Cinema Entertainment விமர்சனம்

மத்தகம் வெப் சீரிஸ் விமர்சனம்

அதர்வா, மணிகண்டன், கெளதம் மேனன், நிகிலா விமல் நடித்துள்ள மத்தகம் வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

முதலில் 4 எபிசோட்கள் மட்டும் வெளியான நிலையில் கடந்த வாரமும், இந்த வாரமும் மீதமுள்ள 4 எபிசோட்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி முதல் சீசனின் 8 எபிசோட்களும் டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் கேங்ஸ்டர் ட்ராமாவாக உருவாகியுள்ள மத்தகம் வெப் சீரிஸின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.




மத்தகம்" வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Tamil cinema maththagam web series first look poster released

மத்தகம் வெப் சீரிஸ் விமர்சனம்:

அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல், கெளதம் மேனன், இளவரசு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வெப் சீரிஸ் மத்தகம். ஹாட்ஸ்டார் டிஸ்னி பிளச் தளத்தில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸ்ஸை பிரசாந்த் முருகேசன் இயக்கியுள்ளார். சசிகுமாரின் கிடாரி திரைப்படம் மூலம் பிரபலமான பிரசாந்த் முருகேசன், கேங்ஸ்டர் ட்ராமா ஜானரில் மத்தகம் வெப் சீரிஸை இயக்கியுள்ளார்.

ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 4 எபிசோட்கள் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து கடந்த வாரமான அக்டோபர் 12ம் தேதி 5, 6வது எபிசோட்களும், இந்த வாரம் 19ம் தேதி கடைசி 2 எபிசோட்களும் வெளியாகியுள்ளன. இந்த 8 எபிசோட்களுடன் மத்தகம் முதல் சீசன் முடிவுக்கு வந்துள்ளது.

முதல் 4 எபிசோட்கள் வெளியானபோது மத்தகம் வெப் சீரிஸ்க்கு அதிக வரவேற்பு இருந்தது. போலீஸ் ஆபிஸரான அதர்வா, சென்னை சிட்டியில் நடைபெறவுள்ள மிகப்பெரிய க்ரைம் ஆபரேஷன்ஸ் பற்றி கண்டுபிடிக்கிறார். அதாவது சிட்டியில் உள்ள ரவுடிகள் அனைவரும் ஒரு பார்ட்டியில் பங்கேற்கவுள்ளதும், அங்கு அவர்களுக்கு மிக முக்கியமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்படவிருப்பதும் தெரியவருகிறது. இதற்கெல்லாம் மூளையாக இருக்கும் படாலம் சேகர் என்ற கேரக்டரில் மணிகண்டன் நடித்துள்ளார்.




தான் இறந்துவிட்டதாக போலீஸாரை நம்ப வைத்த படாலம் சேகர், இந்த பார்ட்டிக்காக மீண்டும் சென்னைக்குள் அடியெடுத்து வைக்கிறான். சேகருடன் நாதன், சிட்டு என அதுவரை தலைமறைவாக இருந்த மொத்தக் கூட்டமும் சென்னையில் ஊடுருவுகிறது. திரை மறைவில் இருக்கும் ஜம்பு சேட்டுக்காக ரவுடிகளை பார்ட்டிக்கு வர வைக்கிறார் மணிகண்டன். இந்த பார்ட்டியை நடக்கவிடாமல் தடுத்து, மொத்த கூட்டத்தையும் கைது செய்ய களமிறங்குகிறார் அதர்வா.

இறுதியாக இந்த போலீஸ் – ரவுடிஸ் கேங் வாரில் வென்றது யார், பார்ட்டி நடக்கவிருந்தன் பின்னணி என்பது தான் மத்தகம் வெப் சீரிஸ்ஸின் கதை. முதல் எபிசோடிலேயே செம்ம ஹைப் கொடுத்து ஓடிடி ரசிகர்களை பிரமிக்க வைத்த இயக்குநர் பிரசாந்த் முருகேசன், ஒருகட்டத்தில் அவரே சோர்வடைந்து விட்டதாக தெரிகிறது. சீரிஸ்ஸின் பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நடப்பதாக உள்ளன.

லேகேஷ் கனகராஜ்ஜின் மேக்கிங் ஸ்டைலில் தொடங்கி, இறுதியாக இந்தி சீரியலைப் போல மந்தமாக முடிகிறது மத்தகம் வெப் சீரிஸ். போலீஸ் ஆபிஸர் அஸ்வத் என்ற கேரக்டருக்கு அதர்வா கச்சிதமாக பொருந்தி விடுகிறார். ஆனால், போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டையே கதிகலங்க வைத்தவன் என்ற அடையாளத்துடன் படாலம் சேகர் கேரக்டரில் மணிகண்டன் நடித்துள்ளார்.




