மகாபாரதக் கதைகள்/திரௌபதியின் கேள்வி



மகாபாரதத்தின் சூதாட்டக் களம். எல்லாவற்றையும் பணயம் வைத்துத் தோற்ற தருமன் கடைசியாக திரௌபதியையும் வைத்து இழக்கிறான். தேர்ப்பாகனை அனுப்பி அவளைக் கூட்டிவர துரியோதனன் ஆணையிடுகிறான்.



வந்தவனிடம் திரௌபதி, யுதிஷ்டிரர் தன்னை முதலில் வைத்துத் தோற்றாரா அல்லது என்னை முதலில் வைத்து இழந்தாரா, கேட்டு வா என்று கூறி திருப்பி அனுப்பி விடுகிறாள். சபையில் தேர்ப்பாகன் சென்று இதைக் கூறியதும் அங்கிருந்த மன்னர்கள் திக்பிரமை பிடித்துப் போகிறார்கள். இப்படி ஒரு கேள்வியை, அதுவும் ஒரு பெண்ணிடமிருந்து யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. துரியோதனன் கோபத்துடன் அவள் சபையில் வந்து அதே கேள்வியைக் கேட்கட்டும் என்று மீண்டும் தேர்ப்பாகனை அனுப்புகிறான். “மாத விடாயில், ஒற்றை ஆடையில் இருக்கிறேன். நான் சபைக்கு வருதல் தகாது. என் கேள்விக்கு என்ன பதில்?” என்று மீண்டும் திருப்பி அனுப்புகிறாள் திரௌபதி. அகந்தை தலைக்கேறிய துரியோதன் துச்சாதனனை அனுப்ப, அவன் திரௌபதியின் தலைமயிரைப் பிடித்து கதறக் கதற சபைக்கு இழுத்து வருகிறான். கௌரவக் கயவர்கள் தாசிப் பெண்ணே என்று கெக்கலிக்கின்றனர்.






சபையில் இருக்கும் மூத்தோரையும் அறச் சான்றோர்களையும் அரசாள்வோரையும் நோக்கி கண்ணீருடன் அதே கேள்வியை திரௌபதி கேட்கிறாள்.

பீஷ்மர் சொல்கிறார் – தர்மம் மிகவும் சூட்சுமமானது. மனைவி எப்போதும் கணவனின் உடைமை என்று சாஸதிரம் சொல்கிறது, உயிரே போனாலும் தர்மம் தவறாதவன் யுதிஷ்டிரன்; அவனது செயல்களீல் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. என்னால் உறுதியாகத் தீர்மானிக்க முடியவில்லை.

கௌரவர்களில் எல்லாருக்கும் இளைய விகர்ணன் சொல்கிறான் – சூதும் குடியும் அளவுகடந்த காமமும் தீயவை என்று விலக்கப் பட்டவை. சூதில் அகப்பட்டவனின் செயல் அறம் என்று சொல்லத் தக்கதல்ல. மேலும் திரௌபதி தருமனுக்கு மட்டுமல்ல, ஐவருக்கும் மனைவி. தன்னைத் தோற்ற தருமனுக்கு மனைவியைப் பணயமாக வைக்க உரிமை இல்லை. நான் சிறியவன். ஆயினும் தர்மம் என எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.

விதுரர் சொல்கிறார் – அநியாயம் எனும் நெருப்பால் சுடப் பட்டு துயரம் இழைக்கப் பட்டு, நீதிமான்களின் சபையில் வந்து தங்கள் உரிமைகளைக் கேட்டு முறையிடுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள். அந்த முறையீட்டுக்கு பதிலளிக்காமல் இருப்பதோ, பொய்யாக பதிலுரைப்பதோ இரண்டுமே தரும துரோகம். எனவே, இங்குள்ள தர்மம் தெரிந்த எல்லாரும் இதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

துரியோதனன் சொல்கிறான் – தருமனின் தம்பிகள் தங்கள் கருத்தைக் கூறட்டும். தருமன் தங்களையும் திரௌபதியையும் உடைமையாகக் கொண்டவன் அல்ல, அவன் வைத்த பணயம் பொய்யானது என்று சொல்லட்டும். உடனே திரௌபதியை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கிறேன்.

