37

 ” அக்கா நீங்க கொஞ்ச நேரம் எழுந்து வெளியே போங்க .இந்த வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் ”  காலையில் கீழே இறங்கி வந்த கமலினியின் காதுகளில் கனகத்தின் பாசமான இந்தக் குரல் விழுந்தது .புவனாவைதான் அவள் இப்படி அன்பொழுக  அடுப்படியை  விட்டு வெளியே போகுமாறு  சொல்லிக்கொண்டிருந்தாள்.

இதே புவனாவைத்தான் சில நாட்களுக்கு முன்பு வரை அடுப்படியை விட்டு வெளியே வராதே என்று வைத்திருந்தாள் இவள் …என்று கனகத்தை காட்டி சூடம் அணைத்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அடுப்படியை விட்டு வெளியே வந்து புவனா ஹால் சோபாவில் அமர்ந்தாள். டிவியை போட்டுக்கொண்டாள். ஏதோ ஒரு நிகழ்ச்சியை பார்க்கத் துவங்கினாள் . ஓய்வெடுக்கும் மகாராணி தோரணையில் சோபாவில் அமர்ந்து இருந்த அம்மாவை மாடிப் படியில் நின்றபடியே ரசித்துப் பார்த்தாள் கமலினி.

இப்படித்தான் அவள் அம்மாவைப் பார்க்க விரும்பினாள். இதோ அப்படியே நடக்கிறது. இதன் காரணம் விஸ்வேஸ்வரன் தானே . திறமை அப்பாவினுடையது என்றாலும் அதனைக் கண்டறிந்து பயன்படுத்த முன் வந்தவன் அவன் தானே ?  அதனால் அல்லவா இப்போது அவர்களது நிலைமை இங்கே தலைகீழாக மாறி இருக்கிறது.

” அக்கா வேலைக்கு கிளம்பி விட்டீர்களா ?இவ்வளவு காலையிலேயே வா ? “. பவ்வியமாய் கேட்டபடி வந்து நின்றாள் சங்கவி

இந்த உறவு அழைப்பை  அவள் வாயிலிருந்து வாங்குவதற்கு பெரும் பாடுபட வேண்டும் .வேலைக்காரி மகள் தானே நீ என்பது போல் எப்போதும் ஒரு அலட்சிய பார்வை பார்ப்பாள். வீட்டின் மாறிய நிலைமைகளில் சங்கவி எப்பவும் கொடுக்கும் இந்த மரியாதையும் ஒன்று .

” இன்று ஒரு எக்ஸ்ட்ரா வேலை இருக்கிறது சங்கவி. அதற்காகத் தான் கிளம்பிகொண்டிருக்கிறேன் ” 

“. இன்று என்ன டிரஸ் ? என்ன நகை அக்கா ?.” ஆர்வம் நயாகராவாய் அவள் குரலில் வழிந்தது.  ஸ்வர்ணகமலம் மேல் சங்கவிக்கு உள்ள பிரேமையை முயன்றும் கமலினியால் மாற்ற முடியவில்லை.

” வேலைக்காரிகளின் உடைகளையும் நகைகளையும் அவர்கள் தேர்ந்தெடுக்க முடியாது சங்கவி .அவை முதலாளிகளின் உத்தரவுகள். கொடுப்பதை அணிந்து நிற்பது தான் பொம்மைகளின் வேலை ” நாசூக்காக நிலைமையை முடிந்தவரை சங்கவிக்கு விளக்கி விட்டு நகர்ந்தாள் .சங்கவி கொஞ்சம் யோசனையுடன் நின்றாள்.

முன்பெல்லாம் நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என நிற்பாள். இப்போது கொஞ்சம் கமலினி யின் பேச்சை காது கொடுத்து கேட்பதால் சங்கவியை அவளது கற்பனை உலகத்திலிருந்து வெளிக்கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கை கமலினிக்கு இருந்தது.

” இவ்வளவு காலையில் எங்கே கிளம்பி விட்டாய் ? ”  கேட்ட தாய்க்கு பதிலாக குனிந்து அவள் பாதங்களை தொட்டாள் கமலினி.



