Categories: Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 13

13

 

 


கதகதப்பும் , ஈரமுமாக நெற்றியில் உணர்ந்த இத உணர்வு , கண்கள் ,நாசி , கன்னம் எனத் தொடர்ந்து இதழை அடைய முயன்ற போது , அதற்கு மேலும் தூங்குவது போல் நடிக்க முடியாமல் அவனை தள்ளி விட்டு எழுந்து அமர்ந்தாள் சுடரொளி .

” ஏன் சுடர் ? ” ஆனந்தபாலனின் குரலில் நிறைய ஏக்கமும் , எதிர்பார்ப்பும் .

” இல்லை…வேண்டாம் “

” ஏன்டா ? நாம் கணவன் – மனைவி .பத்மினியின் புண்ணியத்தில் இந்த விசயம் இங்கே எல்லோருக்கும் பரவியும்  விட்டது .இன்னமும் என்ன ? எத்தனை நாட்கள்தான் உன்னைப் பார்த்து பார்த்து ஏங்கிக் கொண்டே இருப்பது ? ” தனது கணவன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்திக் கொள்வதில் ஆனந்தபாலனுக்கு சிறிதும் வெட்கமில்லை .

ஆனால் அதில் சுடரொளிக்கு ஆட்சேபனை இருந்தது . ” இல்லை பாலா .நாம் முன்பு செய்த அதே தவறு .நம்மை நாம் முழுவதும் தெரிந்து கொள்ளாமல் , வெறுமனே காதலை மட்டுமே வைத்துக் கொண்டு ஒன்று சேர்வது ம்ஹூம்…அது அந்த இளமைக்காலத்தில் சரியாக இருந்திருக்கலாம் .இப்போது நாம் பொறுப்பான பெற்றோர் .இருவர் மனதிலும் ஒருவருக்கொருவர் சிறு உறுத்தலுமில்லாத போதுதான் இனி நம் இணைவு இருக்க வேண்டும் “

” வெறும் காதலா ? உனக்கு நமது காதல் அவ்வளவு சாதாரணமாக தெரிகிறதா ? ” ஆனந்தபாலனின் குரல் சூடேறியது .

” உங்கள் பெற்றோர்களும் , என் பெற்றோர்களும் இல்லாமல் யாரோ இரு நண்பர்களுடன் முறையற்று நடந்த நம் திருமணத்தின் காரணம் அந்தக் கண்மூடித்தனமான காதல்தானே ? “

” முறையற்று நடந்ததா ? மிக நல்ல முகூர்த்தமென்று வேதியர்கள் குறித்த நேரத்தில் , மந்திரங்கள் ஒலிக்க சாஸ்திரப்படி நடந்த திருமணம் நம்முடையது “

” அப்படித்தான் அன்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டோம் .அடுத்த வீட்டு சிவகாமி அக்கா வீட்டு திருமணத்திற்கு குறித்த முகூர்தத்திலேயே நமது திருமணமும் என்று அந்த கல்யாண மண்டபத்திற்கு அருகிலிருந்த கோவிலிலேயே அதே கெட்டி மேளம் , மந்திரங்களை நமக்காக கொண்டு திருமணம் செய்து கொண்டோம் .அப்போதெல்லாம் என் அம்மா , அப்பா நினைவு எப்படி எனக்கு வராமல் போனது ? இன்று என் அம்மா இல்லை .அப்பா படுக்கையில் கிடக்கிறார் .இதற்கெல்லாம் எனது கண் மூடித்தனமான காதல்தானே காரணம் ? “



” மிகவும் சிக்கலாக யோசிக்கிறாய் சுடர் .என் பக்கத்து நியாயத்தை நான் சொல்லி விடுகிறேன் . என் அம்மாவுடன் நான் தங்க ஆரம்பித்த சில நாட்களிலேயே நான் யார் என்று மீடியாக்களும் , பத்திரிக்கைகளும் ஆராய ஆரம்பித்தன. ஒரு பத்திரிக்கை என்னையும், அம்மாவையும் தவறாக …” மேலே பேச முடியாமல் நிறுத்தி தொண்டையை செருமிக் கொண்டு தொடர்ந்தான் .

