gowri panchangam Sprituality

108 திவ்ய தேச தலங்கள்- 28 | சீர்காழி திரிவிக்கிரம பெருமாள் கோயில்

திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசம், மயிலாடுதுறை மாவட்டத்தில் காழிச் சீராம விண்ணகரம், பாடலிகவனம் என்று அழைக்கப்படும் சீர்காழி திருவிக்கிரம பெருமாள் கோயில் ஆகும். ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பொதுவாக பெருமாள் தன் மார்பில் திருமகளைத் தாங்கி இருப்பார். ஆனால் இங்கு தாயார் தனது மார்பில் திரிவிக்கிரமனைத் தாங்கியபடி அருள்பாலிக்கிறாள். ஒருகாலைத் தூக்கியபடி திருமால் இத்தலத்தில் அருள்பாலிப்பதால், அவர் பாதம் வலித்துவிடாமல் இருப்பதற்காக திருமகள் அவரைத் தாங்குவதாகக் கூறப்படுகிறது. தாயாரை மனமுருகி சேவித்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். பெண்கள் கணவர் மீது கூடுதல் அன்பு செலுத்துவர் என்றும் கூறப்படுகிறது.




தலவரலாறு

படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நான்முகன், பல யுகங்கள் வாழும்படி சாகாவரம் பெற்றிருந்தார். இதனால் அவர் மிகுந்த கர்வத்துடன் இருந்தார். இவரது கர்வம் குறித்து திருமால் அறிந்தார். இவரது கர்வத்தை அடக்க தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தார் திருமால்.

உரோமச முனிவருக்கு உடல் முழுவதும் முடி உண்டு. தனது ஆயுட்காலத்தைப் பற்றி கர்வம் கொண்ட நான்முகன், உரோமச முனிவரை கேலி செய்யும் நோக்கில் அவரை நோக்கி, ”உன் ரோமம் என் ஆயுள் என்று சொல்லலாம்”என்றான். உடனே அதை நிஜமாக்க முடிவு செய்தார் உரோமச முனிவர்.

இதற்கிடையே உரோமச முனிவருக்கு திருமாலின் (வாமன அவதாரம் எடுத்து காலைத் தூக்கி மூன்று உலகங்களையும் அளந்து காட்டிய) திரிவிக்கிரமன் கோலத்தைக் காணவேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று. தனது விருப்பத்தை திருமாலிடம் வெளிப்படுத்திய முனிவர், அவரை நோக்கி தவம் இருந்தார்.




முனிவர் முன் தோன்றிய திருமால், அவருக்கு திரிவிக்கிரமன் கோலத்தைக் காட்டி அருள்பாலித்தார். பின்னர் உரோமசரிடம், “இந்த கோலத்தை நீங்கள் தரிசித்ததால், நீங்கள் பெறுவதற்கரிய பல பேறுகளைப் பெற்று சிறப்பான நிலையை அடைவீர்கள். நான்முகனை விட கூடுதலான ஆயுட்காலத்தைப் பெறுவீர்கள். உன் சரீரத்தில் இருந்து ஒரு ரோமம் உதிர்ந்தால், பிரம்மன் ஆயுட்காலத்தில் ஓர் ஆண்டு குறையும்” என்று அருளினார்.

திருமாலின் இந்த செயலைக் கண்டு வெட்கி தலை குனிந்த நான்முகன் தன் கர்வம் அழியப் பெற்றார்.

சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரின் அவதாரத் தலம் சீர்காழி. இவர் சீர்காழியிலேயே தங்கியிருந்து சிவத்தொண்டு புரிந்து வந்தார். பெருமாள் கோயில் சிலகாலம் வழிபாட்டில் இல்லாதபோது அவ்வூரில் உள்ள ஒரு மூதாட்டி, தன் வீட்டில் உள்ள தவிட்டுப் பானையில் உற்சவர் தாடாளனை மறைத்து வைத்து வணங்கி வந்தாள். திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தபோது, சம்பந்தரின் சீடர்களுக்கும் திருமங்கையாழ்வாரின் சீடர்களுக்கும் சிறு பிரச்சினை ஏற்பட்டது.பிரகாரத்தில் ராமர் சந்நிதியும் வெளிப்புறத்தில் ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளன.




திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு சிறப்பாக நடைபெறும். தை மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படும். வெள்ளிக்கிழமைதோறும் தாயாருக்கு ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. தங்க கருடனுக்கு தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

வாஸ்து பூஜை செய்யும் முன்பு இங்குள்ள பெருமாளை சேவிப்பது பக்தர்களின் வழக்கமாக உள்ளது. பணிகளில் சிறக்க, பதவி உயர்வு பெற, ஆயுள் விருத்தி பெற பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை பெருமாளிடம் சமர்ப்பிப்பர்.

அமைவிடம்: சீர்காழி நகரின் மையப்பகுதியில் உள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!