Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே-5

5

“டேய் கிரி என்னடா உளர்ற..?” பாலகுமரன் பற்களை நறநறத்தான்..

“எனக்குமே குழப்பம் தான்டா.. அதனால்தான் உன்னை நேரடியாகவே வரச்சொன்னேன்..”

“கிரி உனக்கு என்னை எனது சமூக அந்தஸ்தை தெரியும், அதனை கெடுக்கவென்றே இதுபோல்..” கிரிதரன் இடையிட்டான்..

“நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன் பாலா.. ஆனால்.. அந்த பெண், அவளது அம்மா.. நீ ப்ளீஸ் இங்கே வாயேன்..”

“யார் அவள்..? அவள் பெயர் என்ன..?”“அவள் பெயர் சஸாக்கி என கொடுத்துள்ளாள்.. அவளது அம்மா பெயர் சீஸூகோ..”பாலகுமரனின் முகத்தில் அதிர்வு அப்பட்டமாய் தெரிந்தது.. முன் நெற்றி சடுதியில் வேர்த்து வியர்வை வடியத் துவங்கியது.. கண்கள் சிவந்தன..சட்டென ஸ்பிரிங் போல் துள்ளி எழுந்தான்..

“அம்மா நான் பாண்டிச்சேரி போய்விட்டு வருகிறேன்..” அவசரமாக வாசலுக்கு ஓடியவன் திரும்ப வந்து சுற்று முற்றும் தேட டீப்பாய் மேல் கிடந்த கார் சாவியை எடுத்து அவன் கையில் கொடுத்தாள் அபிராமி..

“நானும் வருகிறேன் குமரா.. போகலாம்..”

“அம்மா..” தயங்கியவனை..

“என்ன அபவாதம் செய்து வைத்திருக்கிறாய் என தெரியவில்லை.. அந்தப்பெண் உண்மையா பொய்யா தெரியவில்லை.. நானும் வரத்தான் செய்வேன்.. எனக்கு எல்லாம் தெரியவேண்டும்..”அந்த நேரத்தில் அன்னையை மீறும் தைரியம் பாலகுமரனுக்கு வரவில்லை.. சரியென தலையசைத்தான்.

“கார்த்தி வீட்டை பார்த்துக்கோம்மா..” மகளிடம் சொல்லிவிட்டு அபிராமி வாசலுக்கு போவதற்குள் மூன்றாவது கியருடன் உறுமிய நிலையில் இருந்தது வாசல் கார்.. அபிராமி ஏறியமர்ந்த உடன் டாப் கியருக்கு போய் தோட்டாவாக பாய்ந்தது..

“சஸாக்கி.. எங்கே சந்தித்தாய் அந்த பெண்ணை..?” நேர் பார்வையாக ரோட்டை பார்த்தபடி காரோட்டிக் கொண்டிருந்த மகனிடம் விசாரித்தாள் அபிராமி..

“ஜப்பானில்..” பாலகுமரன் வேகத்தை கூட்டினான்..

“ஜப்பான் பெண்ணா அவள்..?”




“தெரியாது..” மகனின் பதிலில் அன்னை குழம்பினாள்.

“குமரா.. என்னடா இது..?” அதட்ட, பாலகுமரன் எதிரே வந்த ஒரு காரை தவிர்க்க தன் காரை அதிகம் ஒடிக்க கார் சாலையை விட்டு ஓரம் இறங்கி குலுங்கி நின்றது..

“சாரிம்மா எனக்கு டென்சன்..” வேகமாக திரும்பி அன்னைக்கு சீட் பெல்ட் போட்டு விட்டவன், தனக்கும் போட்டுக் கொண்டான்.. சர்ரென காரை ரிவர்ஸ் எடுத்தவன் மீண்டும் பறந்தான்..அபிராமி அதன் பிறகு பேசவில்லை..

