gowri panchangam Sprituality Uncategorized

மகாபாரதக் கதைகள்|கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த போர்

மகாபாரதத்தில் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரங்கள் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் ஆவர். கிருஷ்ணருடைய தங்கையை அர்ஜுனன் திருமணம் புரிந்தார் என்பதற்காக அல்ல, அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு வெறும் உறவினர்களை போல அல்லாமல் நெருங்கிய நண்பர்களை போல், குரு – சிஷ்யன் போல அற்புதமானதாய் இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் அவர்களுக்குள்ளயே போர் மூண்டது.

ஆம், தாங்கள் கொடுத்த வாக்கிற்காக இருவரும் மூவுலகுமும் நடுங்க பயங்கரமாய் போர் புரிந்தனர். இந்த போர் ஏற்பட காரணமாய் இருந்ததே கிருஷ்ணரின் சகோதரியும், அர்ஜுனனின் மனைவியுமான சுபத்திரைதான். அவர்கள் ஏன் போர் புரிந்தனர்? இறுதியில் யார் வென்றார்? அவர்களின் போரை யார் நிறுத்தினார்? என உங்களுக்குள் எழும் கேள்விகளுக்கு இங்கே விடையை காணலாம்.




Best Lord Krishna, Teaching Arjun, kanha, god, HD phone wallpaper | Peakpx

காலவர் விசுவிசுவாமித்திரரிடம் சீடராய் இருந்தார். அனைத்தையும் கற்றுக்கொண்டு யோகாவலிமையை பெற்ற பின் தன் குருவிடம் விடைபெற்றுக்கொண்டு குருகுலம் விட்டு செல்ல தயாரானார். குருகுலம் விட்டு செல்வதற்கு முன் குருவிற்கு குருதட்சணை கொடுக்கவேண்டியது அவசியம். எனவே விசுவாமித்திரரிடம் குருதட்சணையாக என்ன வேண்டுமென்று அவர் வினவியபோது விசுவாமித்திரர் 500 வெள்ளை குதிரைகள் வேண்டுமென கேட்டார். இது மிகவும் எளிதான ஒன்று என்று காலவ முனிவர் நினைத்தபோது பிறகுதான் அந்த தகவலை கூறினார் விசுவாமித்திரர், அந்த குதிரைகளின் காதுகள் மட்டும் கருப்பாய் இருக்கவேண்டுமென்று.




விசுவாமித்திரர் கேட்ட குருதட்சணையை நிச்சயம் தருவதாக கூறிவிட்டு குருகுலம் விட்டு குதிரைகளை தேடிச்சென்றார் காலவ முனிவர். அனைத்து பிரதேசங்களிலும் வெள்ளை குதிரைகள் மட்டுமே இருந்தது, எந்த இடத்திலும் அவருக்கு விசுவாமித்திரர் கேட்ட குதிரைகளை போல கிடைக்கவில்லை. குருதட்சணை கொடுக்க இயலாததால் வேள்வி தீ வளர்த்து அதில் விழுந்து உயிர்துறக்க முடிவெடுத்தார் காலவர்.

காலவர் வேள்வி தீ வளர்த்த போது அங்கே வந்த சாண்டில்ய முனிவர் அவரை தடுத்து அவரின் முடிவுக்கான காரணத்தை கேட்டார். வெண்புரவிகள் கிடைக்காததால் குருதட்சணை கொடுக்க முடியாமல் போனதையும், அதனால்தான் தான் இந்த முடிவிற்கு வந்ததாகவும் காலவர் கூறினார். அவரின் நிலை கண்டு பரிதாபப்பட்ட சாண்டில்யர் தன் திவ்யசக்தி மூலம் ஏயாதி நாட்டில் விசுவாமித்திரர் கேட்டது போல குதிரைகள் உள்ளதாக கண்டறிந்து கூறினார். சாண்டில்ய முனிவருக்கு நன்றி கூறிவிட்டு ஏயாதி தேசத்தை நோக்கி பயணத்தை தொடங்கினார் காலவர்.




சித்திரசேனனின் கர்வம்

ஏயாதி தேசத்தில் அவர் கேட்டதுபோல குதிரைகள் இருந்தது, ஏயாதி மன்னனும் காலவரை வரவேற்று அவரின் வேண்டுகோளுக்கிணங்க குதிரைகளை அளித்தார். மேலும் தன் வீரர்களை அவருடன் செல்லும்படி கூறினார். குதிரைகளுடன் புறப்பட்ட காலவர், செல்லும் வழியில் ஓய்வெடுக்க ஒரு இடத்தில தங்கினார். காலை எழுந்ததும் கடவுளை வணங்க அருகில் இருந்த ஆற்றில் அவர் இறங்கியபோது அந்த வழியே தன் மனைவிகளுடன் வானத்தில் சென்றுகொண்டிருந்த கந்தர்வன் சித்திரசேனன் காலவரை கவனிக்காமல் அவர் கையில் ஏந்தியிருந்த நீரில் தன் உமிழ்நீரை துப்பிவிட்டு சென்றுவிட்டான். கோபத்தின் உச்சிக்கே சென்ற காலவர் உடனே சாபமிட எண்ணினார். பின் தான் சாபமிடுவதை விட கிருஷ்ணரிடம் முறையிடுவது சிறந்தது என கிருஷ்ணரிடம் சென்றார்.

