gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/கிருஷ்ணர் ஏன் போரிடவில்லை

மக்கள் பெரும்பாலும் மஹாபாரதப் போரை சாதாரண போர் என்று நினைக்கின்றனர். ஆனால், அஃது உண்மையன்று. இந்தப் போர் பகவான் கிருஷ்ணரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவரால் ஏற்படுத்தப்பட்டதாகும். அவருடைய நோக்கம், பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம், பக்தர்களைக் காத்து அசுரர்களை அழிப்பதாகும்.

 தர்ம வாழ்வின் உண்மையான நோக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அதற்கு எதிரான நபர்களை துவம்சம் செய்வதற்காகவும், கிருஷ்ணர் இந்த பிரபஞ்சத்தில் அவதரிக்கிறார்.
இந்த ஸ்லோகத்திலுள்ள ஸ்வஜனம் என்னும் சொல், சகோதரன், சகோதரி, தந்தை, மாமா முதலிய நெருங்கிய உறவினர்களை மட்டும் குறிப்பதில்லை; இஃது எல்லா உயிர்களையும் குறிக்கிறது, எல்லா உயிர்களும் உறவினர்களே; ஏனெனில், கடவுள் எல்லா உயிர்களுக்கும் தந்தையாவார். அனைத்து மதங்களும் இதனை பிரகடனம் செய்கின்றன.




கிருஷ்ணரும் பகவத் கீதையில் (14.4) அஹம் பீஜ-ப்ரத: பிதா, “நானே விதை அளிக்கும் தந்தை” என்று கூறுகிறார். அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே, அனைத்தும் அவரிலிருந்தே வருகின்றன.

(பகவத் கீதை 10.8) எனவே, கிருஷ்ண பக்தர் எந்த உயிர்வாழியையும் துன்புறுத்துவதில்லை. இதுவே கிருஷ்ண உணர்வு.

கிருஷ்ணர், ஸம-தர்ஷின:, அனைவரையும் சமநோக்கில் காண்கிறார். கிருஷ்ணரைப் போலவே அவரது பக்தர்களும் அனைவரையும் சமநோக்கில் காண்கின்றனர். பக்தர்கள் உடலைப் பொருட்படுத்தாமல், எல்லா உயிர்வாழிகளையும் உறவினர்களாகக் கருதுகின்றனர்.

வித்யா-வினய-ஸம்பன்னே
ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
ஷுனி சைவ ஷ்வ-பாகே ச
பண்டிதா: ஸம-தர்ஷின:

“அடக்கமுள்ள பண்டிதர்கள் தங்களது உண்மை ஞானத்தின் வாயிலாக, கற்றறிந்த தன்னடக்கமுள்ள பிராமணன், பசு, யானை, நாய், நாயைத் தின்பவன் (இழி குலத்தோன்) என அனைவரையும் சமநோக்கில் காண்கின்றனர்.” (பகவத் கீதை 5.18)

வெளிப்பழக்கத்தில் நாம் ஒரு பிராமணரிடமும் நாயுடனும் சமமாகப் பழகுவதில்லை. ஆனால், உள்நோக்கிப் பார்த்தால் பிராமணர், நாய் இருவரும் ஆன்மீகப் பொறிகளே. இதுவே பிரம்ம-ஞானம் அல்லது ஆன்மீக ஆத்மாவைப் பற்றிய அறிவு எனப்படுகிறது. இந்த பிரம்ம-ஞானத்தை அடைபவர் அனைவரையும் சமமாகக் காண்கிறார்.




ப்ரஹ்ம-பூத:

ப்ரஸன்னாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி,

ஸம: ஸர்வேஷு (பகவத் கீதை 18.54).
இந்த ஸ்லோகத்தில், அஹோ பத மஹத்-பாபம் என்று அர்ஜுனன் கூறுகிறான். மஹத்-பாபம் என்றால் “மிகப்பெரிய பாவச் செயல்” என்று பொருள்.

“எனது திருப்திக்காக, எனது நாவின் திருப்திக்காக அல்லது வேறு நோக்கத்திற்காக ஒருவரைக் கொல்வது மஹா பாவமாகும்; ஏனெனில், அனைவரும் நமது ஸ்வஜனம். தாழ்ந்த மிருகங்களும் எனது உறவினர்களே. அவற்றை எனது திருப்திக்காக நான் கொன்றால் அது பாவம்,” என்று உண்மையான கற்றறிந்த பண்டிதர் எண்ணுவார். ஆனால், தற்போது துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் இத்தகைய கொலையில் ஈடுபடுகின்றனர். தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் மதத்தின் பெயரால் மக்கள் கொல்கின்றனர். பாவகரமான வாழ்க்கையில் அவர்களால் எவ்வாறு ஆனந்தமாக வாழ முடியும் எது சரி, எது தவறு, எவ்வாறு பகுத்தறிவது?