தர்மன் ஏதும் சொல்லவில்லை. தலை கவிழ்ந்து மௌனமாக இருக்கிறான்.

பீமன் சொல்கிறான் – சூதாடிகளின் மனைகளில் ஏவல் பெண்கள் உண்டு. அவர்களைக் கூட எஜமானர்கள் பணயம் வைத்துக் கேட்டதில்லை. நம்மைக் கணவர்களாக வந்தடைந்த இந்தக் கள்ளம் கபடமற்ற பெண்ணுக்கு வக்கிர புத்தியும் குரூரமும் கொண்ட கௌரவர்களால் இத்தகைய அவமானமா நேர வேண்டும்! அண்ணா, சூதாடிய உன் கையை எரிக்கப் போகிறேன். சகாதேவா, கொண்டு வா நெருப்பை.

அர்ஜுனன் சொல்கிறான் – அண்ணனைக் குறித்து தகாத வார்த்தைகள் பேசினாய். உனது தருமத்தையும் சேர்த்து பகைவர்கள் அழித்து விட்டார்களா பீமா? வஞ்சனைக் காரர்களே சூதுக்கு அழைத்தாலும் மறுக்க முடியுமா? அண்ணன் செய்தது அனைத்தும் க்ஷத்திரிய தர்மத்தின் பால் பட்டது தானே…. கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்.

கர்ணன் சொல்கிறான் – ஒருவனது அடிமை, மகன், மனைவி மூவரும் அவனது உடைமைகள்.. ஐவருக்கு மனைவியாகி நடத்தை கெட்ட இவள் ஒரு தாசி தான். அடிமைப் பெண்ணே, திருதராஷ்டிர மன்னனின் அந்தப் புரத்திற்குப் போய் ஒழுங்காக சேவகம் செய். அடிமைகளாகி விட்ட இந்தப் பாண்டவர்கள் உனக்கு எஜமானர்கள் அல்ல, திருதராஷ்டிர புத்திரர்களே எஜமானர்கள். துருபத புத்திரியை இந்த சபையில் பணயமாக வைத்த பின் குந்தி மகனின் ஆண்மையாலோ, சக்தியாலோ என்ன பயன்?






அந்த சபையில் துச்சாதனனின் பிடியில் சூறைக் காற்றில் அகப்பட்ட வாழை மரம் போல துடிதுடித்துக் கொண்டிருக்கிறாள் திரௌபதி. அதற்கு நடுவில், தர்மத்தைப் பற்றிய மயிர் பிளக்கும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், இந்த விவாதங்களில் ஒன்றில் கூட அவளது அடிப்படையான கேள்விக்கு விடையில்லை.

இத்தனை விவாதங்களுக்குப் பிறகும் அந்த அபலை துச்சாதனன் எனும் மிருகத்தால் துகிலுரியப் படும் அவலம் நிகழ்கிறது. கடைசியில் மனித சக்திக்கு மீறிய அவதார புருஷனின் இடையீட்டால் (அல்லது, இந்தக் கொடுமையை சகிக்காத காந்தாரி முதலான கௌரவ மாதர்களின் மன்றாடலால்) அவளது மானம் காக்கப் படுகிறது.

திரௌபதியின் அந்தக் கேள்வி, தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை மட்டும் முன் வைத்துக் கேட்கப் படவில்லை.

இன்பமும் துன்பமும் பூமியின் – மிசை
யார்க்கும் வருவது கண்டனம்; – எனில்
மன்பதை காக்கும் அரசர் தாம் – அற
மாட்சியைக் கொன்று களிப்பரோ? *

என்று வினவுகிறாள் அவள். தர்மமும் நீதியும் கண் முன்னே கொலை செய்யப் படுவதைக் கண்டு தடுமாறும் ஒட்டுமொத்த மனித குலத்தின் குரலாக அது எழுகிறது.

எது தர்மம், எது அதர்மம் என்று முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது? அரசாட்சியின் மூலமாக, சாஸ்திரங்களின் மூலமாக அந்த அதிகாரம் வழங்கப் பட்டவர்கள் முறை தவறும் போது, அநீதி இழைக்கும் போது, ஒரு சாமானியன் என்ன செய்வது? அப்போது அவன் எதிர்க்குரல் எழுப்புவதே தர்மத்தைக் காக்கும் செயல் என்று திரௌபதியின் ஆதர்சம் நமக்குக் கற்பிக்கிறது.

