Cinema Entertainment

அஞ்சலி தேவி-5

எம்.ஜி.ஆர்.- அஞ்சலிதேவி இணைந்து நடித்த முதல் படம் சர்வாதிகாரி. தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் முரசு கொட்டியது. மாடர்ன் தியேட்டர்ஸில் அஞ்சலியின் ஹாட்ரிக் வெற்றி! அதற்குக் காரணம் அஞ்சலியின் அபார நடிப்பு!

சர்வாதிகாரியாகத் துடிக்கும் எம்.என். நம்பியாரின் ‘கைப்பாவை மீனாவாக’ வருவார் அஞ்சலி. தளபதி சித்தூர் வி. நாகையா. அவரது மெய்க்காப்பாளன் எம்.ஜி.ஆரை மயக்குவது போல் நடிக்க வேண்டிய கட்டத்தில் நிஜமாகவே அவரைக் காதலிக்கத் தொடங்குவார்.

‘கண்ணாளன் வருவாரே… என் ராஜன் வருவாரே… பேசி மகிழ்வேனே… ’

சினிமாவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகி இருந்த நிலையில் அஞ்சலியின் நடிப்புக்கு பெரிய சவாலாக அமைந்தது சர்வாதிகாரி.

காதலுக்கும் கடமைக்கும் நடுவில் அவர் தவிக்கும் தவிப்பு, நடுவில் நிஜம் அறிந்த நாயகனின் புறக்கணிப்பு அத்தனையையும் தன் முகத்தில் காட்டி முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார் அஞ்சலி.

ஆடலரசி மட்டும் அல்ல. நடிப்பாற்றல் நிரம்பியவர் என்று ருசுப்படுத்தியது. தமிழகத்தில் அஞ்சலியை ஸ்திரப்படுத்தியது.

தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கி, எம்.ஜி.ஆருக்குப் ‘புரட்சி நடிகர்’ பட்டம் நிலைக்கக் காரணமாக இருந்த மகத்தான வெற்றிச் சித்திரங்கள் மர்மயோகியும் – சர்வாதிகாரியும்.




சின்னத்திரைகளில் முழு நேர சினிமா ஒளிபரப்பு வரும் வரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டே இருந்தன.

images for anjali devi க்கான பட முடிவு

எம்.ஜி.ஆர் – அஞ்சலி இணை பட முதலாளிகளின் ராசியான ஜோடி ஆயிற்று.

மக்கள் திலகம் பற்றி அஞ்சலி-

‘பெண்களை தெய்வமாக மதிப்பவர் எம்.ஜி.ஆர். சில நேரம் ஓடிக் கொண்டிருக்கும் காமிரா நின்றதும், அவர் பார்வை என் மீது படும். உடனே டைரக்டரிடம் போய், கரண்டைக் காலுக்கு மேலே புடைவை தூக்கிக்கொண்டு இருக்கிறது. சரி செய்த பிறகு திரும்பவும் அக்காட்சியை எடுங்கள் என்பார்.




அப்போது தான் எனக்கே விவரம் புரிந்தது. காட்சியின் போதான எம்.ஜி.ஆரின் கவனம் தெரிந்தது. பெண்மையை அவர் மதிக்கும் பண்பு புரிந்தது. எந்த விஷயத்திலும் உன்னிப்பான கவனம் கொண்டவர் எம்.ஜி.ஆர். ’

அடுத்தடுத்தத் தொடர் வெற்றிகளால் 1951 அஞ்சலியின் ஆண்டாகிப் போனது. ‘எங்கெங்கு காணினும் அஞ்சலியடா! ’ என்கிற நிலை.

தென்னகமெங்கும் எல்லா டாக்கீஸ்களிலும் வருடம் முழுவதும் அஞ்சலியின் படங்களே ஓடின. ஒரு சுவர் பாக்கி இல்லாமல் அஞ்சலி நடித்த சினிமா விளம்பரங்கள் நீக்கமற நிறைந்திருந்தன.

‘மனமோகன லாவண்யத்துக்கு மற்றொரு பெயர் அஞ்சலி. அதி அற்புத சவுந்தர்யத்துக்கு இன்னொரு பெயர் அஞ்சலி. பட உலகில் இவர் ஒரு மாயக்காரி, மயக்குக்காரி, சிங்காரி, ஸ்வப்ன சுந்தரி. ’ என்றெல்லாம் மூத்த சினிமா நிருபர் நவீணன் அஞ்சலியைப் போற்றி 1951ல் எழுதினார்.

தமிழகத்தின் பெரும் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளில் அஞ்சலி பங்கேற்க நல்ல வாய்ப்பை 1954 முதன் முதலாக அளித்தது.

பொன்வயல் ஹாஸ்ய நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனின் சொந்தத் தயாரிப்பு. அவருடைய பங்குதாரர் குணச்சித்திரக் கலைஞர் கே. சாரங்கபாணி.

கல்கியின் ‘பொன்மான்கரடு’ என்கிற புதினமே பொன்வயலாக திரையில் அறுவடையானது. கே. சாரங்கபாணியும் கல்கியும் சிறந்த நண்பர்கள்.




‘பொன்மான்கரடு’ உரிமையைப் பெறுவதற்காக டி.ஆர்.ராமச்சந்திரனை, கல்கியிடம் அழைத்துச் சென்றார் கே. சாரங்கபாணி.

‘இந்தக் கதை சினிமாவுக்கு ஏற்றதுதானா…? என்று சிந்தித்து எடுங்கள். என் கதை என்பதற்காக பொன்மான்கரட்டைப் படமாக்கி நஷ்டப்படாதீர்கள்’ என்றார் கல்கி, கே. சாரங்கபாணியிடம்.

‘பட அதிபராக எனது முதல் அனுபவம் பொன்வயல். அதில் என்னுடன் நாயகியாக நடித்தவர் அஞ்சலிதேவி. மிக அருமையாக எங்களுடன் ஒத்துழைத்தார். அவரால் எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் ஏற்படவில்லை.

மிகப் பெரிய ஸ்டாராக இருப்பினும் ஒப்புக் கொண்ட தேதிகளில் சரியாக வந்து நடித்துக் கொடுத்தார். பொன்வயல் வெற்றிகரமாக ஓடி நிறைய லாபத்தைச் சம்பாதித்துத் தந்தது.’ – டி.ஆர். ராமச்சந்திரன்.

‘கதை வசனம் – அறிஞர் அண்ணா’ என்று முதல் முறையாக விளம்பரப்படுத்திய சினிமா சொர்க்கவாசல். அண்ணாவின் பரிமளம் பிக்சர்ஸ் தயாரிப்பு.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!