11

“சாரிம்மா” மன்னிப்பு கோரலுடன்தான் பேச்சை ஆரம்பித்தான் பூரணசந்திரன்.

” திருமணத்தை தள்ளிப் போடுவது பெரிய விஷயம். அதை பெரியவர்கள் இல்லாமல் பேசக்கூடாது என்றுதான் அம்மாவையும் அழைத்து வந்தேன். வீட்டில் வைத்து நான் விவரம் சொன்ன போதெல்லாம் தலையை அசைத்து கேட்டுக் கொண்டவர்கள், இங்கு வந்த பிறகு இப்படி பேசுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை”

” ஏன் அப்படி பேசினார்கள்?”

” காரணம்… ரொம்பவும் அற்பமானது. அம்மாவிற்கு நான் சீக்கிரமே திருமணம் முடித்து சீக்கிரமே பேரப்….” பாதியிலேயே நிறுத்திக் கொண்டான்.

 அவன் சொல்ல வந்ததை புரிந்து கொண்ட தாரணி மவுனமாய் இருந்தாள். போனில் இரு முனையும் சத்தமின்றி இருக்க, ஒரு முழு நிமிடம்  மௌனத்தில் கழிந்த பின் மெல்ல அவன் அழைத்தான். “தாரணி”

 ஏதோ ஒன்று உள்ளுக்குள் அதிர, மெல்ல “ம்…”என்றாள்.

” நமது திருமணத்திற்கு பிறகு உன் படிப்பிற்கு என்னால் எந்த தொல்லையும் வராது. அதாவது கணவனாக… எந்த இடைஞ்சலும் இருக்காது. புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்” அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து திணறினாள்.

அவளுக்கு இன்னமும் தெளிவான விளக்கம் வேண்டியிருந்தது “என்ன சொல்ல வருகிறீர்கள்?” விளக்கம் கேட்கும் தனது கேள்வியில் எதற்காக இந்த சிணுக்கம்? தாரணிக்கு புரியவில்லை.

எதிர் முனையில் யோசிக்கும் 

பூரணசந்திரனும் பதில் சொல்ல தடுமாறுவது புரிந்தது. “வந்து… அம்மா ஆசைப்படுகிறார்களே… பேரக்குழந்தை… அது… இதுவென்று, அதற்கான ஏற்பாடுகள் நம்மிடையே வேண்டாம் என்கிறேன். புரிகிறதா?”

“ம்” ஒற்றை எழுத்து பதில் தாரணியிடமிருந்து.

“கணவன் மனைவிக்குள் செக்ஸை தவிர நிறைய விஷயங்கள் இருக்கிறது கண்ணு, முதலில் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒரு வருடத்திற்கு நண்பர்களாக பழகுவோம்.உன் படிப்பு முடியட்டும்.பிறகு கணவன் மனைவியாக வாழத் தொடங்கலாம்” மென் குரலில் பூரணசந்திரன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தாரணியின் காது வழியே அவள் உடல் முழுவதும் ஊடுருவி உள்ளத்துக்குள் சேகரமாயிற்று. ஏனோ கண்கள் கலங்கியது.

கரகரத்த குரலில் “தேங்க்ஸ்” என்றாள்.

“நண்பர்களுக்குள் நன்றி தேவையில்லை. போய் நிம்மதியாக தூங்கு கண்ணு. குட் நைட்” அவன் போனை வைத்த பிறகே அந்த அழைப்பை உணர்ந்தாள். அது என்ன கண்ணு!

“என்னவாம்?” முதுகுப்புறம் திடுமென  கேட்ட குரலுக்கு வெலவெலத்து திரும்பினாள். திவ்யா பரபரப்பான விழிகளுடன் நின்றிருந்தாள்.

 உடன் ஒரு குறும்பு தலை தூக்க கொஞ்சலாய் தலை சாய்த்து “அஸ்வினுக்கு என்னவாம்?” என்றாள் தாரணி தலை சாய்த்து. முகம் கறுக்க திவ்யா உள்ளே போய்விட்டாள்.

புன்னகையுடன் உள்ளே போக திரும்பிய தாரணிக்கு வீட்டின் பின்புறம் மெல்ல நடந்து கொண்டிருந்த கற்பகம் பார்வையில் பட்டாள். தாரணியும் அவளுடன் இணைந்து கொண்டாள். 

“என்ன பெரியம்மா ரொம்ப நாட்களாக இந்த வாக்கிங்கை விட்டு விட்டீர்களே?” 

“இன்று கொஞ்சம் மனது லேசாக தெரிந்தது. அதுதான் காற்றாட வந்தேன்மா,”

“திவ்யாவின் திருமணம் முடிவானதில் நிம்மதியாக உணர்கிறீர்களா பெரியம்மா?”

கற்பகம் நடையை நிறுத்தி தாரணியை உற்றுப் பார்த்தாள். “உன்னுடைய திருமணமும்தான். எனக்கு நீங்கள் இரண்டு பேரும் ஒன்றுதான் தாரு”



“ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லையே பெரியம்மா? அன்று திவ்யாவின் மாப்பிள்ளையை ஹோட்டலில் வைத்து பார்க்கும் வரை எனக்கு என் திருமண விஷயம் தெரியாது”

 கற்பகம் கண்களில்  அதிர்ச்சியுடன் பார்த்தாள் “என்னம்மா சொல்கிறாய்? உன்னிடம் திவ்யா திருமண விஷயம் பேசச் சொன்னது போல், திவ்யாவிடம் உன் திருமண விஷயம் பேச சொல்லி இருந்தேனே? அவள் விபரங்கள் சொல்லவில்லையா?” இது தாரணிக்கு அடுத்த அதிர்ச்சி.

