Categories: Serial Stories

ஓ.. வசந்தராஜா..!-4

4

“அக்கா அவசரப்பட்டு நீயே எதையாவது நினைத்துக் கொண்டு உளறாதே” அஸ்வினி அதட்டினாள். ஏனோ அவளுக்கு எரிச்சலாக வந்தது.

 கோபமாக தங்கையைப் பார்த்தாள் சைந்தவி. “எங்கள் காதலில் உனக்கு பொறாமை. உனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நாங்கள் காதலிக்காமல் இருக்க முடியுமா?”

“இ… இருவரும் காதலிக்கிறீர்களா என்ன ?”அஸ்வினி ஒருவித படபடப்புடன் கேட்க ” ம்…சீக்கிரமே அவனும் என்னை காதலிப்பான்”என்றவள் அதன் பிறகு தங்கையிடம் சாதாரணமாக பேசுவதைக் கூட தவிர்க்க தொடங்கினாள்.

” அக்கா உன்னுடைய யூடியூப் சேனலுக்கு பேட்டி தருவதற்கே இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் ஆள் அவன். அவனையெல்லாம் காதல் கீதல் என்று நம்பாதே”

 அஸ்வினியின் பேச்சுக்களை கேட்கும் நிலைமையில் சைந்தவி இல்லை. அவள் சதா ஏதோ ஓர் கனவுலகத்தில் மிதந்து கொண்டே இருந்தாள்.அஸ்வினிக்கும் ஃபைனல் இயர் செமஸ்டர் ஆரம்பித்து விட அவள் தனது படிப்பில் கவனமானாள்.கேம்பஸ்  இன்டர்வியூவில் புகழ்பெற்ற ஐடி கம்பெனி ஒன்றின் பெங்களூர் கிளையில் அவளுக்கு முன்பே வேலை கிடைத்திருந்தது.

அந்த கம்பெனியிலிருந்து ஆபர் லெட்டரை எதிர்பார்த்திருந்தாள். உங்கள் மூன்று பேர் தொல்லை இல்லாமல் சீக்கிரமே பெங்களூருக்கு ஓடி விடுவேனே என்று வீட்டில் வம்பிழுத்துக் கொண்டிருந்தாள். மறுநாள் மூவரும் வேலைக்கு கிளம்பிச் சென்று விட ஒரு மாதமாக பரீட்சை பரபரப்பில் நேரத்திற்கு சாப்பிடாமல் தூங்காமல் இருந்தவள்,அன்று எட்டு மணி வரை தூங்கி எழுந்து நிதானமாக தலை குளித்து முடியை காய வைத்துக் கொண்டிருந்தாள். 

அவளது போன் ஒலித்தது “குட் மார்னிங் மேடம்,ராஜ் ஹோட்டல்ஸில் இருந்து அபர்ணா பேசுகிறேன். நாளை எங்கள் எம்.டி யுடன் உங்களுக்கு மீட்டிங் ஏற்பாடு செய்திருக்கிறோம்.காலை 10:30 மணிக்கு வந்து விடுங்கள்” ஃபோனில் ஒரு பெண் பேசினாள்.

” மன்னிக்கவும் நான் ஏதும் அப்பாயிண்ட்மெண்ட் கேட்கவில்லையே?”

” இல்லை மேடம் நாங்களாக ஃபிக்ஸ் செய்திருக்கிறோம். மீட்டிங்கிற்கு வந்து விடுங்கள்”

” சாரி புரியவில்லை.என்ன மீட்டிங்?” 

“நீங்கள் ராஜ் ஹோட்டல்ஸின் சீப் எக்ஸிக்யூட்டிவ் ஆபிஸராக நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள். அதற்கான கலந்துரையாடல்தான் இது” அந்த பெண் பேசிக்கொண்டே செல்ல அஸ்வினி திகைத்தாள்.

“ஹலோ மேடம் கொஞ்சம் நிறுத்துங்கள். உங்கள் கம்பெனிக்கு நான் எப்பொழுது அப்ளை செய்தேன்? எப்பொழுது எனக்கு வேலை கிடைத்தது?”



