gowri panchangam Sprituality Uncategorized

குன்றில் கோயில் கொண்ட பிறைசூடி பெருமான்!

பெரும்பாலும் தென்னகத்தில் மலைமீது கோவில் கொண்டிருப்பவர் முருகன் அல்லது பெருமாளாகத்தான் இருப்பார்.  ஹோசூரில் ஒரு குன்றின் மீது சந்திரசூடேஸ்வரர் என்ற பெயரில் மிக அழகிய தொன்மையான சிவன் கோயில் இருக்கிறது. சுயம்பு லிங்கம். அம்பாள் மரகதாம்பாள்.

கீழிறிந்து படிகள் வழியே மலை ஏறலாம். முடியாதவர்கள் வண்டிப் பாதை அமைந்திருப்பதால் மேலேயே வாகனத்தில் செல்லலாம். வழியில் காளியம்மன் கோவில் இருக்கிறது. இதைத் தாண்டி கொஞ்சம் சென்றால் கார் பார்க்கிங். அங்கேயிருந்து சுமார் 20 படிகள் ஏறினால் நுழைவுக் கோபுரம். இங்கே நல்ல காற்று வீசும். அந்த காற்றின் வேகமே ஒரு புத்துணர்ச்சி தரும். நுழைவுக் கோபுரத்திற்கும் பிரதான கோயில் கோபுரத்திற்க்கும் இடையே உள்ள திறந்த வெளியின் இடப்புறத்தில் ஒரு சிறிய சன்னிதியில் இருவர். மேலே முத்கலர், உச்சாயினர் என்று எழுதப்பட்டுள்ளது. முனிவர்களான இவர்கள் இங்கே பார்வதியால் சபிக்கப்பட்டு பின்னர் சாப விமோசனம் அடைந்தவர்கள் என்பது ஸ்தலபுராணம்

சில பெருமான் சந்நிதி அடைந்தால் நிச்சயமாக ஒரு பரவசம் ஏற்படுகிறது.  விசேஷ நாட்களில் வெள்ளிக்கவசத்தில் மின்னும் பிறை சூடிப் பெருமானைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.

அதேபோல் மரகதாம்பாள் கொள்ளை அழகு.  நகரவே மனசு வராது.  சுற்றுப் பிரகாரத்தில் ராஜகணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், துர்கை, தக்ஷிணாமூர்த்தி,  அறுபத்து மூவர் சன்னிதி என்று எல்லாப் பழம்பெரும் சிவாலயங்களில் உள்ளது போன்றே பரிவார தெய்வங்கள். எல்லோருமே அழகிய வடிவில் காட்சி தருகிறார்கள்.

மற்ற கோவில்களில் சாதாரணமாகக் காணமுடியாத ஒருவர் இங்கிருக்கிறார்.  வெளிப்பிரகாரத்தில் சன்னிதி நோக்கித் திரும்பு முன் இடதுபுறத்தில் சட்டென்று கண்ணில் படாமல் தூணையொட்டி யமதர்மர் வீற்றிருக்கிறார்.  தர்மராஜர் சிவபெருமானை நோக்கி இங்கே தவமிருந்து, அருள் பெற்று காளை வடிவில் இக்குன்றை உருவாக்கி  (பழங்காலத்தில் விருஷபாசலம் என்று வழங்கப்பட்டதாகக் கேள்வி) இறைவனும், இறைவியும் இங்கே குடிகொள்ள வேண்டும் என  வேண்டிக்கொள்ள,  சிவபெருமானும் அவ்வண்ணமே அனுக்ரகித்ததாக  வரலாறு கூறுகிறது.

மாசி மாதம் பௌர்ணமியன்று தேரோட்டம் நடைபெறுகிறது.   சிறிய அழகிய தங்கத்தேர். தேரோட்டத்தை ஒட்டி நடக்கும் திருவிழா நாட்களில் அண்டைமாநிலங்களிலிருந்து

பெருவாரியான மக்கள் வந்து கூடுகிறார்கள். முகூர்த்த நாட்கள், விசேஷ நாட்கள் இல்லாத போது மிக அமைதியான சூழ்நிலை தவழும்.

கோவிலிருந்து வெளி வருகையில் குன்று மேலேயிருந்து நெடிதுயர்ந்த வானம், சுற்றியுள்ள ஊர்களைப் பார்த்து ரசிக்கலாம். எப்பொழுது இக்கோவில் வந்தாலும் மன அமைதி கிடைக்கிறது. அவசரமில்லாமல் எத்தனை நேரம் இங்கே அமர்ந்திருக்கிறோமோ அத்தனைக்கத்தனை மன அமைதியை  அனுபவிக்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!