 “ஒரு புதிய வேலை அம்மா . நன்றாக நடக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் சொல்லுங்கள் ”  புவனா மனநெகிழ்வுடன் மகளின் தலைத் தொட்டு ஆசிர்வதித்தாள்.

” வெற்றி கிடைக்கட்டும் செல்லம் ” உண்மையிலேயே தான் வென்று விட்டதாகவே உணர்ந்தாள் கமலினி

ஓங்கி உயர்ந்து அண்ணாந்து பார்க்கும் அளவு இருந்த அந்த இரும்புக் கதவு உள்ளே ஒரு குளிர் பரப்பியது .அக்கால கோட்டைச்சுவரை நினைவுபடுத்தின அந்த வீட்டின் சுற்றுச்சுவர்கள். இவ்வளவு பெரிய வீடா …இல்லை இது பங்களா .பிரமிப்போடு பார்த்தபடி நின்ற கமலினியின்  மனதில் பாரிஜாததின் மீது   புதுவித மரியாதை எழுந்தது. இத்தனை ஆடம்பரங்களையும் வசதிகளையும் விட்டுவிட்டுச் செல்ல துணிகிறாள் . பணத்திற்கு மதிப்பளிக்காமல் அன்பை கொண்டாடும் அவளை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாட தோன்றியது.  பாரிஜாத திற்காக நிச்சயமாக இதனை செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதி அவளுள் எழுந்தது.

உள்ளே விடுவார்களா…? அந்த நம்பிக்கை இல்லை. ஹேண்ட் பேக்கில் இருந்து ஸ்வர்ண கமலம் கடையின் ஊழியர் அடையாள அட்டையை கையில் எடுத்து வைத்துக் கொண்டாள் .இதனை காட்டி உள்ளே நுழைய வேண்டியதுதான் என்ற முடிவோடு கதவின் அருகே போக கதவின் ஓரமாக இருந்த சிறு விண்டோ திறக்கப்பட்டு வாட்ச்மேனின் முகம் தெரிந்தது.

” யாரை பாக்கணும் ? ” அதட்டினான் அவன் .என்ன சொல்வது கமலினியுனுள் குழப்பம்.

அதேநேரம் வெண்ணை மேல் கத்தி போல் அந்த பெரிய கதவு சத்தமின்றி மெல்ல உட்பக்கமாக உருண்டு விரியத்  தொடங்கியது .எப்படி கதவை திறந்தான் ? ஆச்சரியத்துடன் வாட்ச்மேனை பார்க்க அவனே திறந்து கொண்டிருந்த கதவை வியப்பாய் பார்த்துவிட்டு உள்ளே திரும்பி பார்த்தான் . அங்கே நீளமாய் உள்ளே போன பார்வர்டு பிளாக் கல் பதிக்கப்பட்ட நீள் பாதையில் தூரத்தில் விஸ்வேஸ்வரன் வேக   நடையுடன்  வந்து கொண்டிருந்தான்.

ரிமோட் மூலம் அவன் தான் கதவை திறந்திருப்பான்  என ஊகித்தாள் கமலினி. எப்படி என்னை பார்த்தான் …? யோசனையோடு அவனைப் பார்த்தபடி நின்ற போது தூரத்தில் வந்து கொண்டிருந்தவன் கையை ஆட்டி அவளை உள்ளே வரும்படி அழைத்தான்.

வாட்ச்மேன் பணிவு காட்டி ஒதுங்கி நிற்க கமலினி உள்ளே நுழைந்தாள். அவள் பின்னே கதவு மீண்டும் மூடிக் கொண்டது . விஸ்வேஸ்வரனை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

” என்னை எப்படிப் பார்த்தீர்கள் ? ” 

” கேமரா ” கையிலிருந்த போனை  காட்டினான் . ” போன் மூலமாகவே கதவையும் திறக்கலாம் ”  கூடுதல் விளக்கம் அளித்தான்.

” என்னை உள்ளே விடாமல் விரட்டி விடுவீர்கள் என்று நினைத்தேன் ” 

விஸ்வேஸ்வரன் பதில் சொல்லவில்லை .மெல்ல நடந்தான்.  கமலினி அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். கால் முட்டியை பட்டுக்கொண்டிருந்த  சார்ட்ஸும்  கையில்லாத பனியனும்  அணிந்திருந்தான்.  முடிகள் சுருண்டிருந்த அவனது கால்களில்  தெறித்திருந்த ஈரத்தையும் சகதியையும் ஆச்சரியமாய் பார்த்தவள் ”  என்ன செய்துகொண்டிருந்தீர்கள் ? ”  என்றாள்.