” இந்த விஷயங்களெல்லாம் எங்களுக்கு தெரியாது மேடம். எங்கள் எம்.டி சாரின் டைரக்ட் அப்பாயிண்ட்மெண்ட் நீங்கள். நாளை சரியாக வந்து விடுங்கள்” அந்த அபர்ணா பேசிவிட்டு போனை வைக்கவே போய் விட்டாள்.

” நோ” என்று சிறு கூச்சலுடன் அவளை நிறுத்தினாள் அஸ்வினி. “நாளை நிச்சயம் உங்கள் எம்டியுடனான மீட்டிங்கிற்கு நான் வரப்போவதில்லை. ஏனென்றால் இந்த வேலை செய்வதில் எனக்கு சம்மதம் இல்லை. என் விருப்பமின்றி யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது. இதை இப்படியே உங்கள் எம்டி யிடம் சொல்லி விடுங்கள்” நிதானமாக தெளிவாக பேசிவிட்டு போனை கட் செய்த பிறகும் அஸ்வினியினுள் கோபம் கனன்று கொன்றுதான் இருந்தது.

 எவ்வளவு தைரியம்? அப்படி என்ன அவனுடைய வேலையை நான் மறுக்க மாட்டேன் என்ற நிச்சயம்! இருக்கட்டும் இந்த அக்கா வரட்டும் உன் ஆதர்ஷ  எம் டியின் லட்சணத்தை பார் என்று அவளிடமே சொல்கிறேன் மனதிற்குள் பொறுமியபடி இருந்தாள். 

பத்து நிமிடங்களில் அவளது போன் மீண்டும் ஒலிக்க “ஹலோ யார் பேசுவது?” என்றாள் கொஞ்சம் நக்கலான குரலில்.

” வசந்த் ராஜ்” என்றது எதிர்முனை அழுத்தமாக.

” எந்த வசந்த ராஜ், எனக்கு தெரியாதே…” என்றாள் வேண்டுமென்றே. அவனது குரலை கேட்டவுடன் புரிந்து கொண்டாலும், முன்பே போனில் ட்ரு காலர் மூலமாக அவனை தெரிந்து கொண்டாலும், உன்னை தெரியாதே எனும் பாவனை செய்தாள்.

 சில நொடிகள் மௌனமாய் இருந்த எதிர்மனை அவளுக்கு உற்சாகத்தை கொடுத்தது.”ஹலோ சார் உங்களை சரியாக அறிமுகப்படுத்திக் கொள்கிறீர்களா?” நக்கலாக கேட்டாள்.

” ராஜ் ஹோட்டல்ஸ் உரிமையாளன் வசந்த் ராஜ்” அறிவித்தபோது அவன் குரலில் பெருமிதம் நிறையவே இருந்தது.

” சாரி அப்படி யாரையும் எனக்கு தெரியாது”

” அஸ்வினி…” அவன் அதட்ட, அட பார்றா  தனக்குள் வியந்தவள் “எப்பொழுதும் வேலைக்கு ஆள் எடுக்கும் முன் அவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் சார். நீங்கள் தூக்கி எறியும் ரொட்டி துண்டை பொறுக்கும் ஆட்கள் இங்கு யாரும் இல்லை” என்றாள்.

 மீண்டும் எதிர்முனையில் அமைதி. பிறகு லேசாக தொண்டையை செறுமியபடி அவன் சொன்ன சாரி அஸ்வினியின் கோபத்தை கொஞ்சம் குறைத்தது. “படிப்பு முடிந்த உடனேயே நல்ல வேலை என்றால் நீ மறுக்க மாட்டாய் என்று நினைத்தேன். கூடவே இது உனக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கும் என்றுதான்…”

