Cinema Entertainment விமர்சனம்

’அதோமுகம்’ திரைப்பட விமர்சனம்

நாயகன் எஸ்.பி.சித்தார்த், தனது காதல் மனைவி நாயகி சைதன்யா பிரதாப்புடன் ஊட்டியில் வசித்து வருகிறார். மனைவிக்கு சர்ப்பிரைஸ் கொடுப்பதற்காக அவரது செல்போனில் அவருக்கே தெரியாமல் ஆப் ஒன்றை பொருத்தி, அதன் மூலம் அவரது நடவடிக்கைகளை பதிவு செய்து, அதை வீடியோ தொகுப்பாக உருவாக்கி பரிசளிக்க முடிவு செய்கிறார். அதன்படி அவர் பொருத்தும் ஆப் மூலம் மனைவியின் செல்போனை ஹேக் செய்து அவரது நடவடிகைகளை பதிவு செய்யும் போது, அவரது மனைவியின் நடவடிக்கை அவருக்கு பேரதிர்ச்சியை கொடுக்கிறது. எதுவுமே புரியாமல் மனைவியை பின் தொடரும் நாயகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுக்கிறது.

தன் மனைவியை வைத்து தன்னை சுற்றி பின்னப்பட்டுள்ள சதிவலைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் சித்தார்த், அதில் இருந்து தன்னையும், தனது மனைவியையும் காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். ஆனால், அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அவரை அடுத்தடுத்த ஆபத்தை நோக்கி பயணிக்க வைக்க, இறுதியில் நினைத்துப் பார்க்க முடியாத பேராபத்தில் சிக்கிக்கொள்பவர் அதில் இருந்து மீண்டாரா? இல்லையா? என்பதே ‘அதோமுகம்’ படத்தின் கதை.




நாயகனாக நடித்திருக்கும் எஸ்.பி.சித்தார்த் புதுமுகம் என்றாலும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் பலமான கதாபாத்திரத்தில் பளிச்சிடும் வகையில் நடித்திருக்கிறார். குழந்தை குணம் மாறாத அப்பாவியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் சித்தார்த், குழப்பமான மனநிலை, கோபமடைந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாமல் தவிப்பது, அனைத்தும் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாமல் நிற்பது, என்று திருப்பங்களுக்கு ஏற்றவாறு நடிப்பில் வேறுபாட்டைக் காட்டி அசத்துகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சைதன்யா பிரதாப், ஆரம்பத்தில் அப்பாவித்தனமாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் தனது நடவடிக்கைகள் மூலம் மிரட்டுகிறார். எல்லாமே கணவருக்காக தான் செய்கிறார், என்று அவர் மீது இறக்கம் ஏற்பட்டாலும், திடீரென்று அவர் எடுக்கும் விஸ்வரூபம் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.

சித்தார்த்தின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அவரது அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ், ஜே.எஸ்.கவி, பிபின் குமார், சரித்திரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பு மூலம்  கவனம் ஈர்க்கிறார்கள்.

படத்தின் இறுதியில் வரும் அருண்பாண்டியனின் வேடமும், அவரது அதிரடி நடவடிக்கைகளும், நாயகனின் நிலையைக்கண்டு வருத்தமடையும் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறது. இருந்தாலும், அருண்பாண்டியனுக்கு சிறையில் கிடைக்கும் வசதிகள் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அருண் விஜயகுமார், வழக்கமான ஊட்டி லொக்கேஷன்களை தவிர்த்துவிட்டு, கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பது கதைக்களத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. மணிகண்டன் முரளியின் இசையில் பாடல்களும், சரண் ராகவனின் பின்னணி இசையும் நேர்த்தி.

குறைவான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் யூகிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்த ஒரு கதைக்களத்தை மிக சுவாரஸ்யமான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுனில் தேவ்.




திரைக்கதையின் வேகம் சில இடங்களில் குறைந்தாலும், அடுத்தடுத்த சம்பவங்களை திருப்பங்கள் நிறைந்த காட்சிகளோடு விவரித்து, படம் முழுவதை எதிர்பார்ப்புடன் பார்க்க வைக்கும் இயக்குநர் சுனில் தேவ், இறுதிக் காட்சியில் கூட ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்து அசத்திவிடுகிறார்.

ஆஹா, சூப்பர் முடிவு…என்று ரசிகர்கள் ஃபுல் மீல்ஸ சாப்பிட்ட உணர்வுக்கு வரும்போது, இது முடிவல்ல…தொடக்கம், என்று இரண்டாம் பாகத்திற்கு லீடு கொடுத்திருப்பது தேவையா? என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும், இரண்டாம் பாகத்தை எப்படி கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்படத்தான் செய்கிறது.

மொத்தத்தில், இந்த ‘அதோமுகம்’ குறுகிய வட்டத்திற்குள் அட்டகாசம் செய்திருக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!