Cinema Entertainment

தட்டுங்கள் திறக்கப்படும்- சந்திரபாபுவின் வீழ்ச்சியைத் தொடங்கி வைத்த திரைப்படம்

சந்திரபாபு எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த படம் தட்டுங்கள் திறக்கப்படும். 1966 இல் இந்தப் படம் திரைக்கு வந்தது. தனது கடைசிக் காலத்தில் வறுமையில் உழன்று 1974 இல் தனது 48 வது வயதில் சந்திரபாபு அகால மரணமடைய வாசலை திறந்து வைத்த முயற்சி என்று தட்டுங்கள் திறக்கப்படும் படத்தை சொல்கிறார்கள்

.Thattungal Thirakkappadum - Wikipedia

சந்திரபாபு மேற்கத்திய பாணியில் ஊறிப்போனவர். நடனம், கேளிக்கை, பாடல் என்று கொண்டாட்டமாக கனவு கண்டவர். அதுபோலவே வாழ முயன்றவர். அவரது கட்டுப்பாட்டை மீறிய கலாச்சார வேகம் பலமுறை அவருக்கு சிராய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. கலையின் உன்மத்த வெளிப்பாடகவே இயக்குனர் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார்.




தட்டுங்கள் திறக்கப்படும் படத்தின் நாயகன் ஆர்.எஸ்.மனோகர். பாட்டும், கும்மாளமுமாக இருக்கும் மது விடுதியை நடத்துகிறவர். அவர் மீது காதல் கொண்டு அவரோடு சேர்ந்து வாழ்கிறவர் கே.ஆர்.விஜயா. மனோகர் திருமணமானவர், ஒரு குழந்தைக்கு தகப்பன் என்பதை அறிந்து கொண்டே அவருடன் வாழ்க்கை நடத்துவார்.

கடன் தொல்லை அதிகரிக்கையில் கே.ஆர்.விஜயாவிடம் மனோகர் பணம் கேட்பார். பணம் இருக்கு, ஆனா, அதை இப்போது தர மாட்டேன் என்பார் கே.ஆர்.விஜயா. மனோகர் அவரை கொலை செய்வார். அந்தப் பழி வாய் பேச முடியாத சந்திரபாபுவின் மீது விழும் அவர் சிறைக்குச் செல்வார். அத்துடன் கதை கட்டுப்பாடு இழந்த வண்டியாக ஓடத் தொடங்கும். இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக மனோகர் போடும் நாடகம், அதில் அங்கமாகச் சொல்லி மனைவி சாவித்ரியை தூண்டுவது என இன்னொரு பாதையில் கதை பயணிக்கும். இறுதியில் மனோகரின் மகளே அவரை கொன்றுவிடுவார். இந்த நேரம் சிறையிலிருந்து திரும்பும் சந்திரபாபு மீது அந்த கொலைப் பழி விழும்.

கதையாக கேட்க சுவாரஸியமாக இருந்தாலும்; அடுத்தடுத்து வரும் திருப்பங்களும் ஆழமில்லாத திரைக்கதையும் படத்திற்கு வில்லனாக மாறின. பாட்டுப்பாடி சிரிக்க வைக்கும் சந்திரபாபு இதில் கருணையை கோரும் கதாபாத்திரத்தில் நடித்தது இன்னொரு பிழை. வாய் பேச முடியாத அவர் படத்தில் பாடுவதாக ஒரு காட்சியை வைத்திருந்தார். கதாபாத்திரத்துக்கு பொருத்தமில்லாமல் நடனமும் ஆடியிருந்தார். படத்தை முழுமையாகப் பார்க்கையில் சந்திரபாபு என்ற கலைஞன் தனது உள்ளார்ந்த வேட்கையை, குழப்பத்தை, சோகங்களை படத்தில் முன்வைக்க முயன்றதை புரிந்து கொள்ள முடியும்.




எம்.ஆர்.ராதா இரு காட்சிகளில் நடித்திருந்தார். ரங்காராவ், ஏவிஎம் ராஜன், பேபி மகாலட்சுமி, சோ ஆகியோரும் நடிப்பில் பங்களிப்பு செலுத்தியிருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். கதை, நடிப்பு, இயக்கம், தயாரிப்புடன் நடன இயக்கத்தையும் சந்திரபாபு ஏற்றுக் கொண்டிருந்தார்.

சந்திரபாபு தூத்துக்குடியைச் சேர்ந்த கிறிஸ்தவர். மேற்கத்திய கிறிஸ்தவ மரபு அவரிடம் செலுத்தியிருந்த தாக்கத்தை தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் பார்க்கலாம். படத்தின் தலைப்பே பைபிளில் ஏசு சொன்னதாக வரும் ஒரு வாக்கியம்தான். படமும் தேவாலயத்தில் ஆரம்பித்து தேவாலயத்தில் முடிவடையும்.

இந்தப் படத்தின் நடுவில் சந்திரபாபு எம்ஜி ராமச்சந்திரனை வைத்து தயாரித்த மாடி வீட்டு ஏழை படத்தின் விளம்பரம் வரும். அந்தப் படத்தை எம்ஜி ராமச்சந்திரன் ஒழுங்காக நடித்துக் கொடுக்காமல் ஏமாற்றினார். படம் பாதியை கடந்த போது கதையையும், கதாபாத்திரத்தையும் மாற்றச் சொன்னார். கோபமான சந்திரபாபு அதுவரை எடுத்த பிலிம்சுருளை தீயிட்டுக் கொளுத்தினார். எம்ஜி ராமச்சந்திரனின் சந்திரபாபு மீதான கோபத்துக்கு நியாயமான காரணங்கள் உள்ளதாக கூறுவர். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், சந்திரபாபுவின் வீழ்ச்சியை தட்டுங்கள் திறக்கப்படும் தொடங்கி வைத்தது என்றால், கிளைமாக்ஸில் முடித்து வைத்தது மாடி வீட்டு ஏழை.

பலவீனமான திரைக்கதை, ஒரு சிலரின் மிகையான நடிப்பு போன்றவற்றால் தட்டுங்கள் திறக்கப்படும் வெளியான போது தோல்வி கண்டது. 1966 ஜுன் 17 வெளியான தட்டுங்கள் திறக்கப்படும் தற்போது 57 வது வருடத்தை நிறைவு செய்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!