பத்மா கிரகதுரை எழுதிய

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
1

மிகச் சுலபமாய் கையசைத்து
கடந்து விட்டாய்
ஒவ்வொன்றிலும் தெரியும் உன் சாயல்களை
என்ன செய்ய..?



“என்ன சொன்னார்கள்..?” அம்மா சரஸ்வதியின் கிசுகிசுப்பான குரல் கேட்டது..
“ம்.. என்னத்தை சொல்ல..? நான் என்ன சொன்னாலும் அதற்கொரு பதில் வைத்திருக்கிறார் அண்ணாச்சி..” அப்பா சிவராமனின் குரல்..
மைதிலி தன் காதுகளை கூர்மையாக்கினாள் அவள் வீட்டின் பின்புறம், அடுப்படியை ஒட்டி இருந்த சிறு திண்ணையில் அமர்ந்திருந்தாள்.. மதிய வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் வேளையில் யாரும் அந்த சுடு இடத்தில் அமரமாட்டார்கள்.. ஆனால் அவள் அமர்ந்திருந்தாள்..
கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனதினை விட அந்த திண்ணை சூடு அவளுக்கு பெரிதாக தோன்றவில்லை.. மகள் வீட்டினுள் பெட்ரூமில் படுத்துக் கொண்டிருப்பாள் என்ற எண்ணத்தில் பெற்றவர்கள் இருவரும் கிச்சனுக்குள் கிசுகிசு குரலில் பேசிக் கொண்டிருந்தனர்..
“நீங்க என்ன சொன்னீங்க..?”
“நம் பொண்ணு படித்த பொண்ணுன்னு நாசூக்காக அண்ணாச்சிகிட்ட சொன்னேன்.. ம்..ம்..னு தலையாட்டி கேட்டுட்டு, புஸ்தவ படிப்பு என்னத்தக்குலே ஆகும்.. வாழ்க்கையை படிக்கனும்லேங்கிறாரு..”
“நீங்க நாசூக்கெல்லாம் ஏன் பாக்குறீங்க நல்லா வெளிப்படையா பேச வேண்டியதுதானே..?”
“அருணாச்சலம் அண்ணாச்சிகிட்ட அப்படி பேசுறதுக்கு இடமோ, நேரமோ நமக்கு கிடைக்காது சரசு.. இந்த பேச்சையே நான் அவர் மளிகை கடை கசகசப்புக்குள்ள கத்தி கத்தி அவர் காதில் சொன்னேன்.. உட்கார இடம் கூட இல்லை.. ஓரமாக கிடந்த புண்ணாக்கு மூட்டை மேல்தான் என்னை உட்கார வைத்தார்..?”
“இது என்னங்க அநியாயம்..? கல்யாணம் பேச வர்றவரை இப்படித்தான் உட்கார வைப்பாரா..?”
“அவர் மண்ணெண்ணெய் டின் மேலதானே உட்கார்ந்திருந்தார்.. எனக்கு புண்ணாக்கு மூட்டை..” சிவராமனின் குரலில் லேசான சிரிப்பு வந்திருந்தது..
“எனக்கு ஒரு மாதிரி பக்.. பக்குங்குது.. உங்களுக்கு எப்படித்தான் சிரிப்பு வருதோ..?”
“சிரிக்கலாமா.. வேண்டாமான்னு யோசனைதான் சரசு எனக்குள்ளும்.. ஆனாலும் சிரித்தால் மனதுக்கு லேசாக இருக்கிறது… நீ பயப்படும் அளவு இதில் ஒன்றும் இல்லைன்னு உள்மனசு சொல்கிறது.”
“ம்.. மேம்போக்காய் பார்த்தால் நல்ல குடும்பம்தான்.. வசதியான இடம்தான்.. ஆனால் பெரிய குடும்பம்.. வியாபார குடும்பம்.. இதெல்லாம் நம் மகளுக்கு பழக்கமில்லாத சூழல், அவள் தாங்குவாளா..?”



