Serial Stories

உடலென நான் உயிரென நீ -16

16

” எப்படி …? ” மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை .

” டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்….” மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற …

” ஓ.கே …ஓ.கே பேபி .ரிலாக்ஸ் …” அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.

” என்ன சொன்னார்கள் ? “

” நீ நடிகையா என்று கேட்டார்கள் .நான் பயந்து ஓடி வந்துவிட்டேன் “

” ம் …” கணநாதன் அவள் கன்னங்களை பற்றி உயர்த்தி அவள் முகத்தை ஆராய்ந்தான் .மெல்ல தலையசைத்தான்

” அந்த அளவு தெரிகிறேனா டாக்டர் ? “

ஆமோதிப்பாய் தலையசைத்தான். “அப்படி தெரிய வேண்டுமென்பதுதானே உன் சிகிச்சையின் நோக்கம் “

” வேண்டாம் டாக்டர் .எனக்கு இந்த உருவம் வேண்டாம் .இதை எடுத்து விடுங்கள் டாக்டர் …”  மதுரவல்லி விநாடியில்  ஒரு வித கூச்சலுடன் தன் முகத்தில் அறைந்து கொள்ள தொடங்கினாள் .

” மதுரா …சும்மாயிரு …” கணநாதன் அதட்டலுடன் அவள் கையை பிடித்து நிறுத்தினான் .கைத்தடங்கள் பதிந்து சிவந்து கிடந்த அவள் முகத்தை பற்றி  ஆராய்ந்தான் .

” முட்டாள் …என்ன வேலை செய்கிறாய் …? இப்படி உன்னை நீயே புண்படுத்திக் கொள்வாயா …?  இப்போதுதான்  உன் ஸ்கின்  நார்மலுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது பேபி .இந்த நேரத்தில் இப்படி செய்கிறாயே …? ” மருத்துவனின் வருத்தத்துடன் அவள் ஸ்கின்னை ஆராய தொடங்கினான் .

தன் முகமருகே தெரிந்த அவன் முகத்தை பார்த்தபடி நின்ற மதுரவல்லி ” எனக்கு பயமாக இருக்கிறது டாக்டர் ” என்றாள் .

” என்ன பயம் ? “

” நம்மை பிரித்து விடுவார்களோ என்று …நா…நான் உங்களை விட்டு பிரிய விரும்பவில்லை டாக்டர் …”  பேசிக் கொண்டே போனவள் ஏதோ உணர்வுந்த எக்கி அவன் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தாள் .

” நான் உங்களை விட்டு போகமாட்டேன் .என்னை எங்கேயும் அனுப்பிவிடாதீர்கள் .ப்ளீஸ் …”  பிதற்றியபடி அவன் கழுத்தில் கை கோர்த்து அவனோடு ஒட்டிக் கொண்டாள் .

ஒரு கணம் அசைவற்று நின்றிருந்த கணநாதன் அடுத்த கணமே அவளை அப்படியே இறுக்கமாக தன்னுடலோடு சேர்த்து அணைத்தான். அவன் கைகள் அவளுடம்பில் தடவி படிந்தன. பரிதவிப்பாய் அலைந்தன .  விலகி விடுவாளோ என்ற பயத்தை சுமந்து இறுகின கைகள் . இதழ்கள் அவள் தோள்களில் படிந்து படிந்து விலக …நாவு முணுமுணுத்தது .

” பேபி …பேபி …பேபி …”

சற்று முன் இருந்த அநாதரவு நிலை மாறி மதுரவல்லியினுள் ஓர் புது ஒளி பரவியது .  இனி நான் உலகை ஆளப்  போகிறேனென இறுமாந்து அவள் நிமிர்ந்த நொடி , திடுமென அவள் உடல் அந்தரத்தில் தள்ளாடியது. தடுமாறி அவள் பார்த்த போது கணநாதன் அவளை தன்னை விட்டு விலக்கி தள்ளியிருந்தான் .




” எதுவாக இருந்தாலும் சமாளிக்கலாம் மதுரா .கவலைப்படாதே …” திடுமென  தள்ளி நின்று  விட்டவனை வெறித்தாள் .

” இப்படித்தான் என்னை தள்ளி விடுவீர்களா டாக்டர் ? “

” இல்லை பேபி .இனி உனக்கு …இல்லை நமக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் தான் பேபி .  நாம் அதனை இணைந்தே சமாளிக்கலாம் ” கை நீட்டினான் .அந்த நீட்டலில் ஒரு மருத்துவ தோழன் தெரிந்தானே தவிர மதுராவின் மனம் கவர்ந்தவன் தெரியவில்லை .

மதுரவல்லி விலகிப் போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.  கைகளை கன்னத்தில் தாங்கிக் கொண்டு தரையை வெறித்தாள் .கணநாதன் உள்ளறைக்கு போய் ஏதோ ஒரு ஆயின்மென்டை எடுத்து வந்தான் .

” முகத்தை காட்டு …சின்னப்பிள்ளை விளையாட்டா உனக்கு ….? ”  மென் அதட்டலுடன் சிவந்திருந்த அவள் முகத்தில் மருந்தை மென்மையாக தடவ தொடங்கினான் .

அடர்ந்த அவன்  புருவங்களை , கூர் நாசியை ,  கண்ணிய கண்களை ,  அழுத்தமான உதடுகளை பரபர விழிகளால் பார்த்தபடி இருந்தவள் ” எதற்கு காத்திருக்கிறீர்கள் ? ” என்றாள் .அதே நேரம் சரியாக வாசல் அழைப்பு மணி ஒலித்தது .

