அருள்தரும் சக்தி பீடங்கள் – 51 காமரூபம் காமாக்யா தேவி

அம்மனின் சக்தி பீட வரிசையில், அசாம் மாநிலத்தில் நிலாச்சல் குன்றில் உள்ள காமாக்யா கோயில், யோனி பீடம் என்றும் காமகிரி பீடம் என்றும் போற்றப்படுகிறது. குவஹாத்தி நகரில் இருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள நிலாச்சல் குன்றில் காளி, தாரா, லலிதா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலா தேவி ஆகிய தச மகா வித்யா தேவிகளின் கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் இக்கோயில் பிரதானமாகக் கருதப்படுகிறது.



காமரூப் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் மன்மதனை சிவபெருமான் எரித்துள்ளார். அதன் பிறகு, மன்மதன் தனது சுயரூபம் பெற்றதும் விஸ்வகர்மாவின் உதவியுடன் இக்கோயிலைக் கட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.

தல வரலாறு

சக்தி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டு, அவை புனிதமாகப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. சக்தி தேவியின் யோனிப்பகுதி விழுந்த இடமாக காமாக்யா போற்றப்பட்டு வணங்கப்படுகிறது. தாட்சாயணியின் யோனி விழுந்த மலை நீல நிறமாக மாறியதால் இந்த மலைக்கு நீலாச்சல் மலை என்ற பெயர் ஏற்பட்டது.

முற்காலத்தில் இப்பகுதி காமரூபம், ஹரிஷேத்ரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மகாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல பர்வதம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.



இரண்யாட்சகன் என்ற அசுரன், பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்தான். அப்போது திருமால் வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை மீட்டுவந்தார். அதே அவதாரத்தில் பூதேவியை மணம் புரிந்தார். அவர்களின் மகனான நரகாசுரன் பிரக்ஜோதிஷபுரத்துக்கு அரசனாக்கப்பட்டான். இருப்பினும், பின்னாட்களில் நரகாசுரன் உலக மக்களுக்கு இன்னல்கள் புரிவான் என்றும், அதனால் அவன் கொல்லப்படுவான் என்றும் பூதேவியை எச்சரித்தார் திருமால். அப்படியானால் நரகாசுரன் தன் கைகளால்தான் கொல்லப்பட வேண்டும் என்று பூதேவி, திருமாலிடம் விண்ணப்பித்தார். அவ்வண்ணமே பூதேவிக்கு வரம் அளித்துவிட்டு வைகுந்தம் புறப்பட்டார் திருமால்.

திருமாலிடம் இருந்தும், சக்தி தேவியின் மாயா வடிவமான காமாக்யா தேவியிடம் இருந்தும் பல வரங்களைப் பெற்றான் நரகாசுரன். நிலாச்சல் மலை அடிவாரத்தில் நான்கு பக்கங்களிலும் சொர்க்கபுரி வாயில், அனுமன் வாயில், புலி வாயில், சிங்க வாயில் ஆகிய நான்கு நுழைவு வாயில்களை அவன் அமைத்திருந்தான். அனைத்துலகையும் அடிமைப்படுத்தி, பல கொடுமைகள் புரிந்துவந்தான். இப்படியே பல யுகங்கள் கடந்தன.

கிருஷ்ணாவதார காலகட்டத்தில், நரகாசுரனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள், கிருஷ்ணரிடம் விண்ணப்பித்தனர். அதன்படி தனது மனைவி சத்யபாமாவுடன் போருக்குப் புறப்பட்டார் கிருஷ்ணர். போர் நடந்த நிலையில், நரகாசுரனின் வரத்தால், கிருஷ்ணரால் அவனை மாய்க்க இயலவில்லை. வேறு வழியில்லாமல் சத்யபாமா, வில்லை தன் கையில் எடுத்து, கிருஷ்ணர் கொடுத்த அஸ்திரத்தை பயன்படுத்தி, நரகாசுரனை வீழ்த்தினார். பூமாதேவி அம்சமான சத்யபாமா, நரகாசுரன் தன் மகன்தான் என்பதை அறியாமல் அவனை மாய்த்துவிட்டார். இச்சம்பவங்கள் அனைத்தும் நடைபெற்ற இடம், நிலாச்சல் மலை என்று அறியப்படுகிறது. நரகாசுரனுக்கு பல வரங்கள் அளித்த காமாக்யா தேவி, அவன் மீதுள்ள கோபத்தில் இந்த இடத்தைவிட்டு வெளியேறி, பின்னர் அவனது மரணத்துக்குப் பிறகு, மீண்டும் இங்கு வந்து கோயில் கொண்டாள் என்பதாக ஐதீகம்.



கோயில் அமைப்பும் சிறப்பும்

பத்தாம் நூற்றாண்டில் அசாம் மன்னர்களால் சீரமைக்கப்பட்ட இக்கோயில், 1665-ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. வெளிப்பிரகாரத்தைத் தாண்டி உள்ளே குகை போன்ற அமைப்பில் 10 படிகள் இறங்கிச் சென்றால், பாதாளத்தில் உள்ள கருவறையில் ஓர் எண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் காமாக்யா அருள்பாலிக்கிறார். சிறிய மலைப்பாறை போன்ற மேடையை (மேரு வடிவம்) சுற்றி தண்ணீர் போய்க்கொண்டிருக்கிறது. தண்ணீருக்கு அடியில் யோனி பீடம் அமைந்துள்ளது. பண்டாக்களின் உதவியுடன் பக்தர்கள், பீடத்தின் மீது கை வைத்து தேவியை வணங்குவது வழக்கம்.



மேடையின் கீழ் ஓடும் தண்ணீர் ‘சௌபாக்யகுண்ட்’ என்று அழைக்கப்படுகிறது. குகையில் இருந்து வெளியேறும்போது, உலோகத்தால் செய்யப்பட்ட காமேஸ்வர – காமேஸ்வரி சிலைகள், எட்டுவித அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.

சுயம்புவாகத் தோன்றிய யோனி வடிவப் பாறையே தேவியாக வழிபடப்படுகிறது. அதன் அருகில் இருந்து இயற்கையாக ஊறி வரும் நீர், அபிஷேகத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பில்லி, சூன்யம் போன்றவற்றால் பாதிப்பு அடைந்தவர்கள், வசதிகள் இருந்தும் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தேவியை வழிபடுகின்றனர்.

திருவிழாக்கள்

இத்தலத்தில் அம்புபச்சி மேளா, துர்கா பூஜா, மானஷா பூஜா சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது வாரத்தில் அம்புபச்சி மேளா கொண்டாடப்படுகிறது. அந்நாட்களில் நாகா சாதுக்கள் ஆயிரக்கணக்கில் இங்கு வந்திருந்து காமாக்யா தேவியை வழிபடுவது வழக்கம்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

2 hours ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

2 hours ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

2 hours ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

5 hours ago