Cinema Entertainment விமர்சனம்

ஜெய்பீம் ஒரு பார்வை

இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்களின் ஒற்றை முழக்கமான `ஜெய் பீம்’ என்பதைத் தலைப்பாகக் கொண்டு வெளியாகியிருக்கிறது சூர்யா நடித்த இந்தத் திரைப்படம். தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் மிகக் குறைவாகவும், சமூகத்தாலும் அரசு அமைப்புகளாலும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் இருளர் பழங்குடியினர் குறித்த அரசியல் கதையாக உருவாகியிருக்கிறது `ஜெய் பீம்’.




The other side of Jai Bhim police actor - Details Inside - Tamil News - IndiaGlitz.com

வட தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் ஊருக்கு வெளியில் வாழும் இருளர் பழங்குடி மக்களைச் சேர்ந்த ராசாகண்ணு (மணிகண்டன்) திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்படுகிறார். வழக்கை விரைவில் முடித்துவிட வேண்டும் என்ற அழுத்தத்தால், அப்பகுதி காவல்துறையினர் ராசாகண்ணு குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார். அவருடன் அவரது சமூகத்தைச் சேர்ந்த மற்ற இருவரும் கைது செய்யப்படுகின்றனர். காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த மூவரும் தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையினர் ராசாகண்ணுவின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கின்றனர். பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த மூவரும் காணவில்லை என்பதால், தன் கணவர் ராசாகண்ணுவை மீட்டுத் தருமாறு சென்னையில் உள்ள மனித உரிமைகள் ஆர்வலரும் வழக்கறிஞருமான சந்துருவைச் (சூர்யா) சென்று சந்திக்கிறார் செங்கேணி (லிஜோமோல் ஜோஸ்). சந்துரு இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அரசின் சாதியவாத கோர முகம் அம்பலப்படுகிறது. ராசாகண்ணுவும், அவரது நண்பர்களும் என்ன ஆனார்கள், செங்கேணி நீதிமன்றத்தின் மூலம் வென்றாரா என்பதை மீதிக்கதையில் பேசியிருக்கிறது `ஜெய் பீம்’.




தொடக்க காட்சியில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுபவர்களை சாதியின் அடிப்படையில் பிரிக்கிறது காவல்துறை. நிலம், அதிகாரம், எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பலமாக இருக்கும் சாதியினர் வீட்டுக்கு அனுப்பப்பட, எதிர்த்துக் குரல் கொடுக்க பலமற்ற ஒடுக்கப்படும் பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு, முடித்து வைக்கப்படாத வழக்குகளில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படுகின்றனர். தமிழ்நாட்டின் அனைத்து பிரதான சாதிகளின் பெயர்களும் கூறப்பட்டு, பழங்குடிகள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமையைக் காட்சியாக்கிருப்பதில் இருந்து தொடங்குகிறது `ஜெய் பீம்’ படத்தின் கலக அரசியல். தமிழ் சினிமாவில் இதுவரை பெருமைக்காக முன்வைக்கப்பட்ட சாதிகள் அனைத்தையும் ஒற்றைக் காட்சியில் விமர்சனமாக அணுகும் காட்சியாக `ஜெய் பீம்’ தொடங்க, படம் முழுவதும் சூர்யா கதாபாத்திரம் கம்யூனிஸ்டாக, இந்திய அரசியலமைப்பு மீது நம்பிக்கை கொண்டு, அதன் வழியாக மக்களுக்கு நீதி பெற்றுத் தரும் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.




Jai Bhim: சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம்-jai bheem to be telecasted in goa international film festival - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்

இருளர் பழங்குடிகள் எலியைப் பிடிப்பது, பாம்பு பிடிப்பது, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தங்கள் பழங்கால மருத்துவக் குறிப்புகளைக் கற்றுக் கொடுப்பது, தங்கள் பழக்க வழக்கங்கள், சமூகத்தில் எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாடுகள் ஆகியவற்றின் சித்திரத்தை தொட்டுச் சென்றிருக்கிறது இந்தத் திரைப்படம். பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராசாகண்ணுவாக அசத்தியிருக்கிறார் மணிகண்டன். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன் பாத்திரத்தை மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். அரசு அமைப்பான காவல்துறையில் நிலவும் சாதியப் போக்குகள், அதில் இருந்து பிறக்கும் வன்கொடுமை முதலானவை வெளிப்படையாகவும், ரத்தமும் சதையுமாகவும் காட்சிப்படுத்தியுள்ளது `ஜெய் பீம்’. நீதிமன்றக் காட்சிகள் சற்றே நீளமாக, கதையை சுவாரஸ்யப்படுத்தும் நோக்கில் விசாரணையின் பாணியில் எடுக்கப்பட்டிருந்தாலும் கதைக்குப் பலம் சேர்த்துகின்றன.