மதுரவல்லி எதற்கு இந்த கேள்வியை கேட்டாளோ தெரியாது.  கணநாதன் அக்கேள்விக்கான பதிலை தனதாக்கிக் கொண்டான் .” இதோ இதற்குத்தான் ” அழைப்பு மணியை குறித்து விட்டு வாசலுக்கு போய் கதவை திறந்தான் .

” டா …டாக்டர் …உங்கள் மனைவியை எ…எங்கே ..நா …நான் பார்க்க வேண்டுமே …? ”  பரிதவிப்புடன் வாசலில் நின்றிருந்தது சங்கரவல்லி .மிராசுதாரின் மனைவி.

” இதோ இங்கேதான் இருக்கிறாள் அம்மா. வந்து பாருங்கள் ” கணநாதன் கதவை விரிய திறந்து அவளை அழைக்க , வில் அம்பாய் உள்ளே வந்தவள் மதுரவல்லியை பார்த்தபடி நின்றாள்.  ஒரே நிமிடத்தில் அவள் கண்கள் நிறைய தொடங்க இதழ்கள் துடித்தன .அருகில் வந்து மதுரவல்லியின் கன்னம் பற்றி முகம் பார்த்தாள் . அவள் விழிகள் விரிந்தன .

” எனக்கு எப்படி தெரியாமல் போனது ….? நான் ஏன் கவனிக்காமல் விட்டேன் …? ” அரற்றலாய் முணுமுணுத்தாள் .

மதுரவல்லி புரியாமல் கணநாதனை பார்க்க அவன் கூர்மையாக சங்கரவல்லியை கவனித்தபடி இருந்தான் . அவளின் அரற்றலும் , பரிதவிப்பும் அதிகமாக மெல்ல அவள் தோள்களை பற்றி மதுரவல்லியின் அருகிலேயே அமர்த்தினான் .

” அம்மா டென்சன் ஆகாதீர்கள். நீங்கள் மதுராவை முதலிலேயே கவனிக்காமல் விட்டது உங்கள் தவறு இல்லை.  மதுரா இப்போதுதான் கொஞ்ச நாட்களாகத்தான்  இந்த மாதிரி மாறியிருக்கிறாள் .முதலில் அவளுக்கு ட்ரீட்மென்ட்  போய் கொண்டிருந்ததால் முகம் வேறு மாதிரியிருந்தது .உங்களுக்கு அடையாளம் தெரிந்திருக்காது .” தோள் தட்டி சமாதானப்படுத்தினான்.




மதுரவல்லியின் மனதில் உயர்ந்திருந்த கோபுரம் தன்  கற்களை உதிர்த்தபடி  மெல்ல மெல்ல உதிர தொடங்கியது . இவர்கள் என் உறவினரா …? இவர்களுக்காகத்தான் இந்த ஊரை தேர்ந்தெடுத்தானா …?  இவர்களோடு என்னை சேர்க்கத்தான் என்னை விட்டு விலகி நின்றானா ? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லையே …?

மதுரவல்லிக்கு தான் கணநாதன் கை பொம்மையாகி விட்ட உணர்வு உண்டானது .இவன் என்ன நினைத்தான் என்னை ? என் சம்பந்தப்பட்ட  விசயங்களுக்கு என் அனுமதி வேண்டாமா ?  மதுரவல்லியின் கண்கள் வெறுப்போடு கணநாதனை பார்த்தன. கணநாதனோ கவனத்துடன் சங்கரவல்லியை  பார்த்தபடி இருந்தான் .

” என்ன நடந்த்து டாக்டர் ? எ…என் ..ம…மகள் …அ …அவளை பற்றி சொல்லுங்கள் டாக்டர் …”  அழுகையோடு கை குவித்தவரை  மறுப்பான தலையசைவுடன் கை பற்றி இறக்கினான் .

” நீங்கள் பெரியவர்கள் அம்மா …என்ன இது …என்னிடம் போய் …” கை குவித்தலை மறுத்தானே தவிர ,  மேலே பேச அவனுமே திணறவே செய்தான் .

தன் வாழ்வில் தானே அறியாத நிறைய விசயங்களை கணநாதன் அறிந்திருப்பதாக மதுரவல்லி உணர்ந்தாள்.அவனது பேச்சு தன்னையே தனக்கு அடையாளம் காட்டும் என நினைத்தவள் அவன் பேச்சை கவனிக்கலானாள் .

கணநாதன் இறுகிய முகமும் ,  உலர்ந்த உதடுகளுமாக தீவிர யோசனையில் இருந்து விட்டு மெல்ல வாய் திறந்தான் .அவன் கண்கள் இரக்கத்துடன் சங்கரவல்லியின் மீது படிந்து கிடந்த்து .

” உங்கள் மகள் எட்டு வருடங்களுக்கு முன் எங்கள் மருத்துவமனைக்கு ட்ரீட்மென்டுக்காக வந்தார் அம்மா .  அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிய …அந்த ட்ரீட்மென்ட் செய்த என் அம்மாவும் , உங்கள் மகளும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர். உங்கள் மகள் அடுத்தடுத்த ட்ரீன்மென்டுகளுக்கு என் அம்மாவையே தேடி வர ஆரம்பித்தார் …”

பேசிக்கொண்டு போனவனை சங்கரவல்லி இடைமறித்தாள் .

” சிகிச்சை சிகிச்சைங்கிறீங்களே ….அது என்ன சிகிச்சை டாக்டர் …? “




What’s your Reaction?
+1
28
+1
18
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
1 month ago

Nice

Yaso
Yaso
1 month ago

I need to read more very interesting story

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!