வானமழை போல் ஒரு காதல் – 2

2

 

 

 

எவ்வளவு பெரிய மரம் ….!!வெட்டி நீளமாய் கீழே கிடந்த அந்த மரத்தை ஆச்சரியமாகப் பார்த்தாள் வாசுகி .உயரமாக நிற்கும்போது தெரியாத அதன் பிரம்மாண்டம் இப்படி தரையில் கிடக்கும் போது பெரிதாக தெரிந்தது .கண்களை சுற்றி பார்க்க இன்னமும் நிறைய மரங்கள் , மரக்கட்டைகள் சிறியதும் பெரியதுமாக அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தன.

 

ஜெயக்குமார் அங்கே நின்றிருந்த யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார் .மரங்களைப் பற்றிய ஏதோ வியாபாரப் பேச்சு .வெளியே போகலாம் என்று அவளை கூட்டிக் கொண்டு வந்து இங்கே நிற்க வைத்துக் கொண்டிருக்கிறார் .அந்த மரக்கடை மிகப்பெரிய இடம்தான் .ஆனாலும் எவ்வளவு நேரம் அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பது ? ஜெயக்குமார் அவரது பேச்சுக்களை முடிப்பதாக இல்லை .அவருடன் பேசிக் கொண்டிருந்தவர் தன்னை கணக்குப் பிள்ளை என்று அறிமுகம் செய்து கொண்டு இருந்தார்.

 

இந்தக் கடைக்காரன் மரங்களை எங்கே வாங்கி …எங்கே விற்று… எப்படி போனால் அப்பாவிற்கு என்ன….?  இவர் ஏன் இப்படி துருவித்துருவி விசாரிக்கிறார் ?  வாசுகிக்கு எரிச்சல் வந்தது .” அப்பாவுடன் வெளியே வருகிறாயா பாப்பா ? ” என்று கேட்ட மறு நொடியே ஐஸ்க்ரீம் ஆசையில் தலையாட்டிவிட்டு அவருடன் பைக்கில் பின்னால் ஏறி விட்டாள் வாசுகி.

 



அப்பாவுடன் எப்போது வெளியே போனாலும் அவளுக்கு ஐஸ்கிரீம் நிச்சயம் .அதுவும் ஒன்று இரண்டோடு நிற்காது .அவளுக்கு பிடித்தமான ப்ளேவர்களை தேவையான அளவு வாங்கி சாப்பாட்டிற்கு ஈடாக சாப்பிட்டு வயிற்றை நிரப்பி விட்டு தான் கடையை விட்டு வெளியே வருவாள். ஐஸ்கிரீம் பிசாசு என்று அவளுக்கு ஒரு பட்டப்பெயர் வைத்து இருக்கிறாள் அவளுடைய தங்கை மாலினி.இப்போதும் ஐஸ்கிரீம் நினைப்புடன் வந்தவளை ”  இங்கே ஒரு வேலை இருக்கிறது பாப்பா உள்ளே வா ” என்று இந்த கடைக்குள் அழைத்து வந்து விட்டார்

 

ஒரு மணி நேரம் ஆகிறது கிளம்புவது போல் தெரியவில்லை .வாசுகி நீளநீளமாக பட்டையாக மெஷினில் வெட்டுப்பட்டு ஓர் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் மேல் அமர்ந்து விட்டாள் .அப்பா எப்போது வருவார் யோசனையுடன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டாள். அப்போது அவள் பார்வையில் விழுந்த கடை வாயில் வழியாக உள்ளே அவன் வந்து கொண்டிருந்தான்…. தேவராஜன்.

 

இந்த தேவகுமாரன் ஏன் இங்கே வருகிறான் …? யோசனையோடு அவனைப் பார்த்தபடி அவள் அமர்ந்திருக்க , அவனது பார்வையும் அவள் மீது தான் இருந்தது .வரவேற்பு போல் ஏதோ ஒரு ஆமோதிப்பு அவன்  விழியசைவில் தெரிய வாசுகிக்கு அப்போதுதான் உறைத்தது.