சந்துருவாக சூர்யா மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக முழக்கமிடும் போது காட்டும் எழும் கம்பீரம், லாக்கப்பின் பழங்குடிப் பெண்ணுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமை குறித்து கேட்டவும் எழும் அறச்சீற்றம், நீதிமன்றங்களில் நிதானம் தவறாமல் நிகழ்த்தப்படும் உரையாடல்கள், வழக்கிற்காக செங்கேணியுடன் பயணத்தில் தன்னைத் `தோழன்’ என முன்னிறுத்தும் பண்பு, இறுதியில் ராசாகண்ணுவின் மகளுடன் அமர்ந்து செய்தித்தாள் படிக்கும் காட்சியில் எழும் மகிழ்வான உணர்வு என சூர்யாவின் நடிப்பிலும், தயாரிப்பிலும் மற்றொரு மைல்கல்லாக `ஜெய் பீம்’ அமைவதற்கு வாய்ப்புகள் ஏராளம். செங்கேணியாக நடித்துள்ள லிஜோமோல் ஜோஸ் முழுப் படத்தையும் தாங்கி நடித்துள்ளார். கணவனுடனான காதல், கணவனைக் காவல்துறையினரிடம் இருந்து மீட்க முடியாத கையறுநிலை, மகளைத் தூக்கிச் செல்லும் காவலர்களிடம் காட்ட முடியாத சினம், காவல்துறை உயரதிகாரியிடம் எழும் சுயமரியாதை என லிஜோமோலுக்கு விருதுகள் குவிக்கும் படமாகவும் `ஜெய் பீம்’ இருக்கும். சிறிய வேடம் என்றாலும் ரஜிஷா விஜயனின் அறிவொளி இயக்க ஆசிரியர் வேடம் அவருக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.




இயக்குநர் டி.ஜே.ஞானவேல் தமிழ் சினிமாவில் இதுவரை பெரிதும் பேசப்படாத பழங்குடிகள் மீதான சமூக வன்முறை, அரசு வன்முறை ஆகியவற்றை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் பேசியிருக்கும் வகையிலும், சாதியின் மீதான நேர்மையான விமர்சனமாக `ஜெய் பீம்’ படத்தை முன்வைத்திருக்கிறார். தொண்ணூறுகளின் வட தமிழகத்தையும், சென்னையையும் அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு. இரண்டாம் பாதியில் நீண்டு செல்லும் விசாரணைக் காட்சிகளைக் கத்திரித்திருக்கலாம்.




ஜெய் பீம் வில்லனாக நடித்த இயக்குனர் போலீஸ் வேலையை ராஜினாமாக செய்ய இது தான் காரணமாம்...... | director tamil interview about jai bheem movie police character

நேர்மையான படைப்பாக இருந்த போதும், தமிழ் சினிமாவில் வழக்கமாக நிலவும் சிக்கல்கள் `ஜெய் பீம்’ படத்திலும் இருக்கின்றன. உண்மையான சம்பவங்களின் தழுவல் என்றாலும் இவற்றை நிராகரிக்க முடியாது. பழங்குடிச் சமூகமோ, ஒடுக்கப்படும் சமூகமோ தாங்கள் தங்களுக்கு நேரும் பிரச்னைகளுக்குத் தீர்வாக யாராவது வருவார்களா என்று எதிர்பார்ப்பதும், நகர்ப்புறத்தைச் சேர்ந்த சாதியப் படிநிலையில் சற்றே உயர்ந்தவர் ஒருவர் மீட்பராக வந்து உதவுவதும் வழக்கமான பாணியிலான அரசியல். இப்படியான `மீட்பர் மனநிலை’ என்பது சாதி ஒழிப்பு என்பதைப் பின்னுக்குத் தள்ளி தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்குறது. லிஜோமோல் ஜோஸ் போன்ற சிவப்புத் தோல் கொண்ட நடிகைகளுக்குக் கறுப்பு மை பூசி பழங்குடிகளாக நடிக்க வைப்பதும் பிரச்னைக்குரிய ஒன்று.

பேசாபொருளைப் பேசியிருப்பதன் மூலம், தமிழ் சினிமாவில் மற்றொரு முக்கியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது `ஜெய் பீம்’.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!