான் கொடுத்திருக்கிறார்கள்.. பிரசவத்தில் சிக்கலென்றதும் குழந்தையின் தந்தையின் அட்ரஸ் கண்டிப்பாக வேண்டுமென்றதும் உனது அட்ரஸ் எழுதி கொடுத்தார்கள்..”

“ம்.. நான் அவர்களை என்னுடன் சென்னைக்கு அழைத்து போக போகிறேன் கிரி..”

“ஆனால் அது உனக்கு.. உன் கேரியருக்கு..”

“ப்ச்.. என் குழந்தையை விட என்னடா எனக்கு கேரியர்..?” நண்பனுக்காக சொன்னானோ தாய்க்காக சொன்னானோ, பாலகுமரனின் குரல் எஃகிரும்பாய் ஒலித்தது..

“உறுதியாகத்தான் இருக்கிறாயா குமரா..?” கிரிதரன் போகவும் அபிராமி கேட்டாள்..

“நூறு சதவிகித உறுதியுடன் இருக்கிறேன்மா..” மகனின் அழுத்த குரலில் பெருமூச்செறிந்தாள்..

“குழந்தையை கூட வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் வரமாட்டோம்..” தீர்க்கமாக சொன்ன சஸாக்கி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாள்..மடியிலிருந்து குழந்தையை கட்டில் மேல் போட்டு விட்டு சஸாக்கி இதனை சொல்ல, மற்ற மூவரும் நம்ப முடியாமல் அவளை பார்த்தனர்..

“இந்த குழந்தைக்காகத்தானே என்னை ஏற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உங்களுக்கு.. அது வேண்டாம்.. இந்த குழந்தை போனதோடு என் வாழ்க்கை நிம்மதி எனக்கு கிடைக்கட்டும்.. இந்த குழந்தை எனக்கு தேவையில்லை எடுத்து போங்கள்..”அபிராமி அவளை நம்ப முடியாமல் பார்த்தாள்..

என்ன பெண் இவள்..?“சஸி அப்படி சொல்லாதேம்மா.. அது உன் குழந்தை.. அந்த குழந்தையை விட்டு எப்படி உன்னால் இருக்க முடியும்..?” சீஸூக்கோ மகளை சமாதானபடுத்த முயல விரைப்பான அவளது தலை தாழவில்லை..




“எத்தனையோ இழப்புகளை தாங்கிக் கொண்டு தானேம்மா இருக்கிறேன்.. அத்தோடு இதையும் தாங்கி விட்டு போகிறேன்..” என்றவள் பாலகுமரனின் பார்வை தன் முகத்தில் கூர்மையாக பதிவதை உணரவும்..

“நம் அப்பாவை இழந்தும் நாம் இன்னமும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம்..” என்றாள்..

“அது முடிந்த கதையம்மா.. உன் அப்பா இறந்த காலம்.. இது அப்படி அல்ல.. உன் குழந்தையே உன் எதிர்காலம்.. குழந்தை வேண்டாமென்றால் எப்படிம்மா..?”

“என்னை வைத்துதானேம்மா.. எனக்காகத்தானேம்மா குழந்தை… அந்த குழந்தையால் என் நிம்மதி பாழாகிறதென்றால் அந்த குழந்தை எதற்காகம்மா.. அவர்களே எடுத்து போகட்டும்.. நாம் இருவருமாக ஜப்பானுக்கு போய் ஒரு புது வாழ்வை தொடங்குவோம்..”

“உன் வாழ்க்கை முடிவை நீயே எடுக்கும் காலகட்டம் முடிந்துவிட்டது சஸாக்கி.. எப்போது என் குழந்தையை உன் வயிற்றில் தாங்கினாயோ அப்போதே உன் வாழ்க்கை என் கையில் வந்துவிட்டது நீயும், குழந்தையும் என்னுடன் என் வீட்டிற்கு வரத்தான் போகிறீர்கள்..” பாலகுமரனின் பேச்சில் சஸாக்கி ஆத்திரமானாள்..