” சரிதான் சார் நீங்கள் எனக்கு கொடுத்தது மிகப்பெரிய சர்ப்ரைஸ்தான். அது எப்படி இந்த வேலைக்கு போய் என்னை செலக்ட் செய்தார் என்று இப்போது வரை வியந்து கொண்டே இருக்கிறேன்.ம்… உங்களுடைய கவனத்திற்கு இன்னும் ஒரு விஷயம் சொல்லவா… எனக்கு படித்துக் கொண்டிருக்கும் போதே கேம்பஸில் பெங்களூரில் வேலை கிடைத்து விட்டது. ஒரு வருடம் இந்தியாவில் வேலை.பிறகு 5 வருடங்கள் அமெரிக்காவில் வேலை. இதில் நீங்கள் கொடுத்த சர்ப்ரைஸ் எனக்கு சாதாரணமாக போய்விட்டது சார்” நக்கலாக பேசி முடித்தாள்.

 எதிர்மனையில் வசந்த் மூச்சை இழுத்து விடுவது பாம்பின் சீறல் போல் கேட்டது. “சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்” போனை கட் செய்து விட்டான். அஸ்வினியின் கொதித்த மனது இப்போதுதான் சற்று ஆறினாற் போல் இருந்தது. இவனுக்கு எவ்வளவு தைரியம்!என் எதிர்காலத்தை பற்றி பெரிய பெரிய கனவுகள் கண்டு கொண்டிருக்கும் என்னை இந்த ஹோட்டலுக்குள் முடக்க பார்ப்பான்!

இவனுக்கெல்லாம் இப்போது கொடுத்தது பற்றாது… இன்னும் நிறைய கொடுக்க வேண்டும். 

அஸ்வினி சைந்தவிக்காக காத்துக் கொண்டிருந்தாள். உனது மஹா பெரிய முதலாளியை நான் இன்று அலறடித்து ஓட வைத்தேன் தெரியுமா, என்று பெருமை பீத்திக்கொள்ள எண்ணினாள். ஆனால் அன்று சைந்தவி மிக சோர்வுடன் திரும்பி வந்தாள். ” நான் வேலையை விட்டு விடப் போகிறேன்” என்று அறிவித்தாள்.

“என்ன சைது இது?” சரிதா சலிப்பாக பெரிய மகளை பார்க்க சுரேந்தர் “சரிதான் பழைய குருவி கதவைத் திறடியா?” என்றார் எரிச்சலாக.

” அப்பா என் நிலைமை புரியாமல் பேசாதீர்கள்” தந்தையிடம் சிடுசிடுத்தாள்.

” ஏன் இப்படி செய்கிறாய் சைது, இந்த வேலை கிடைத்த பிறகு தான் சில நல்ல வரன்கள் வர ஆரம்பித்திருக்கிறது. சும்மா வீட்டில் உட்கார்ந்து கொண்டு youtube வீடியோ போட்டுக் கொண்டிருந்தால் நல்ல மாப்பிள்ளை எப்படி அமையும் சொல்?” ஆதங்கத்துடன் கேட்டாள் சரிதா.

” வேண்டாம் அப்படி எந்த மாப்பிள்ளையும் வேண்டாம், எனக்கு கல்யாணமே வேண்டாம்” கத்திவிட்டு சைந்தவி பெட்ரூமிற்குள் போய் கதவை பூட்டி கொண்டாள்.

சரிதாவும் சுரேந்தரும் தங்களுக்குள் கவலையாக பேசிக்கொள்ள ஆரம்பிக்க, அஸ்வினியின் மனது நெருடியது. ஒரு வேளை நான் அந்த வசந்திடம் அப்படி பேசியதால்தான் அக்காவை இப்படி அழ வைக்கிறானா?

 அஸ்வினி எவ்வளவோ முயன்றும் சைந்தவியுடன் அடுத்த வாரம் முழுவதும் சுமூகமாக பேச முடியவில்லை. பெரும்பாலும் அறைக்குள்ளேயே பூட்டிக்கொண்டிருப்பவள் நேருக்கு நேராக பார்க்கும் பொழுதுகளில் முகத்தை திருப்பிக் கொண்டு போய்விடுவாள்.வீட்டிற்குள் யாராலும் அவளுடன் பேச முடியவில்லை.