“மேம்போக்காய் மட்டுமில்லை சரசு ஆழ்ந்து பார்த்தாலும் நல்ல குடும்பம்தான் அருணாச்சலம் அண்ணாச்சியோட சம்பந்தின்னு சொல்லிக்கிட்டு இந்த ஏரியாவில் நடந்தேன்னா எல்லா பயலுகளும் மரியாதையாய் பார்ப்பாங்க.. ஆனாலும்..”
“உங்கள் கவலைதான் எனக்கும்.. நம் மகளை பூப்போல் வளர்த்திருக்கிறோம்.. வீட்டு வேலைகள் கூட அவளுக்கு சரிவர செய்ய தெரியாது.. அண்ணாச்சி வீட்டுக்கு போனால் இருபத்தி நான்கு மணி நேரமும் வேலை இருக்கும்.. அண்ணாச்சி வீட்டு பெண்கள் எந்நேரமும் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.. அத்தனை வேலை நம் மைதிலிக்கு தாங்குமா..?”
“பிறந்த வீட்டில் மந்தமாக சோம்பேறித்தனமா இருக்கும் பெண்கள், புகுந்த வீட்டிற்கு போனதும் ரொம்ப சுறுசுறுப்பாய் மாறிவிடுவதில்லையா..? செல்லமாக வளர்ந்தாலும் சூழ்நிலைகேற்ப மாறும் வித்தையை நாம் நம் மகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோமே சரசு..”
என் வாழ்க்கையே சூழ்நிலைக்குள் போகிறதாப்பா.. வெளியே மைதிலி மனதிற்குள் தந்தையிடம் பேசிக் கொண்டாள்… நாகரீக நாசுக்குடன் வளர்ந்த மெல்லியலளான பெண்ணிற்கு ஆர்ப்பாட்டமும், அதிகாரமுமான இந்தக் கிராமாந்திர குடும்பம் சரிப்பட்டு வருமா..?
இந்தக் கல்யாணம் பேச ஆரம்பித்த தினத்திலிருந்தே மைதிலியின் மனதினுள் சூறை சுழலொன்று சுற்றியபடி இருந்தது.. அச்சுழலோடு சேர்ந்து சுற்றும் படகாய் அவள் உணர்வுகள், அங்குமிங்குமாய் அலைக்கழித்து கொண்டு இருந்தன..
“பார்ப்பதற்கு கடுமையாக தெரிந்தாலும், பழகுவதற்கு அந்த பையன் கொஞ்சம் தன்மையானவன் தான்..”
அப்பா சொன்ன அந்த தன்மையானவனின் நினைவு மைதிலிக்கு வந்தது.. அவனை அவள் முதன் முதலில் சந்தித்த நாள் நினைவு வந்தது..
“மைதிலி அப்பா மதிய சாப்பாடு எடுத்துக்காமல் போய்விட்டார்.. நீ போகிற வழியில் கொண்டு போய் கொடுத்துட்டு போறியாம்மா..”
“அம்மா நான் காலேஜீக்கு போறேன்.. இப்போ எப்படி அப்பா ஆபிசுக்கு போக முடியும்..?”
“இரண்டு தெரு சுத்தி போகனும்.. ஸ்கூட்டியில்தானே போகிறாய்.. போய் கொடுத்துடும்மா.. இல்லைன்னா நான்தான் பஸ் பிடித்து போகனும்..”
ஏன் உங்கள் மகன் என்ன செய்கிறான்.. மனதிற்குள் வந்த இந்த கேள்வியை உதட்டை மடித்து தடுத்தாள்.. வேண்டாம் அம்மா மனது புண்படும்..



