Serial Stories

உடலென நான் உயிரென நீ-26

26

சத்தமின்றி தோப்பிற்குள் நுழைந்து நின்ற காரை தூக்கம் வராமல் வராண்டா பெஞ்சில் உருண்டு கொண்டிருந்த மதுரவல்லி உணர்ந்து கொண்டாள். கணநாதனோ ,  தாராவோ வெளியே வராமல் இருப்பதற்காக வீட்டு கதவை வெளிப்புறமாக பூட்டினாள் . அரவம் எழுப்பாமல் வராண்டா  கதவை திறந்து கொண்டு  வெளியே வந்து தோப்பிற்குள் இறங்கி காரை நோக்கி நடந்தாள். இருட்டில் வெளித்தெரியாமல் இருக்க கறுப்பு நிறக் கார். அதன் அருகே நின்றபடி சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்ற சந்திரலாலின் உடையும் முழு கறுப்பில் .துணைக்கு அவன் கூட்டி வந்த கையில் கத்தி , கம்பு என வைத்திருந்த  அடியாட்களின் உடையும் கறுப்பு .

தன்னை விழுங்க காத்திருக்கும் கரும்பூதங்கள் போல் இருந்தவர்களை பயமாக பார்த்து நின்றவள் , பிறகு மனதை தேற்றிக் கொண்டு அவர்களை நோக்கி நடந்தாள் .

” அப்பா …”

அவளது அழைப்பில் திரும்பி பார்த்த சந்திரலால் முதலில் திகைப்பூண்டை மிதித்தவனானான் .  எந்தப் பக்கமிருந்து வருவாளென தெரியாமல் தாராவை பரக்க  பரக்க தேடிக் கொண்டிருந்தவன் , தான் மயக்கி கூட்டிப் போக திட்டமிட்டு வந்தவள் முழுதாக முன்னால் நிற்பதை நம்ப முடியாமல் பார்த்தான் .

” எப்படி இருக்கிறீர்கள் அப்பா ? “

” நா …நான் நன்றாக இருக்கிறேன் .நீ …நீ …எப்படி …எங்கே …? ” தடுமாறினான்

” உங்களை பார்க்கத்தான் அப்பா வந்தேன் “

” ஏன் இங்கே ஓடி வந்தாய் ? ” சந்திரலால் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டான் .




” அது …ஏதோ நினைப்பில் வந்து விட்டேன். இங்கே என்னை யாருக்கும் பிடிக்கவில்லை.  எல்லோரும் போ …போ என்று விரட்டுகிறார்கள் “

சந்திரலாலின் கண்கள் இருட்டில் குரூரமாக மின்னியது .ஒரே நிமிடத்தில் தன் பார்வையை மாற்றிக் கொண்டு பாசத்தை  இழுத்துக் கொண்டு வந்து வழிய விட்டான்.

” இங்கே இருப்பவர்களெல்லாம் ஈவு இரக்கமில்லாத மிருகங்கள்டா செல்லம்.  அதனால் தான் அப்பா உன்னை பத்திரமாக  ஹாஸ்டலிலேயே விட்டு பாதுகாத்து வைத்திருந்தேன் .நீ என்னை நம்பாமல் எவனையோ நம்பி ….” முடிக்காமல் பற்களை நறநறத்தான்.

” தப்புதான் அப்பா .யாரையோ நம்பி வந்ததன் பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் .”

” நல்லவேளை இப்போதாவது புத்தி தெளிந்தாயே …வா நாம் இங்கிருந்து போய்விடலாம் .  சஷிஸா கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக எல்லோரிடமும் சொல்லி வைத்திருக்கிறேன் . உனது முகம் இப்போது நன்றாக செட் ஆகி விட்டது. நீ அப்படியே சஷிஸாவாக மாறிவிட்டாய் .உன் மனதில் இனி உன்னை நீ சஷிஸாவாகவே நினைத்துக் கொள்ள வேண்டும் .அதனால்தான் சிகிச்சையின் போது கூட உன் பெயரை சஷிஸா என்றே கொடுத்தேன் .எல்லோரையும் அப்படியே அழைக்க வைத்தேன் .இனி இந்த ஊர் , இதன் மனிதர்கள் , மதுரவல்லி என்ற பெயர் எல்லாவற்றையும் மறந்து விட்டு முழுக்க முழுக்க சஷிஸாவாகவே மாறி விடு. முன்பை விட இளமையாக திரும்பி வந்திருக்கும் சஷிஸாவை இந்தி திரையுலகம் தவிர்க்கவே முடியாது .இன்னமும் பதினைந்து வருடங்களாவது பாலிவுட் உன்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாட போகிறது .வா …வா …சீக்கிரம் …” சந்திரலால் அவளுக்கு கை நீட்டினான்.