“பார்த்துடா குமரா..” அடிக்கடி எதிர் வரும் வாகனங்கள் குறித்த கவனப்படுத்தலை தவிர மகனிடம் வேறு எதுவும் பேசவில்லை..மூன்றரை மணிநேர பயணத்தை இரண்டே மணி நேரத்தில் முடித்தவன், மருத்துவமனைக்குள் கார் டயர் தேய தேய க்ரீச் ஓசையுடன் காரை திருப்பினான்..பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு போனை கையில் எடுத்தான்..

“கிரி நான் வந்துட்டேன்.. லெப்ட்ல.. போர்த் என்ட்ரன்சா.. யா..” வழி கேட்டபடி அபிராமியின் கையை பற்றிக் கொண்டு நடந்தான்..

“வணக்கம்.. இங்கே சஸாக்கி என்ற பெண் டெலிவரிக்காக..” ரிசப்சனில் விசாரித்துக் கொண்டிருந்த போது,“மூன்றாவது மாடியில்.. மெட்டரனிட்டி வார்டில் இருக்கிறாள்.. வாங்க வணக்கம்..”பின்னால் கேட்ட பெண் குரலில் இருவரும் திரும்பினர்..வணங்கியபடி நின்ற அந்த பெண்ணை பாலகுமரனுக்கு துளியும் அடையாளம் தெரியவில்லை..

“நீங்கள்..?”

“சீஸூகோ.. சஸாக்கியின் அம்மா..” அவள் சொன்ன பிறகும் பாலகுமரனிடம் அறிமுகசாயல் வரவில்லை..

“நீங்களா..?” இன்னமும் குழம்பினான்..




“நீங்கள் அன்று பார்த்ததுதான் ஒரு வகையில் வேசம்.. இதுதான் உண்மையான நான்..” என்ற சீஸூகா இளம்பச்சை காட்டன் புடவையில் வழுவழுவென வாறி முடித்த கொண்டையில், கழுத்தில் பவளமாலை ஒன்றுடன் அவசர புன்னகையோடு நின்றாள்..

“எல்லா விபரங்களும் தெளிவாக சொல்கிறேன்.. முதலில் சஸாக்கியை பார்க்கலாமா.. மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள்..”அவளது வேண்டலாய் ஒலித்த குரலுக்கு தாய், மகன் இருவரிடமும் ஒரு பரபரப்பு வந்தது..

“என் அம்மா…” சீஸூக்கோவிற்கு அறிமுகம் செய்தபடி வேகமாக அவளுடன் லிப்ட் அருகே வந்த போது அதனுள்ளிருந்து கிரிதரன் வந்தான்..

“பாலா வந்துவிட்டாயா..? உன்னை அழைத்து போகத்தான்…”  என ஆரம்பித்தவன் அவர்களுடன் சீஸூக்கோவை பார்க்கவும் தலையாட்டிக் கொண்டான்.

“மீட் பண்ணிவிட்டீர்களா..?”

“ம்.. எங்கே..?” இறுக்கமாக இருந்தது பாலகுமரனின் குரல்..

“மூன்றாவது மாடி..”

“என்ன பிரச்சனை..?” அபிராமி கேட்டாள்..

“பேபி தலை திரும்ப மாட்டேங்குது.. காலையிலேயே ஹாஸ்பிடல் வந்துட்டாங்க.. வலி ஹெவியாக வருகிறது போகிறது.. ஆனால் பேபி மட்டும் அசையாமல் அப்படியே இருக்கிறது.. டாக்டர் பிரேமா ராசியான டாக்டர்.. அவர்தான் பார்க்கிறார்.. மீத விபரம் அவர் சொல்வார்..”கிரிதரன் டாக்டர் பிரேமாவிடம் அவர்களை அழைத்து போய் அறிமுகம் செய்வித்து விட்டு போனான்..

“கொஞ்சம் க்ரிட்டிகல் பொசிசன் தான்.. வலி வருகிறது.. ஆனால் பேபி வெளியேற தலை திரும்ப மாட்டேங்குது.. இன்னமும் இரண்டு வலிக்கு பார்த்து விட்டு ஆபரேசன் செய்து விடலாமென நினைக்கிறோம்..”

