Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே-4

4

அன்று மாலை வீடு திரும்பிய பாலகுமரன் ஹாலில் அமர்ந்து தட்டு நிறைய முறுக்குகளை நிரப்பி வைத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்த தங்கையை கண்டதும் திகைத்தான்..

“ஏய் கார்த்தி நீ உன் வீட்டுக்கு போகலையா..?” கேட்டுவிட்டு அவள் முறைக்கவும் தன் தவறை உணர்ந்து வாயை மூடிக்கொண்டான்..

“சாரிடா கண்ணா.. சும்மா கேட்டேன்..” தங்கையின் தலை வருடினான்..

“அம்மா உங்க சீமந்த புத்திரன் வந்தாச்சு..” உள்ளே திரும்பி குரல் கொடுத்து விட்டு, அண்ணனை பார்க்காமல் மீண்டும் டிவி பக்கம் திரும்பிக் கொண்டாள்.. கோபமாக இருக்கிறாளாம்..

“கார்த்திம்மா நீ காலையில் உன் வீட்டிற்கு போவதாக சொல்லியிருந்தாயா.. அந்த நினைவில் கேட்டுட்டேன்டா..”

“நான் எப்போ சொன்னேன்..? சாயந்தரம் வாங்க பேசலாம்னுதானே சொல்லி அனுப்பினேன்..”அப்படியா சொன்னாள்.. பாலகுமரன் யோசித்தான் இருக்கலாம்.. அவனுக்குத்தான் கார்த்திகா காலையில் பேச ஆரம்பித்த விசயம் பிடிக்காமல் மாலை வரும்போது அவள் வீட்டிற்கு போய்விட்டால் நல்லதென நினைத்து விட்டான்..இவளை வெளியேற்ற தேவையான வேலைகளை திவாகர் மூலம் செய்து விட்டு வந்தேனே.. நெற்றியை தேய்த்தான்..

“என்ன கார்த்தி உன் அண்ணா என்ன சொல்றாரு..?” கேட்டபடி வந்த அபிராமி மகளருகில் அமரவும் பாலகுமரனுக்கு தெரிந்து விட்டது.. அம்மாவும், மகளுமாக ஏதோ பெரிய ப்ளான் போடுகிறார்கள்..

“டிபன் எடுத்துக்கோப்பா..” சமையற்காரம்மா கொண்டு வந்து வைத்த டிரேயை அபிராமி காட்ட..

“நான் ப்ரெஷ்ஷாகிட்டு வர்றேன்மா..” பாலகுமரன் மாடியேறினான்..

“நிதானமாக வாங்கண்ணா.. திவாவிற்கு ஒரு அவசரவெளியூர் வேலை வந்துவிட்டது.. கேரளா போய்விட்டார்.. வர இரண்டு நாட்களாகும்.. நான் இரண்டு நாளைக்கு இங்கேதான் தங்க போகிறேன்..” தங்கையின் அறிவிப்பில் அண்ணன் மனம் சோர்ந்தான்..

அன்று இரவு.. மறுநாள் காலை என அவன் நேரங்களை தள்ளிப் போட, மறுநாள் மாலை அவனை பிடித்து உட்கார வைத்துக் கொண்ட அபிராமி, கார்த்திகா கைகளில் கத்தையான காகிதங்கள்..

“என்னம்மா இது..?”

“உங்கள் ஜாதகத்திற்கேற்ற வரன்கள்.. நெட்டிலிருந்து எடுத்து வைத்திருக்கிறோம்.. பாருங்கள்..”இரு பக்கமும் அமர்ந்திருந்த அன்னை தங்கைக் கிடையே பொறி எலியாய் தன்னை உணர்ந்தான் அவன்..இந்த இன்டர்நெட் வரன்கள் நிச்சயம் சரண்யா ஏற்பாடாகத்தான் இருக்கும்.. கார்த்திகா இத்தனை பொறுமையாக பார்த்து வரன்கள் எடுத்திருக்க மட்டாள்.. அது சரண்யா செய்த வேலைதான்.. நேற்று சாரங்கன் சத்தம் போடவும் சரண்யா கொஞ்சம் இந்த விசயத்தில் ஒதுங்கி விட்டது போல இருந்தது..அவளை கொஞ்ச நாட்களுக்கு தவிர்க்கத்தான் அவள் அண்ணனோடு அவளையும் சேர்த்து ஊட்டிக்கு அனுப்பி வைத்தான்..

ஆனால் அவளோ போகும் போதே இங்கே இருந்து செய்யவிருந்த வேலைகளை முன்னாலேயே செய்து விட்டுத்தான் போயிருக்கிறாள்.. வரட்டும் அவளை வைத்து வாங்குகிற வேகத்தில் இனி என் விசயத்தில் அவள் தலையிடவே கூடாது..அம்மாவும், தங்கையும் நீட்டிய காகிதங்களை கடனே என்று பார்த்தபடி இருந்தான்.. ஒவ்வொரு வரனாக அவர்களின் விவரிப்பு அவன் காதுகளில் விழவே இல்லை.. நான்காவது வரனிலேயே அவனுக்கு தனது கை மிகவும் அழுக்காக இருப்பதாக தோன்றி விட்டது..

