Serial Stories

சரணடைந்தேன் சகியே-6

6

“ஆ.. ம்மா..” சஸாக்கியின் அலறல் உள்ளே கேட்டுக் கொண்டிருக்க, அபிராமியும், பாலகுமரனும் வெளியே சிறு தவிப்புடன் நின்றிருந்தனர்.

“எனக்கு ஒன்றும் தெரியவில்லைம்மா.. என் மகள் ரொம்ப கஷ்டப்படுகிறாள்.. பாலா கூடவே உங்களையும் பார்த்தது எனக்கு தெய்வத்தை பார்த்தது போல் இருக்கிறது..” சீஸூகோ அபிராமியை கையெடுத்து கும்பிட அவள் கைகளை ஆதரவாக தட்டிக் கொடுத்து உள்ளே அனுப்பி வைத்திருந்தாள் அபிராமி..

டாக்டர் பிரேமா உடனே வர, உடன் நர்சுகளும் தாதிகளுமாக அந்த இடம் பரபரப்பானது.. ஆனால் ம்ஹூம்..“தலை திரும்பலை மா.. அத்தோடு அந்த பெண் கொஞ்சமும் பிரசவத்திற்கு ஒத்துழைக்க மாட்டேங்கிறா.. பேசாமல் ஆப்ரேசன் செய்து விட வேண்டியதுதான்..” பிரேமா வெளியே வந்து இவர்களிடம் சொல்ல அபிராமி மறுத்தாள்..

“வேண்டாம் டாக்டர்.. இன்னும் கொஞ்ச நேரம் டிரை பண்ணலாம்.. நான் அந்த பெண்ணிடம் பேசுகிறேன்..” அபிராமி உள்ளே போனாள்..

“சார் லேபர் வார்டு.. ஜென்ட்ஸ் நாட் அலவ்டு..” அம்மாவின் பின்னாலேயே உள்ளே போக போன பாலகுமரனை தடுத்தாள் ஒரு நர்ஸ்..

“நான் அந்த குழந்தையின் அப்பா.. எனக்கு உரிமை இருக்கிறது..” அழுத்தமாக தெளிவாக சொன்னபடி உள்ளே வந்தான் பாலகுமரன்..கண்டிப்புடன் தன்னை பார்த்த அன்னையிடம்.. “இரண்டே நிமிடங்கள் மா..” என அனுமதி வாங்கிக் கொண்டு, வலது கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க, படுக்கையில் புழுவாக நெளிந்து கொண்டிருந்த சஸாக்கியின் அருகில் சென்றான்..தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்த அவளது கண்ணீரை தன் கைகளால் அழுந்த துடைத்து, ஒட்டிக் கிடந்த அவள் கன்னத்தை இரு கைகளாலும் அழுந்த பற்றி அவள் முகத்தை தன் முகத்திற்கு நேராக தூக்கினான்..

“சகி.. இதோ இங்கே பார்.. என்னை பார்.. நம் குழந்தை, வெளி உலகத்தை பார்க்க போராடிக் கொண்டிருக்கிறது.. நீ அதற்கு அனுமதி கொடுக்க வேண்டாமா..? உன் ஒத்துழைப்புதானே நம் குழந்தையை உலகுக்கு கொண்டு வரும்.. ஒரு தாயாக நீயும் போராட வேண்டாமா..? நம் குழந்தை சகி.. நம் ரத்தம் நம் கைகளில் வர வேண்டாமா..? போராடும்மா.. சீக்கிரமே நம் குழந்தையை வெளிக் கொண்டு வந்து என் கைகளில் கொடு.. சரியா.. நான் வெளியே காத்துக் கொண்டிருக் கிறேன்..”அழுத்தமாய் அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு கலங்கிய கண்களுடன் வெளியே போனான்..

அபிராமி ஆச்சரியமாக வெளியே போன மகனை இதுவரை பார்க்காத அவளது மகனை பார்த்தபடி இருக்க, சஸாக்கியின் அலறல் அவள் கவனத்தை திருப்பியது..அத்தனை நேரமும் அவனது பேச்சுக்களை கேட்டபடி அமைதியாக இருந்தவள், திடுமென மீண்டும் வலி தாக்க அலறினாள்.. இந்த முறை தன்னிஷ்டத்திற்கு உருண்டு புரளாமல் டாக்டர் சொன்ன விபரங்களின் படி ஜாக்கிரதையாக உடலை புரட்டினாள் மூச்சை இழுத்து பிடித்து தன் உடலின் பலத்தையெல்லாம் உபயோகித்தாள்..

“குழந்தை தலை திரும்புகிறது..” பிரேமா ஸ்கேனில் பார்த்து குதூகலித்தாள்..“அப்படித்தான்.. அப்படித்தான்..” அபிராமியும், சீஸூகோவும் அவளுக்கு ஆதரவளிக்க, இப்போது சஸாக்கியின் உடல் அவள் சொன்னதை கேட்டது.. பத்தே நிமிடங்களில் புத்தம் புதிய உயிரொன்றை உலகிற்கு தந்து விட்டு பிரசவ அயர்ச்சி தாங்காமல் மயங்கினாள் அவள்..அபிராமி ஆவலுடன் குழந்தையை கைகளில் அள்ளிக்கொள்ள, சீஸூக்கோ பதட்டத்துடன் மகளை பார்த்தாள்..

“டயர்ட்நெஸ்தாம்மா.. பயப்பட வேண்டாம்..” டாக்டர் அவளுக்கு ஆறுதல் கூறினாள்..குளிப்பாட்டி எடுத்த குழந்தையை துண்டில் பொதித்து நர்ஸ் அபிராமி கையில் தர, அவள் குழந்தையை தூக்கிக் கொண்டு பாலகுமரனிடம் வந்தாள்..

