gowri panchangam Sprituality

108 திவ்ய தேச தலங்கள்- 30 | திருவண் புருஷோத்தமம் புருஷோத்தமர் கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில், மயிலாடுதுறை மாவட்டம், திருவண் புருஷோத்தமம் புருஷோத்தமர் கோயில், 30-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் இத்தலம் அமைந்துள்ளது.

தமிழக வைணவத் தலங்களுள் இத்தலத்தில் மட்டுமே புருஷோத்தமன் என்ற திருநாமத்துடன் திருமால் அருள்பாலிக்கிறார். அவரது வள்ளல்தன்மையை உயர்த்திக் காட்டும் பொருட்டு, வண்புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறார். பராசவனப் புராணத்தில் இத்தலம் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.




தல வரலாறு

வியாக்ரபாதர் என்ற மகரிஷிக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு கிட்டவில்லை. இதுகுறித்து புருஷோத்தமப் பெருமாளிடம் தினம் வேண்டிக் கொண்டு வந்தார். பெருமாளின் அனுக்கிரகத்தால் மகரிஷி, உபமன்யு என்ற ஆண்மகனை அருளப் பெற்றார்.

பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்துக்கு தினம்தோறும் சென்று, பூப்பறித்து, அதை மாலையாகத் தொடுத்து, பெருமாளுக்கு அணிவித்து வந்தார். ஒருநாள் வியாக்ரபாதர், நந்தவனத்துக்கு கிளம்பும்போது, குழந்தை உபமன்யுவும் அவருடன் வருவேன் என்று அடம்பிடித்து அழுதான்.




குழந்தையின் அழுகுரலுக்காக, நந்தவனத்துக்கு அழைத்துச் சென்றார். நந்தவனத்தின் வாசலிலேயே குழந்தையை அமரச் செய்துவிட்டு, வியாக்ரபாதர் மட்டும் நந்தவனத்துக்குள் சென்றார். சுற்றும் முற்றும் பார்த்த குழந்தை, தந்தையைக் காணாது அழுதது. மேலும் பசியாலும் துடித்தது. குழந்தையின் அழுகுரலுக்கு ஓடோடி வந்த பரந்தாமனும் புருஷோத்தம நாயகியும், உடனே அங்கு திருப்பாற்கடலை தோற்றுவித்து, அதில் இருந்து பாலை எடுத்து குழந்தைக்கு அளித்தனர்.




கோயில் அமைப்பும், சிறப்பும்

மூலவர் புருஷோத்தமன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி தென்கிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் ஆண்டாள், ராமபிரான், சீதாப்பிராட்டி, லட்சுமணர், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், ராமானுஜர், சேனை முதலியார் சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் 3 ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன. ராமபிரான் சந்நிதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய் பொத்திய நிலையில் உள்ளார்.

வறுமை நீங்க, கல்வி அறிவு சிறக்க, குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய பக்தர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்கின்றனர். மேலும் இளம் வயதில் பெற்றொரை இழந்து எவ்வித அரவணைப்பும் இல்லாதவர்களுக்கு திருநாங்கூர் புருஷோத்தமன் அடைக்கலம் தருவார் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

பங்குனி மாத பிரம்மோற்சவம், ஆவணி பவுர்ணமியில் பவித்ரோற்சவம் கொண்டாடப்படுகின்றன. தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் கருட சேவை பிரசித்தி பெற்றது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!