அவள் அண்ணன் ராகவன் திருமணம் முடிந்து மூன்றே மாதங்கள்தான் தாய், தந்தையோடு இருந்தான்.. பிறகு அவனது அலுவலகத்தை காரணமாக காட்டி, அலுவலகத்தின் அருகில் வீடு என்ற பேச்சோடு ஒரு அப்பார்ட்மெண்டுக்கு மனைவியோடு தனிக்குடித்தனம் போய்விட்டான்..
அவனது அலுவலகத்தை விட அவன் மனைவி கிரிஜாவின் அம்மா வீடுதான் அந்த அப்பார்ட்டுமெண்டுக்கு அருகே இருந்தது.. தனியாக போனதோடு சரி, எப்போதாவது ஒருமுறை அதிசயமாக அம்மாவை பார்க்கவென வீட்டுக்கு வருவான்.. நாலு வாழைப்பழம், ஒரு பிஸ்கெட் பாக்கெட் இவற்றை கொண்டு வந்து அம்மா கையில் கொடுத்து விட்டு, அம்மா மகனுக்காக சமைத்து வைத்திருக்கும் சாப்பாட்டை இலை போட்டு பரிமாற திருப்தியாக உண்டு பெரிய ஏப்பம் ஒன்றுடன் கிளம்பி போய்விடுவான்..
இந்த மகனின் வருகையையே அம்மா பெருமிதமாக இன்னைக்கு என் மகன் வந்தான் எனக் கொண்டாடுவாள்.. சிவராமனுக்கும், ராகவனுக்கும் ராகவன் கல்லூரியில்
படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அவ்வளவாக ஒத்துப் போவதில்லை.. வீட்டுக் கவலையின்றி தான் தோன்றியாக திரிகிறான் மகன் என்ற குற்றச்சாட்டு சிவராமனுக்கு.. நான் படிப்பேனா.. உங்கள் வீட்டைப் பார்ப்பேனா.. என்ற வாதம் ராகவனுக்கு..
மதுரை சந்தை ரோட்டில் ப்ளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை சிவராமனுக்கு அவரது பதிமூன்று வயதில் சாக்கை விரித்து அதில் ப்ளாஸ்டிக் சாமான்களை பரப்பி வைத்து ப்ளாட்பாரத்தில் தொழில் ஆரம்பித்தவர்.. இன்று அதே இடத்தில் இரண்டு மாடியாக அவரது தொழில் வளர்ந்துள்ளது.. ப்ளாஸ்டிக் சாமான்களில் அத்தனை வகைகளும் அவரது கடையில் வாங்கலாம்..
அப்பாவின் தொழில் மகனுக்கு பிடிக்கவில்லை.. அவன் காலேஜிற்கு பீஸ் கட்டவும், நண்பர்களோடு சுற்றுலா செல்லவும் மட்டுமே அந்த ப்ளாஸ்டிக்கடை வருமானம் அவனுக்கு தேவையாயிருந்தது.. மற்ற நேரங்களில் அந்த தொழில், தொழில் தொடர்பான விபரங்கள் அவனுக்கு ரப்சர் தருபவை என அவனால் சொல்லப்படும்..
தனக்கு பிறகு தொழிலை மகன் பார்த்துக் கொள்வான் என்ற சிவராமனின் நம்பிக்கையை தகர்த்து, அப்பாவின் காசை விழுங்கி எம்.ஈ வரை படித்து, மதுரையின் புகழ் பெற்ற கட்டுமான கம்பெனி ஒன்றில் சீனியர் இன்ஜினியராக வேலைக்கு சேர்ந்தும் விட்டான்.. அவனுக்கு திருமணத்திற்கான வரன் தேடி வர, உடன் மணம் முடித்து மனைவியின் ஆலோசனைப்படி (இங்கேயே இருந்தால் உங்கள் அப்பா போல் தலை மேல் ப்ளாஸ்டிக் டப்பாவை சுமக்க வேண்டி வரலாம்..) தன் அலுவலகத்தின் அருகே வீடு பார்த்து குடியேறி போய்விட்டான்.. புல் எஜ்கேட்டடு பாமிலி போன்றதோர் பாவனைகளோடு தன் சார்பான இடங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறான்..
அப்படிப்பட்டவனா.. மதிய உணவை மறந்து வைத்துவிட்டு போன தந்தைக்கு டிபன்பாக்சை கொண்டு போய் கொடுக்க போகிறான்..? மைதிலியின் மனதிற்குள் அண்ணன் எப்பவுமே பலபடிகள் கீழிறங்கிய நிலையில் இருப்பவன்தான்.. இப்போதும் அப்படியே அண்ணனை மனதிற்குள் வசை பாடியபடி அப்பாவின் சாப்பாடு டிபனை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் மைதிலி..