” அந்த செய்தியை அம்மாவிடம் காட்டினேன் . அவர்கள் இந்த பீல்டில் இது போன்ற வதந்திகளெல்லாம் சகஜம் .இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்லப் பழகு …சொல்லிவிட்டு அவர்கள் கடந்து சென்று விட்டார்கள் .என்னால் முடியவில்லை. அப்போதுதான் அவர்களை பிரிந்து உங்கள் வீட்டிற்கு தங்க வந்தேன் .மனம் வெறுத்து வந்தவனுக்கு மறுவாழ்வு கொடுத்தது நீ சொன்னாயே வெறுமனே என்று அதே காதல்தான் .சிறு வயதிலிருந்தே யாரும் இல்லாமலேயே வளர்ந்தவனுக்குள் எனக்கென நீ என்ற எண்ணமே பெருத்த பெருமிதத்தை கொடுத்தது.எனது படிப்பு முடிந்ததும் விரைவிலேயே உன்னை அம்மாவிற்கு அறிமுகப்படுத்த வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன் .”

”  அம்மாவிற்கு உடம்பு சரியில்லையென்ற தகவல் எனக்கு வர , அவர்களைப் பார்க்க சென்றிருந்தேன் .அவர்களை விட்டு நான் பிரிந்து வந்த சில நாட்களிலேயே அம்மா மிகவும் தளர்ந்திருந்தார்கள் .என்னிடம் அவர்கள் சொத்துக்கள் விபரம் பேசினார்கள் .நான் வழக்கமாக அவர்களிடம் கேட்கும் கேள்வியை கேட்டேன் .என் அப்பா யார் ? இதற்கு பதில் சொல்லாமல் கடப்பவர்கள் அன்று பதில் சொன்னார்கள் .அப்பாவை போய் பார்க்கும்படி சொன்னார்கள் .நான் அப்பாவை பார்க்க விமானம் ஏறினேன் .”

” விமானம் ஏறினீர்களென்றால்…? “

” ஆம் சுடர் .என் அப்பா இருந்தது லண்டனில் .ஒரு பட ஷூட்டிங்கிற்காக லண்டன் சென்றிருந்த போது என் அப்பாவும் , அம்மாவும் காதலித்து திருமணமும் செய்து கொண்டிருந்திருக்கிறார்கள் .ஆறு மாதங்களே இருந்த அவர்களது திருமண வாழ்வு , அப்பா ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பது தெரிய வந்த போது முடிவுக்கு வந்தது. அதன் பிறகு அம்மா வயிற்றில் இருந்த என்னை பெற்றெடுத்து நம்பிக்கையானவர்களிடம் வளர்க்க கொடுத்துவிட்டு , தனது ஏமாற்றத்தை மாற்ற , மீண்டும் தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் .”



” அப்பாவை நான் லண்டனில் அவரது குடும்பத்தினருக்கு மத்தியில் மகிழ்ச்சியாக கண்டேன் .அமலாதேவியா …? அப்படி யாரையும் எனக்குத் தெரியாதே ? நீ யாரப்பா ? என்று என்னை …அவரையே உருவத்தில் வரித்துப் பிறந்திருந்த என்னைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக கேட்டார் .என் அம்மா இத்தனை நாட்களாக அப்பாவை சந்திக்க விடாமல் இருந்ததன் காரணம் இப்போது புரிந்தது. மூச்சு முட்டுவது போலிருக்க லண்டனிலிருந்து ஓடி அம்மாவிடம் வந்தேன் .ஆனால் …எல்லாமே கால தாமதம் .அம்மா என்னை விட்டுப் போய்விட்டார்கள் .யாரோ ஒரு மூன்றாம் மனிதர் கையால் கொள்ளி வாங்கிக் கொண்டு அஸ்தியாகியும் விட்டார்கள் .அன்றுதான் மனம் கலங்கி உன்னிடம் ஓடி வந்தேன் சுடர் .நான் அநாதையில்லை என்று எனக்கு நானே கூவிக் கொண்டு உன்னை மனைவியாக்கிக் கொண்டேன் .”

