12

“இது என்ன லிப்ஸ்டிக் புது விதமான கலராக இருக்கிறதே?” அருகில் அமர்ந்து சீண்டிய விபீசனை நிமிர்ந்து முறைக்க முடியவில்லை வாணியால். 

முன்னால் யாக நெருப்பு எரிந்து கொண்டிருக்க ஐயர் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார்.

 சுற்றிலும் உறவினர்கள் கூட்டம்.வாணியின் திருமணம் நடந்து கொண்டிருந்தது.

முதல் நாள் இரவு மனதோடு உடலையும் காயப்படுத்தியவன், இன்று சிவந்து கிடக்கும் உதடுகளுக்கு காரணம் கேட்கிறான். அதுவும் இத்தனை பேரை சுற்றிலும் வைத்துக் கொண்டு… ராட்சசன்! பற்களை கடித்தாள்.

“அண்ணா கடைசி முறையாக நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள்” மாலையை சரி செய்யும் சாக்கில் குனிந்து விசாகன் பேசியது வாணிக்கு தெளிவாகவே கேட்டது.

“என்னடா பண்றது, என் தலையெழுத்து அனுபவித்துதானே ஆக வேண்டும்” சோகம் போல் மூக்குறுஞ்சிக் கொண்டான் விபீசன்.வருத்தமான உச்சுக் கொட்டலோடு நகர்ந்தான் விசாகன்.

 இவனுங்க அட்டூழியம் தாங்க முடியலையே… வாணிக்கு கழுத்தில் கனத்து கிடந்த மாலையை சுழற்றி வீசிவிட்டு எழுந்து ஓட வேண்டும் போலிருந்தது.

அப்போது ஐயர் ஏதோ மந்திரம் சொல்லி இருவர் கையையும் சேர்த்து வைத்து ஒரு பட்டுத் துணியால் கட்டினார். “சோளி முடிஞ்சது

. இனி என்னிடமிருந்து தப்பி போகவே முடியாது” சொன்னபடி விபீசன் அவள் கையை இறுக்கி பிடித்துக் கொண்டான்.

“தெரிந்தேதான் இந்த சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இங்கே பரிதாபப்பட வேண்டிய ஜீவன் நான்தான்” வாணியின் கண்கள் மேடையில் மிக அருகே நின்று கொண்டிருந்த மகேஸ்வரியின் மேல் படிந்தது.

முதல் நாள் அறையை விட்டு விபீசன் வெளியே தள்ள, தாங்கிக் கொண்டவள் மகேஸ்வரிதான்.”விபா என்ன இது ?”அதட்டினாள்.

“உன் மகள் வீட்டை விட்டு ஓடிப் போக பார்க்கிறாள். முகத்திலேயே நான்கு அறை விட்டேன். நாளை ஏதாவது தகராறு செய்தாலென்றால் நான் மனிதனாகவே இருக்க மாட்டேன். சொல்லி வை” கதவை பட்டென்று அடித்து மூடிக்கொண்டான்.

இப்போது மட்டும் இவன் மனிதனாகவாக இருக்கிறான்? “நான் இந்த கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்” விம்மினாள் வாணி.

 மகேஸ்வரி அவள் கைப்பற்றி அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் கூட்டிப் போனாள்.

“என் நிலைமை வேறு எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது அம்மு.இதை பேச தயங்கித்தான் இத்தனை நாட்களாக தள்ளிப் போட்டேன். ஆனால் இப்போது வேறு வழியின்றி என் வாழ்க்கை அசிங்கங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன். பிறகு நீயே முடிவெடு”

ஓரளவு தெரிந்த கதைதான் என்றாலும் அனுபவித்தவளே நேரிடையாக சொல்லும் போது… சிறு சிறு சம்பவங்களையும் உணர்வுகளையும் விவரிக்கும் போது, அதன் பலன் வேறுதான் அல்லவா ?மகேஸ்வரியின் கதை வாணியின் மனதை அடித்துப் போட்டு விட்டது.

“இப்போது எனக்கான  நேரம் அம்மு.இதனை நான் அனுபவிப்பது உன் கையில்தான் இருக்கிறது”சொன்ன  மகேஸ்வரியிடம் திருமண உறுதியை கொடுத்தாள் வாணி.

” விபா வாசலில் போலீஸ்” மாணிக்கவேல் குனிந்து மகனிடம் அறிவித்துவிட்டு வேகமாக வாசல் நோக்கி போனார்.விபீசனின் கை இன்னமும் இறுக்கமாக வாணியின் கையை நெறித்தது.