“ராஜ்ஜியம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் என்னுடைய புலனின்பத்திற்காகவும் நான் எனது உறவினர்களைக் கொல்லப் போகிறேன். இது மாபெரும் பாவம்,” என்று அர்ஜுனன் எண்ணுகிறான். அஃது உண்மை. குருக்ஷேத்திரப் போர் அர்ஜுனனின் புலனின்பத்திற்காக என்றால், அது மாபெரும் பாவமே. ஆனால், அஃது உண்மையில் அர்ஜுனனின் திருப்திக்காக ஏற்படுத்தப்பட்டது அன்று; மாறாக, கிருஷ்ணரின் திருப்திக்காக ஏற்படுத்தப்பட்டதாகும். ஒரு கர்மி (பலன்நோக்குச் செயல்களில் பற்று
டையவன்) தனது திருப்திக்காகச் செயல்படுவான்; பக்தனோ கிருஷ்ணரின் திருப்திக்காகச் செயல்படுகிறான். வெளிப்படையாகப் பார்க்கும்பொழுது இரண்டும் ஒன்றுபோலத் தோன்றலாம். ஆனால், இதில் பெரும் வேறுபாடு உள்ளது. முடிவு என்னவெனில், நமது புலனின்பத்திற்காகச் செயல்படுவது மஹா பாவம். ஆனால், நாம் கிருஷ்ணரின் திருப்திக்காக எதையேனும் செய்தால், அஃது ஆன்மீக முன்னேற்றமாகும். இதுவே வேறுபாடு. கிருஷ்ணரின் திருப்திக்காகச் செயல்படுவது முக்திக்கான பாதையைத் திறக்கிறது, இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லும் பாதையைத் திறக்கிறது. நம்முடைய உணர்வை மாற்ற வேண்டும். நாம் என்ன செய்கிறோம்? யாருக்காக செய்கிறோம்? நமக்காகவா கிருஷ்ணருக்காகவா? இதுவே கிருஷ்ண உணர்வு. இது நமது வாழ்வை முழுமை பெறச் செய்யும். நாம் எந்த நிலையில் உள்ளோம், என்ன செய்கிறோம் என்பது பொருட்டல்ல. இது ஸ்ரீமத் பாகவதத்தில் (1.2.13) பின்வருமாறு உறுதி செய்யப்படுகிறது.




அத: பும்பிர் த்விஜ-ஷ்ரேஷ்டா
வர்ணாஷ்ரம-விபாகஷ:
ஸ்வனுஷ்டிதஸ்ய தர்மஸ்ய
ஸம்ஸித்திம் ஹரி-தோஷணம்

“இரு பிறப்பு எய்தியவர்களில் சிறந்தவரே, ஒருவன் வர்ணம் மற்றும் ஆஷ்ரமத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதால் அடையப்படும் மிகவுயர்ந்த பக்குவநிலை முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்துவதே ஆகும்.”
ஹரி-தோஷணம் என்பது முழுமுதற் கடவுளான ஹரியை திருப்திப்படுத்துவதாகும்.

இதுவே பூரணத்துவமாகும். “என்ன செய்கிறோம் என்பது பொருட்டல்ல” என்பதால், எந்த முட்டாள்தனமான செயலைச் செய்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதல்ல. வர்ணாஷ்ரம-விபாகஷ:, வேத முறைப்படி வர்ணங்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என பிரிக்கப்படுகின்றன. எனவே, வர்ணாஷ்ரமத்திற்கென்று விதிக்கப்பட்ட கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஒருவர் தனது வர்ணாஷ்ரம நிலைக்கேற்ப கிருஷ்ணரின் திருப்திக்காகச் செயல்படுவதே அவருடைய வாழ்வின் பக்குவமாகும். நாம் சூத்திரரா பிராமணரா என்பது முக்கியமல்ல; நமது நிலைக்கேற்ப கிருஷ்ணரின் திருப்திக்காகச் செயல்படுவது நமது வாழ்க்கையை பக்குவமாக்கும். அதுவே தேவை.