” நம் திருமணம் முடிந்த உடனேயே குழந்தையும் வேண்டுமென்ற தீவிரத்துடன் அன்றே உன்னை என்னவளாக்கிக் கொண்டேன் “

சுடரொளியின் முகத்தில் லேசான அவமானம் வந்தது. திருமணத்திற்கு போயிருந்தவர்கள் திரும்புவதற்குள் அவசரம் அவசரமாக இவர்களது கூடல் .வேகமும் , வேட்கையுமாக இவளை நெருங்கியவனை அன்று மறுக்க வேண்டுமென்ற எண்ணம் அவளிடம் சிறிதும் இல்லை .மோகப் புன்னகையுடன் அவளைத் தொட்டவனிடம் எளிதாக அடைக்கலமாகி விட்டாள் .

” உங்கள் தேவைகளையெல்லாம் நிறைவேற்றி விட்டு திடுமென காணாமல் போய்விட்டீர்கள் ” குற்றம் சாட்டினாள் .

” உன் அப்பா , அம்மாவிடம் உன்னை திருமணம் செய்ய கேட்டு வந்ததை மறந்து பேசுகிறாய் சுடர் “

” முன்பே திருமணம் செய்து விட்டு , மீண்டும் பெண் கேட்டு வருவீர்களோ ? “

” ஆனால் அந்த திருமணம் அவர்களுக்கு தெரியாதே ? அதனை அனைவருக்கும் தெரியப்படுத்தத்தான் முயன்றேன் .ஆனால் உன் அப்பா …”

” அப்பா பேசியது அன்று தவறாக தெரிந்தது .ஆனால் இன்று யோசித்தால் …பாசமாக வளர்த்த ஒரே பெண்ணை ஊர் ,பெயர் தெரியாத ஒரு அநாதைக்கு திருமணம் முடிக்க யார்தான் சம்மதிப்பார்கள் ? ” தன் போக்கில் பேசி விட்டவள் ஆனந்தபாலனின் அடிபட்ட முகத்தை பார்த்ததும் நிறுத்திக் கொண்டாள் .

” நான் அநாதையில்லை சுடர் . அன்றைய நிலையில் என் குடும்ப பின்னணியை விளக்கும் நிலைமையில் இல்லை .அவ்வளவுதான் .ஆனால் அதற்காக உன் தந்தையிடம் நான் பட்ட அவமானம் அப்பப்பா …” விழிகளை இறுக மூடிக் கொண்டான் .

” அம்மா செய்த தொழில் சர்ச்சைக்குரியதாக இருந்திருக்கலாம்.ஆனால் நான் அவர்களுக்கு திருமணம் முடித்து முறையாக பிறந்த பையன்தான் .உன் அப்பா சொன்னது போல் யாருக்கு பிறந்தவனோ என தெரியாத பிள்ளை கிடையாது ” ஆனந்தபாலனின் கண்கள் ரத்தமாக சிவந்திருக்க இதழ்கள் நடுங்கின.

தன்னையறியாமல் அவன் கை மேல் ஆதரவாக கை வைத்தாள் சுடரொளி .அச்சிறு செய்கையிலேயே துவண்டு அவள் தோளில் சரிந்து விட்டான் .



” அம்மாவுடைய சொத்துக்கள் சம்பந்தமாக நிறைய பிரச்சனைகள் வந்துவிட்டன சுடர் .அம்மாவின் ஆடிட்டர் அவற்றையெல்லாம் நானே அனுபவிக்க வேண்டுமென்பதே அவர்களது இறுதி ஆசையென எனை வற்புறுத்தினார் .எனக்கும் அப்போது இந்த சொத்துக்கள் தேவைப்பட்டன ,எனது மாமனாரை சமாதானப்படுத்த …அதனால் வாரிசற்ற சொத்துக்கள் என கையகப்படுத்த முயன்ற சிலரிடமிருந்து சொத்துக்களை காக்க நான் சென்னைக்குப் போய் அங்கேயே தங்க வேண்டியதாகிப் போனது “

” நான் திரும்ப வந்த போது உங்கள் குடும்பத்தையே காணவில்லை .சொந்த ஊருக்குப் போயிருப்பதாக விசாரித்து தெரிந்து அந்த கிராமத்திற்கு வந்தேன் .அங்கேதான் உனது கருத்தரிப்பையும் , பிரசவத்தையும் அறிந்தேன் .யாரோ கிராமத்து மருத்துவச்சியை வைத்து , வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதை கேள்விப்பட்டு பதறி ஓடி வந்த போது , உன் சித்தியும் ,சித்தப்பாவும் துணியால் மூடிய குழந்தையை என்னிடம் கொடுத்தார்கள் .”

