17

படபடவென்று ஷிவானியின் நிலையை உணர்ச்சிவசப்பட்டு பேசிய மனைவியின் முகத்தை கூட பார்க்காமல் தட்டிலிருந்த உணவில் கவனமாக இருந்தான் அபிராமன் . இடையில் சிறு சிறு ம்… ம் கள் மட்டும்.

” நான் சொல்வதெல்லாம் உங்களுக்கு அதிர்ச்சியாக இல்லையா ? ” 

” எதற்கு அதிர்ச்சி ? என்னை எனக்குத் தெரியும் தானே ? அப்போது அங்கே தவறு அந்தப் பெண் மீது தான் என்று என்னால் உணர முடியாதா ? ” 



“இல்லை ..இல்லை அவள் மீது தவறு ஒன்றும் இல்லை .அவளுக்கு அன்று இருந்த சூழ்நிலை ,” 

” சரிதான் அதைத்தான் நீ விளக்கி விட்டாயே விடு…” 

எளிதான அவனது விடுதல் நிலானிக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது .அவளுக்காக பார்த்து என்னை தவறாக நினைத்தாயா ?என்று ஒரு உலுக்கல் அல்லது என்னைப் பார்த்தால் உனக்கு அப்படி தெரிந்ததா ? என்றோர் உச்சந்தலை கொட்டல் ,உண்மை தெரிந்துவிட்டது தானே.. இனி என்ன  ? என்ற அவனது மையலான  கண்சிமிட்டல்… இப்படி எதை எதையோ எண்ணியிருந்த நிலானியின்  மனம் அவனது இந்த எளிதான விடுதலில் முரண்பட்டது.

ஷிவானிக்கு நடந்த அநியாயம் கூட இவன் கருத்தில் படவில்லையா ?இவன் வீட்டு பெண்களை மட்டும் பொத்தி பாதுகாத்து வைத்துக் கொள்கிறான்…  எழுந்து கொண்டவனை ஏறிட்டு  பார்த்தவள் ”  ஷிவானிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் ” என்றாள மரத்த குரலில்.

” எதற்கு உன் கருப்பு பூனை படைகளிடம் எனக்கு அடி வாங்கி தந்தாளே ..அதற்காகவா ? ” அவன் கை  கன்னத்தை வருடியது. நிலானி அதிர்ச்சியுற்றாள் .இதை அவள் மறந்து போனாளே…

செல்வமும் செல்வாக்கும்மாக  வளர்ந்த ஒரு உயர் குடும்பத்து ஆணுக்கு ஒரு பொது இடத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் மறக்க கூடியது அல்ல என்பதனை உணர்ந்தாள்.

” நான் அன்று தெரியாமல் தானே ….” மீதி இறைஞ்சலுக்கு முன் கண்களில் குளம் கட்டியது அவளுக்கு.

” நம் ராஜியிடம் சொல்லி ஏதாவது செய்யச் சொல்லலாம் ” அவனது பதிலில் திகைத்தாள்.

” யாருக்கு ? ” 

“அந்த ஷிவானிக்கு ” சொல்லிவிட்டு மாடிப்படி ஏற துவங்கினான் .இதற்கும் அந்த ராஜி தானா… அதென்ன நம் ராஜி

 எரிச்சலுடன் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தவளை மூன்றாவது படியில் ஏறி நின்ற நிலையில் திரும்பி இங்கே வா என்பதாக கையசைத்தான் .புரியாமல் அருகே போனவளை ஒரு கை நீட்டி இடைவளைத்து கீழிருந்து தான் நின்றிருந்த மூன்றாவது படிக்கு தூக்கிக் கொண்டான் .விழுந்துவிடுவோமோ என்ற பயத்துடன் அவன் கழுத்தில் கைகோர்த்து கொண்டவளின் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

” சூடாக பால் எடுத்துக்கொண்டு என் அறைக்கு வா ” கிசுகிசுப்பான குரலில் முனகலாய் சொல்லிவிட்டு மீண்டும்  ஒரு முத்திரை   மறு கன்னத்திற்கும் வைத்துவிட்டு அவளை தரையில் பத்திரமாக இறக்கி விட்டு மூன்று மூன்று படிகளாய் தாவி மேலே ஏறினான் .கன்னத்து ஈரத்தில் பிரமித்து அங்கேயே சில நிமிடம் நின்றிருந்த நிலானி மெல்ல  எட்டெடுத்து வைத்து கிச்சனுக்குள் போனாள்.

