Entertainment lifestyles News

சாகர் ரத்னா ஓட்டல் – இது ஜெயராம் பனன் வெற்றிக் கதை!

புதுமையான யோசனைகளாலும், கடின உழைப்பாலும் கோடீஸ்வரர்களாக முன்னேறிய பல தொழில்முனைவோரின் கதைகளை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பிரபல தென்னிந்திய உணவு உணவகமான ‘சாகர் ரத்னா’-வின் உரிமையாளர் ஜெயராம் பனன். அன்று பாத்திரம் கழுவும் வேலை செய்த ஜெயராம் பனன், இன்று ஓட்டல் சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டி பறப்பதன் பின்னணிக் கதையைப் பார்ப்போம்.

வட இந்தியாவில் “தோசை மன்னன்” என அழைக்கப்படும் ஜெயராம் பனன், ஒருகாலத்தில் வெறும் 18 ரூபாய்க்கு ஓட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலை பார்த்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், பாத்திரம் கழுவும் வேலையில் இருந்து படிப்படியாக ஓட்டல் தொழிலைக் கற்றுக்கொண்டு, இன்று உலகம் முழுவதும் 100-க்கும் அதிகமான ஓட்டல்களை நடத்தி வருகிறார்.




யார் இந்த ஜெயராம் பனன்?

கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு அருகிலுள்ள உடுப்பியைச் சேர்ந்தவர் ஜெயராம் பனன். இவருடைய தந்தை டிரைவராக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. படிப்பில் சுமாரான மாணவராக இருந்து வந்த ஜெயராம் பனன், பள்ளித் தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அப்போது ஜெயராம் பனனுக்கு வயது 13. அப்பாவின் சட்டைப்பையில் இருந்து எடுத்த காசைக் கொண்டு மங்களூருவில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஜெயராம் பனனுக்கு பேருந்தில் பழக்கமான நபர் மூலமாக ஓட்டல் ஒன்றில் தட்டு கழுவும் வேலை கிடைத்துள்ளது. இதற்கு ஊதியமாக 18 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 வருடங்கள் ஹோட்டலில் வேலை செய்து, கடும் உழைப்பால் வெயிட்டர் ஆனார். படிப்படியாக மேலாளராகவும் ஆனார்.

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என துடித்துக்கொண்டிருந்த ஜெயராமிற்கு, அப்போதுதான் மும்பையில் தென்னிந்திய உணவு விற்பனை நிலையங்களுக்கு ஏகபோக வரவேற்பு இருப்பது தெரியவந்தது. ஆனால், தனது ஓட்டலை மும்பையில் திறக்காமல் டெல்லியில் ஆரம்பித்தார்.

சாகர் ரத்னாவின் தொடக்கம்:

ஜெயராம் பனனின் சகோதரர் டெல்லியில் உள்ள உடுப்பி உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். அதன்மூலம் டெல்லி வந்த ஜெயராமனுக்கு, 1974-ம் ஆண்டு சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் கேன்டீன் ஆர்டர் கிடைத்தது. பின்னர் 1986-ஆம் ஆண்டில், ஜெய்ராம் தனது சேமிப்பு மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கியதன் மூலம் டிஃபென்ஸ் காலனியில் சாகர் என்ற பெயரில் தனது முதல் உணவகத்தை தொடங்கினார்.




மாதம் ரூ.3,205 ரூபாய் வாடகையில் கிடைத்த அந்த கடையில் ஒரே நேரத்தில் சுமார் 40 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய வசதி இருந்தது. ஜெயராம் பனனின் ஓட்டல் தொழில் மூலம் முதல் பெற்ற வருமானம் 408 ரூபாயாகும். தென்னிந்திய உணவகங்களுக்குப் பிரபலமான உட்லேண்ட் மற்றும் தாசபிரகாஷ் உணவகத்தை படிப்படியாகக் கைப்பற்றி அதன் பெயரை ‘சாகர் ரத்னா’ என மாற்றினார்.

தற்போது சாகர் ரத்னா ஓட்டல் இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட இடங்களிலும், கனடா, சிங்கப்பூர் மற்றும் பாங்காக் உள்ளிட்ட நாடுகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும் அமைந்துள்ளது. தனது முதல் நாள் விற்பனையாக 408 ரூபாய் சம்பாதித்த அதே ஜெயராம் பனன், தனது ஓட்டல் சாம்ராஜ்ஜியம் மூலமாக தற்போது ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறார். முயற்சி, கடின உழைப்புடன் புதுப்புது உத்திகளும் கைகூடினால் எதுவும் சாத்தியமாக்கும் என்பதற்கு ஜெயராம் பனன் இன்றைய இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக மாறியுள்ளார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!