Cinema Entertainment

‘ரூட் நம்பர் 17’ திரைப்பட விமர்சனம்

முன்னாள் அமைச்சர் ஹரிஷ் பெராடியின் மகன் கார்த்திக் தனது காதலி அஞ்சுவுடன் காட்டுப்பகுதிக்கு செல்கிறார். அப்போது அந்த ஜோடியை கடத்தும் ஜித்தன் ரமேஷ், அதே பகுதியில் இருக்கும் ஒரு பாதாள அறையில் வைத்து அவர்களை கொடுமை படுத்துகிறார். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்க, அந்த காட்டுப் பகுதியில் இதுபோல் பல மர்ம சம்பவங்கள் நடந்திருப்பது தெரிய வருகிறது. அந்த சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் ஜித்தன் ரமேஷ் யார்?, எதற்காக இப்படி செய்கிறார்? என்பது தான் ‘ரூட் நம்பர் 17’ படத்தின் மீதிக்கதை.




நாயகனாக சைக்கோத்தனமான வில்லனாக நடித்திருக்கும் ஜித்தேன் ரமேஷ், காட்டுப் பகுதியில் வாழ்ந்தாலும், உடை, காலணி போன்றவற்றின் மூலம் ஏதோ நகர்ப்புறத்தில் வாழ்பவராகவே வருகிறார். அதிகம் பேசாமல் நடிப்பிலேயே பார்வையாளர்களை பயமுறுத்த முயற்சித்திருப்பவர் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சைக்கோத்தனமான வில்லனாக நடித்திருப்பவர், பிளாஷ்பேக்கில் வேறு ஒரு லுக்கில் நடித்து கவனம் பெறுகிறார்.

காதல் ஜோடியாக நடித்திருக்கும் கார்த்திக் மற்றும் அஞ்சு, வில்லனாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் டாக்டர்.அமர் ராமச்சந்திரன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் அருவி மதன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக அஞ்சு படம் முழுவதும் அழுக்கு படிந்த உடலோடு நடித்திருப்பதோடு, விழுவது, ஓடுவது, அடிவாங்குவது என்று அதிகம் உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.

காட்டுப்பகுதியில் நடக்கும் திகில் சம்பவங்களை மையமாக வைத்துக்கொண்டு வழக்கமான பாணியில் ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன், திகில் காட்சிகளுக்காக அதிகம் மெனக்கெடாமல் அசால்டாக காட்சிகளை நகர்த்தி சென்றிருக்கிறார்.




காதல் ஜோடி கடத்தப்பட்ட பிறகு, நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்களும், ஜித்தன் ரமேஷ் அஞ்சுவிடம் நடந்துக் கொள்ளும் விதம் ஆகியவை அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதே சமயம், இரண்டாம் பாதி படம் தொடங்கிய உடன் அடுத்தது என்ன நடக்கும் என்பதையும், படத்தின் இறுதியில் என்ன நடக்கப் போகிறது, என்பதையும் எளிதாக யூகித்து விட முடிவதால், படத்தின் சுவாரஸ்யம் சற்று குறைந்துவிடுகிறது. இருந்தாலும், பிளாஷ்பேக் கதை மற்றும் டாக்டர்.அமர் ராமச்சந்திரனின் வருகை ஆகியவை திரைக்கதையை வேகமாக பயணிக்க வைத்து படத்தை ரசிக்க வைத்துவிடுகிறது.

கலை இயக்குநர் பேபோர் முரளி பாதாள அரையை வடிவமைத்த விதம், அந்த சிறு இடத்தில் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் பிரஷாந்த் பிரணவம், இசையமைப்பாளர் அவுசிப்பச்சனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில், ‘ரூட் நம்பர் 17’ பயணித்தில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் திரில்லர் பட ரசிகர்களுக்கு ஏற்ற பயணம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!