சிலுசிலுப்பும் கிளுகிளுப்புமாக அவளது உடல் ஏதோ ஓர் புதுவித அவஸ்தையை சுமந்து இருந்தது .கைகள் தாமாகவே பாலை சுட வைத்து கிளாஸில் ஊற்றின .குளிர் சூழலுக்கு பொருந்தாமல் வியர்க்கும் தன் உடல் நிலையில் கவலைப்பட்டபடி மென் எட்டுகளுடன் மாடிப்படி ஏறினாள நிலானி . பாதி படிகளில் அவள் இருந்தபோது ஹால் டீப்பாயில் அவள் வைத்திருந்த போன் ஒலித்தது.

முதலில் அந்த அழைப்பை அலட்சியம் செய்ய நினைத்தவள்தான் , ஆனால் உடனடியாக மேலே சென்று அபிராமனை எதிர் கொள்ள தயங்கி கீழே இறங்கி வந்து போனை எடுத்தாள் .திருக்குமரன் அழைத்துக் கொண்டிருந்தார். நிலானிக்கு ஆச்சரியம் .தானாக தொடர்பு கொள்ள முயன்றாலும் பேசாத தந்தை தானே அழைக்கிறார் என்றால் அதுவும் இந்த தேர்தல் பரபரப்பில்… வேகமாக போனை ஆன் செய்து பேசினாள்.

” அப்பா என்ன விஷயம் ?எப்படி இருக்கிறீர்கள் ? அம்மா நன்றாக இருக்கிறார்கள் தானே? 



” உன் அம்மாவிற்கு என்ன… நேரத்திற்கு சாப்பாடு …டிவி…. குளு குளு ஏசி மகாராணி மாதிரி இருக்குறா. என் நிலைமைதான் சரியில்லை ” 

“என்னாச்சுப்பா ? “

” நிலா குட்டி மாப்பிள்ளை ஏன் இப்படி செய்கிறார் ?எனக்கு அவருடைய போக்கு ஒன்றும் புரியவில்லை “

நிலானி திடுக்கிட்டாள்.” என்னப்பா என்ன செய்கிறார் ? “

” எங்கள் கட்சிக்கு என அவ்வப்போது பெரிய மனிதர்களை சந்தித்து நிதி வாங்குவோம் .அதில் உங்கள் மாமனாரும் ஒருவர் இப்போது நம் கட்சிக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க கூடாது என்று மாப்பிள்ளை உத்தரவாக சொல்லிவிட்டாராம் .அவர் மட்டும் இல்லை அவருக்கு தெரிந்த பழக்கமுள்ள வேறு பெரிய மனிதர்களிடமும் இதையே சொல்லி அவர்கள் கொடுக்கும் பணத்தையும் தடுத்து வைத்திருக்கிறார் .தேர்தல் செலவுக்கு பணம் இல்லாவிட்டால் நான் எப்படி பிரசாரம் செய்வேன் ? பிரச்சாரம் செய்யாவிட்டால் நம் கட்சி எப்படி ஜெயிக்கும் ?என்னால் முதல்வராகவே முடியாதே …” திருக்குமரனின் குரல் இறுதியில் அழுதே விட்டது.

நிலானி திகைத்தாள் .இந்த தந்தை அவளுக்கு புதியவர் .எப்போதும் அதிகாரமும் கம்பீரமுமாக பார்த்தவரின் அழுகை அவள் மனதை மிகவும் பாதித்தது.