” குழுந்தை இறந்து பிறந்திருப்பதாகவும் , கடைசி காரியங்களை செய்து புதைத்து விடுமாறும் சொன்னார்கள்.நான் ஏதோ நம்பிக்கையில் குழந்தையை காப்பாற்றும் வேகத்தில் உன்னை மறந்து குழந்தையோடு பெரிய மருத்துவமனைக்கு ஓடினேன் .நம் அமிர்தனை காப்பாற்ற முழுதாக ஒரு மாதம் ஆகிவிட்டது .பிறகே உன் நினைவு வந்து மீண்டும் வந்த போது

உனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இனி உன் வாழ்க்கையில் தலையிட வேண்டாமென்றும் உன் அப்பா என்னை விரட்டி விட்டார் .நான் மனதை மரத்து போகச் செய்து விட்டு இங்கு வந்துவிட்டேன் “

ஆனந்தபாலன் சொல்லி முடித்து பெருமூச்சொன்றை விட , கடந்து வந்த காலங்களில் அவன் மீண்டுமொரு முறை வாழ்ந்து வந்திருப்பதை உணர்ந்து மெல்ல அவன் தலை வருடினாள் சுடரொளி .

” அப்புறம் மீத விபரம் நீதான் சொல்ல வேண்டும் சுடர் ” அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.

” சொல்கிறேன் .நாளை பேசலாம்.இப்போது தூங்குங்கள்  ” உடன் சமாதானமடைந்து தூங்கி விட்டவனை பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் .இதோ வலது புறம் படுத்திருக்கும் ஆனந்தனுக்கும் இடது புறம் படுத்திருக்கும் அமிர்தனுக்கும் அதிக வித்தியாசமில்லை என நினைத்துக் கொண்டு தானும் படுத்துக் கொண்டாள் .



What’s your Reaction?
+1
66
+1
34
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

சிறுதானியத்தில் ஐஸ்கிரீம் : ஸ்ரீ மில்லட் ஐஸ்கிரீம்ஸ் சாதனை படைத்தது எவ்வாறு?..!

பிரபு வேணுகோபால், சசிதர், அருண் பிரகாஷ், பார்கவ் ஆகிய நான்கு பேரும் நல்ல நண்பர்கள். வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் தரும்…

2 hours ago

ரோகினி கொடுத்த வார்னிங் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின்…

2 hours ago

நடிகை மனோரமா-6

தமிழ் திரையுலகில் வாழ்ந்த‌ காலமெல்லாம் ஒரு நடிகன் நிலைப்பது அரிது, நடிகை நிலைப்பது அதை விட அரிது , வெகு…

4 hours ago

ஃப்ரெஷ் ஜூஸ் குடிப்பதால் பிரச்சினைகள் ஏற்படுமா..?ஏன்?

பழச்சாறுகளை நீங்கள் அருந்தியதும் உங்களுடைய ரத்தத்தில் உடனடியாக சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும். இது நீங்கள் சோடா குடிப்பதற்கு சமம். இதனால்…

4 hours ago

ஆண்களே! உங்களுக்கு ஹீரோ மாதிரி அழகான சருமம் வேணுமா?

பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒரு கனவாகும். நாள் முழுவதும் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும்…

4 hours ago

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை (சித்ரா) இறப்பிற்கு காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த நெருங்கிய தோழி

விஜே சித்ரா தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று வாய்ப்புக்காக பல நேரங்களில் போராடி இருக்கிறார். ஆனால் அப்பொழுதெல்லாம்…

4 hours ago