“என் அம்மாவிற்கு யாருமில்லை.. அவர்களை தனியாக எங்கேயும் அனுப்ப மாட்டேன்..”

“இதுதான் உன் பிரச்சனையெனில் உன் அம்மா நம்முடன் வருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை..”




“இல்லை.. இல்லை அது சரியாக இருக்காது.. நீங்கள் சஸாக்கியையும், குழந்தையையும் உங்களுடன் அழைத்து செல்லுங்கள்.. நான் ஜப்பானுக்கே போய்விடுகிறேன்..” சீஸூகோ இடையில் பேசினாள்..

“மம்மா இனி ஜப்பானில் போய் என்ன செய்ய போகிறீர்கள்..? உங்களை நான் அனுப்பமாட்டேன்.. இங்கே பாருங்கள் சார் இதோ உங்கள் குழந்தையை உங்களிடம் சேர்த்துவிட்டேன் எடுத்துக் கொண்டு போங்கள்.. எனக்கு என் அம்மா வேண்டும்.. நான் அவர்களுடன் போகிறேன்..”

“ஏய் என்னை பார்த்தால் உனக்கு பைத்தியக்காரனாக தெரிகிறதா.. அப்போதிலிருந்து அதுதான் முடியாது முடியாதென்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. உன் இஷ்டம் போல் பேசிக் கொண்டே போகிறாயே.. என்ன சொன்னாய்..? சாரா..? வாயை மூடப் போகிறாயா இல்லையா..?”அடித்து விடுபவன் போல் கையை உயர்த்தி வந்த பாலகுமரனின் கோபத்தில் சஸாக்கியின் மெல்லிய உடல் அதிர்ந்து தூக்கி போட்டது.. பரக்க பரக்க பார்த்தபடி அவள் விழிக்க, அபிராமிக்கே அந்நேரம் அவள் பரிதாபமானவளாக தோன்றினாள்..சீஸூகோ மகளை நெருங்கி ஆதரவாக அணைத்துக் கொண்டாள்..

“அதட்ட வேண்டாம்.. சஸி ரொம்ப பலவீனமாக இருக்கிறாள் தாங்கமாட்டாள்.. நீங்கள் சொன்னபடி நாங்கள் நடந்து கொள்கிறோம்..” என்றாள்..கீழே கிடந்த குழந்தை தன் வயிற்றை அன்னைக்கு நினைவூட்டியபடி அழத்துவங்க..

“பிள்ளையை கவனி..” கையசைத்து விட்டு பாலகுமரன் வெளியேறினான்..

“எதற்கு இத்தனை கோபம் குமரா..?” மகனின் பின்னாலேயே வந்து கேட்டாள் அபிராமி..

“ப்ச்.. குழந்தையை விட்டு விட்டு போகிறே னென்றால் எப்படி அம்மா.. எந்த தாயாவது இப்படி பேசுவாளா.. இவளை அடிக்காமல் என்ன செய்ய சொல்கிறீர்கள்..?”

“அவள் சிறுபிள்ளைத்தனமாக தெரிகிறாள்.. மிகவும் சிறு வயதாக.. அவள் வயது என்ன குமரா..?”

“ப்ச்.. ரொம்பவும் மெலிந்த விட்டாள்மா அதுதான் பார்க்க அப்படி தெரிகிறாள்.. ஆனால் இருபத்தி மூன்று வயதாவது இருக்கும் அவளுக்கு..”

“ஓ..” இப்போது அபிராமிக்கு சிறு நிம்மதி.. சஸாக்கியின் தோற்றம் அவளது குறைந்த வயதை சொல்ல பயந்தபடி இருந்தாள் அவள்..

“இருவருமாக நன்றாக தமிழ் பேசுகிறார்களே.. தமிழர்கள் தானோ..?”“அப்படித்தான் போல..” பதிலளித்த மகனை விசித்திரமாக பார்த்தாள்..




What’s your Reaction?
+1
23
+1
13
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!