ஆரம்பத்தில் அவரது கேரக்டர் கவனம் ஈர்த்தாலும் அடுத்தடுத்து எபிசோட்களில் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. முக்கியமான ஜூனியர் ரவுடிஸ் எல்லாம் அவரை திமிங்கலம் என கலாய்ப்பது காமெடியாக உள்ளது. ரவுடிகளுக்கான பார்ட்டி நடைபெறவிருப்பது, அந்த இடம் பற்றியெல்லாம் சிறப்பாக ஸ்கெட்ச் போட்டு கண்டுபிடிக்கிறார் அதர்வா. ஆனால், பார்ட்டி நடக்கும் ஃபார்ம் ஹவுஸ் முன்பு நின்றுகொண்டு ரவுடிகளை அட்டாக் செய்ய முடியாமல், ஸ்கூல் வாத்தியார் போல விரட்டிக் கொண்டே இருக்கிறார்.

மொத்த எபிசோடுகளையும் பார்க்கத் தூண்டும் அதர்வாவின் மத்தகம் வெப் சீரிஸ் – V4U CINEMA

அதர்வா எப்போதும் விரைப்பாக ரவுசு காட்டுவதை தவிர பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. அதேபோல் மணிகண்டனுக்கும் டிடிக்கும் இடையேயான காதல் காட்சிகள் என்ன ரகம் என்றே தெரியவில்லை. கொடூரமான கேங்ஸ்டராக இருந்தாலும், ‘கல்லுக்குள் ஈரம்’ போல அவனுக்குள்ளும் ஒரு காதல் இருக்க வேண்டும் என வம்படியாக வைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

ஒருவேளை இரண்டாவது சீசனில் லேடி படாலம் சேகராக டிடியே நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதர்வா, மணிகண்டனை தவிர்த்து கெளதம் மேனன், இளவரசு இருவரும் கவனம் ஈர்க்கிறார்கள். கெளதம் மேனன் என்றாலே இனிமேல் ஐபிஎஸ் ஆபிஸர் அல்லது கலெக்டர் என ஸ்டைலிஷான கேரக்டர் என நாமே முடிவு செய்துவிடலாம். மத்தகத்தில் திருமாறன் என்ற ஐஏஎஸ் கேரக்டரில் மாஸ் காட்டியுள்ளார் கெளதம் மேனன்.




புரொடக்‌ஷன் காஸ்ட் ரொம்பவே குறைவு என்பதால் இரவிலேயே பாதி கதையை நகர்த்திவிட்டனர். அதையும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம். அதர்வா மணிகண்டனை தேடி காட்டுக்குள் செல்லும் காட்சிகள் எல்லாம் செயற்கைத்தனமாக இருக்கிறது. அதேபோல், போலீஸ் – ரவுடிஸ் இடையே நடக்கும் மோதலும், சிறுவர்கள் போடும் தெருச் சண்டையை விட மோசமாக உள்ளது.

அதர்வா - கௌதம் மேனன் - மணிகண்டன் காம்போவின் மத்தகம் ட்ரெய்லர்,atharvaa gautham vasudev menon manikandan in mathagam web series

ஒட்டுமொத்தமாக இந்த சீரிஸ்ஸில் அதிகம் கவனம் ஈர்ப்பது வசனங்கள் மட்டுமே. “கண்ணாடில இருக்குற உங்களை நம்பினால், என்னையும் நம்பலாம்” என கெளதம் மேனன் பேசும் வசனம், “போலீஸோட வேலை பாதுகாக்குறது மட்டும் தான்”, “அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையை கொடுக்குறது முக்கியம்” என பல இடங்களில் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. போலீஸ், ரவுடிகள் இடையே நடக்கும் கேங் வார் என தரமான கான்செப்ட்டை வைத்துக்கொண்டு, குழந்தைகள் விளையாடும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை காட்டியுள்ளது மத்தகம் வெப் சீரிஸ்.

ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்களுக்கு தொடர் விடுமுறையை கொண்டாட ஒருமுறை பார்த்து வைக்கலாம். டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது மத்தகம் வெப் சீரிஸ்.

க்ளைமேக்ஸில் இரண்டாவது சீசனுக்காக வைத்திருக்கும் லீட் கொஞ்சம் ஆறுதலான விஷயம் தான். ஆனாலும் மத்தகம் சீசன் 2 வரும் போது தான் அதற்கும் விடிவு காலம் பிறக்கும். பொறுத்திருந்து பார்க்கலாம் யார் அந்த ஜம்பு சேட் என்று.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!