“நாங்க அந்த பெண்ணை பார்க்கவேண்டும்..” அபிராமி சொல்ல..




“வாங்க..” அழைத்து போனாள் சீஸூகோ..அந்த மெட்டரனிடி வார்டின் வெளியே நீண்டு கிடந்த அந்த வராண்டாவில் இவர்களுக்கு முதுகு காட்டியபடி மெல்ல நடந்தபடி இருந்தாள் அந்த பெண் நீளமான ஆஸ்பத்திரி கவுன் போட்டிருந்தாள்.. மிகத் தளர்வாக இருந்தது அவளது நடை..

“சஸாக்கி..” சீஸூகோ அழைக்க மெல்ல திரும்பினாள் அவள்..இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் அந்த வராண்டாவின் சில விளக்குகள் அணைக்கப்பட்டு சிலவைகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன.. அவை அந்த மிகப் பெரிய வராண்டாவிற்கு லேசான வெளிச்சத்தையே கொடுத்திருந்தனர்.. அதனால் அந்த பெண் கறுப்படிக்கப்பட்ட ப்ரேமிற்குள் சிக்கியிருந்த வெள்ளை பறவையாக தோன்றினாள்..தோள் வரை மட்டுமே இருந்த அவளது கூந்தல் முடிகள் கட்டப்படாமல் விரிந்திருக்க, வலியால் புரண்டு  தேய்த்தோ என்னவோ அந்த முடிக்கற்றைகள் பரட்டையாக அவளது முகத்தின் மேல் கலைந்து கிடந்தன.. கை, கால், கழுத்து, காது என உடல் முழுமையும் எந்த நகைகளின்றி வெறுமையாக இருக்க, முகமோ சிறு பொட்டு கூட இல்லாத துளி அலங்காரமற்ற பாலை நிலம் போல் வறண்டிருந்தது. பாலகுமரன் துணுக்குற்றான்..

இவள்.. இவள் சஸாக்கியா..?கொஞ்சம் ஆவலுடனேயே அந்த பெண்ணை பார்த்த அபிராமிக்கும் ஏமாற்றமே..

இந்த பெண் என்ன இப்படி இருக்கிறாள்..?அவள் மிக மிக சிறுபிள்ளை போல ப்ளஸ் டூ படிக்கும் மாணவி போல் தெரிந்தாள்.. கை கால்கள் எல்லாம் குச்சி போல் நீண்டு மெலிந்திருக்க, கன்னங்கள் ஒட்டி போய் முடிகள் விரிந்து போய் இருந்தவளின் வயிறு மட்டுமே உப்பி போய் இருந்தது..

இப்படி ஒரு மெலிதான உடம்போடு அந்த நிறை மாத பெரிய வயிற்றை அவள் தூக்கியபடி நடப்பது பெரும் கொடுமை போல் பரிதாபமாக காட்சியளித்தது..

“சஸாக்கி யார் வந்திருக்கிறார்கள் பார்..?” சீஸூகோ சொல்ல, கண்களை சுருக்கி பார்த்தாள்.. அவளுக்கும் இருள்தான் போல.. இவர்களை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் இவர்கள் பக்கமாக இன்னமும் இரண்டு எட்டுகள் எடுத்து வைத்து நடந்தபடி பார்த்தாள்.மூன்றாவது எட்டின் ஆரம்பத்தில் அவளது நடை நின்றது.. கண்கள் பாலகுமரன் மேல் நிலை குத்தி நின்றது.. அவள் தன்னை அறிந்து கொண்டுவுட்டாள் என உணர்ந்தான் பாலகுமரன்..

“ம்ம்மா..” ஆதரவான அலறலோடு தன் தாயின் புறம் அவள் கை நீட்டினாள்.. சீஸூகோ வேகமாய் போய் அவளை தாங்கிய போது, வீல் என்ற அலறலோடு இடுப்பை பிடித்தாள் அவள்..




What’s your Reaction?
+1
24
+1
13
+1
2
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!