“நானே கூட உன்னிடம் மாப்பிள்ளை எப்படி என்று கேட்டேனே! நீ சம்மதமாக தலையசைத்தாயே!”

தாரணிக்கு இப்போது புரிந்தது. ஒரு வருடம் கழித்து திருமணம் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்த மகளுக்கு பார்த்த மாப்பிள்ளை விஷயத்தை தங்கை மகளை விட்டு சொல்லச் சொன்னது போல், ஹோட்டல்காரனாக வந்த மாப்பிள்ளையை மகளை வைத்து பேச சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் தெளிவாக பேசிக்கொள்ளாததால் இந்த குழப்பம்.

“படித்து வேலை பார்க்கும் வரன் ஒன்று, படித்து தொழில் பார்க்கும் வரன் ஒன்று. இரண்டுமே நல்ல வரன்கள்தான் .இரண்டையுமே விட மனதில்லை. நம் பெண்கள் இருவருக்கும் முடித்து விடுவோமா? என்று உன் பெரியப்பா கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை” 

“ஆனாலும் படித்துக்கொண்டிருந்தவளுக்கு எதற்கு திருமணம் பெரியம்மா?”

கற்பகம் பெருமூச்சு விட்டாள். “உன் விஷயத்தில் நான் எப்போதுமே கொடுப்பதை வாங்கிக் கொள்பவள்தான். உனக்கு புரிகிறதா?”

தாரணி புரியாமல் தலையசைக்க, “நீ என் உடன் பிறந்த தங்கை மகள். என் பிறந்த வீட்டு சொந்தம். ஆண்கள் தங்கள் மனைவியின் பிறந்த வீட்டு சொந்தத்தை தன் குடும்பத்தோடு சேர்த்துக் கொள்ள மிகவும் யோசிப்பார்கள். உன் பெரியப்பாவின் உயர்ந்த குணத்தால் உன்னை தன் மகளாக ஏற்றுக் கொண்டார். ஆனாலும் சிறு சிறு விஷயங்களில் அவர் செய்யும் ஏதோ ஒரு செயல் என் மனதை நெருடிக் கொண்டேயிருக்கும். உனக்காக என எந்த விஷயத்திலும் அவரோடு வாதிட என்னால் முடியாது. நான் அறிந்தவரை திவ்யாவிற்கு குறைவாக என்றுமே அவர் உன்னை நடத்தியதில்லை. இந்த திருமண விஷயத்தையும் நான் அப்படித்தான் நம்பினேன். ஒரு வருடம் கழித்து இந்த வரன் காத்திருக்காது. இப்போதே முடித்து விடலாம் என்றார் ஒத்துக் கொண்டேன்”

தாரணிக்கு பெரியம்மாவின் நிலை புரிந்தது.கை நிறைய சம்பாதிக்கும் இந்தக் கால பெண்களே தங்கள் பொருளாதார சுதந்திரத்திற்கு கணவனின் கையையே எதிர்பார்த்திருக்கும் நிலைமையிருக்க  நெற்றியில் ஒட்டும் பொட்டிற்கு கூட கணவன் கையை எதிர்பார்த்து இருக்கும் போன தலைமுறை பெண்கள் நிலைமை! அதிலும் பெரியம்மா போல் பிறந்த வீட்டு உறவு ஒன்றை உடன் வைத்து வளர்த்து படிக்க வைத்து திருமணம் முடிக்கும் நிலைமையில் இருப்பவர்கள்!

 தாரணி பெரியம்மாவின் கையை கோர்த்துக்கொண்டு தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்” நீங்கள் எனக்காக நிறைய செய்திருக்கிறீர்கள் பெரியம்மா”

கற்பகம் நெகிழ்வோடு தங்கை மகளை அணைத்துக் கொண்டாள்.

“கண்ணு தெரியாத இருட்டுக்குள் நின்று கொண்டு ரெண்டு பேருக்கும் என்ன கொஞ்சல்?” சிடு சிடுத்தபடி வந்து நின்றாள் திவ்யா.

இப்படித்தான் அவர்கள் இருவரும் ஐந்து நிமிடம் தனித்திருந்தாலும் வந்துவிடுவாள்.கற்பகம் மகளை முறைத்துப் பார்க்க தாரணிக்கு சிரிப்புதான் வந்தது.

இந்த வீட்டில் பாதுகாப்பற்று உணர்வது நானா? இவளா? என்று தெரியவில்லையே! அவளுக்கு ஏனோ அப்போது, தான் மிகவும் பாதுகாப்பாக இருப்பது போல் தோன்றியது. இந்த எண்ணத்தால் புன்னகை தழும்பிய முகத்துடனேயே தன் திருமணத்தில் பங்கேற்றாள்.

முதல் நாள் வரவேற்பு முடிந்து மறுநாள் காலை திருமணம் என்றிருக்க, உறவினர்கள் எல்லோரும் தூக்கம், விளையாட்டு, பேச்சு என திருமண மண்டபம் கலகலப்பாக இருந்தது. திவ்யா அவள் தோழிகள் புடை சூழ அமர்ந்திருக்க, கற்பகம் தாரணியை கண்காட்டி தனியே அழைத்தாள்.



What’s your Reaction?
+1
44
+1
28
+1
3
+1
0
+1
3
+1
0
+1
1

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

41 mins ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

44 mins ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

46 mins ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

48 mins ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

5 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

5 hours ago