 

இது …இவனுடைய கடையா ? இவன் ஏதோ மரக்கடை வைத்திருப்பதாக தானே அப்பா அன்று அறிமுகப்படுத்தினார் ? தன் நினைவுகளை சுரண்டி வெளிக்கொணர்ந்து யோசித்தாள் . பயப்பந்து ஒன்று அவளை சூழ்ந்துகொண்டது. ஐயையோ நேற்று சினிமாவிற்கு போனதை  இவன் அப்பாவிடம் சொல்லிவிடுவானோ ? 

 

நேற்றைய சூழலில் வேறு வழி தெரியாமல் தான் அவனை அணுகி இருந்தாள். அப்படி உடனடியாக தந்தையிடம் தன்னை பற்றி சொல்ல மாட்டான் என்று நம்பியே அவன் உதவியை கேட்டாள். இதோ இப்படி இவர்கள் தினமும் சந்திப்பார்கள் என்று அவள் நினைக்கவில்லை. பிறகு என்றோ ஒருநாள் சந்திக்கும்போது இந்த சம்பவமே அவன் நினைவில் இருக்காது என்று நினைத்து இருந்தாள். ஆனால் இப்போதோ… வாசுகிக்கு லேசாக வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது.

 

அவள் வேறு நேற்றே வெளியே அழைத்த தந்தைக்கு முக்கியமான கிளாஸ் என்று பொய் சொல்லியிருந்தாள் .அத்தோடு இந்த சினிமா பார்த்த விஷயம் மட்டும் அம்மாவிற்கு தெரிந்தால் அவ்வளவுதான் கரண்டியை காய வைத்து பாதத்தில் சூடு போடாமல் விட மாட்டாள்.வாசுகி மெல்ல தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து கொண்டாள் .அப்பாவும் அவனும்  பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு நடந்தாள்.

 

” போகலாமா அப்பா ? ” தந்தையிடம் கேட்டுவிட்டு பார்வையால் அவனுக்கு ஒரு கெஞ்சுதலை அனுப்பினாள். அவன் புருவம் உயர்த்தி என்ன வென்றான் .ஒற்றை விரலை உதட்டின் மேல் வைத்து அப்பாவை கண்களால் காட்டி சொல்லாதே எனும் கோரிக்கை வைத்தாள். சட்டென அவன் கண்களில் ஒரு குறும்பு வந்து ஒட்டிக் கொண்டது.

 

” பலா மரங்கள் கேட்டிருந்தீர்களே … கொஞ்சம் வந்திருக்கிறது அவற்றை பார்க்கிறீர்களா ? ” ஜெயக்குமாரிடம் கேட்டபடி தனது கணக்கு பிள்ளையை கை காட்டினான் .” அழைத்துப்போய் காட்டுங்கள் ” அவரிடம் ஜெயக்குமாரின் பொறுப்பை தள்ளினான் .அவர்கள் இருவரும் போனதும் ” அப்பாவிடம் ஒன்றும் சொல்லிவிடாதீர்கள் “அவசரமாக அவனிடம் பேசினாள் வாசுகி.

 

” எதை சொல்ல வேண்டாம் என்கிறீர்கள் ? ” புரியாமல் காட்டிய அவன் பாவனையில் இவன் அந்த தியேட்டர் சம்பவத்தை மறந்து விட்டானோ என்று யோசிக்கத் துவங்கினாள வாசுகி.

 

” நேற்று நீங்கள் காலேஜை கட் அடித்து விட்டு சினிமாவிற்கு வந்தீர்களே.. அதையா சொல்ல வேண்டாம் என்கிறீர்கள் ? ” அவளது நினைப்பை அடுத்த கேள்வியில் தவிடுபொடியாக்கினான்.

 

” நாங்கள் ஒன்றும் காலேஜ் கட் அடிக்கவில்லை .நேற்று எங்களுக்கு காலேஜ் லீவு .அதனால் சினிமாவிற்கு வந்தோம் ” கூசாமல் புளுகினாள்.

 

” எந்தக் காலேஜில் படிக்கிறாய் ? நம் ஊர் லேடிஸ் காலேஜ் தானே ? அங்கேதான் என் தங்கையும் படிக்கிறாள்.” 

