18

 

மூன்று நாட்களாக ஒருவரை ஒருவர் முகம் பார்க்காமல் நடமாடிக் கொண்டிருந்தவர்களை கவனித்தபடி இருந்தனர் அபிராமியும், அன்னலட்சுமியும்.. இவர்களுக்குள் என்ன பிரச்சனை..?

அபிராமி மெல்ல பாலகுமரனிடம் கேட்க அவன் ஒரு “உச்” சுடன் எழுந்து போனான்..

என் பொண்டாட்டி என்னை அறைந்து விட்டாள் என அவனால் வெளியில் சொல்லவா முடியும்..? லாவாக்களை உள்ளடக்கிய எரிமலையாய் நடமாடிக் கொண்டிருந்தான்.

“குமரா இன்று அம்மன் கோவிலில் விளக்கு பூஜை.. நானும் அன்னமும் போய்விட்டு வருகிறோம்… நீ சஸாக்கியையும், குழந்தையையும் கவனித்துக்கொள்..” அபிராமி மகனிடம் பொறுப்பை கொடுத்து விட்டு அன்னத்தை கூட்டிக் கொண்டு கிளம்பினாள்..

“அம்மா இதெல்லாம் உங்க ப்ளானா..?” கத்திய மகனின் குரல் அவள் காதுகளை எட்டவே இல்லை..
அவர்கள் சென்ற அரை மணி நேரத்தில் “பாலா..” என தயக்கமாக அழைத்தபடி அவன் அறைக்கு வந்து நின்றாள் சஸாக்கி..

“ம்..” என்றான் நிமிர்ந்து அவளை பார்க்கவில்லை..

“கொஞ்சம் என்னுடன் வாருங்களேன்..”

“எனக்கு வேலை இருக்கிறது..”

“ப்ளீஸ் பாலா.. ஒரே ஒரு நிமிடம்..”தலை சரித்து கேட்ட இந்த கெஞ்சலை தள்ள முடியாமல் எழுந்தான்..

“என்ன..?” அவளுடன் நடந்தான்..

“இ.. இதை.. என்ன செய்ய..? எனக்கு தெரியவில்லையே..” விழித்தபடி அவள் கை காட்டியது சசிரூபனை..
தொட்டிலில் படுத்திருந்த குழந்தை தன் படுக்கை முழுவதும் இயற்கை கழிவுகளால் பாழாக்கியிருந்தது.. அதனை உணராது தனது தலையின்அடியில் வைத்திருந்த டவலை சுருட்டி வாய்க்குள் வைத்து முயன்றபடி தனது கழிவில் தானே கால்களை அடித்து விளையாடியபடி இருந்தது..

“என்ன சஸாக்கி.. குழந்தையை இப்படியா போட்டு வைப்பாய்..? தூக்கி க்ளீன் பண்ண வேண்டியதுதானே..?” பாலகுமரனுக்கு வந்த ஆத்திரத்திற்கு அவளது கன்னத்தில் அறையும் வேகம் வந்தது..

“எ.. எனக்கு குழந்தையை தூக்க பயமாக இருந்தது பாலா.. அன்னைக்கு கீழே போட பார்த்தேனே..”
பாவமாய் சொன்னவளை திட்டவும் மனம் வரவில்லை..

“நா.. நான் சமையல்காரம்மாவை அழைத்து வரவா..?”

“நம் குழந்தை சசி.. நாம்தான் இதெல்லாம் அவனுக்கு செய்யவேண்டும் வா.. இருவருமாக செய்யலாம்..”
அதன்பின் இருவருமாக குழந்தையை பத்திரமாக தூக்கி நாற்றமாகி கிடந்த துணிகளை ஒதுக்கி போட்டு, இளஞ்சூடான வெந்நீரில் குழந்தையை கழுவி துடைத்து உடல் முழுவதும் வாசமாக பவுடர், போட்டு வேறு புதிய துணி, டயபர் மாற்றி முடித்த போது குழந்தை பசியில் அழ ஆரம்பித்தான்..

“குழந்தைக்குபால் கொடு சகி..” அவள் இப்போதும் விழிக்க, அவள் மடியில் குழந்தையை வைத்து அணைத்து பிடித்துக் கொள்ள செய்து, குழந்தை பாலருந்துவதற்கு அவளுக்கு உதவி செய்தான்..




குழந்தையோடு குழந்தையாக அமர்ந்திருந்தவளை ஆதரவாக தலை வருடி திரும்பிய போது வாசலில் அபிராமியும், அன்னமும் நின்றனர்..அபிராமி சிறு எரிச்சலோடு நிற்க, அன்னம் கண் கலங்கி நெகிழ்வாய் நின்றாள்..

“மாரியை கூப்பிட்டிருக்கலாமே குமரா..”

