Cinema Entertainment

’ஜோஷ்வா : இமை போல் காக்க’ திரைப்பட விமர்சனம்

லண்டனில் வாழும் நாயகன் வருணும், அமெரிக்காவை சேர்ந்த நாயகி ராஹேவும் சென்னையில் சந்தித்துக்கொள்கிறார்கள். நட்பாக பழகும் இவர்களுக்கு இடையே காதல் மலர்கிறது. காதலியிடம் தான் யார்? என்ற உண்மையை வருண் சொல்லும் போது, அவர் பயந்துபோய் அவரை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார். இதற்கிடையே பிரிந்து சென்ற காதலியின் உயிருக்கு சர்வதேச குற்றவாலியின் மூலம் ஆபத்து வருகிறது. காதலியின் உயிரை காப்பாற்றுவதற்காக களத்தில் இறங்கும் வருண், தனது காதலியோடு மீண்டும் சேர்ந்தாரா? இல்லையா?, அவரது காதலியை எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்?, வருண் பற்றிய உண்மை என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையை அதிரடியாக சொல்வது தான் ‘ஜோஷ்வா : இமை போல் காக்க’.




“பேராபத்தில் சிக்கிக்கொள்ளும் காதலியை காப்பாற்றும் கதாநாயகன்” என்ற ஒன்லைனை வைத்துக்கொண்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்‌ஷன் விருந்து படைத்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், அதை சற்று வித்தியாசமாகவும் கையாண்டு இருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் வருண், கடுமையாக உழைத்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆக்‌ஷன் காட்சிகள் படத்தை ஆட்கொள்ள, நாயகன் வருண் அதன் பின்னால் ஓட ஆரம்பித்து விடுகிறார். ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் ஓவ்வொரு ரகத்தில் சவால் நிறைந்ததாக இருந்தாலும், அதை மிக சிறப்பாக கையாண்டிருக்கும் வருண், சண்டைக்காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சண்டைக்காட்சிகளுக்கு நடுநடுவே வரும் காதல் காட்சிகளிலும் தனது திறமையை நிரூபித்திருக்கும் வருண், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறிதளவும் குறையின்றி செய்து, தன்னை முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக நிரூபித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ராஹே, பல அழுத்தமான காட்சிகளில் சிறப்பாக நடித்து பாராட்டு பெறுகிறார். காதல், அச்சம் ஆகிய உணர்வுகளை தனது கண்களின் மூலமாகவே வெளிப்படுத்தி கவனம் ஈர்ப்பவருக்கு இது தான் முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை.




சர்வதேச மோதலில், உள்ளூர் ரவுடியாக திடீர் எண்ட்ரி கொடுக்கும் கிருஷ்ணாவின் வேடம் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

சர்வதேச கூலிப்படையை கண்ட்ரோல் பண்ணும் கதாபாத்திரத்தில் டிடியா? என்று ஆரம்பத்தில் ஆச்சரியமளித்தாலும், அதன் பிறகு வரும் காட்சிகளில் தனது நடிப்பு மூலம், அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திவிடுகிறார்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் கிட்டி, இறுதிக்காட்சியில் வந்தாலும், தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்துவிடுகிறார்.

மன்சூர் அலிகான், விசித்ரா ஆகியோர் ஒரு காட்சியில் மட்டுமே வருகிறார்கள்.

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கும் ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென், இயக்குநர் கெளதம் மேனனுக்கு இணையாக படத்தில் உழைத்திருக்கிறார். படம் முழுவதும் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் ஒவ்வொரு ரகத்தில் வடிவமைத்து அசத்தியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளர் கார்த்திக் மற்றும் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோரது பணியும் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.




எளிமையான கருவை வைத்துக்கொண்டு ஒரு சர்வதேச அளவிலான ஆக்‌ஷன் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், இரண்டரை மணி நேரம் நம்மை ஆக்‌ஷன் காட்சிகளில் மூழ்கடித்தாலும், மூச்சு திணறல் ஏற்படாத வகையில், அதை வித்தியாசமான முறையில் கொடுத்து ரசிக்க வைக்கிறார்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து என்று இரு பெரிய நாடுகள் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அவற்றை காட்சிகளாக காட்டாவில்லை என்றாலும், திரைக்கதையோட்டத்திற்கு ஏற்ப சிறப்பாக பயணிக்க வைத்து, இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

தனது ஒவ்வொரு படங்களிலும் காதல் காட்சிகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களை உருக வைக்கும் இயக்குநர் கெளதம் மேனன், இதில் காதல் காட்சிகளை குறைத்து அதீத சண்டைக்காட்சிகளில் ரசிகர்கள் உருக வைக்க முயற்சித்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘ஜோஷ்வா : இமை போல் காக்க’ ஆக்‌ஷன் கவிதை.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!