“குமரா..”இளஞ்சிவப்பாய் சிப்பி இமை மூடி பஞ்சுப் பொதியென தாயின் கையில் இருந்த தன் குழந்தையை பார்த்ததும் பாலகுமரனிடம் உடல் சிலிர்த்தது.. ஆட்காட்டி விரல் நீட்டி குழந்தையின் கன்னம் தொட்டான்..

“என்ன குழந்தைமா..?”

“ஆண்குழந்தை..”

“சஸாக்கி எப்படி இருக்கிறாள்..?”

“தூங்குகிறாள்..”குழந்தையின் தலை வருடிய மகனின் கை நடுக்கத்தை பார்த்தவள் நிமிர்ந்த போது கண்ணீர் வடிந்திருந்த மகனின் கன்னங்களை பார்த்தாள்..

“குமரா என்னடா இது..?”

“என் குழந்தைம்மா..” ஆவலுடன் குழந்தையை வாங்கிக் கொள்ள கை நீட்டியவனை அமர வைத்து ஜாக்கிரதையாக அவன் மடியில் குழந்தையை இட்டாள்..

“உன் குழந்தை..?”




“ஆமாம் அம்மா.. என் மகன்..” பாலகுமரனின் நெகிழ்வு அபிராமிக்கு ஆச்சரியத்தை தந்தது..இப்படியெல்லாம் நெகிழ்பவன் இல்லை அவள் மகன்.. மிகுந்த வைராக்கியமானவன்.. தன்னையே தன்னிடம் காட்டிக்கொள்ள மாட்டான் என மகனை பல தடவை நினைத்திருக்கிறாள்..எத்தனையோ பெரிய ஆட்களையெல்லாம் இந்த பாசம் குழந்தைகளாக்கி விடுமே… அது உலக நடைமுறைதானே.. தன் மகனும் இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறானா..?ஆனால்..

திருமணம் முடிக்காமல், சடங்குகள் செய்யாமல் மனைவியுடன் களித்து வாழாமல், நேரிடையாக குழந்தையை மட்டும் கையில் வைத்துக் கொண்டு நெகிழ்கிறானென்றால்.. அந்த தாயால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..படிப்படியாக தனது குழந்தையின் வாழ்வேற்றத்தை காண காத்திருப்பவள் தானே தாய்.. இடையில் சில பக்கங்கள் கிழிந்து காணப்படும் தன் மகனின் வாழ்வை அபிராமியால் முழுமனதுடன் ஒப்ப முடியவில்லை..

பாலகுமரனோ எந்த கவலையுமின்றி தனது குழந்தையை தொட்டு பார்க்கவும், உணர்ந்து பார்க்கவுமாக தனது தந்தைமையை கொண்டாடிக் கொண்டிருந்தான்..மெல்லிய குரலில் சிணுங்கலை ஆரம்பித்து திடுமென சத்தம் உயர்த்தி குழந்தை அழ ஆரம்பிக்க பதறினான்..

“அம்மா.. அழுறான்மா.. ஏன்மா..?”

“கொண்டா குமரா.. பசியாயிருக்கும்..”

“பீட் பண்ண சொல்லுங்கம்மா..” அந்த பக்கமாக நடந்த நர்ஸ் சொல்லியபடி செல்ல, அபிராமி குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே போனாள்..

“நீ போய் இவர்கள் தங்குவதற்கான அறையை பார்..”உயர் வகுப்பு அறையொன்றை அந்த ஆஸ்பத்திரியில் ஏற்பாடு செய்து விட்டு பாலகுமரன் திரும்ப வந்த போது குழந்தை உறங்க தொடங்கியிருந்தான்..

“நைட் இங்கே தங்க ஜென்ட்ஸ் அலோவ்டு கிடையாது சார்..” என சொல்லப்பட்டு விட மனமின்றி குழந்தையை பார்த்தபடியே வெளியே தங்குவதற்கு போனான்..

“நைட் தூங்கினானா அம்மா..?” கேட்டபடி மிக அதி காலையில் வந்து நின்ற மகனை முறைத்தாள் அபிராமி..

“நீ தூங்கினாயா இல்லையா..?”

“நல்ல தூக்கம் எனக்கு.. இதெல்லாம் குட்டிக்காக வாங்கி வந்தேன்..” கை நிறைய சாமான்களை சுமந்து வந்து நின்றவனின் பார்வை பெட்டில் திரும்பி அமர்ந்து குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டிருந்த சஸாக்கி மீது இருந்தது..

“இந்த அதிகாலையில் எந்த கடை சார் திறந்து வைத்திருந்தார்கள்..?” நர்ஸ் ஆச்சரியப்பட சீஸூக்கோ நிறைவாய் புன்னகைத்தாள்..

“அதெல்லாம் நிறைய கடைகள் இருக்கிறது சிஸ்டர்.. நீங்கள் சொல்லுங்கள் எப்போது என் மகனை என் வீட்டிற்கு நான் கூப்பிட்டு போகலாம்..?”

“அதெல்லாம் டாக்டர் வந்துதான் சொல்வார்கள் சார்..”

“மம்மா டாக்டர் வரவும் நமது வீட்டிற்கு எப்போது போகலாம் என விசாரியுங்கள்.. அத்தோடு இந்த மாதமே நாம் ஜப்பான் கிளம்புகிறோம்.. அதற்கான ஏற்பாடுகளையும் செய்யுங்கள்..”சஸாக்கி குரல் உயர்த்தி அறிவிக்க அந்த இடம் அமைதியானது.. மகனின் முகத்தை பார்த்த அபிராமி குழம்பினாள்.. அங்கே கோபம் பொங்கிக் கொண்டிருந்தது.




What’s your Reaction?
+1
21
+1
13
+1
3
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!