தோட்டக் கலை

மாடித்தோட்டம் ஆலோசனைகள்

வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடர்பாகப் பல்வேறு தகவல்களை இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். இந்த முறை மாடித்தோட்ட வல்லுநர் சொல்ற சில  ஆலோசனைகளை பார்க்கலாம்.

“வீட்டுத்தோட்டத்தில் இன்னைக்கு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. நாம வீட்டுத்தோட்டம் அமைப்பது நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வேண்டும்; அதற்காக விஷம் இல்லாத காய்கறிகளை உண்ண வேண்டும் என்பதற்காகத்தான். பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கும்போது அந்த அடிப்படையே சற்று ஆட்டம் காண்கிறது. பாலித்தீன், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என அதிகப்படியான பிளாஸ்டிக் பயன்பாடு இன்றைக்கு வீட்டுத்தோட்டங்களில் இருக்கிறது. கூடுமானவரை பிளாஸ்டிக் தவிர்ப்பது நல்லது. பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.




அதற்குப் பதிலாக மூங்கில் கூடைகள், மர டப்பாக்கள், சிமென்ட் தொட்டிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். கடப்பாக்கல் பயன்படுத்தி தொட்டி போன்ற அமைப்பை உருவாக்கலாம். அதற்குள் மண்ணைப் போட்டுச் செடிகளை வளர்க்கலாம். மாடித்தோட்டங்களில் மண் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள். உண்மைதான் ஆனாலும், அதற்குப் பதிலாகப் பயன்படுத்தும் தென்னை நார்க்கழிவு உரங்களைக் கவனமாகக் கையாள வேண்டும். காயர்பித்தில் `லிக்னைட்’ என்ற ரசாயனம் இருக்கிறது. அதை வெளியேற்றிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், பெரும்பான்மையான ஆட்களுக்கு அது தெரிவதில்லை. அதனால் அதை நான் பரிந்துரை செய்வதில்லை.

அதற்குப் பதிலாக, தோட்ட மண், காய்ந்த சாணம், கரும்புச் சக்கை இவை மூன்றையும் சம அளவு கலந்து பயன்படுத்தலாம். இதில் விதைகளை விதைத்தால் அருமையாக முளைக்கும். கரும்புச் சக்கையை பல இடங்களில் சாலை ஓரமாகக் கொட்டி வைத்திருப்பார்கள். அதை அப்படியே எடுத்துப் பயன்படுத்தலாம். காயர் பித், மண்புழு உரம் ஆகியவற்றைப் பணம் கொடுத்து வாங்க வேண்டும். அதற்குப் பதிலாகக் கரும்புச்சக்கையை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல மாடித் தோட்டங்களில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாது. பூச்சி விரட்டிகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, வந்த பிறகு செய்யாமல் 15 நாளைக்கு ஒரு முறை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பது நல்லது.




ஒவ்வொரு மாடித்தோட்ட விவசாயிகளின் வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான இடுபொருள் மீன் அமிலம். இதை நாமே தயார் செய்துகொள்ளலாம். மீன் கழிவு, வெல்லம் இரண்டையும் சம அளவு எடுத்து 10 நாள்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து 50 மடங்கு தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். இதைச் செய்தால் பூக்காத செடிகள் பூக்கும். காய்க்காத செடிகளும் காய்க்கும்.




அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செடி வளர்க்க விரும்புபவர்கள் பால்கனிகளில் வளர்க்கலாம். அங்கு வெயில் அவ்வளவாக இருக்காது. ஆனால், வெளிச்சம் கிடைக்கும். பால்கனி கைப்பிடிகளையே தொட்டியாக மாற்றிக்கொள்ளலாம். 2 அடிக்கு 5 அடி கடப்பாக்கல் வாங்கி தொட்டிபோல் அமைத்துக் கொள்ளலாம். அதில் கீழ்ப்பகுதியில் மூன்று அங்குலம் உயரத்துக்குக் கரும்பு சக்கையைப் போட வேண்டும். அதற்கு மேல் ஒரு பங்கு காய்ந்த மாட்டுச் சாணம், ஒரு பங்கு தோட்ட மண் கொட்டி பரப்ப வேண்டும். அதற்கு மேல் மீண்டும் இரண்டு அங்குலத்துக்குக் கரும்பு சக்கையைப் பரப்ப வேண்டும். இதில் செடிகளை நடவு செய்து வளர்க்கலாம். பிளாஸ்டிக் பதிலாகக் கடப்பாக்கல் தொட்டிகளைப் பயன்படுத்தி காய்கறிகளை வளர்க்க நினைப்பவர்களும் இதே முறையைத்தான் பின்பற்ற வேண்டும்.

வீட்டுத்தோட்டம்

பால்கனியில், புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, கீரைகளை வளர்க்கலாம். இந்தப் பயிர்களுக்கு வெயில் அதிகம் தேவைப்படாது. வெளிச்சம் இருந்தால் போதும். பால்கனியில் காய்கறிகள் அதிகம் வராது. ஆனால், தக்காளிச் செடிகளை வளர்க்கலாம். அந்தச் செடிகள் கொடிபோலக் கீழே வெளியே படர்ந்து தொங்கும். தொட்டிகளில் தக்காளிச் செடிகளை வளர்க்கலாம். கரும்பு சக்கைகளை மாடித்தோட்ட பயிர்களுக்கு மூடாக்காகவும் பயன்படுத்தலாம். இதனால் வறட்சியிலிருந்து செடிகளைக் காக்கலாம். அறுவடை முடிந்த பிறகு, ஒருவாரம் தொட்டியைக் காயவிட்டுத்தான் மறுபடியும் நடவு செய்ய வேண்டும்”




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!