அவளாக சமாதானமாகி வரட்டும் விட்டுவிடுங்கள் என்று சுரேந்திரன் சொல்லிவிட அனைவரும் அவரவர் வேலையை பார்க்க துவங்கினர். 

ஒரு வாரம் சென்றபின் அன்று காலையிலேயே சைந்தவி வேலைக்கு கிளம்பி விட்டாள். அப்போதுதான் தூங்கி எழுந்த அஸ்வினி அலுவலக தோற்றத்தில் கிளம்பி நின்ற தமக்கையை பார்த்ததும் முகம் மலர்ந்தாள். “வாவ் சூப்பர்கா நல்ல முடிவு. கண்டதையும் நினைத்து மனதை குழப்பிக் கொள்ளாமல் உன் வேலையை மட்டும் பார். இப்போதெல்லாம் பெண்களுக்கு வேலை மட்டும்தான் முழு பாதுகாப்பு”

 உற்சாகமாக பேசிய தங்கையின் முன் வந்து நின்று அவளை உற்றுப் பார்த்தாள் சைந்தவி. “எனக்கு ஒரு உதவி செய்வாயா அஸ்ஸு?”

” நிச்சயம்கா நீ எப்போதும் சோர்வாகாமல் இதுபோல் உற்சாகமாக இருக்க வேண்டும். அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்”



” ப்ராமிஸ்” தங்கையிடம் கைநீட்டி சத்தியம் கேட்டாள். தயங்காமல் தமக்கைக்கு உறுதி கொடுத்தாள் அஸ்வினி.

” அந்த வசந்த் என் காதலை மறுத்து விட்டான். நான் அவனை சும்மா விடமாட்டேன் அஸ்ஸு. அவனை பழி வாங்குவதற்கு நீதான் எனக்கு உதவ வேண்டும். மற்ற விவரங்களை வேலைக்கு போய்விட்டு வந்து பேசுகிறேன்”

 சைந்தவி வேலைக்கு போய் சில மணி நேரங்கள் கடந்து விட்ட பின்னும் அவள் பேசிவிட்டுப் போன சொற்களின் வீரியம்  அடுப்பு கங்குகளாய் அஸ்வினியினுள் கனன்று கொண்டிருந்தன. காதலை மறுத்து விட்டானா? இருக்கும்… அவன் அப்படி செய்யக் கூடியவன்தான். ஆனால் அதற்காக இவள் என்ன செய்யப் போகிறாளாம்? இதென்ன பழிவாங்கல் என்ற பிதற்றல்?

 சைந்தவியின் நோக்கம் புரியாமல் அஸ்வினி மண்டையை பிய்த்துக்கொண்டிருந்தாள். அன்று இரவு பெற்றோர் தூங்கியதும் தங்கள் அறைக்கதவை இறுக்கமாக பூட்டிய சைந்தவி தனது திட்டத்தை தங்கையிடம் விவரித்தாள்.

” இப்போதெல்லாம் அவனிடம் வேலை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை அஸ்ஸு. சீக்கிரமே வேலையை விடத்தான் போகிறேன். அதற்கு முன் அவனை கொஞ்சமேனும் கலங்க வைக்காமல் வரமாட்டேன்”

” அக்கா அவன் வேண்டாம் என்றானானால் சந்தோஷப்படு. இவனை விட சிறப்பானவன் உனக்கு கணவனாக வருவான். அதை விட்டுவிட்டு இது என்ன பழிவாங்கல் அது இதுவென்று…”

 “பழி வாங்கத்தான் வேண்டும் அஸ்ஸு. என் காதலைச் சொன்னதும் அவன் என்னை எப்படி பார்த்தான் தெரியுமா? நீயா…உன்னை போய் நானா…முதலில் என்  பக்கத்தில் வரும் தகுதி உனக்கு இருக்கிறதா? என்பது போல் ஒரு கீழான பார்வை. வாய் மட்டும் சாரி மேடம் எனக்கு அது போல் ஐடியா இல்லை என்று சொல்கிறது. ஆனால் அந்தப் பார்வை…” குரல் தளுதளுக்க சைந்தவி தலை குனிந்தாள்.

