gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/பலராமருக்கு பணிந்த துரியோதனன்

பலராமருக்கு பணிந்த துரியோதனன்!

அஸ்தினாபுரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. துரியோதனன், தன் மகள் இலக்குமணைக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தான்.

முதற்கட்டமாக சுயம்வரம் நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள பல தேசங்களை சார்ந்த ராஜ குமாரர்களும் வந்திருந்தனர். அவர்களில், கிருஷ்ணனின் புதல்வனான சாம்பனும் ஒருவன்.

அவன், எவரும் எதிர்பாராவிதம் துரியோதனனின் மகளை பலவந்தமாக தூக்கிச் சென்றான். இதனால் கோபம் கொண்ட துரியோதனன் தன் நண்பன் கர்ணனின் தலைமையில் பெரும் படையுடன் சென்று, சாம்பனுடன் போர் செய்தான். முடிவில் சாம்பன் தோல்வி அடைய… அவனைச் சிறையிலிட்டான்.

இந்த விஷயம் கிருஷ்ணருக்கு தெரிய வந்தது. யாதவர்கள், துரியோதனன் மீது போர் தொடுக்க ஆயத்தம் ஆனார்கள். ஆனால் அவர்களை தடுத்த பலராமன், ”நான் மட்டும் சென்று சாம்பனை மீட்டு வருகிறேன்” என்று கூறிப் புறப்பட்டார்.

வழியில் நந்தவனம் ஒன்றில் தங்கி இளைப்பாறினார் பலராமர். இதை அறிந்த கௌரவர்கள் மற்றும் கர்ணன் ஆகியோர் நந்தவனத்துக்கு வந்து பலராமரை சந்தித்தனர். முறையான உபசாரங்கள் செய்து அவரை வரவேற்றனர். அப்போது பலராமர், ”துரியோதனா! நமக்குள் வீண் பகை வேண்டாம். சாம்பனை விடுதலை செய்ய வேண்டும் என்பது கிருஷ்ணனுக்கு தாத்தாவான உக்கிரசேன மன்னனின் கட்டளை. எனவே, அவனை விடுதலை செய்!” என்றார்.

இதைக் கேட்டு கடும் கோபம் கொண்ட துரியோதனன், ”குரு வம்சத்து வீரருக்கு யது குலத்தவன் (யாதவர் குலம்) கட்டளையிடுவதா? என் மகளை கடத்திச் சென்ற சாம்பனை விடுவிக்க வேண்டுமா? சாத்தியமே இல்லை. நாங்கள், உங்களைச் சந்திக்க வந்ததும் மரியாதை செலுத்தியதும் எங்களது உபச்சாரம், அவ்வளவே!” என்றான்.






பலராமனும் கோபம் அடைந்தார்.

”கௌரவர்களே… உங்களுக்கு இவ்வளவு கர்வம் கூடாது. எங்கள் மன்னன் உக்கிரசேனன் அமர்ந்து ஆட்சி புரியும் ‘சுதர்மை’ என்ற சபா மண்டபம் தேவேந்திரனால் அளிக்கப்பட்டது. அவருக்கு நிகர் எவரும் இல்லை. இதை அறியாமல் பேசி விட்டாய் துரியோதனா!

அதற்கான தண்டனையை நீ அடைந்தே தீர வேண்டும். அஸ்தினாபுரத்தை இந்த கணமே கங்கையில் மூழ்கச் செய்து, உனது வம்சத்தையும் பூண்டோடு ஒழிக்கிறேன். அதன் பிறகு சாம்பனுக்கும் உன் மகளுக்கும் துவாரகையில் திருமணத்தை நடத்துகிறேன்.” என்றவர் தனது ஆயுதமான கலப்பையுடன் சென்று, கௌரவர்களது கோட்டையின் ஆதாரமான வேள்வித் தூணில் கலப்பையை மாட்டி இழுத்தார். அஸ்தினாபுரமே ஆடியது. துரியோதனன் பயந்து நடுங்கினான்.

ஓடோடி வந்து, ”பலராமரே! உங்கள் மன்னனின் ஆணைப்படி சாம்பனை விடுவித்து, என் மகளை அவனுக்கே மணம் செய்து தருகிறேன்!” என்று வேண்டினான் துரியோதனன்.

அவனை மன்னித்தார் பலராமர். சாம்பனையும் தன் மகளையும் ராஜமரியாதையுடன் துவாரகைக்கு அனுப்பி வைத்தான் துரியோதனன்.

பலராமரது வீர பராக்கிரமத்தை யாதவர்கள் போற்றிப் புகழ்ந்தனர்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!