 

அய்யய்யோ இந்த தேவ குமாரனுக்கு ஒரு தங்கச்சி வேறு இருக்கிறாளா ?என் நேரம் அவளும் என்னுடனேவா  படிக்க வேண்டும் ? மனம் நொந்த வாசுகி ” உங்கள் தங்கை வேறு மேஜராக இருக்கலாம் .எனக்கு நேற்று லீவு தான் ” துணிச்சலாக பேசினாள்.

 

” ஓ அப்படி என்றால் காலையில் உன் அப்பாவிடம் சொன்ன அந்த முக்கியமான கிளாஸ் என்ன ஆயிற்று ?” அவன் கேட்டதும் திக்கென்றது இவளுக்கு .உச்சந்தலைக்கு ஏறிய டென்ஷனில் கட்டை விரல் நகம் அவள் பற்களுக்கிடையே பாடுபட்டது . அய்யய்யோ இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும் ? 

 

” இப்படி நீளமாக நகம் வளர்த்து வைத்திருப்பதே தவறு .அதனை இப்படி வாயில்வைத்து கடித்துக் கொண்டு வேறு இருப்பாயா ? “அவன் அதட்டலாய் கேட்க அடப்பார்றா.. என்று அவனது அதிகாரத்தை வியந்தாள்.

 

போடா நீயும் உனது அக்கறையும்… என்று மூஞ்சிக்கு நேராக கை நீட்டி சொல்லுகிறவள்தான். ஆனால் இப்போது அந்த ரிஸ்க்கை எடுக்க அவள் விரும்பவில்லை .தனது குடுமி அவன் கைகளுக்குள் இருப்பதை உணர்ந்து கொண்டவள் தன்மையாகவே பேசினாள்.

 

” நாங்க சும்மா ஜாலிக்காக கிளாஸ் கட் செய்துவிட்டு படத்திற்கு வந்தோம் .அப்பாவிடம் சொல்லாதீர்கள் ”  என கண்கள் சுருக்கி இதழ் குவித்து அவள் கேளாமல் கேட்ட கெஞ்சல்களில் அவன் முகத்தில் புன்னகை பூக்கள்.

 



” சரி சொல்லவில்லை ” உடனடியாக ஒத்துக் கொள்ளப்பட்ட அவளது கோரிக்கைக்கு மகிழ்வதற்கு முன்னாலேயே ஆதரவு போல் அவள் முன் நீண்ட அவனது கரம் முகம் சுளிக்க செய்தது. இப்போது இது எதற்காம் ?கேள்வியை விழியால் கேட்டபடி அவனைப் பார்த்தாள்.

 

” ம் …” என்றபடி அவளை புன்னகையால் ஊக்கினான் அவன். வாசுகி தனது இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டாள் .அழகானதோர் சிரிப்பை சிந்தினாள்.”  உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி தேவகுமாரன் சார் “

 

” தேவராஜன் …” அவன் திருத்த சரியென அவள் தலையசைக்க …” எங்கே சொல்லு  …” தேர்வு வைக்கும் வகுப்பறை ஆசிரியர் ஆனான் அவன்.

 

” தேவராஜன் சார் …”  அவள் சொல்ல , ” பின்னால் வால் எதற்கு ? உனக்கு போலவா ? “அவன் கேட்க , அவள் விழித்தாள்.

 

” என்ன வால் ? யாருக்கு வால் ? “

 

” என் பெயருக்கு …உனக்கு…” அவளை விரல் சுட்டினான்.

 

” என்னை குரங்கு என்கிறீர்களா ? ”  மிக உடனே அவனுடன் ஒரு சண்டைக்கு தயாரானாள் .

 

” நான் செல்லவில்லை .நீயே தான் சொல்லிக் கொண்டிருக்கிறாய் ”  மடிந்த உதடுகள் வாய்க்குள் அடங்கிய அவன் சிரிப்பை சொன்னது.என்னை நக்கல்  செய்து சிரிக்கிறாயா நீ  ? கறுவினாள் . 

 

“மிகுந்த சந்தோசம் தேவகுமாரன் சார் …” குமாரிலும் சாரிலும்  அழுத்தம் கொடுத்து பேசி அவனை கடுப்பு ஏற்றினாள்.