மனித சமுதாயம் முழுவதும் இந்த கொள்கையின்படி அமைக்கப்பட வேண்டும். பிரிவுகள் ஏற்கனவே உள்ளன; அவை ஒருங்கிணைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அனைவரும் பிராமணர் அல்லர். பிராமணர் என்பவர் புத்திசாலியானவர். எனவே, நாம் புத்திசாலி மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பிராமணராவதற்கான பயிற்சியை அளிக்க வேண்டும். போரிடுவதற்கான திறமை உள்ளவர்களை சத்திரியர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். தொழிலிலும் வணிகத்திலும் சிறந்து விளங்குவோர் வைசியர்களாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதுபோல, சூத்திரர்களும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் கிருஷ்ணரை திருப்திப்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

ஸ்வனுஷ்டிதஸ்ய தர்மஸ்ய ஸம்ஸித்திம் ஹரி-தோஷணம்.

குருக்ஷேத்திரப் போர் அர்ஜுனனின் திருப்திக்காக ஏற்படுத்தப்பட்டதல்ல; மாறாக, கிருஷ்ணரின் திருப்திக்காக ஏற்படுத்தப்பட்டதாகும்.

நச்சுக்களை அழிக்கும் கிருஷ்ணர்

அர்ஜுனன் ஒரு சத்திரியன் என்பதால், அவன் போரில் ஈடுபடுகிறான். அதே நேரத்தில், பக்தனாக இருப்பதால் அவன் சரியாக சிந்திக்கின்றான், “என்னுடைய புலனின்பத்திற்காக என்னுடைய உறவினர்களை கொல்லப் போகிறேனா? எத்தகைய மாபெரும் பாவத்தை நான் செய்ய உள்ளேன்!” ஆயினும், கிருஷ்ணர் தன்னுடைய பக்தனை பாவச் செயலில் ஈடுபடுத்துவதில்லை. அஃது அவருடைய வேலையும் இல்லை. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது, கிருஷ்ணர் அர்ஜுனனை பாவச் செயலில் ஈடுபடுத்துவதுபோலத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அது பாவமல்ல.

கிருஷ்ணர் செய்யும் எதுவுமே பாவமல்ல; அவை தெய்வீகமானவை, மிகவும் தூய்மையானவை. இதனை அறியாத மூடர்கள் கிருஷ்ணரை ஒழுக்கமற்றவர் என்பர். அவர்கள் கிருஷ்ணர் யார், அவருடைய செயல்கள் யாவை என்பதை அறியார். கிருஷ்ணர் ஏன் அர்ஜுனனை போரில் ஈடுபடுத்தினார்? மற்றவர்களின் மனைவியாகவும் தங்கையாகவும் உள்ள கோபியர்களுடன் ஏன் அவர் நடனம் ஆடினார்? கிருஷ்ணரின் அத்தகு செயல்களை “பாவம்” என்று அவர்கள் வாதிடுவர். அவர்களுக்கு கிருஷ்ணரின் நிலை புரிவதில்லை.




கிருஷ்ணர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தேஜீயஸம் ந தோஷாய, “சக்திவாய்ந்த கட்டுப்பாட்டாளர்களின் நிலை, அவர்களிடம் நாம் காணக்கூடிய எந்தவொரு மேலோட்டமான ஒழுக்க மீறல்களாலும் பாதிக்கப்படுவதில்லை; ஏனென்றால், அவர்கள் தன்னில் இடப்படும் அனைத்தையும் விழுங்கி மாசுபடாமல் இருக்கும் நெருப்பைப் போன்றவர்கள்.” (ஸ்ரீமத் பாகவதம் 10.33.29)

உதாரணமாக, சூரியன் மிகவும் சக்தி வாய்ந்தது. இது கடல் நீரை மட்டும் ஆவியாக்குவதில்லை; சிறுநீர், கழிவுநீர் போன்ற அசுத்தமான நீரையும் ஆவியாக்குகிறது. ஆனால், அதனால் சூரியன் மாசுபடுமா? இல்லை. மாறாக, நச்சுக்களை அழிக்கும் தன்மையினால் (ஆன்டிசெப்டிக் தன்மையினால்) சூரியன் அந்த இடத்தைத் தூய்மைப்படுத்துகிறது. அதுபோலவே, கிருஷ்ணரும் நச்சுக்களை அழிக்கும் இயல்புடையவர். தூய்மையற்ற அல்லது ஒழுக்கமற்ற நோக்கத்துடன் கிருஷ்ணரிடம் வருபவர்களும் கிருஷ்ணரின் தொடர்பினால் தூய்மையடைகின்றனர். கிருஷ்ணர் அத்தகு அசுத்தங்களால் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. ஆகவே, கிருஷ்ணரை ஒழுக்கமற்றவர் என்று கூறுவதற்கு முன்பாக இந்த அறிவியலை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, கிருஷ்ணர் பகவத் கீதையில் (7.3) கூறுகிறார்:
மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு
கஷ்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தானாம்
கஷ்சின் மாம் வேத்தி தத்த்வத:

“ஆயிரமாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவன் பக்குவமடைய முயற்சி செய்யலாம். அவ்வாறு பக்குவமடைந்தவர்களில்கூட யாரேனும் ஒருவனே என்னை உண்மையாக அறிகிறான்.”
எனவே, கிருஷ்ணர் ஒழுக்கமற்றவர் அல்லர். அவர் அர்ஜுனனை பாவச் செயல்களில் ஈடுபடுத்தவில்லை, தமது சேவையில் ஈடுபடுத்துகிறார். அர்ஜுனன், “இந்த போர் எனது புலன்திருப்திக்கானது அல்ல, கிருஷ்ணரின் புலன்திருப்திக்கானது,” என்று புரிந்து கொண்டபோது, அவன் ஒரு பக்தன் என்பதால் போரிட ஒப்புக் கொண்டான். கரிஷ்யே வசனம் தவ, “ஆம். நான் இப்போது உங்களது கட்டளையின்படி செயல்படுவேன்.” (பகவத் கீதை 18.73)

சூரியன் எவ்வாறு அசுத்தமான நீரையும் ஆவியாக்கி மாசுபடாமல் இருக்கிறதோ, அவ்வாறே கிருஷ்ணரும் தூய்மையற்ற நோக்கத்துடன் வருபவர்களையும் தூய்மைப்படுத்துகிறார்.

 

பாம்பு தீண்டிய பால்

இந்த ஞானம் பரம்பரையின் மூலமாகப் பெறப்பட வேண்டும். ஏவம் பரம்பரா-ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது:. (பகவத் கீதை 4.2) வெறும் கல்வி அறிவினால் மட்டும் பகவத் கீதையைப் புரிந்துகொள்ள முடியாது. பக்தோ ’ஸி மே ஸகா சேதி (பகவத் கீதை 4.3). பக்தனாகாமல் பகவத் கீதையைப் புரிந்துகொள்ள முடியாது என்று கிருஷ்ணர் கூறுகிறார். எனவே, வைஷ்ணவரல்லாத ஒருவரிடமிருந்து கிருஷ்ணரைப் பற்றி நாம் அறிவதை ஸநாதன கோஸ்வாமி கண்டிக்கிறார்.




அவைஷ்ணவ-முகோத்கீர்ணம்
பூதம் ஹரி-கதாம்ருதம்
ஷ்ரவணம் நைவ கர்தவ்யம்
ஸர்போச்சிஷ்டம் யதா பய:

முதலில் யார் கிருஷ்ணரைப் பற்றி பேசப் போகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர் கிருஷ்ண பக்தரா, வைஷ்ணவரா? அப்படி இல்லையேல் அவரிடம் கேட்கப்போவதில்லை என்று நிராகரித்துவிட வேண்டும். ஆனால், இதை அறியாத மக்கள் எந்த வஞ்சகரிடமிருந்தாவது பகவத் கீதையைக் கேட்டு தத்துவத்தைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர்.

ஸர்போச்சிஷ்டம் யதா பய:, பாம்பு தீண்டிய பால் எவ்வாறு விஷமாகிறதோ அதுபோல வைஷ்ணவரல்லாத ஒருவரால் அளிக்கப்படும் கிருஷ்ணரைப் பற்றிய உபன்யாசமும் நஞ்சாகவே இருக்கும். எனவே, கிருஷ்ண பக்தராக (வைஷ்ணவராக) இல்லாத ஒருவரிடமிருந்து பகவத் கீதையைக் கேட்க வேண்டாம்.

பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம். (பகவத் கீதை 4.8) கிருஷ்ணர் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அர்ஜுனனைப் போரில் ஈடுபடுத்துகிறார். அர்ஜுனனும் கிருஷ்ணரின் நோக்கத்திற்காகச் செயல்பட்டான், தன் தனிப்பட்ட பலனுக்காக அவன் போரிடவில்லை. மிக்க நன்றி.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!