lifestyles

தர்பூசணி சாகுபடியில் அசத்தும் கேரள விவசாயி ..

கேரளாவின் பெரிந்தல்மன்னா அருகே உள்ள கரிஞ்சபாடியைச் சேர்ந்த விவசாயியான பி. சைஃபுல்லா தர்பூசணி சாகுபடியை மையமாக வைத்து அதிக லாபம் ஈட்டியுள்ளார். இவர் இதன் மூலம் 80 நாட்களில் 12 லட்சம் ரூபாய் லாபம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அவரின் சுவாரசிய கதையை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.




தற்போது கோடை காலம் என்பதால் வெப்பத்தை தணிக்க பலரும் பழங்கள், இளநீர் போன்றவற்றை அதிகம் விரும்பி வாங்குகின்றனர். அவற்றுள் தர்பூசணி பழங்களும் அதிக அளவில் விற்பனையாகிறது. இதனைத் தெரிந்து கொண்ட சைஃபுல்லா தர்ப்பூசணி சாகுபடியில் புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி நல்ல லாபம் பெற்று வருகிறார்.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பயோஸ்டாடிஸ்டிக்ஸ் பட்டதாரியான சைஃபுல்லா, 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதன் மூலம் விவசாயம் செய்து வருகிறார். இவர் இளம் விவசாயிக்கான மாநில விருது பெற்றவர். விவசாயத்தின் மீது அதிக நாட்டம் கொண்டதால் காய்கறிகள் மற்றும் தர்பூசணி பழங்களைச் சாகுபடி செய்து வருகிறார். சைஃபுல்லா மற்ற காய்கறிகளை சாகுபடி செய்தாலும், அவருக்கு மிகவும் பிடித்த சாகுபடி தர்பூசணி தான். கடந்த 8 ஆண்டுகளாக இவர் விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் முதன் முதலில் 2016ஆம் ஆண்டு இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வெளிப்புறத்தில் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் தர்பூசணி பழங்களைச் சாகுபடி செய்துள்ளார். அப்பொழுது அவருக்கு நல்ல லாபமும் கிடைத்துள்ளது.

தற்போதும் அதேபோல், தர்பூசணி பழங்களை சாகுபடி செய்ய சொட்டு நீர் பாசனம் மற்றும் பிளாஸ்டிக் சீட் போட்டு மூடி வைத்து மண் அரிப்பைத் தடுக்கும் நவீன நுட்பங்களைப் பயன்படுத்துகிறார். அதற்காக தர்பூசணி விதைகள் விதைக்கப்பட்டு, ஒரு ஏக்கருக்கு 4500 நாற்றுகள் என்ற விகிதத்தில், நடப்படுகிறது.

அயல்நாட்டு ரகங்கள்: உள்நாட்டு தர்பூசணி வகைகள் மட்டுமின்றி, அயல்நாட்டு ரகங்களான வெளிர் பச்சை ரகத்தில் தொடங்கி சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் உள்ள தர்ப்பூசணி பழங்களையும் தற்போது சைஃபுல்லா பயிரிட்டு வருகிறார். 




விதைகள்: தர்பூசணி பழங்களின் உள்ளே சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களிலும் வெளியில் மஞ்சள் நிறத்திலும் வெவ்வேறு வகைகள் உள்ளன. அவை அனைத்தும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டவை. அடர் பச்சை நிறத் தோல் மற்றும் உள்ளே சிவப்பு நிறம் கொண்ட தர்பூசணிப் பழங்கள், தற்போது அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆனால் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பழங்களின் விதைகள் பாரம்பரியமான பழங்களின் விதைகளை விட 10 மடங்கு விலை அதிகம். சாதாரண தர்பூசணி விதைகளில் ஏக்கருக்கு 5000 ரூபாயும், கருப்பு தோல் கொண்ட ரகங்கள் ரூ. 10,000 ரூபாயும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ரகங்கள் ரூ. 50,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. விதையின் விலை அதிகமாக இருந்தாலும், இதுபோன்ற பழங்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால், அதிக விலைக்கு பழங்களை விற்க முடியும் என்ற சைஃபுல்லா கூறியுள்ளார்.

உயர் லாபம்: வெளியே பச்சை நிறத்திலும் உள்ளே சிவப்பு நிறத்திலும் இருக்கும் பாரம்பரிய தர்பூசணி பழங்கள் ரூ. 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் அயல்நாட்டு ரக தர்ப்பூசணிகள் ஒரு கிலோவிற்கு ரூ. 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உற்பத்தியில் 60% சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக விற்கப்படுகிறது, இது வருவாயை அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

திட்டமிடல்: நிலத்தை குத்தகைக்கு எடுப்பதிலிருந்து விதை உரம் போன்ற செலவுகளை திறம்பட நிர்வகிப்பதன் மூலம் அதிக லாபத்தை பெற முடியும் என்கிறார் சைஃபுல்லா. சைஃபுல்லா, புதுமை, கல்வி மற்றும் கடின உழைப்பின் மூலம், விவசாயத்தையும் லாபகரமானத் தொழிலாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!