” கார்டனிங் எனது பொழுதுபோக்கு. மைன்ட் ரிலாக்சேஷன்  கூட ” 

” கழுத்தை பிடித்து நெறிப்பதும் ,கையில் கிடைப்பதை எறிந்து உடைப்பதுமாக இருப்பவரின் பொழுதுபோக்கு செடி வளர்ப்பது என்றால் நம்ப முடியவில்லை ” கிண்டல் வழிந்தது கமலினி யிடம்.

விஸ்வேஸ்வரன் பதில் சொல்லவில்லை .மௌனமாகவே நடந்தான் 

”  என்ன விஷயம் ? ” 

 எனக்கு நீ பதில் சொன்னாயா  என்ன ?  உனக்கு நான் ஏன் சொல்ல வேண்டும் ? கமலினி  இதழ்களை இறுக்கி கொண்டாள். அவள் மனதிற்குள் முன்தினம் அவனுடன் பேசிய பொழுதுகள் .

மேல் சட்டையற்ற வெற்றுடலுடன் தேக்கு மரத்தை நினைவுறுத்தியபடி  தன் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஸ்வேஸ்வரன் ஏனோ கமலினியின் மனதினுள் ஒரு ரசவாத்த்தை தோற்றுவித்துக் கொண்டிருந்தான் .முத்து முத்தான அவனது வியர்வை துளிகளை தன் சுடிதார் ஷாலால் துடைக்கும் உந்துதல் வந்த்து அவளுக்கு .தனது ஷாலாலேயே தன் கைகளை சுற்றி கட்டுப்படுத்திக் கொண்டாள் 

” விஸ்வா ” 

அவன் திரும்பவில்லை 



” ஏன் இந்த வேலையில் இவ்வளவு வேகம் ? ” 

பதிலில்லை .நிமிர்ந்து பார்க்கவும் இலலை .

” உங்களிடம் பேச வேண்டும் விஸ்வா ” 

செதுக்கிய தேக்கஞ்சிலை போல் அவன் நிலையில் சிறிதும் மாற்றமில்லை .அவனது கண்களும் , விரல்களும் தங்கள் பணியை நிறுத்தவில்லை .கமலினி அவனுக்கு அருகாமை வந்தாள்.

வேலை செய்து கொண்டிருந்த விரலுக்கு இணை போக்காக அசைந்து கொண்டிருந்த புஜங்கள் நீர் மேல் தெரியும் சிறு பாறையை நினைவூட்டின .தோள்களின் மேல் நீர் முத்துக்கள் .பாறைக்கு வியர்க்குமா …? இதழ்கள் மென்னகை புரிய  தனை மீறிய ஆவலுடன் சிறைப்பிடித்திருந்த தன் கரத்தை தானே விடுவித்து ஒரு விரல் நீட்டி அவன் தோள் தொட்டாள்.வியர்வை துளிகளை வருடித் துடைத்தாள் .

விஸ்வேஸ்வரனின் விரல்கள் கணம் தயங்கி தம் செயலை நிறுத்தி பின் மீண்டும் தொடங்கின .கொஞ்சமாவது அசைகிறானா பார் …கல்லுளிமங்கன் .தன் ஸ்பரிசம் அவனிடம் ஏற்படுத்தாத விளைவில் ஏமாற்றமுற்ற கமலினி மீண்டும் தன் விரல்களை சிறை செய்து கொண்டாள் .

” உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் 

என் மனதை நான் பேசி விடுகிறேன் . பாரிஜாதம் மேடமும் உங்கள் அண்ணனும் நான்கு வருடங்கள் சந்தோசமாகத்தான் வாழ்ந்து இருக்கிறார்கள் .ஏமாற்றங்கள் தராத நிறைவான வாழ்க்கை என்று இப்போதும் உங்கள் அண்ணனோடான வாழ்வை மேடம் சிலாகிக்கிறார்கள் .அவர்கள் இல்லறத்திற்கு சாட்சியாக சௌபர்ணிகா கிடைக்கவும் வாழ்வின் நிறைவை அடைந்து விட்டதாகவே நினைத்திருக்கிறார்கள் .பேரிடியாக உங்கள் அண்ணனின் மரணம் வரும் வரை உலகத்திலேயே தன்னையே மிக சந்தோசமான பெண்ணாக எண்ணியிருந்திருக்கிறார்கள் .” 

” ஆனால் …விபத்து வடிவில் வந்த காலன் உங்கள் அண்ணனின் உயிரோடு அணணியின் வாழ்வையும் பிடுங்கி சென்று விட்டான் .இனி தன் வாழ்வு சௌபர்ணிகாவுக்காக மட்டுமே என தன்னையே அவர்கள் தேற்றிக் கொண்டு தன் வாழ்வின் வறண்ட பகுதியான இரண்டு வருடங்களை தள்ளிய பிறகுதான் சந்தானபாரதியை சந்தித்திருக்கிறார்கள் .இனி நீளப் போகும் தன் வாழ்விற்கு மட்டுமின்றி உருவாகப் போகும் மகளின் வாழ்விற்கும் உரிமையோடான ஓர் ஆணின் வழித்துணை அவசியமென உணர்ந்திருக்கிறார்கள் . சந்தானபாரதியும் ,சௌபர்ணிகாவும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வார்கள் என்பதில் மேடத்திற்கு எந்த சந்தேகமும் இல்லை .ஏனெனில் சந்தானபாரதி் சௌபர்ணிகா மூலமாகத்தான் அவளுடைய ஆசிரியராக , அவளது நலம் விரும்பியாகத்தான் பாரிஜாத்த்திற்கு அறிமுகமானவர் ” 



” அவருக்கு தன் மகள் மேலுள்ள அக்கறை தாண்டிய பாசத்தை உணர்ந்த பாரிஜாதம் ஆச்சரியமான போது , சந்தானபாரதி் சௌபர்ணிகாவை தனக்கு தத்து கொடுத்து விடும்படி கேட்டார் . தாய் , தந்தை , அக்கா , தங்கை என தனது பெரிய குடும்பம் மொத்தத்தையும் ஒரு விபத்தில் மொத்தமாக பறி கொடுத்து விட்டு தனக்கென ஒரு வாழ்வு வேண்டுமெனும் பிரக்ஞையின்றி வெறுமையில் வாழ்ந்து கொண்டிருந்தவர் அவர் .அவரது வறண்ட வாழ்விற்கு ஊற்றாக சௌபர்ணிகா அவருக்கு தோன்றினாள் . அவளை தனக்கு தந்து விடும்படி அவர் கேட்க , பாரிஜாதம் அவளே தனது வாழ்வின் ஆதாரமென விளக்க , இப்போது சந்தானபாரதியின் மனதிற்குள் தாய் , மகள் இருவரையும் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் எண்ணம் வந்திருந்த்து .” 

” இந்த வேண்டுதலில் பாரிஜாதம் மேடத்திற்கும் எந்த ஆட்சேபமும் இல்லை .அவர்கள் இருவரும் சௌபர்ணிகாவுடனான தங்களது புது வாழ்விற்காக காத்திருக்கிறார்கள் .பாச சிறை போட்டு வைத்திருக்கும் உங்களிடமிருந்து விடுபடும் நாளை மேடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .” 

நீங்கள் பாரிஜாத்த்தை சிறை வைத்திருக்கிறீர்கள் என சொல்லாமல் சொன்னாள் கமலினி .இந்த வார்த்தையாடல் அவனது கோபத்தை தூண்டும் என அவள் அறிவாள் .மீண்டும் அவள் கழுத்து நெறிபடலாம் .படட்டும் …அதில் அவளுக்கு கவலை இல்லை .கலகம் பிறந்தால்தானே வழி்பிறக்கும் .

