எந்த ஒரு கோயில் என்றாலும்… அதற்கென்றே சில ஆகம விதிகள் படி அமைப்பர். இது போன்ற வரைமுறைகள் எதுவும் இல்லாமல் வினாயகர் ஆற்றோரம், ஆல மரத்தடி, ரோட்டோரம் மற்றும் முட்டுச் சந்திலும் இருப்பார்.

முருகருக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல்… அவரின் அண்ணனான விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருக்கின்றன. மூத்தோனை வணங்கி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகரின் ஆறுபடை வீடுகளை பற்றி இங்கே அறியலாம்….




விநாயகரின் ஆறுபடை வீடுகள்:

1. திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர்

2. விருத்தாசலம் (திருமுதுகுன்றம்) ஆழத்து விநாயகர்:

3. திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார்.

4. மதுரை சித்தி விநாயகர்

5. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்

6. திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்.




முதல்படை வீடு – திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர்:

20210806232647307.jpeg

திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர், பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குக்குரிய தலமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலின் கிழக்குத் திசையில் உள்ள இராஜகோபுரத்திற்குள்ளேயே செல்வக் கணபதியாக அருள்பாலிக்கிறார். இந்த வினைதீர்க்கும் விநாயகர், தொன்மைச் சிறப்பு வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார். இவர், நாம் செய்த தீவினைகள் யாவையும் அழித்து, நல்வினைகளுக்கேற்ப முன்னேற்றத்தை அருள்பவர். இதுவே விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல் வீடாகும். அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இந்த விநாயகரையும் வழிபட்டால் துன்பம் அகலும் என்பது ஐதீகம்.

“அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத் துயரம் போம் – நல்ல
குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைத்தொழுதக் கால்..!”

– விவேக சிந்தாமணி




இரண்டாம் படை வீடு – விருத்தாசலம் ஆழத்து விநாயகர்:

20210806232811562.jpeg

திருமுதுகுன்றம் என்றழைக்கப்படும் விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயில் நுழைவு வாயில் அருகே உள்ள முதல் வெளிப்பிராகாரத்தில், சுமார் 18 அடி ஆழத்தில் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார். ஆழ் அகத்து விநாயகர் என்பதே ஆழத்து விநாயகர் என்று மருவி வழங்கப்படுகிறது. 16 படிக்கட்டுகள் இறங்கியே இவரைத் தரிசிக்க முடியும். தனியாக கொடி மரம் இவருக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுவே அறுபடை விநாயகரின் வீடுகளில் இரண்டாவது வீடாகும். இவரை வழிபாடு செய்தபின், படியேறி மேலேறுவது போல் கல்வியுடன் சீரான செல்வமும் தந்து நம் வாழ்வினை மேன்மை அடையச் செய்வார்.

“திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமயாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவோம்.
ஓம் விக்னேஷ்வராய நமக..!”




மூன்றாவது படைவீடு – திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார்:

20210806232932936.jpeg

திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிவன் சந்நிதிக்கு வலதுபுறத்தில், நந்திக்கு அருகேயுள்ள வெளிப்பிரகாரத்தில் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி கள்ள வாரணப் பிள்ளையார் அருள்புரிறார். இவர் பக்தர்களின் உள்ளத்தைக் கவர்வதால், கள்ள வாரணப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்து கள்ள வாரணப் பிள்ளையார் மூன்றாம் படை வீட்டுக்கு அதிபதியாக உள்ளார். இவரை வழிபட நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கி, சுக வாழ்வினை அளிக்கவல்லவர். சமஸ்கிருதத்தில் இவரை சோர கணபதி என்று அழைக்கிறார்கள். அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமிப் பட்டர், அபிராமி அந்தாதி பாடத் தொடங்கிய போது இந்த கள்ள வாரணப் பிள்ளையாரைப் புகழ்ந்து பாடி விட்டே அபிராமி அந்தாதியை பாடி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே..!”




நான்காம்படை வீடு – மதுரை சித்தி விநாயகர்:

2021080623304862.jpeg

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் சந்நிதியின் நுழைவு வாயிலின் இடது புறமாக சித்தி விநாயகர் தரிசனத்தைப் பெறலாம். உருவில் சிறியவராக இருந்தாலும், அருள் தருபவரில் சக்தி மிக்கவர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. இவர் தன்னை வழிபடுபவர்களுக்கு வாழ்வின் எல்லா சித்திகளையும் (வெற்றி) அருளும் சித்தி விநாயகராக இவர் அருளாட்சி செய்கிறார். இவரை வணங்கினால் புகழும், பெருமையும் சேரும். இதுவே விநாயகரின் ஆறுபடைவீடுகளில் நான்காவது வீடாகும். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் (‘நரியை பரியாக்கிய லீலை’) இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.




ஐந்தாவது படைவீடு – பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்:

20210806233156223.jpeg

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஐந்தாம் படை வீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பாகும். சிவலிங்கத்தை கையில் ஏந்தி, சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால், தீட்சையும் ஞானமும் கிடைக்கும். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினாலே இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் உள்ள தீட்சா கணபதியை சென்று வணங்கிய பலன் கிடைக்கும். இவ்விநாயகரின் துதிக்கை வலம்புரியாக உள்ளதும், இவர் அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்திருப்பதும், இடது கரத்தை கடி ஹஸ்தமாக தொடையில் வைத்திருப்பதும் இவரது சிறப்புத் தோற்றமாகும்.

ஆறாம்படை வீடு – திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்:

20210806233302582.jpeg

சிதம்பரத்திற்கு அருகே உள்ள திருநரையூரிலுள்ள பொள்ளாப் பிள்ளையார் ஆலயம் விநாயகரின் ஆறாவது படைவீடாகத் திகழ்கிறது. சிற்பியின் உளியால் பொள்ளப்படாமல் (செதுக்கப்படாமல்) சுயம்பாக தோன்றிய காரணத்தால் பொள்ளாப் பிள்ளையார் என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் இதுவே மருவி பொல்லாப் பிள்ளையார் என்று அழைக்கின்றனர். இங்குள்ள பொள்ளாப் பிள்ளையாரின் அருளைக் கொண்டு நம்பியாண்டார் நம்பி, தில்லையில் சேமித்து வைத்திருந்த தேவாரத் திருமுறைகளை உலகிற்கு வெளிப்படுத்தினார். இவர் பொள்ளாப்பிள்ளையாரின் மீது கொண்டிருந்த அதிதீவிர பக்தியினால், விநாயகரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றார். பொள்ளாப்பிள்ளையாரைப் போற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலான நாயன்மார்கள் வணங்கி உள்ளனர். இவரை வணங்குவதன் மூலம் புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும். மற்றும், கல்வியும் ஞானமும் மேம்படும் என்பது ஐதீகம்.




விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை சிறப்பாக வணங்குவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் நாம் கீழே குறிப்பிட்டுள்ள விநாயகருக்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் நன்மையும், நல் வழியையும் அடைந்திட முடியும்.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

காயத்திரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.