அந்தக் குரலுக்கான எதிர்வினைகளப் பாருங்கள். நமது சமகால சமுதாயத்திலும் காணக் கிடைக்கும் கருத்து நிலைகளின் பிரதிபலிப்பாகவே அவை உள்ளன. விகர்ணனின் கபடமற்ற நீதியுணர்ச்சி. பீஷ்மனின் முடிவெடுக்க இயலாத தர்மக் குழப்பம். விதுரனின் நடுநிலை தவறாத சாஸ்திர நெறிப்படுத்தல், தர்ம நெறி என்ற பெயரில் துரியோதன – துச்சாதன – கர்ண – சகுனி குழு முன்வைக்கும் கடைந்தெடுத்த அயோக்கியத் தனம். பீமனின் ஆண்மை மிகுந்த அறச் சீற்றம். அர்ஜுனனின் சுய கட்டுப்பாடும் பொறுமையும் கொண்ட நிதானம். தர்மனின் மௌனமான கையறு நிலை. இவை அனைத்தையும் பாரத காவியத்தின் அதி முக்கியமான தருணத்தில் வடித்துக் காட்டுகிறான் மகா ஞானியான கவி-ரிஷி வேத வியாசன்.






அந்தக் கேள்வியின் மற்றொரு பரிமாணம் உடைமைகளும் உரிமைகளும் குறித்தது.

ஒரு தேசத்தின், சமூகத்தின் இயற்கை வளங்களும் செல்வங்களும் யாருடைய உடைமைகள்? உலகமயமாக்கல் என்னும் பகடையாட்டத்தில் நாமே தேர்ந்தெடுத்த நமது அரசாங்கம், நம் ஒவ்வொருவரையும் பணயப் பொருளாக வைக்கும் போதெல்லாம் அந்தக் கேள்வி நம் முன் வந்து நிற்கிறது. மத்தியப் பிரதேசத்தின் வனப்பகுதிகளிலோ, அல்லது மேற்கு மலைத் தொடரிலோ உள்ள கனிம வளம் நிரம்பிய ஒரு குன்று – அவை அந்தப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக நிற்கும், அவர்களுக்கு மட்டுமே ஆன தனி உடைமையா? அல்லது இந்த தேசத்தை ஆளும் ஜனநாயக அரசின் கட்டுப் பாட்டில் வந்து எல்லா தேச மக்களுக்கும் பயன்பட வேண்டிய பொது உடைமையா? இரண்டு தரப்பிலும் நியாயம் உள்ளது. இரண்டு தரப்பும் இணைந்து அந்த உடைமையை ஆளலாம், அனுபவிக்கலாம். ஆனால், இரண்டு பேருக்குமே அதை அடகு வைக்கவோ, அழிக்கவோ உரிமையில்லை.

செருப்புக்குத் தோல் வேண்டியே – இங்குக் கொல்வரோ
செல்வக் குழந்தையினை?
விருப்புற்ற சூதினுக்கே – ஒத்த பந்தயம்
மெய்த்தவப் பாஞ்சாலியோ?

க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக பாஞ்சாலியையே பணயம் வைக்க முற்பட்ட யுதிஷ்டிரனின் செயலில் உள்ள நியாயம் என்ன? உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், அன்னிய முதலீடுகள் போன்றவற்றைக் காரணம் காட்டி, நமது நாட்டின் நிலவளம், நீர்வளம், கனிம வளம், மக்கள் வளம் எல்லாவற்றையும் பணயம் வைப்பதின் பின் உள்ள நியாயம் தானா அது என்று யோசிக்க வேண்டியுள்ளது.

தனக்கு இழைக்கப் பட்ட அநீதியை அவள் என்றும் மறக்கவில்லை. கௌரவ சபையில் அன்று விரித்த கூந்தலை, அதர்மம் முற்றிலுமாக துடைக்கப் படும் வரையில் திரௌபதி அள்ளி முடியவில்லை.

மானுடம் என்றென்றும் மறக்கக் கூடாதது திரௌபதியின் அந்தக் கேள்வி. 



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

3 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

3 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

3 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

3 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

7 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

7 hours ago