 

அவன் தலையாட்டிக் கொண்டான் . ” சரி உன் இஷ்டம் . இப்போது ஒரு ஹேன்ட் ஷேக் ” மீண்டும் அவன் கையை நீட்ட திரும்பவும் தன் கைகளை கட்டிக்கொண்டாள் வாசுகி.

 

” எதற்கு ? ” 

 

” உன்னை உன் அப்பாவிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறேனேமா …?அதற்காக…” 

 

” இதற்காகவெல்லாம் கண்டவனின் கைதொடுவேன் என்று நினைத்தீர்களாக்கும் ? அந்த கண்டவனை மட்டும் இதழ் மூடி வாய்க்குள் சொல்லிக் கொண்டாள்.

 

இதற்குள் ஜெயக்குமார் வந்துவிட இவர்களது வார்த்தை மோதல் நின்று விட்டது . ”  போகலாம் அப்பா ” வேகமாக அப்பாவிடம் போய் நின்று கொண்டாள் வாசுகி .புருவம் உயர்த்தி அவனிடம் ஒரு கெத்து பாவனை வேறு.

 

தேவராஜன் தொண்டையை செருமிக் கொண்டான் . ” உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டுமே சார் ”  என அவன் ஆரம்பிக்க வாசுகிக்கு  திக்கென்றது.

 

வேண்டாம் ப்ளீஸ் கெஞ்சுதலாய் அவள் பார்க்க , அப்படி ஒரு பயம் இருக்கட்டும் ஒரு விரலை ஆட்டி அவன் எச்சரித்தான்.

 

” என்ன விஷயம் தம்பி  ? ” கேட்ட ஜெயக்குமாருக்கு ” அந்த பலா மரத்தில் வாசல் நிலை செய்தால் …” என  ஏதோ தொழில் விவரம் சொல்லியபடி வாசலுக்கு நடந்தான் . போகிறான் பார்… பனை மரம் மாதிரி …எப்படி மிரட்டுகிறான்  ? இருவருக்கும் பின்னால் நடந்து வந்தவள் அவன் உயரத்தை அண்ணாந்து பார்த்தபடி முணுமுணுத்தாள்.

 

ஜெயக்குமார் முன்னால் போய் பைக்கை ஸ்டார்ட் பண்ண வாசலில் நின்றிருந்த தேவராஜனை கடக்கும்போது ” சரி தான் போடா ” என மிகத் தெளிவாக சொல்லிவிட்டு கிளம்பிக் கொண்டிருந்த தந்தையின் வண்டியில் ஏறிக் கொண்டாள் .திகைப்பாய் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவனுக்கு கட்டைவிரல் ஆட்டி சவால் விட்டுவிட்டு தந்தையின் தோளைப் பற்றிக் கொண்டாள் .அப்போதெல்லாம் இனி ஒரு முறை இவனை சந்திக்கப் போவதில்லை என்றுதான் சர்வநிச்சயமாக நினைத்தாள் வாசுகி.

 

 

” நாளை காலையில் பியூட்டி பார்லர் போய் ஃபேஷியல் செய்து கொண்டு வந்து விடு பாப்பா ” ஜெயக்குமார் சொல்ல ஆச்சரியமாக அப்பாவை பார்த்தாள் வாசுகி .மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஃபேசியல் செய்ய வேண்டுமென்று கெஞ்சி கூத்தாடி அவரிடம் பர்மிஷன் வாங்க வேண்டும் .மஞ்சளை அரைத்துப் பூசினால் போதும் கண்ட கிரீம்கள்  எதற்கு …எல்லாம் கெமிக்கல் என்பார் .இன்றோ….

 

” அப்பா நீங்களா ?  நான் சரியாகத்தான் கேட்டேனா ? ” காதுகளை குடைந்துகொண்டு அப்பாவின் அருகே அமர்ந்தாள்

 

” என்னது பேஷியலா ?  அப்பா எனக்கு ? ” கத்தியபடி வந்தாள் மாலினி .