இப்போது அவள் போகாவிட்டால் இந்த வேலை அம்மாவின் தலையில்தான் விழும்.. வீட்டு வேலைகளை முடித்து விட்டு சிறிது நேரம் அம்மா அக்கடாவென்று சீரியல் பார்க்க உட்காருவாள்.. அது முடியாமல் போகும்.. அம்மாவிற்காக அந்த வேலையை எடுத்துக் கொண்டாள் மைதிலி.. மதுரையின் நெரிசலான சாலையில் நிதானமாக கவனமாக ஸ்கூட்டியை ஓட்டினாள்..
அப்பாவின் கடை இருக்கும் சந்தை ரோட்டுப்பக்கம் திரும்பியவள் மலைத்தாள்.. ஹப்பா எத்தனை ஜனத்திரள்.. எவ்வளவு கூட்டம்.. இத்தனை பேருக்கும் இந்த காலை நேரத்தில் இங்கே என்ன வேலை இருக்கக் கூடும்..? பெருமூச்சு விட்டபடி ஆக்சிலேட்டரை மெல்ல மெல்ல திருகியபடி கால்களை தரையில் ஊன்றி தடுமாற்றத்துடன் அந்த ஜனக்கூட்டத்திற்கிடையே மெல்ல நீந்தியபடி போனாள்..
அதோ அப்பாவின் கடை “சிவா ப்ளாஸ்டிக்ஸ்” என்ற போர்டு கண்ணில் பட்டதும், கால்களை ஸ்கூட்டி மேல் வைத்து, ஆக்சிலேட்டரை கொஞ்சம் முடுக்க வண்டி வேகமாக நகர்ந்தது.. அப்போது விநோதமான அலறல் ஒன்றுடன் அவள் வண்டி முன் உருண்டு வந்து விழுந்தான் ஒருவன்.. ஸ்கூட்டி வேகம் இல்லாதததால் அவன் மேல் ஏறாமல், அவனை தட்டி நின்றது.. கீழே சரிந்தது..
மைதிலி “வீல்” என்ற அலறலுடன் ஸ்கூட்டியை விட்டு குதித்து தள்ளி நின்றாள்.. கீழே உருண்டு கிடந்தவன் அரக்க, பரக்க எழுந்து ஓடப்பார்த்து அவள் மேலேயே மோதினான்.. மைதிலி மீண்டும் அலறினாள்..
“டேய்……….. எங்கேடா ஓடுற..?” கெட்ட வார்த்தை ஒன்றுடன், கையில் அரிவாளோடு வந்தான் ஒருவன்.. அவன்தான் கீழே விழுந்தவனை விரட்டி வந்தவனாயிருக்கும்.. கண்கள் சிவந்து, தலை கலைந்து அச்சு அசலாக ரவுடி தோற்றத்தில் கொண்டிருந்தான்..
அவன் அரிவாளை ஓங்கியபடி வந்த அதே நேரம்தான் கீழே கிடந்தவன் மைதிலி மேல் மோதியிருந்தான்.. அவள் அலறியிருந்தாள்..
“ஏன்டா பொட்டச்சி பின்னால் போய் ஒளியுறியோ..?” கொத்தாக அவன் தலைமுடியை பிடித்து இழுத்தான் வந்தவன் பிறகு அவனை கீழே போட்டு நெஞ்சில் மிதித்தான்..
“ஏய் யார் நீ..?” அவனது அரிவாள் இப்போது மைதிலியின் பக்கம் நீண்டது..
“நா.. நான்.. சு.. சும்மா..” மைதிலியின் உதடுகள் நடுங்கின..
“போ..” ஒற்றை வார்த்தையில் இவளை உறுமியவன் எழுந்து ஓட முயன்றவனின் கழுத்தில் ஏறி மிதித்தான்..
இன்னமும் தயங்கி நின்றவளை திரும்பி பார்த்தவன் “என்ன போகலையா..?” திரும்ப உறுமினான்..
“எ.. என்.. வண்டி..” மைதிலியின் ஸ்கூட்டர் அவர்கள் இருவருக்கும் அந்தபக்கம் சரிந்து தரையில் கிடந்தது..
ஒரே உதையில் தரையில் கிடந்தவனை நாலு அடி தள்ள போய் விழ வைத்தவன், வலது கை அரிவாளை சுழற்றியபடி இடது கையால் இவள் ஸ்கூட்டியை அநாசியமாக தூக்கி இவள் பக்கம் நகர்த்தினான்..
“ம்.. சீக்கிரம் போ..” கை கால் உதறலெடுக்க வேகமாக ஸ்கூட்டியின் பட்டனை ஆன் செய்ய அது ஸ்டார்ட் ஆக மறுத்தது.. உள்ளங்கை வியர்வையில் வழுக்க திரும்பி திரும்பி பார்த்தபடி மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருந்தாள்..
பின்னால் அவனை நையப்புடைத்துக் கொண்டிருந்த அவன்.. இது ஸ்டார்ட் ஆகாது, இறங்கி உருட்டிக் கொண்டே போய்விட வேண்டியதுதான் என்ற முடிவோடு மைதிலி இறங்க யத்தனிக்கையில் அவள் தோளில் ஒரு முரட்டுக்கரம் படிந்து அழுத்தியது..
“உட்கார்..” உத்தரவிட்டு விட்டு ஸ்கூட்டியின் சைடு கிக் ஸ்டார்ட்டரை இழுத்து ஒற்றைக் காலால் ஓர் உதை விட்டான்.. ஸ்கூட்டி அதிர்ந்து ஸ்டார்ட் ஆனது.. ஆளை விடுடா சாமி என்று வண்டியிலேறி வந்து விட்டாள் மைதிலி..