“எதற்கம்மா.. எங்கள் குழந்தை நாங்கள் தானே பார்த்துக் கொள்ள வேண்டும்..” சொன்னபடி பாலகுமரன் வெளியேறினான்..

“ம்.. அவன் குடித்த காபி கப்பை கூட எடுத்து போய் வைக்கமாட்டான்..” அதிருப்தியாய் முணுமுணுத்து போனாள் அபிராமி..

“சஸிம்மா இதெல்லாம் நீயே பார்க்கனுன்டா..”

“நானும் சேர்ந்துதானே மம்மா செய்தேன்..”

“இல்லைம்மா இதெல்லாம் பொண்ணுங்க நாம மட்டும்தான் செய்யனும்..”

“போங்கம்மா அப்படி ஒண்ணும் கிடையாது.. இது எங்க இரண்டு பேர் குழந்தையும்தானே.. இரண்டு பேரும் தான் பார்த்துக்கனும்..”
அன்னலட்சுமிக்கு மகளுக்கு எப்படி விளக்குவதென்று தெரியவில்லை..

“இதென்ன பெயர் ஆன்ட்டி சஸாக்கி.. இதன் அர்த்தம் என்ன..? இந்த பெயரை எதற்கு வைத்தீர்கள்..?” கார்த்திகா அன்னலட்சுமியிடம் கேட்டாள்..

“சஸாக்கி ஒரு ஜப்பானிய வீரப்பெண்.. அவள் கதையை கேட்டதுமே எனக்கு மகள் பிறந்தால் அந்த பெயரைத்தான் வைக்க வேண்டுமென முடிவு செய்து விட்டேன்..”

“ஓ.. அந்த பெண் நாட்டிற்காக போராடினாளா..?”

“அவள் தனக்குள்ளேயே போராடினாள்.. சஸாக்கியின் வாழ்க்கையை சொல்கிறேன் கேளுங்கள்..
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா வீசிய அணுகுண்டு சஸாக்கியின் வீட்டினருகே விழுந்தது.. அப்போது அவள் இரண்டு வயது குழந்தை.. குண்டின் வேகத்தில் சஸாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளி வீசப்பட்டாள்.. பிணங்களோடு பிணங்களாக கிடந்த அவளை இறந்து விட்டதாக நினைத்து அழுதபடி அவள் அம்மா தூக்க குழந்தையின் உடலில் துடிப்பு இருந்திருக்கிறது.. டாக்டரிடம் தூக்கி ஓட சஸாக்கி பிழைத்துக் கொண்டாள்.. காலிலும், காதுக்கு பின்னாலும் காயம்.. மற்றபடி ஆரோக்யமாக இருந்தாள்..
படுசுட்டி.. பள்ளியிலேயே வேகமாக ஓடக்கூடியவள்.. பின்னாளில் பெரிய ஓட்டப் பந்தய வீராங்கனையாக வரப் போகிறாளென அனைவரும் நினைத்தனர்.. அவளுக்கு பனிரெண்டு வயதிருக்கும் போது தனது கால்கள் வழுவிழந்து வருவதை அவள் உணர்ந்ததாள்.. பரிசோதனையில் அவளுக்கு அணுகுண்டின் கதிர்வீச்சால் லுக்கேமியே என்ற கேன்சர் பாதித்திருந்தது தெரிய வந்தது..

சஸாக்கி தனது வாழ்நாளை எண்ண ஆரம்பித்தாள்.. நாளுக்கு நாள் மெலிந்தாள்.. ஒரு நாள் அவளை பார்க்க வந்த அவளது தோழி சில பேப்பர்களை அவளுக்கு அழித்தாள்.. பேப்பரில் பொம்மை செய்யும் கலையை கற்றுத் தந்தாள்.. அந்த கலைக்கு பெயர் ஒரிகாமி.. இது போல் நூறு பொம்மைகளை செய்து விட்டால் சஸாக்கி உயிர் பிழைத்து விடுவாள் என சொன்னாள்.. சஸாக்கி அதை நம்பினாள்.. பொம்மைகளை செய்ய தொடங்கினாள்..

நாம் நினைத்தது நடக்க வேண்டுமென்றால் ராமஜெயம் எழுதுவோமே, அது போல் இந்த ஒரிகாமி பொம்மைகள் இப்போதும் ஜப்பானியர்களின் நம்பிக்கை.. சஸாக்கி பேப்பர்களை மடக்கி கொக்குகளை உருவாக்க ஆரம்பித்தாள்.. ஆரம்பத்தில் ஒரு நாளில் நிறைய கொக்குகளை உருவாக்கியவளால் உடல்நிலை மோசமடைய மோசமடைய நிறைய கொக்குகளை செய்ய முடியவில்லை..