” அது மட்டும் இல்லைடா குட்டி .நமது கட்சி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக எதிர்க்கட்சிக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர் .விசாரித்துப் பார்த்ததில் இதன் பின்னணியிலும் மாப்பிள்ளை தான் இருக்கிறார் போல .நம் கட்சி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் பணத்தை அள்ளிக் கொடுத்து அவர்களை கட்சி மாற்றி விட்டுக் கொண்டிருக்கிறார் .பணமும் இல்லாமல் பலமும் இல்லாமல் என்னால் எப்படி கட்சி நடத்த முடியும் ? ” 

தந்தையின் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் நிலானியுனுள் குத்தீட்டியாய் சொருகி நின்றன. ” நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா அப்பா  ? நன்றாக விசாரித்து விட்டீர்களா ? ” 

” மிக நன்றாகவே விசாரித்து விட்டேன்டா குட்டி .உனக்கு சந்தேகம் என்றால் நீயே நேரடியாக மாப்பிள்ளையிடம் கேட்டுப் பாரேன் .அவரால் மறக்க முடியாது .எனக்கு எதிராக பெரிய அளவில் திட்டங்களை போட்டு வருகிறார் போல் தெரிகிறது ” 

நடுங்கலாய் ஒலித்த தந்தையின் குரலில் நிலானியினுள் பரிதாபம் சுரந்தது . ” கவலைப்படாதீர்கள் அப்பா .நான் உங்கள் மாப்பிள்ளையுடன் பேசுகிறேன் .என்னவென்று கேட்கிறேன் ” 

” ஆமாம்டா தங்கம் .சீக்கிரமாக பேசு .அப்பாவை விட்டுவிடுங்கள் .அவர் நிச்சயமாக இந்த முறை முதலமைச்சராக வேண்டும் என்று அடித்துப் பேசு .அப்பாவிற்காக இதையெல்லாம் செய்வாய் தானே செல்லம் ? “

கெஞ்சலாய் கேட்ட தந்தையின் குரலுக்கு ” நிச்சயம் அப்பா ” என்று உறுதி கொடுத்தாள். ஆறி விட்டிருந்த பால் டம்ளருடன் மாடி ஏறினாள

.

தயக்கத்துடன் அவன் அறைக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த போது பாத்ரூமிலிருந்து வெளியே  வந்தான் அபிராமன். குளித்திருப்பான் போலும் , இடையில் ஷார்ட்ஸும் மேலே வெற்றுடம்புமாக இருந்தான் .சரியாக துவட்டாத ஈரத்தலையில் இருந்து சொட்டிய நீர் திவலைகள் அவனது வெற்று மார்பில் சொட்டுச் சொட்டாய் விழுந்து கொண்டிருந்தன .அப்படியே சுவரில் சரிந்து கைகட்டி நின்ற படி உள்ளே நுழைந்து கொண்டிருந்த நிலானியைப் பார்த்து மெலிதாக விசில் அடித்தான்.

இந்தக் குளிர் பிரதேசத்தில் இந்த ராத்திரி நேரத்தில் எவனாவது  குளித்துவிட்டு இதுபோல் அரைகுறையாக ஈரம் சொட்டச் சொட்ட வந்து நிற்பானா ? அபிராமன் மேல் பதிந்த பார்வையை எரிச்சலுடன் பிய்த்து வேறு பக்கம் மாற்றினாள் நிலானி.

மென்மையாக பதிய  தொடங்கிய பாதங்களை அதட்டி தப் தப்பென்று உரத்த சத்தம் வைத்து நடந்து நொட்டென்ற சத்தத்துடன் கையில் இருந்த பால் டம்ளரை மேஜையில் வைத்தாள்.

” அப்பாவிற்கு எதிராக என்ன சதி வேலைகள் செய்து கொண்டிருக்கிறீர்கள் ? ” பால் டம்ளரிலேயே பார்வையை வைத்துக் கொண்டு கேட்டாள்.

