Uncategorized

‘அமீகோ கேரேஜ்’ திரைப்பட விமர்சனம்

அம்மா, அப்பா என்று அளவான குடும்பம், படிப்புக்கு ஏற்ற வேலை என்று வாழ்ந்து வரும் நாயகன் மாஸ்டர் மகேந்திரன், தான் எதிர்கொண்ட சிறு பிரச்சனையை தீர்ப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சி அவரை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்க வைக்கிறது. அதில் இருந்து மீள்வதற்காக அவர் எடுக்கும் மிகப்பெரிய முடிவு அவரது வாழ்க்கையை வேறு பாதைக்கு அழைத்துச் செல்ல, அந்த பயணத்தால் அவருக்கு நேர்ந்த பாதிப்புகள் என்ன?, அந்த பாதையில் இருந்து விலகி பழைய வாழ்க்கைக்கு திரும்பினாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘அமீகோ கேரேஜ்’.

அமீகோ கேரேஜ் - திரைப்பட விமர்சனம்

நாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், பள்ளி பருவம், கல்லூரி முடித்து பணிக்கு செல்லும் பருவம் என்று இரண்டு விதமான கெட்டப்புகளுக்காக எந்தவித மெனக்கெடலும் மேற்கொள்ளாமல் மிக சாதாரணமாக நடித்திருக்கிறார். இவ்வளவு தாடியுன் பள்ளி மாணவரா? என்ற கேள்வி எழும் என்பதை புரிந்துக்கொண்டு, அதற்கான ஒரு வசனத்தை பேசிவிட்டு கடந்து செல்பவர், அடுத்தக் காட்சியில் கல்லூரி 3ம் ஆண்டு படிக்கும் மாணவியை காதலிப்பது, அவர் தம்பி என்று அழைத்தாலும், “அதெல்லாம் முடியாது..” என்று அடம் பிடிப்பது, அடுத்தடுத்த காட்சியில் பொறுப்பான பிள்ளையாக மாறி பணிக்கு செல்வது, திடீரென்று வரும் பிரச்சனையால ஆக்‌ஷன் அவதாரம் எடுப்பது என ருத்ரா கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.




நாயகியாக நடித்திருக்கும் ஆதிரா  கதையின் மையப்புள்ளியாக இருப்பார் என்று எதிர்பார்த்தால், அவரை வழக்கம் போல் திரைக்கதையோட்டத்திற்கான நாயகியாக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் ரம்யா, நல்வரவு. ஆனால், அவரது காட்சிகள் குறைவாக இருந்தது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.

அமீகோ கேரேஜின் உரிமையாளரான ஜி.எம்.சுந்தர், இயல்பான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரம் சாதாரணமாக பயணித்தாலும், அவர் எடுக்கும் அவதாரம் எதிர்பார்க்காததாக இருக்கிறது.

வில்லன்களாக நடித்திருக்கும் தாசரதி, முரளிதரன் சந்திரன் இருவரும் மிரட்டலான தோற்றதோடு, நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்கள்.

மதனகோபால், சக்தி கோபால், முரளிகமல், சிரிகோ உதயா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

Mahendran Amigo Garage Movie Review| அமிகோ கேரேஜ்

விஜய்குமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலுவின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக, படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் நடப்பதும், அதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதும் படத்தை பிரமாண்டமாக காட்டியிருக்கிறது. அதேபோல், பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ரகங்கள். பின்னணி இசையும் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.




வழக்கமான ஆக்‌ஷன் கதையை தனது திரைக்கதை மூலம் வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன், சின்ன திருப்புமுனையோடு படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்வதோடு, ’கூடாய் நட்பு கேடாய் முடியும்’ என்ற மெசஜையும் சொல்லியிருக்கிறார்.

காதல், குடும்ப செண்டிமெண்ட், மாணவர்களின் கலாட்டா, இளைஞர்களின் வாழ்க்கை, நட்பு, துரோகம், யோசிக்காமல் எடுக்கும் முடிவால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று படத்தில் அனைத்து அம்சங்களும் இருந்தாலும், அனைத்தும் ரசிகர்களிடம் எந்தவித பாதிப்பும் இன்றி கடந்து செல்வது படத்தின் பலவீனமாக இருக்கிறது. இருப்பினும், தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாகவும், வேகமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன், படத்தின் மேக்கிங் மூலம் தான் விசயமுள்ள இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘அமீகோ கேரேஜ்’-சில குறைகள் இருந்தாலும் அதை ரசிகரகள் மறந்து ரசிக்க கூடிய ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமாக முழுமையான திருப்தியளிக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!