படுத்தபடுக்கையாக இருந்த நிலையிலும் அவள் கொக்குகளை செய்து கொண்டிருந்தாள்.. ஆனால் கடவுளுக்கு கண்ணில்லை 644 கொக்குகளை அவள் செய்திருந்த போது மரணடைந்தாள்.. மீதி கொக்குகளை அவள் சார்பாக அவள் பெற்றோரே செய்தனர்.. அவற்றை அவள் உடலோடு சேர்த்து புதைத்தனர்..

சஸாக்கியின் கதை மெல்ல மெல்ல ஜப்பான் முழுவதும் பரவியது.. அவளது தோழர்கள் நிதி திரட்டி அவளுக்காக ஒரு வெண்கல சிலையை உருவாக்கினர்.. அணுக் கதிர்வீச்சில் இறந்த எத்தனையோ குழந்தைகளின் உருவாக சஸாக்கி பார்க்கப்பட்டாள்.. அவளது சிலை கையில் கொக்கோடு இருந்தது.. உலகம் அமைதியாக இருக்கட்டும் என்ற அவளது பீடத்தின் அடியில் எழுதப்பட்டது..

இப்போது ஹிரோஷிமா வருபவர்கள் யாரும் சஸாக்கியை பார்க்காமல் போவதில்லை.. அவளை காண வருபவர்கள் தவறாமல் கையில் பேப்பர் கொக்கு பொம்மையோடு வருவார்கள்.. தனது வேதனையான வாழ்நாளை வென்று விடுவேனென்ற நம்பிக்கையோடு கடந்த வீரப் பொண்ணாக ஜப்பானியர்கள் சஸாக்கியை பார்க்கின்றனர்.. அவளது கதை அங்கே பள்ளிகளில் பாடமாக உள்ளது.. ஜப்பானிய பெண்களுக்கு சஸாக்கி கதாநாயகி..”

சஸாக்கியின் கதை அனைவரையும் நெகிழ்த்தியது.. கார்த்திகா கண்கள் கலங்க அபிராமியின் மேல் சாய்ந்து கொள்ள, சஸாக்கி அசையாமல் அமர்ந்திருந்தாள்.. பாலகுமரன் அவள் முகத்தை உறுத்தபடி இருந்தான்..

“பேராடி வாழ்ந்தவள் ஆன்ட்டி அந்த சஸாக்கி.. உண்மையில் அவளுக்கு சல்யூட் வைக்கவேண்டும்.. அப்படித்தானே சகி..?” பாலகுமாரனுக்கு வேகமாக தலையாட்டினாள் சஸாக்கி..

பிறகு மெல்ல தன் இடத்திலிருந்து எழுந்து வந்து பாலகுமரன் அருகில் அமர்ந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்..

“எனக்கு பயமாக இருக்கிறது பாலா..”அனைவரின் முன்னிலையிலும் சஸாக்கி இப்படி செய்ய கார்த்திகா தன் பார்வையை திருப்பிக் கொள்ள, அன்னம் தலை குனிந்து கொள்ள, அபிராமி எரிச்சலாக பார்க்க, பாலகுமரன் தர்மசங்கடத்துடன் தன் மார்பில் சரணடைந்தவளை அணைக்கவா..? விலக்கவா..? என குழம்பினான்..



What’s your Reaction?
+1
17
+1
11
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-10

10 ‘‘ஆமாம், உன்னைக் கவிழ்ப்பதை தவிர எங்களுக்கு வேறு வேலை இல்லை பார். சரிதான் போடா.." வஜ்ரவேல் சொல்ல, அவன்…

9 hours ago

மருமகளை நம்பும் பாண்டியன்…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்பி ஓவராக இடம் கொடுத்து வைத்திருக்கிறார். இதனால் தங்கமயிலும்…

9 hours ago

விஜயாவுக்கு வந்த பிரச்சனை – சிறகடிக்க ஆசை 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய சண்டே ஸ்பெஷல்…

9 hours ago

திருநெல்வேலி ஸ்பெஷல் மொச்சை மசாலா

திருநெல்வேலி என்றாலே எல்லாருடைய நினைவுக்கும் முதலில் வருவது அல்வா தான். ஆனால், இங்கு  ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று மொச்சை மசாலா.…

9 hours ago

தென்காசிப் பட்டணம் திரைப்பார்வை

விஜயகாந்த் நடிப்பதாக இருந்த படத்தில் அவர் வெளியேறி சரத்குமார் நடித்த படம் ஆக, காமெடி கலந்த காதல் கதையுடன் வெளியாகி…

9 hours ago

சரணடைந்தேன் சகியே – 20

20       “நாம் கோவிலில் வைத்து திரும்பவும் தாலி கட்டிக் கொள்ளலாமா சகி..?” முணுமுணுப்பாய் அவள் தோள்களில்…

13 hours ago