பின்பக்கம் எந்த சலனமும் இல்லை . ” உங்களைத்தான் கேட்கிறேன் ” மீண்டும் கேட்டாள்.

” ஏய்  முதலில் திரும்பி என் மூஞ்சியை பார்த்து பேசுடி ” உஷ்ணமாக வந்தது அபிராமனின் குரல்.

நிலானி எச்சில் விழுங்கிக் கொண்டாள் .இப்போது திரும்பி அவன் முகத்தை பார்த்து பேச முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை .அவன் வேறு கண்ணடிப்பது இதழ் குவிப்பது என்பது போன்ற ஏதாவது குட்டி கலாட்டாக்களை செய்து வைப்பான் .இப்போது அவளிடம் அவனுடைய எதிர்பார்ப்பு என்னவென்றுதான்  அவளுக்கு உணரமுடிந்ததே…



நியாயமாக எல்லா கணவனும் தன் மனைவியிடம் எதிர்பார்ப்பதுதான் .ஆனால் அதனை இவள் செய்யும் முன் தன் கணவனைப் பற்றிய முழு புரிதல் வேண்டும் என்று நினைத்தாள்.

” பார்த்துப் பேசினாலும் பார்க்காமல் பேசினாலும் கேள்வி ஒன்று தான் .என் அப்பாவை ஏன் இன்னமும் எதிரியாக பார்க்கிறீர்கள் ? ” 

” உன் அப்பாவை நான் என்று நண்பனாக பார்த்தேன் ? என்றுமே அவர் எனக்கு எதிரிதான் .உன்னை கல்யாணம் செய்த குற்றத்திற்காக அவரோடு தோள் சேர்ந்து கொள்வேன் என்று முட்டாள்தனமாக அவர்தான் எதிர்பார்த்தார் என்றால் நீயுமா…? ” 

உனக்குமா புத்தி இல்லை என்று அவன் கேளாமல் கேட்ட கேள்வியில் நிலானிக்கு ஆத்திரம் வந்த்து.

” என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது ? ” கேட்டபடி வேகமாக திரும்பியவள் அப்போது அவளுக்கு மிக அருகாமையில் வந்துவிட்டவன்  மேல் உரச இருக்க ,  அந்த உரசலை தவிர்க்க அவள் உடல் குறுக்க , அதனால் கால்கள் தடுமாற அவளை அணைத்து தழுவி நிறுத்தினான் அவன்.

” உன்னைப் பார்க்கையில் எப்படி எப்படி எல்லாமோ தெரிகிறது ….என்னென்னவோ செய்கிறது . என்ன செய்ய நான் ? ” உல்லாசமாக கேட்டபடி அவள் கன்னம் வருடினான்.

வலுவிழந்து கொண்டு வந்த தனது உறுதியில் கலங்கிய நிலானி அவனது மார்பில் கைவைத்து தள்ள முயன்றாள்.

”  பேசிக்கொண்டிருக்கும்போதே என்ன இது்…..? “

” பேசும் நேரமல்ல இது .அப்….புறம் பேசிக்கொள்ளலாம் .” சரசமாய் சொன்னபடி அவளை அப்படியே விழுங்கிக் கொள்ளும் ஆவலுடன் ஆரத்தழுவினான்.

” என்னை கல்யாணம் முடித்ததே குற்றம் என்கிறீரகள் .இப்போது இது மட்டும் குற்றமில்லையா ? ” 

” இந்த நேரத்தில்… இந்த விஷயத்தில் எதுவுமே குற்றமில்லை ” அவன் கைகள் அவள் உடம்பில் எல்லை மீறத் தொடங்கின.