மதுரவல்லி தயங்கி நின்றாள் .எச்சில் விழுங்கிக் கொண்டாள் .”  அப்பா உங்கள் விருப்பத்தை அப்படியே நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் …ஆனால் இந்த ஏற்பாடுகளை எல்லாம் ஒரு வருடம் கழித்து வைத்துக் கொள்ளலாமா ? “

”  என்ன …ஒரு வருடம் கழித்தா ….அதற்குள் சஷிஸா என்று ஒரு நடிகை இருந்தாள் என்பதையே திரைத்துறையே மறந்து விடுமே …ஏன் இப்படி உளறிக் கொண்டிருக்கிறாய் ? “

” ஒரு சிறு பிரச்சனை வந்து விட்டது அப்பா .வந்து… நான் இப்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறேன்.  இனி குழந்தை பிறந்த பிறகுதான் என்னால் நடிக்க முடியும். அதற்குத்தான் டைம் கேட்கிறேன் “

அச்சேற்ற முடியாத கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்தான் சந்திரலால்.  இருட்டில் அந்நேரம் அவன் முகம் ஓநாயை போல் தென்பட்டது. மதுரவல்லியை நெருங்கி பொத்  பொத்தென அவள் முதுகில் அறைந்தான் .

” தரித்திரம் …மூதேவி …உனக்காக நான் லட்சம் லட்சமாக செலவழித்துக் கொண்டு இருக்கிறேன். நீ உடல் தினவெடுத்து எவனுடனேயோ…”  மேலே அவனது வக்கிர பேச்சை கேட்க முடியாமல் காதை பொத்திக் கொண்டாள் மதுரவல்லி .அவள் கண்கள் கலங்கி வழிந்தன .

” அவர் என் புருசன் ” அழுத்தமாக சொன்னாள் .

 ” ஒரு கயிறை கழுத்தில் கட்டிவிட்டால் உடனே புருசனா …? அவனுடனே நீ ….”

” சந்திரலால் …” உயர்ந்த குரலில் அதட்டினாள். ஒற்றை விரலாட்டினாள் .” ஜாக்கிரதை .மரியாதையாக பேசு.  அவர் என் புருசன் .இது என் குழந்தை. இவர்களுக்கு தகுந்த மரியாதை கிடைக்கவேண்டும் ” பாதுகாப்பாய் கைகள் அழுந்திய  அவள் வயிற்றில் படிந்தது அவன் நரிப்பார்வை .




”  ஒரு வருடமெல்லாம் வெயிட் பண்ண வேண்டியதில்லை .ஒரு வாரம் ஓய்வெடுத்தால் போதும் .பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்து விடலாம் ” சந்திரலால் கை நீட்டி அடியாள் ஒருவனின் கையிருந்த தடியான மரக்கட்டையை வாங்கினான் .

” ஓரே அடி .மொத்தமாக சுத்தமாகி வெளியே வந்துடும் .பிறகு டூயட் பாட போய்விடலாம் ….”  பேசியபடி மதுரவல்லியின் வயிற்றைக் குறி வைத்து  தன் பலமனைத்தையும் திரட்டி கம்பை உயர்த்தி ஓங்கினான். அவள் வயிற்றை பிடித்தபடி ஓ வென அலறினாள் .

சந்திரலாலின் உயர்ந்த கட்டை கீழே இறங்கவே இல்லை. திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான்.  கம்பின் மறுமுனை மிராசுதாரின் பிடியில் இருந்தது .

” மிராசு சக்திவேலின் பேத்தி மீது கை வைக்க எவனுக்குடா தைரியம் இருக்கு ? ”  கத்தலுடன் கேட்டபடி கட்டையை பிடித்து இழுத்தே  சந்திரலாலை சுழட்டி மண்ணில் தள்ளினார் .

 “என் வீட்டு பெண்கள் உனக்கு கை பொம்மைகளாடா நரிப்பயலே…?”  மரக்கட்டை மேலும் மேலும் சந்திரலாலின் மீது சுழன்றது .

தாத்தாவின் வேகத்தில் மிரண்ட மதுரவல்லி மெல்ல பின் வாங்கினாள்.யார் மீதோ …மோத திரும்பிப் பார்த்தவள் முகம் மலர்ந்து பின் அவன் சட்டையை பிடித்தாள்

” ஏன்டா இவ்வளவு லேட் ? நான் எவ்வளவு நேரம் தான் சமாளிப்பது ? “

” ஹேய் என்னை எதிர்பார்த்துத்தான் இங்கே தைரியமாக வந்தாயா ? எப்படி …? வாசல் கதவை வேறு பூட்டி விட்டு வந்தாய் ? ” கணநாதனிடம் நிஜமான ஆச்சரியமே …

” பின்வாசல் கதவிருப்பது எனக்கு தெரியாதா ? எப்படியும் என் பின்னாலேயே வருவீர்களென்று எனக்கு தெரியும் மாமா ” மையலாக ஒலித்த மாமாவில் கணநாதன் தடுமாறினான் .

அவனது அந்த தடுமாற்றத்தை நன்கு உணர்ந்து கொண்ட மதுரவல்லி அவன் தோளிலேயே தன் நாடியை பதித்து அவனது திணறலை விரிந்த விழிகளால் ரசித்தாள் .




What’s your Reaction?
+1
34
+1
12
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
28 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!