gowri panchangam Sprituality

108 திவ்ய தேச தலங்கள்- 34 | திருவாலி – திருநகரி கோயில்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாலி அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் உள்ள கல்யாண ரங்கநாதர் கோயில் இரட்டைத் தலங்களாக, (ஒரே திவ்ய தேசமாக) 34-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து 5 கிமீ தொலைவில் இத்தலங்கள் அமைந்துள்ளன.

குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார் திருவாலி அழகிய சிங்கர் தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.




தல வரலாறு

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து, இரண்யனை வதம் செய்தார். அப்போது அந்த சீற்றம் அடங்காமல் இருந்ததால், தேவர்களும், முனிவர்களும் மிகுந்த கவலை கொண்டு, பூலோகம் மேலும் அழியாமல் இருக்க வேண்டும். அதைக் காக்கும் பொறுப்பை மகாலட்சுமி எடுக்க வேண்டும் என்று அவரிடம் விண்ணப்பம் வைத்தனர். அதையேற்ற மகாலட்சுமி, பெருமாளின் வலது தொடையில் அமர்ந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார். அதன் காரணமாக இத்தலம் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று, பின்னர் திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று.

இப்பகுதியில் திருமங்கையாழ்வார், குறுநில மன்னராகத் திகழ்ந்து வாசம் செய்ததால், அவர் ‘ஆலிநாடன்’ என்று அழைக்கப்படுகிறார்.




பத்ரிகாசிரமத்துக்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த தலமாக இத்தலம் விளங்குவதால், பத்ரிகாசிரமத்துக்கு இணையாக இத்தலம் கருதப்படுகிறது. லட்சுமியுடன் நரசிம்மர் இத்தலத்தில் அருள்பாலிப்பதால், திருவாலியை தரிசிப்பதால் பஞ்ச நரசிம்மர் தலங்களை தரிசித்த பலன் கிட்டும். இத்தலத்தைச் சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மர், மங்கைமடம் வீர நரசிம்மர், திருநகரி யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர் தலங்கள் உள்ளன.

திருமங்கையாழ்வாருக்கு அருள்

திருமங்கையாழ்வாருக்கு அருள்புரிய வேண்டும் என்று லட்சுமி தேவி திருவுள்ளம் கொண்டார். அதற்காக திருமால் கூறியபடி, திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக, லட்சுமி பிறந்தார். திருமாலை திருமணம் செய்துகொண்டு வரும்போது திருவாலி அருகே தேவராஜபுரத்தில் திருமங்கைமன்னர் வழிப்பறி செய்து கொண்டிருந்தார். திருமால் அவரது காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசித்து ஆட்கொண்டார். வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம்.




கோயில் அமைப்பும் சிறப்பும்

திருநகரி கோயிலின் ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது. இக்கோயிலில் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் கல்யாண ரங்கநாத பெருமாள், வேதராஜன் என்றும் அழைக்கப்படுகிறார். திருச்சுற்றில் வலப்புறம் ஆண்டாள் சந்நிதியும், இடப்புறம் தாயார் சந்நிதியும் உள்ளன, பிரகாரத்தின் பின்புறம் யோக நரசிம்மர் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

திருவிழாக்கள்

தை மாதத்தில் திருநாங்கூர் 11 திருப்பதிகளில் இருந்து பெருமாள்கள் கருட சேவையில் எழுந்தருளும்பொது, திருங்கையாழ்வாரையும் குமுதவல்லியையும் பல்லக்கில் அமர வைத்து, திருவாழி – திருநகரி அருகே உள்ள, திருநாங்கூர் 11 திருப்பதிகளுக்கும் எழுந்தருளச் செய்து திருமங்கையாழ்வார் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் பாடப்படும். திருவாலியில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும், இத்தலத்திலும் நடைபெறும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!