” சரிதான் திருமணத்திற்கு முன்பே என்னை ஆண்டு விட துடித்தவர் தானே நீங்கள் ? உங்களிடம் இதற்கு மேல் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ? உங்களது தேவை எல்லாம் எனது உடல் மட்டுமே அப்போதும் இப்போதும். அப்போது அதை மறுக்கும் உரிமை எனக்கு இருந்தது .இப்போதோ …ஒரு மனைவியின் கடமைகள்.ம் …இதோ  நான் தயாராக இருக்கிறேன் ” 

நிலா நீ தனது தள்ளல்களையும் மறுப்புகளையும் நிறுத்தி விட்டாள் .எடுத்துக்கொள் என்பதாக கைவிரித்து கண் மூடி நின்றாள் .மரம் சுற்றிய கொடியாய் அவள் உடல் சுற்றிிிி க்கிடந்த அவனது கரங்கள் மெல்ல  அவளை விட்டு விலகின.

அத்தோடு அவளை விலக்கி கீழேயும் தள்ளின . ” சீச்சீ சரியான ராட்சஷிடி  நீ .இனி என் கண் முன்னால் வராதே .போ இங்கிருந்து ” அவனது தள்ளலில் தரையில் விழுந்தவள் அதிர்ச்சியில் அசையாமல் கிடக்க வேகத்துடன் வந்து அவளை இழுத்துக் கொண்டு போய் அறைக்கு வெளியே தள்ளினான் .

” உன் அப்பாவை இந்த எலெக்சனில் தோற்கடித்து அவர் கட்சியையும் கலைத்து நடுத்தெருவில் நிற்க வைக்கிறேன் பார் ” 

ஒரு சூளுரையும் உரைத்து விட்டு  கதவு உடைந்துவிடும் வேகத்துடன் அறையைப் பூட்டிக் கொண்டான்.

What’s your Reaction?
+1
5
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

உடலென நான் உயிரென நீ-6

6 " சாப்பிடலாம் வா " இடையில் கார் நின்றிருக்க அவளை அழைத்தான் கணநாதன் . " நான் ...எ...எனக்கு பசியில்லை " ' அதெப்படி இல்லாமலிருக்கும் .இறங்கு " " இ...இல்லை வேண்டாம் ..." தடுமாறினாள் .நல்ல வெளிச்சம் வந்து விட்டது .இப்போது இது போல் கோரமான முகத்துடன் அவள் எப்படி வெளியே வருவாள் ? அவள் முகத்தை சுற்றி வட்டம் போல் காற்றில் வரைந்து காட்டினான். "இதையெல்லாம் செய்து கொள்ள தீர்மானிக்கும் முன் கவலைப்பட்டிருக்க வேண்டும் .இப்போது வெளியே வர கூசி என்ன பயன் ? இறங்கு ..." அவனது அதட்டலுக்கு கால்கள் நடுங்க கீழே இறங்கிவிட்டாள் .…

2 hours ago

இந்த’ மருந்துகளை டீ, காபியுடன் சாப்பிடாதீங்க..!

எந்தெந்த மருந்துகளை டீ மற்றும் காபியுடன் சேர்த்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும் என்பதை பற்றி இன்கு தெரிந்து கொள்ளலாம். இப்போதெல்லாம்…

2 hours ago

பூச்செடிகளை வளர்ப்பவர்கள் கண்டிப்பாக இந்த தவறுகளை மட்டும் பண்ணிடாதீங்க..!

என்ன தான் இன்றைய சூழலில் அனைவரின் வீடுகளிலும் ஒரு சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடி தோட்டத்தை அமைத்து அதில்…

2 hours ago

எம் ஜி ஆர் தத்துவ பாடல் காட்சியின் பின்னணி !

கடந்த 1966-ம் ஆண்டு வெளியான படம் தான் சந்த்ரோதயம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எம்.ஆர்.ராதா, நம்பியார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த…

2 hours ago

என்.ஆர் குரூப்பின் சைக்கிள் பியூர் அகர்பத்தியின் வெற்றி பயணம்

சிறந்த தரத்தில் இருந்தால் ஒரு சிறிய பொருளுக்கு மிகப் பெரிய அளவிலான வாடிக்கையாளர் கூட்டத்தை உருவாக்க முடியும் என்பதற்கு ‘என்.ஆர்’…

5 hours ago

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து…

5 hours ago