“அசையாதே அப்படியே உட்கார்” அவன் எச்சரிக்க அவசியமின்றி வேரோடியது போல் அப்படியே அமர்ந்திருந்தாள் வாணி.

“வாணிம்மா” கத்தியபடி தெய்வானை முன்னால் வர பின்னால் சுந்தர்ராமனுடன் இரு போலீஸ் அதிகாரிகள்.

“வாணி எழுந்திரும்மா. நாங்க வந்துட்டோம் பயப்படாதே வா “கை நீட்டியபடி இவளருகே வந்த தெய்வானை விபீசனின் பார்வையை கண்டதும் தீச்சுட்டது போல் கையை பின்னெடுத்துக் கொண்டாள். “எழுந்து வந்துடும்மா” தள்ளி நின்று மன்றாடலாய் வாணியை கேட்டாள்.

வாணி பிடித்து வைத்த சிலை போல் அப்படியே கண்களை கூட இமைக்காமல் அமர்ந்திருந்தாள்.

“மிஸ்டர் மாணிக்கவேல் உங்கள் மேல் சுந்தர்ராமன் சார் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். அவருடைய மகளை விருப்பமில்லாமல் கடத்தி வந்து திருமணம் செய்து  வைக்க முயற்சிக்கிறீர்கள்” அதிகாரமாய் குரல் உயர்த்தி பேசினார் காவல் அதிகாரி.

“கொடுக்கும் கம்ப்ளைன்ட்ஸ் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு வந்து விடுவீர்களா சார்? அதன் உண்மையை ஆராய மாட்டீர்களா?” மாணிக்கவேல் பேசிக் கொண்டிருக்கும்போதே  மனதிற்குள் ஒரு பயப்பந்து உருண்டு கொண்டுதான் இருந்தது.




 

இந்தப் பெண் என்ன செய்யப் போகிறாள் என்று தெரியவில்லையே? கவலையுடன் அவர் பார்வை வாணியின் மேல் தொட்டது.  அவரருகில் நின்றிருந்த பார்வதிக்குமே அதே தவிப்பு. 

பின்னால் நின்றிருந்த விசாகன் குனிந்து வாணியிடம் “சரியான நேரத்தில் காலை வாரி விட்டு விட மாட்டாயே?” கிண்டல் போல் கேட்டாலும் அவன் குரலிலும் நிறையவே கவலை இருந்தது.

“விசா சும்மா இருடா” விபீசன் தம்பியை அகற்றிக் கொண்டிருக்கும் போதே, எகத்தாளமாய் விசாகனை பார்த்தாள்.”உங்கள் குடும்பத்தின் நல்ல பெயர் என் கையில். நான் ஒழுங்காக பேச வேண்டுமென்றால்…”  

விசாகன் “சொல்லு… சொல்லு” பரபரத்தான். 

 ஓரக்கண்ணால் விபீசனை பார்க்க அவன் ஒருவகை சுவாரசியத்துடன் இவர்களை பார்த்திருந்தான்.ராட்சசன் இந்த நேரத்திலும் அடங்குகிறானா பார்! அண்ணனை வசை பாடியவள் தம்பிக்கு புருவம் உயர்த்தினாள். 

“பத்து தோப்புக்கரணம்,இருபது மன்னிப்பு “அதிகாரமாய் ஒற்றை விரலாட்டினாள். இஞ்சியை மென்று தின்னாற் போல் முகம் பெற்று விட்டவன் “சரி சரி” என்று விட்டு நிமிர்ந்து கொண்டான்.

“வாணி”தெய்வானையின் குரல் கொஞ்சம் அதட்டலோடு வந்தது. இங்கே எவ்வளவு முக்கியமான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது.,. இவளானால் அந்த ரெண்டு தடிப் பசங்களோடு ஏதோ இளித்துக் கொண்டிருக்கிறாளே…!

வாணி விபீசனின் கையோடு பிணைத்திருந்த தன் கையை உருவிக் கொள்ள முயல அதற்கு அனுமதிக்காது அவளோடு தானும் எழுந்து நின்றான் அவன். இப்படியே பேசு என்பதாக அவள் கைப்பற்றி அழுத்தி ஜாடை காட்டினான்.

“யார் மீது என்ன கம்ப்ளைண்ட் சார்?” 

