gowri panchangam Sprituality

ஐந்தாம் படை வீடு – திருத்தணி     

                                          


முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றான திருத்தணியின் வரலாறு பற்றி அறிந்து கொள்ளலாம்.தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் ஊர் திருத்தணி. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடு; முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்று. தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி.

அமைவிடம் :

அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது தொண்டை நாடு என்ற பகுதியில் உள்ளது. தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம். திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடினார். இத்தலம் 600 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் இத்தலம் போற்றப்பட்டுள்ளது என தெரிகிறது. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க அடிகள், கந்தப்ப தேசிகர், கச்சியப்ப முனிவர் கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

தல வரலாறு :

சஷ்டியின் நிறைவு நாளான ஆறாவது நாள், உணவும் நீரும் இல்லாமல் சிரத்தையுடன் விரதம் இருந்து, அன்று மாலை சூரபத்மனையும்  அவனுடைய சகோதரர்களையும் முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் அற்புதத்தைக் கண்டு மகிழ்வார்கள். அப்போதே அவர்களுடைய மனங்களில், ‘இனி தங்கள் வாழ்க்கையில் தொல்லைகளும் துன்பங்களும் தொடராது; தங்கள் மனங்களில் அசுர குணம் தலையெடுக்காது’ என்ற எண்ணம் ஏற்பட்டு, முருகப்பெருமானை பக்திப் பெருக்குடன் வழிபட்டு, மறுநாள் காலை விரதத்தை நிறைவு செய்வார்கள்.அனைத்து முருகத் தலங்களிலும் கந்த சஷ்டித் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும் அதே தருணத்தில், முருகப்பெருமானின் ஒரு படைவீடு மட்டும் எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல், அமைதியாக இருக்கிறது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?

அந்தத் தலம் தான் திருத்தணிகை திருத்தலம்! ஐங்கரன் தம்பியின் ஐந்தாவது திருத்தலம்! முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த தலம் என்பதால், அங்கே சூரசம்ஹாரம் நிகழ்வதில்லை. அங்கே அன்பும் கருணையும் மட்டுமே கொண்டு அருள்புரிகிறார். வள்ளியை மணம் புரிந்தால் ஏற்பட்ட விளைவு அது!சினம் தணிந்து அமர்ந்த காரணத்தினால்தான், அவனைத் தரிசிக்கும்போது நம்முடைய வல்வினைகளும், வருத்தும் பிணிகளும் அவன் அருளால் தணிந்து போகின்றன. அதனாலும் இந்தத் தலம் ‘தணிகை’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

முருகப் பெருமானின் சினம் தணிந்து அருளும் தலம் என்பதால் தான் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவதில்லை. சூரசம்ஹாரம் நடைபெறாமல் கந்த சஷ்டி விழா மட்டும் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவிலில் வள்ளி திருக்கல்யாணம் மட்டும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. இதைக் கண்டால் திருமணம் தடைப்படுகிறவர்களுக்குக் கூட விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம், மலைகளில் சிறந்த மலை ’திருத்தணிகை’ என்று போற்றிக் கூறுகிறது கந்த புராணம். திருத்தணிகைக்குச் சென்று முருகப் பெருமானை நினைத்தாலோ அல்லது திருத்தணிகை இருக்கும் திசையில் முருகனை மனதில் நிறுத்தி வணங்கினாலோ, தணிகை இருக்கும் திசையை நோக்கி பத்தடி  தூரம் நடந்தாலோ வாழ்வில் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு. திருத்தணி கோவிலில் முருகனுக்கு வேல் கிடையாது என்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பாகும். அறுபடை வீடுகளில் திருத்தணியில் தான் உயரமான கருவறை கோபுரம் அமைந்திருக்கிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த அற்புதமான திருத்தணிகை கோயிலில்தான் ஆங்கிலப் புத்தாண்டில் படி பூஜை நடைபெறுகிறது.

ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. “சரவணப் பொய்கை” என்ற புகழ்மிக்க `குமார தீர்த்தம்’ என்ற திருக்குளம் மலை அடிவாரத்தில் உள்ளது.

இத்திருக் குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது `மடம் கிராமம்’ என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடம்பெற்ற மலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் அருணகிரிநாதர் இதை `அழகு திருத்தணி மலை’ எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.



வள்ளி திருமணம் :

முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வயானையை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டார். இச்சா சக்தியாகிய வள்ளியம்மையை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டு இனிது வீற்றிருக்கிறார். திருத்தணியின் சிறப்புக்கு இதுவே முக்கிய காரணமாகும். பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க அடிகள், கந்தப்பைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனைப் பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

வழிபடும் முறைகள் :

திருத்தணிக்குச் செல்லும் பக்த கோடிகள் முதலில் குமார தீர்த்தம் என்ற சரவணப் பொய்கையில் நீராடி, சுத்தம் செய்து கொண்டு தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து, திருநீறு பூசி உத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிந்து, பக்தியுடன் மலை ஏற வேண்டும். மலை ஏறும்போது திருப்புகழ் பாடல்கள் முடிந்த வரை இசையுடன் உருக்கமாகப் பாடிக்கொண்டு படி ஏற வேண்டும்.மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு பிரகாரத்திலுள்ள கொடிக் கம்ப விநாயகரையும், ஐராவத யானையும் தரிசிக்க வேண்டும்.தெற்கிலுள்ள இந்திர நீலச் சுனையை தரிசித்து விட்டு பின் கோவிலின் உள்ளே சென்று ஆபத்சகாய விநாயகரையும் அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்களையும் குமாரலிங்கேசுவரரையும் வணங்க வேண்டும். பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும் வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபடுதல் வேண்டும்.



திருத்தணி திருத்தலத்தின் சிறப்புகள்…

* திருத்தணிகைத் தலத்தில் வழங்கப்படும் விபூதி, சந்தனம் ஆகிய பிரசாதங்கள் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன என்பது பக்தர்கள் நம்பிக்கை.

* திருத்தணிகையில் பக்தர்கள் எடுக்கும் காவடி வித்தியாசமாக இருக்கும். நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி எடுப்பது திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம்.

* தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், கீழேயுள்ள ஸ்ரீஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற சரண கோஷத்துடன் பக்தர்களால் சுமந்து செல்லப்படும் 1008 பால் குடங்கள் மலை மேல் உள்ள முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கண் கொள்ளாக் காட்சி.

* மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

* கோயிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் உட்பட எல்லா சந்நிதிகளையும் தரிசித்த பிறகு, நிறைவாக இங்குள்ள ஆபத்சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

* திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின்  திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது, திருத்தணி கோவில் தனிச்சிறப்பு.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!