கிருஷ்ணரின் வாக்கு

கிருஷ்ணரிடம் சென்ற காலவர் தனக்கு நேர்ந்த அவமானத்தை கூறினார், அதனை கேட்டு கோபமுற்ற கிருஷ்ணரோ இன்று மாலைக்குள் அவன் சிரம் உன் காலில் கிடக்கும் என்று கூறிவிட்டு கோபத்துடன் சித்திரசேனனை தேடிச்சென்றார். இது எதையும் அறியாத சித்திரசேனன் வானில் சுற்றிக்கொண்டிருக்க, இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாரதர் சித்திரசேனனின் தவறையும் அதற்காக அவன் உயிர் கிருஷ்ணருடைய கைகளால் பறிக்கப்பட போவதையும் கூறினார். அதிர்ச்சியடைந்த சித்திரசேனன் செய்வதறியாது திகைக்க நாரதர் கிருஷ்ணருடைய சகோதரி சுபத்திரையிடம் சென்று உதவி கேட்கும்படி யோசனை கூறினார்.




சுபத்திரையின் அவசர முடிவு

நாரதர் கூறியபடி சுபத்திரையிடம் சென்ற சித்திரசேனன் எதையும் முழுமையாக கூறாமல் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும், தன்னை காப்பாற்றும்படியும் சுபத்திரையை வேண்டினான், நடந்தவற்றை அறியாத சுபத்திரை கவலைபடாதீர்கள் என் கணவர் அர்ஜுனன் உங்களை பாதுகாப்பார் என வாக்களித்துவிட்டார். அப்பொழுது அர்ஜுனன் அங்கே வர சுபத்திரை தான் வாக்களித்ததையும், எதுநேர்ந்தாலும் சித்திரசேனனை பாதுகாக்க வேண்டுமென்பதையும் கூறினார். அர்ஜுனனும் நடக்க போகும் விபரீதம் தெரியாமல் தன் மனைவியின் வாக்கை காப்பாற்றுவதாக கூறினான்.

அர்ஜுனனின் அதிர்ச்சி

அர்ஜுனன் சித்திரசேனனை பாதுகாக்க வாயிலில் நிற்க அங்கே வந்த கிருஷ்ணரை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தான். கிருஷ்ணர் தான் காலவ முனிவருக்கு கொடுத்த வாக்கையும், அதற்காக சித்திரசேனன் கொல்லப்பட வேண்டியதையும் கூறினார். அர்ஜுனனும் தான் சுபத்திரைக்கு கொடுத்த வாக்கை பற்றி கூறி தன்னால் சித்திரசேனனை ஒப்படைக்க முடியாது என்று கூறி மன்னிப்பு கோரினான். கோபமடைந்த கிருஷ்ணர் அர்ஜுனனிடம் யுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தார்.




கிருஷ்ணர் – அர்ஜுனன் சண்டை

தன் மனைவிக்கு கொடுத்த வாக்கிற்காக தன்னுடைய பரந்தாமனேயே எதிர்க்க துணிந்தான் அர்ஜுனன். இருவருக்கும் போர் தொடங்கியது, கிருஷ்ணர் நாராயணன் ஆயிற்றே மிகவும் உக்கிரமாக போர் புரிந்தார். அர்ஜுனனும் சாதாரணமானவன் அல்லவாயிற்றே, கிருஷ்ணருக்கு இணையாக அவனும் இணையாக போரிட்டான். மாலை நேரமும் நெருங்கிக்கொண்டிருந்தது. இவர்களின் போர் மூவுலகையும் அஞ்ச செய்தது. தன்னால் கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் சண்டை ஏற்பட்டுவிட்டதே என வருந்திய சுபத்ரைக்கு திடீரென ஒரு யோசனை எழுந்தது.




போர் நிறுத்தம்

அர்ஜுனனும், கிருஷ்ணரும் மூர்க்கமாய் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டிருந்தார்கள் யார் வெல்வார் என எவராலும் கூற இயலாத அளவிற்கு அவர்களின் திறமை இருந்தது. அந்த தருணத்தில் அவர்களுக்கு இடையில் போய் நின்றார் சுபத்திரை. இருவரும் உடனே போரை நிறுத்த கிருஷ்ணரின் அருகில் சென்று அவர் காதில் தன் யோசனையை கூறினார் சுபத்திரை. சுபத்திரையின் யோசனையை கேட்டு மகிழ்ந்த கிருஷ்ணர் ஆயுதத்தை கீழே போட்டார், அந்த யோசனையை கேட்ட அர்ஜுனனும் ஆயுதத்தை கீழே போட்டார்.

சுபத்திரையின் யோசனை

சுபத்திரையின் யோசனைப்படி சித்திரசேனன் கிருஷ்ணரிடம் ஒப்படைக்கப்பட்டான். கிருஷ்ணர் அவனை அழைத்துக்கொண்டு காலவரிடம் சென்று அவரின் கால்களில் சித்திரசேனனின் தலை படும்படி விழச்செய்தார். கிருஷ்ணரின் வாக்கின்படி சித்திரசேனனின் சிரம் காலவரின் காலில் விழுந்தது. காலவரும் சித்திரசேனனின் தவறை மன்னித்தார். உயிர்தப்பிய சித்திரசேனன் இனி இதுபோன்று நடந்துகொள்ள மாட்டேன் என்றுகூறிவிட்டு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். காலவரும் வெண்புரவிகளுடன் தன் குருதட்சணையை கொடுக்க விசுவாமித்திரரின் குருகுலம் நோக்கி பயணத்தை தொடர்ந்தார்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!