“நீ ஏண்டாம்மா வந்தாய்..? உன் அம்மாவிற்கு அறிவே கிடையாது.. பொம்பளைப் பிள்ளையை இங்கெல்லாம் அனுப்பலாமா..?” கடிந்தபடி டிபன் பாக்சை வாங்கிக் கொண்டார் சிவராமன்..
“வந்த வழியில் போகாதேடா.. இதோ இந்த சந்து வழியாக போய் வலது பக்கம் திரும்பினால் மெயின் ரோடு வந்து விடும் அப்படி போ..”
மகளை உடனே அந்த இடத்தை விட்டு அனுப்புவதில் குறியாக இருந்தார் தந்தை, மைதிலி கடையை விட்டு வெளியே வந்து ஸ்கூட்டியை எடுத்த போது தூரத்தில் கும்பலாக மனிதர்கள் தெரிந்தார்கள்.. அவ்வளவு நேரமும் ஏனென்று கேட்க ஒரு ஆள் இல்லை.. இப்போது எப்படி இத்தனை கும்பல்.. அந்த கும்பல் நடுவே அரிவாள் ஏந்திய அவன் கை தெரிந்தாற் போலிருந்தது.. முகம் பயத்தில் வெளுக்க வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.. மெயின் ரோட்டை அடைகையில் போலீஸ் ஜீப் ஒன்று அவளைக் கடந்து கடைத்தெருவிற்குள் நுழைந்தது..
அந்த ரவுடியை அரெஸ்ட் செய்திருப்பார்களாக இருக்கும்.. தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.. அன்று கொலை வெறியோடு ஒருவனை துரத்தியவன்தான் இன்று அவளுக்கு மாப்பிள்ளையாக அப்பாவால் பேசப்படுபவன்.. அந்த சம்பவம் நடந்து ஒரு வருடமாவது இருக்கும்.. அவன் ரவுடி இல்லை அந்தப் பகுதியிலேயே பெரிய அளவில் மொத்தமாக மளிகை வியாபாரம் செய்யும் அருணாச்சலம் அண்ணாச்சியின் மூத்த மகன் பரசுராமன் என்று பிறகு அவளுக்கு தெரிய வந்தது..

What’s your Reaction?
+1
7
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Padma Grahadurai

Website Admin

Recent Posts

பழைய புத்தகத்தில் பல லட்சங்களை சம்பாதிக்கும் மாணவர்கள்..!

ஜேஇஇ பயிற்சிக்காக அக்ஷய் காஷ்யப் பாட்னாவுக்குச் சென்றிருந்தபோது செகண்ட் ஹாண்ட் புத்தகங்களை வாங்குவதற்காக மிகவும் சிரமப்பட்டுவிட்டார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த…

1 hour ago

அண்ணனுக்கே ஆப்பு வைத்த முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமி‌ழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

1 hour ago

அதிசய நீர்வீழ்ச்சி: இந்த நீர்வீழ்ச்சி உரையுமாம்:இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

காஷ்மீர் என்றதும் நம் கண்களுக்கு முன்னால் விரியும் காட்சி என்னவாக இருக்கும். வெள்ளை பனிப்படர்ந்த மலைகள், குளுகுளு தட்பவெட்பநிலை, அழகு…

3 hours ago

மே மாத ராசி பலன்கள் (மிதுனம், கடகம்)

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது…

3 hours ago

வெயில் காலத்தில் நட்ஸ், உலர் பழங்கள் சாப்பிடலாமா?

காய்கறிகள், பழங்களை அதிக நீர்ச்சத்து கொண்டதாகத் தேர்வு செய்ய வேண்டும். அதைவிட உடல் சூட்டை தணிக்கும் காய்கறிகளாகவும் உணவுகளாகவும் இருக்க…

3 hours ago

80, 90களின் காதலர்களை உருக வைத்த காதல் தீம்…இசையால் ஆட்டிப் படைத்த கார்த்திக் ராஜா

தமிழ் சினிமாவின் சிறந்த காதல் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் இதயம் படத்தினைத் தவிர்த்து எழுத முடியாது. இயக்குநர் கதிர் இயக்கத்தில்…

3 hours ago