 அஸ்வினிக்கு புரிந்தது. போனில் அவனிடம் பேசினாளே… உன்னுடைய ஹோட்டலுக்கு நான் வேலைக்கு வர வேண்டுமா!என் ரேஞ்ச் தெரியுமா உனக்கு? நானெல்லாம் உன்னிடத்தில் கால் கூட வைக்க மாட்டேன் என்பது போல் அர்த்தம் தொனிக்கும் விதத்தில் பேசினாளே… அதுபோல் சைந்தவியிடம் அவன் பேசியிருக்கிறான்.

 தன்மானமுள்ள எந்த மனிதரையும் இது போன்ற பேச்சுக்கள் மிக காயப்படுத்தும். இதோ பழிவாங்கத் துடிக்கும் நாகமாய் நிற்கிறாளே சைந்தவி, இதுபோலத்தான் அவனும் உணர்ந்திருப்பானா…? இப்படி எண்ணம் போனதும் அஸ்வினி உள்ளுக்குள் திடுக்கிட்டாள். ஒருவேளை என்னுடைய பேச்சுக்கு அவனும் இதுபோல் பழிவாங்க நினைப்பானோ? அதன் முதல் கட்டம்தான் அக்காவை இப்படி பேசியதோ? அடுத்து என்னை பழிவாங்க வேண்டுமானால் அதற்கு என்ன செய்வான்?

 தலைக்குள் புழுக்கள் நெளிவது போல் ஒரு அவஸ்தை உண்டானது அஸ்வினிக்கு. கொஞ்சம் நாவடக்கத்துடன் இருந்திருக்க வேண்டுமோ? அவள் தன் செயலை எண்ணி கவலை பட்டுக் கொண்டிருந்தபோது.. “நீ எனக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாய் அஸ்ஸு…” என்று நினைவுறுத்தினாள் சைந்தவி.



What’s your Reaction?
+1
30
+1
18
+1
4
+1
1
+1
0
+1
0
+1
3

Radha

View Comments

Recent Posts

பாக்யா குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி கோபி இனிமே…

5 seconds ago

பாலியல் தொழிலாளிகள் சூழலை பேசும் வெப் சீரிஸ்: ஹீராமண்டி எப்படி? ஓடிடி திரை அலசல்

பாலியல் தொழில் நடக்கும் புகழ்பெற்ற ஹீராமண்டியின் ஷாஹி மஹாலின் தலைவியான மல்லிகாஜானை வென்று அந்த இடத்தைப் பிடிக்க அவரது சகோதரியின்…

2 mins ago

பேரிச்சம்பழம் அல்வா

ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கும் பேரீச்சை பழங்களில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்துக்கள் உள்ளன. பேரீச்சை பழங்கள் துரிதமான…

4 mins ago

உடலென நான் உயிரென நீ-12

12 " என்னாயிற்று பேபி ...? "  தன் சட்டையை இறுக்கி பிடித்திருந்த அவள் கைகளை பார்த்தபடி கேட்டான் கணநாதன்…

4 hours ago

வேண்டுதல் நிறைவேற 9 வாரம் முருகன் வழிபாடு

முருகா! எத்தனை காலமாக இந்த வேண்டுதலை உன்னிடம் வைக்கின்றேன். ஆனால் என்னுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏன், என்று எல்லோரும்…

4 hours ago

நறுமணப் பொருட்களை நாமே எப்படி உருவாக்குவது?

நாம் அனைவரும் நம்மை நறுமணத்துடன் வைத்துக்கொள்ள பல ஸ்பிரே வகைகளை உடலில் அடித்து கொள்வோம். அது பொதுவாக ஒரு நாள்…

4 hours ago