gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்: இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?’

மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்!

இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?’

– தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு தேடி இருவரும் கிருஷ்ணரை சந்திக்கப் புறப்பட்டனர்.

இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வருவதைக் கண்ட கிருஷ்ணருக்கு மகிழ்ச்சி. உற்சாகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்தார்.

தங்களது சந்தேகம் குறித்து கிருஷ்ணரிடம் தெரிவித்தனர். உடனே, ”ஆஹா… இருவரது சிந்தனையும் ஒன்றாக இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! உங்கள் கேள்விக்கான பதிலை நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன் உங்களுக்கு ஒரு சோதனை!” என்றார் கிருஷ்ணர்.






இருவரும், ‘என்ன அது?’ என்பது போல், பகவானை ஆர்வத்துடன் கவனித்தனர்.

முதலில் தருமரிடம், ”தருமா! இந்த பரந்த உலகில் தீயவன் ஒருவனையும், நல்லவன் ஒருவனையும் அழைத்து வா!” என்றார் பகவான்.

”ஆகட்டும் கிருஷ்ணா!” என்ற தருமர் அங்கிருந்து புறப்பட்டார். அடுத்து, துரியோதனனிடமும் அதே விஷயத்தைக் கூறி அனுப்பி வைத்தார் பரந்தாமன்.

சில நாட்கள் கழித்து இருவர் மட்டும் தனித்துத் திரும்பி வந்தனர். அவர்களிடம் கிருஷ்ணர் கேட்டார்: ”என்னாயிற்று… நான் குறிப்பிட்ட நபர்களை அழைத்து வரவில்லையா?”






உடனே துரியோதனன், ”கிருஷ்ணா, பல நாட்கள் தேடிப் பார்த்தும் ஒரு நல்லவர்கூட அகப்படவில்லை. உலகில் எல்லோரும் தீயவரே! எனவே, குறிப்பிட்ட ஒருவரை மட்டும் தீயவராகக் கருதி அழைத்து வர விரும்பவில்லை!” என்றான்.

ஆச்சரியத்துடன் புருவம் நெறித்த கிருஷ்ணர், தருமரிடம் ”உனக்குக் கூடவா நல்லவர் அகப்படவில்லை?” என்று கேட்டார்.

”நான் தேடிய வகையில் உலகில் தீயவர் என்று எவருமே இல்லை. எனவே, தீயவர் ஒருவரை அழைத்து வர இயலவில்லை. தவிர, எல்லோருமே நல்லவர்கள் எனும்போது, குறிப்பிட்ட ஒருவரை மட்டும் எப்படி அழைத்து வருவது? எனவே அதுவும் இயலவில்லை!” என்றான்.

இருவரும் கூறியதை கவனமாகக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணர், ”இந்த உலகம் கண்ணாடி போன்றது. கண்ணாடி, தன் முன் எந்த உருவம் இருக்கிறதோ, அதை அப்படியே பிரதிபலிக்கும். இந்த உலகமும் அப்படியே… நல்ல மனம் கொண்டவனுக்கு நன்மையானதாகவும், தீய மனம் படைத்தவனுக்கு தீமைகள் நிறைந்ததாகவும் தோன்றும். நமது மனதை எந்த அளவுக்கு, தூய்மையாக- செம்மைப்படுத்தி வைத்திருக்கிறோமோ… அந்த அளவுக்கு, இந்த உலகமும் தூய்மையானதாக இருக்கும். எனவே, மனதை செம்மைப்படுத்துங்கள்!” என்று கூறி முடித்தார் கீதையின் நாயகன்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!