விஸ்வேஸ்வரனின் ஆவேசத்தை எதிர்பார்த்து அவள் காத்திருக்க , அவனோ குனிந்த தலையை நிமிர்த்தவில்லை .அட …நம்ம விஸ்வாவா இது …? ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள் .விஸ்வாவின் விரல்கள் தங்க தகட்டில் விளையாடிக் கொண்டிருக்க , நீண்டு கிடந்த அவனது சந்தன கரங்களில் நீளமாய் ஓடிய பச்சை நரம்புகள் திமிறி துடித்துக் கொண்டிருப்பது கமலினியின் கண்களில் பட்டது .அவனது கொதித்துக் கொண்டிருக்கும் ரத்தத்தை அறிவித்துக் கொண்டிருந்தன அந் நரம்புகள் .

இவ்வளவு கோபம் கொண்டிருப்பவனின் இந்த அமைதி கமலினிக்குள் சந்தோசத்தை கொடுத்தது .அவனது வழக்கமான வேகத்தை விடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறான் என்ற அர்த்தம் தானே இதற்கு ? இதம் சூழ்ந்த மனதினுள் சிறு குறும்பு தோன்றியது அவளுக்கு 

தினவாய் , திமிராய் மணிக்கட்டு முதல் புஜம் வரை ஓடிக் கொண்டிருந்த அவனது பச்சை ரத்த நாளங்களின் மேல் தன்ஆட்காட்டி விரல் நுனியை  ஓட்டினாள்  அவள் .” நான் சொன்னதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் விஸ்வா .உங்கள் அண்ணியின் வயது வெறும் முப்பத்தியிரண்டுதான் . கணவனற்ற  ஒரு வெற்று வாழ்வு அவர்கள் வாழ வேண்டுமென என்ன தலையெழுத்து ?  எவ்வளவோ வசதிகளையும் , வாய்ப்புகளையும் வழங்கினாலும் சௌபர்ணிகாவிற்கு நீங்கள் சித்தப்பாதானே …? அப்பாவாக முடியாதே .தந்தையற்றே இருக்க வேண்டுமென அந்தக் குழந்தைக்கு என்ன தலையெழுத்து ? யோசியுங்கள் விஸ்வா .ப்ளீஸ் ….” தேனில் ஊறிய சொற்கள் மென் ஸ்பரிசத்தோடு விஸ்வேஸ்வரனை நோக்கி வீசப்பட்டது .மன்மதன் கை கணையை ஒத்திருந்தன அவை .

அவன் …விஸ்வேஸ்வரன் கமலினி மேல் நிறைய காதலும் , பாசமும்  வைத்திருப்பவன் .உள்ளம் கவர்ந்தவளின் தொடுகையோடான மயக்கு சொற்கள் அவன் மனதை மாற்றத்தானே வேண்டும் …? 

ஆனால் …



What’s your Reaction?
+1
24
+1
12
+1
1
+1
2
+1
2
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

View Comments

Recent Posts

நண்பரை திருமணம் செய்த சன்டிவி சீரியல் நடிகை

சன்டிவியின் வானத்தைப்போல சீரியலில் துளசி கேரக்டரில் நடித்து வந்த நடிகை சுவாதி தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்துகொண்ட…

29 mins ago

இந்த வார சின்னத்திரை சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு டிவி சேனல்களும் வாரத்தின்…

31 mins ago

‘உயிர் தமிழுக்கு’ திரைப்பட விமர்சனம்

கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார். அவருக்காக நேரடியாக…

33 mins ago

முலாம்பழ ஐஸ்கிரீம்!

கடையில் மண் குடுவையில் ஐஸ்கிரீம் வாங்கி சுவைத்தவர்கள் நிறைய பேர்! ஆனால் குடும்பத்திற்கு எத்தனை வாங்கிச் செல்வது என யோசிப்பதுண்டு.…

36 mins ago

உடலென நான் உயிரென நீ-8

8 மதுரவல்லி வேகமாக உள்ளறைக்கு போய் மறைந்து கொண்டாள் . இதோ இந்த ஆளரவமற்ற தோப்பில் தனியான வீட்டில் அவனோடு…

4 hours ago

அடுத்து என்ன படிக்கலாம் குழப்பமா? அப்போ உடனே இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்க…

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கான கல்லூரி அட்மிஷன்களும் தற்போது தொடங்கி உள்ளது.…

5 hours ago