“இந்த சிப்சில் ஒரே எண்ணெய்.. பாருங்கள்.. பேப்பரெல்லாம் எண்ணெய் கறை.. ஹேண்ட் வாஸ் செய்துவிட்டு வருகிறேன்..” அருகிலிருந்த வாஷ்பேசினிற்கு போய் சோப் ஆயிலை கைகளில் தேய்த்துக் கொண்ட அண்ணனின் முதுகை முறைத்தாள் கார்த்திகா..




“வரட்டும் கார்த்தி.. கை எண்ணெயாக இருந்தால் கழுவத்தானே செய்யனும்..” பரிந்த அம்மாவை பாவமே என பார்த்தாள்..

“அம்மா உங்க மகன் சிப்சை தொடவேயில்லை.. நான்தான் அப்போதிலிருந்து சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்..” என இப்போது அபிராமி விழித்தாள்..

“ப்ராடு பிள்ளையை பெத்து வச்சிருக்கீங்களேம்மா..”

“வரட்டுன்டி அவனுக்கு இருக்கு..” அபிராமி கறுவினாள்..

“என்ன அண்ணா பிசுக்கு போக மாட்டேங்குதா..?” தங்கையின் குரலுக்கு அசராமல்..

“ஆமடா கார்த்தி..” என்றபடி விரல் விரலாய் பாலகுமரன் சோப்பை தடவிக் கொண்டிருந்த போது அவனது செல்போன் ஒலித்தது..

“யாருன்னுபாருங்க..” பாலகுமரனுக்கு டீப்பாய் மேல் ஒலித்துக் கொண்டிருக்கும் தன் போனை எடுக்க கூட திரும்ப வரும் எண்ணமில்லை போல..

“அண்ணா யாரோ கிரிதரன்..”




“கிரிதரன்..” யோசனையில் ஆழ்ந்தான்..

“ஆமாண்ணா கால் ப்ரம் பாண்டிச்சேரி.. அன்னை ஹாஸ்பிடல்..”

“ஓ.. டாக்டர் கிரி.. என் ப்ரெண்டுதாம்மா.. போனை ஆன் பண்ணி ஸ்பீக்கரில் போடு..” அவசரமாக தனது கைகளை கழுவ ஆரம்பித்தான்..

“பாலா..” அவசரமாக கேட்டது எதிர்முனை குரல்..

“எஸ் கிரி.. பாலாதான் சொல்லுடா.. எப்படி இருக்கிறாய்..? என் நினைவெல்லாம் உனக்கு இருக்கிறதா..?” கிண்டலாக ஒரு சுமூக நட்பு பேச்சிற்கு தயாரான பாலகுமரனிடம் அப்படியே பேச கிரிதரன் தயாராகவில்லை போலும்..

“பாலா உன்னிடம் ஒரு முக்கியமான விசயம் அவசரமாக பேச வேண்டும்..”

“சொல்லுடா.. என்ன விசயம்..” டவலால் கைகளை துடைத்தபடி சோபாவில் வந்து அமர்ந்தான்..

“நீ உடனே இங்கே பாண்டிச்சேரி கிளம்பி வர வேண்டும்..”

“உடனேவா.. எதற்குடா..?”

“நீ வாயேன்.. சொல்கிறேன்..”

“கிரி உனக்கு எனது வேலை பளு தெரியாதா..? இப்படி உடனே கிளம்பி வா என்றால் எப்படி..? அந்த அளவு அங்கே என்ன தலை போகிற அவசரம்..?”எரிச்சல் கொப்பளித்த தோழனின் குரலில் ஒரு நிமிடம் தயங்கி கிரிதரன் மீண்டும் பேசியபோது அவனது குரல் மிக உறுதியாக இருந்தது..

“நீ உடனே இங்கே வந்தே ஆகவேண்டும் பாலா.. இது தலை போகிற அவசரம் இல்லை.. உன் கேரியர் போகிற அவசரம்.. உன் குடும்ப கௌரவம் சம்பந்தப்பட்டது..”அபிராமியும், கார்த்திகாவும் திடுக்கிட்டனர்.. பாலகுமரன் அவர்களை பார்வையால் சமாதானப் படுத்தியபடி போனில்.. பேசினான்.

“கிரி நீ என்ன விசயமென்பதை தெளிவாக சொல்லாமல் நான் சென்னையிலிருந்து ஒரு எட்டுகூட எடுத்து வைக்கமாட்டேன்..”எதிர்முனையில் கிரிதரன் லேசாக தொண்டையை செருமிக் கொண்டான்.. பிறகு பேசினான்..

“இன்று காலையில் எங்கள் ஹாஸ்பிடலுக்கு டெலிவரிக்காக ஒரு பெண் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.. அவர்களிடம் பார்ம் எழுதி வாங்கிய போது, வயிற்றில் இருக்கும் குழந்தையின் தந்தை என்ற பெயருக்கு நேராக உனது பெயரை பாலகுமரன் என எழுதி தெளிவான உனது அட்ரசையும் எழுதியிருக்கிறார்கள்..”

“அண்ணா..” எனக் கார்த்திகா கத்திவிட அபிராமியின் முகம் வெளுத்தது..பாலகுமரனின் முகம் அந்தி சூரியனின் ஆழ் சிவப்பை வாங்கி சிவந்து நின்றது.. கொதித்து நின்றது..




What’s your Reaction?
+1
27
+1
14
+1
1
+1
1
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!