 

 

” ஏய் போடி சின்ன பிள்ளைகளுக்கெல்லாம் பேஷியல் கிடையாது” 

 

” நானெல்லாம் சின்ன பிள்ளை கிடையாது . அடுத்த வருடம் காலேஜுக்கு போக போகிறேன் .எனக்கும் வேண்டும் அப்பா ப்ளீஸ்…”  கொஞ்சியபடி தன் அருகே அமர்ந்த இளைய மகளை புன்னகையுடன் பார்த்த ஜெயக்குமார் ” ராஜாத்தி நாளை இரண்டு பேரையுமே பியூட்டி பார்லர் கூப்பிட்டுக் கொண்டு போய் வா ”  என்றார்.

 

” அப்பா இது அநியாயம் . நான் ஸ்கூலில் படித்துக்கொண்டு இருக்கும் போதெல்லாம் நீங்கள் எனக்கு பேஷியலுக்கு அலோ பண்ணியதே இல்லை .இப்போது இவளுக்கு மட்டுமா ? ஏய் போடி வராதே ” தங்கையை தள்ள அவள் இவளை தள்ள… சட்டென்று அங்கே ஒரு போர் அபாயம் வராலாமென உணர்ந்த ராஜாத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுக்கு ஒன்று என்று இருவர்  தலையிலும் கொட்டு வைத்தாள்.



 

” ஏய் மாலினி உனக்கு ரிவிசன்  டெஸ்ட் இருக்கிறதுதானே ? நீ போய் படி . நான் அக்காவை மட்டும் கூட்டிக் கொண்டு போய் வருகிறேன் ” மாலினியின் முகம் கூம்ப  வாசுகியின் முகம் மலர்ந்தது . கட்டை விரலாட்டி  தங்கையை கடுப்பேற்றினாள்

 

 

கோபித்துக்கொண்டு உள்ளே போன மாலினியை பின்தொடர்ந்து போன ஜெயக்குமார் ஏதோ சொல்லி சமாதானம் செய்ய சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவளின் முகம் மலர்ந்திருந்தது.

 

” அடியேய்  நீ செத்தடி ” அக்காவிற்கு சந்தோசமாக சாபம் ஒன்று அவள் கொடுக்க வாசுகி விழித்தாள். தன்னைச் சுற்றி ஏதோ ரகசியம் நடப்பதாக அப்போதுதான் உணர்ந்தாள் அவள்.

 

மறுநாள் இரவு ஜெயக்குமார் அவளிடம் ” நாளை காலை உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் ” என அறிவித்தார்.

 




What’s your Reaction?
+1
27
+1
22
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Radha

Recent Posts

மழைநீரில் பேரீட்சம் பழம் சாகுபடி செய்கிறார் :முன்னாள் கமாண்டோ வீரர்

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகவே பேரீட்சம்பழம் ஊட்டச்சத்துக்காக உண்ணப்படுகிறது. பேரீட்சம்பழத்தில் நிறைய ஆன்டிஆக்ஸ்சிடென்ட்கள் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலைப் போக்குகிறது.…

1 hour ago

அடுத்தடுத்து நடந்த சதியால் அவமானப்பட்டு நிற்கும் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சத்தியா…

1 hour ago

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? அப்போ சிறு பட்ஜெட் படங்களின் நிலைமை ?

கடந்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமா அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. பெரிய ஸ்டார் படங்கள் மட்டுமின்றி, சிறிய பட்ஜெட் படங்களும்…

4 hours ago

ஆஞ்சநேயரிடம் வைகுண்டம் வருகிறாயா என்று கேட்ட ராமர்… என்ன பதில் சொன்னார் அனுமன் தெரியுமா?

ராமகாவியத்தின் தனிப்பெரும் தலைவன். மானுடர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று வகுத்து தந்த தெய்வம் ஸ்ரீராமபிரான். இந்த ராம நவமி…

4 hours ago

மே மாத ராசி பலன்கள் (துலாம், விருச்சிகம்)

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி…

4 hours ago

உருவாகிறதா ரஜினிகாந்த் பயோபிக்… அப்போ ஹீரோ யார்?

இளையராஜாவின் பயோபிக் அறிவிப்பின்போதே, பலரது முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது ரஜினிகாந்த் பயோபிக்தான். பெரும்பானவர்கள் ரஜினிகாந்த் பயோபிக்கை படமாக எடுக்கமாட்டார்கள் என்று…

4 hours ago