சுந்தர்ராமன் வேகமாக மகள் முன்னால் வந்தார்.

“வாணிம்மா அவர்கள் அப்பாவை பற்றி சொல்லும் எதையும் நம்ப வேண்டாம். எல்லாமே பொய். நீ உடனே வா நம் வீட்டிற்கு போகலாம்”

“எல்லாமே பொய்யாப்பா?” மகளின் வேல் பார்வையை தாங்க முடியாது தலை குனிந்தார் சுந்தர்ராமன்.

“நீங்கள் செய்தது பெரிய பாவம்பா. இது நாளை நம் தலைமுறையையே வாழ விடாது”

“இல்லைம்மா அவர்கள் பொய்யாக சொல்லியிருப்பார்கள். அப்பாவுடன் வா, உண்மையை சொல்கிறேன்”

“போதும்பா எனக்கு எல்லாமே… உங்கள் காதலில் ஆரம்பித்து  பிள்ளை பிறந்த்து வரை எல்லாமே எனக்கு தெரியும்.அதில் எந்த பொய்யும் இல்லை என்பதை நானறிவேன். என்னிடம் நல்லவனாக காட்டிக் கொள்ள மட்டும் தயவுசெய்து முயற்சிக்காதீர்கள்.உங்கள் மேல் கொஞ்ச நஞ்சம் இருக்கும் பாசத்தையும் கலைத்து விடாதீர்கள்”

நொந்த குரலில் பேசியவள் போலீஸ் அதிகாரி பக்கம் திரும்பினாள் “மன்னிக்க வேண்டும் சார். நான் சுந்தர்ராமமாமா, மகேஸ்வரி தம்பதிகளின் மகளான அமுதவாணி, மாணிக்கவேல்-  பார்வதியின் மகனான விபீசனை என் சுய உணர்வோடு எந்த வற்புறுத்தலுமின்றி என் மனமார திருமணம் செய்து கொள்ள போகிறேன். மாணிக்கவேல் என் அம்மா மகேஸ்வரியின் அண்ணன், என் தாய் மாமா. இந்த திருமணம் எங்கள் உறவை மேலும் வளர்க்கும் என்பதால் இது எனக்கு மிகவும் பிடித்த திருமணம். மற்றவர்கள் ஏதாவது சொல்லியிருந்தால் அதனை நம்ப வேண்டாம். எங்கள் திருமணத்தில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் செய்து சாப்பிட்டு போகும்படி கேட்டுக்கொள்கிறேன்”

சுற்றிலும் எந்த சத்தமுமின்றி நிசப்தமாக இருக்க கணீரென்ற குரலில் பேசி முடித்தாள் வாணி.

போலீஸ் அதிகாரி சுந்தர்ராமனுக்கும் அவர் குடும்பத்திற்கும் நன்கு பரிச்சயமானவர்.”உங்கள் அம்மா மகேஸ்வரி என்றால் இவர்…?” அந்த காவல் அதிகாரியின் பார்வை கொஞ்சம் இளக்காரமாக தெய்வானை பக்கம் திரும்ப அவள் கூனி குறுகினாள். 

“ஓஹோ கதை அப்படி போகிறதா?” அவரின் முணுமுணுப்பு தெளிவாக கேட்க இன்னமும் குறுகினாள் தெய்வானை.

” பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதுக்கு?” உடன் வந்தவர் பதில் முணுமுணுத்தார்.

” ஒரு பழமொழி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி வேண்டுமாம்…அப்படி…”

திருமணத்தை நடத்துமாறு சொல்லிவிட்டு முன்னால் நின்று இருவரும் பேசிக்கொண்டது அப்படியே காதில் விழ தெய்வானையின் மனம் சுக்கு நூறாகியது.

நிறமும், உயரமும் இன்னமும் குழையாத உடல்கட்டுமாக மேடையில் நின்றிருந்த மகேஸ்வரியின் மேல் பார்வையை போட்டாள். குள்ளமாய் கருப்பாய் நின்றிருந்த தன்னையும் பெருமூச்சுடன் ஒப்பிட்டு பார்த்தவளின் பார்வை சுந்தர்ராமன் மேல் விழ கடுத்தது.

சுந்தர்ராமனும் மகேஸ்வரியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். பார்வையில் காதல் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.




What’s your Reaction?
+1
31
+1
26
+1
4
+1
2
+1
0
+1
1
+1
1

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

7 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

7 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

7 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

7 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

11 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

11 hours ago