36

அடர்கானகத்தின் நடுவே இயற்கையை ரசித்தபடி போகும் போது திடுமென முகத்தில் ஒரு மரக்கிளை வந்து மோதுவது போன்றதொரு அதிர்ச்சியடைந்தாள் தேவயானி .அவள் ரிஷிதரன் வெற்றிவீரனாக சட்டத்திடமிருந்து தப்பி வந்த விபரம் கேட்க ஆவலுடன் வந்திருந்தாள் . குடிலுக்குள் அவள் பாதம் பதிந்த்துமே நெருப்பை கக்கிய ரிஷிதரன் தொடர்ந்து தனது உடமைகளை பேக் செய்யும் ஆயத்தங்களில் இறங்கினான் .

” என்ன ஆயிற்று சார் ? ” மெல்ல கேட்டாள் .

” என்னால் தொடர்ந்து இங்கே தங்க முடியாது என்று சொன்னேன் ” அழுத்தமாக சொன்னான் அவன் .



” அ…அது …பரவாயில்லை சார் .உங்களுக்கு நிறைய தொழில்கள் …நிறைய வேலைகள் இருக்கும் …நீங்கள் உங்கள் வேலையை பார்க்க போகலாம் …” பொங்கி வழியும் கொதிபாலை அமர்த்தவென ஏதோ பேசியவளுக்கு தனது பேச்சின் முரண் உறைத்தது. அப்படி ஓடி …ஓடி தொழில் பார்ப்பவனில்லையே இவன் …இவ்வளவு அவசரமாக இங்கிருந்து போய் இவன் பார்க்கப் போகும் வேலைகள் என்னவென அவளுக்கு நினைவு வந்த போது அவள் மனம் அனல் மேல் தாளென கருகியது .



” என்னை குத்திக் காட்டுகிறாயா ? ” சீறினான் அவன் .

” இ…இல்லை …நா…நான் அப்படி …நினைத்து …” 

” வேலை வெட்டி இல்லாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருப்பவனென்கிறாய் ? ” 

தேவயானி தனது தடுமாற்றம் உதறி அவனை விழிகளுக்குள் பார்த்தாள் . ” உங்கள் பிரச்சனை என்ன சார் ? ” 

விழி நுழைந்து இதயம் தோண்ட முயன்ற அவள் பார்வைக்கு இமை தாழ்த்திக் கொண்டவன் ” நான் இப்போதே இங்கிருந்து போக வேண்டும் ” என்றான். கடினத்தை முயன்ற போதும் முடியாமல் அவன் குரலில் வந்து விட்ட குழைவை உணர்ந்த தேவயானி மெல்ல தலையசைத்தாள் .

” சரி கிளம்புங்கள் .நான் ஹெல்ப் செய்கிறேன் ” கட்டிலில் இறைந்து கிடந்த அவன் உடைகளை மடிக்கத் தொடங்கினாள் .

” இங்கேயே இருக்க வேண்டும் என்று நான் நினைத்தபோது, நீ என்னை விரட்ட நினைத்தாய் .  இப்போது நீ இருக்க வேண்டுமென்று என்னை நினைக்கிற போது நான் போகப் போகிறேன் ” முந்தைய நிகழ்வுகளை நினைவுறுத்தி வார்த்தைகளை கூர் தீட்டினான்.

” இங்கேயே நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்தேன் ? ” தேவயானியின் குரலும் கத்தியாகவே இருந்தது.

” நினைக்கவில்லை…? ”  வார்த்தையின் கூர்மை இப்போது அவன் விழிகளுக்கு வந்திருந்தது.



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

" நிச்சயம் நினைக்கவில்லை. எங்கள் விடுதிக்கு தங்க வந்திருக்கும் கஸ்டமர் நீங்கள் .உங்கள் வேலை முடிந்ததும் கிளம்புகிறீர்கள் .இதில் நான் வருத்தப்பட என்ன இருக்கிறது ? " 

" அப்படி எதுவும் இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம் " 

" நிச்சயம் வருத்தம் கிடையாது சார். உங்கள் பாதை உங்களுக்கு ...என் பாதை எனக்கு..." 

" ரொம்ப சந்தோசம் .இதே உறுதியோடு நாம் இப்போதே தனித்தனியாக பிரிந்து விட்டோமானால் இருவருக்குமே நல்லது " 

" ஆமாம் கண்டபடி ஊர் சுற்றும் ஒருவரை எந்த பெயர் சொல்லி சமாளித்து எங்கள் குடிலில் தங்க வைப்பது என்ற எங்களது குழப்பமும் இனி இல்லை " 

தேவயானியின் குத்தல்களை அவன் கண்டுகொள்ளவில்லை .என்னவும் சொல்லிக் கொள் என்பது போன்ற பாவனையோடு தன் உடமைகளை சேகரித்து கொண்டிருந்தான்.

அதானே அசுரனுக்கு சூடு , சொரணை ஏதாவது இருக்குமா ?  சரியான எருமை தோல் ...எருமை மாடு...மகிஷாசுரன் ...அவனது எனக்கென்ன நடவடிக்கைகளில் கொதித்த மனதை வெளிக்காட்டாமல் தேவயானி அவனது வேலைகளில் உதவினாள்.

" இனி நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் சூழ்நிலை வராது .எனது போன் நம்பரை உன் போனில் இருந்து எடுத்து விடு " மரத்த  குரலில் ஒலித்த ரிஷிதரனின் பேச்சு தேவயானியின் நெஞ்சுக்குள் குத்தூசியை சொருகியது.

பார்க்கும் சூழல் இல்லை சரி... போன் நம்பரை கூட அழித்து விடும் அளவு அப்படி என்ன வெறுப்பு ? இந்த விடுதி மீதா அல்லது என் மீதா ? தேவயானியின் கரங்கள் நடுங்க துவங்கின.

கையில் எடுத்து இருந்த தனது பேக்கை பொத்தென்று அவளருகில் கட்டிலில் எறிந்தான் ரிஷிதரன் ." இனி நமக்குள் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது என்றேன் .கண்டதையும் நினைத்து எந்த குழப்பமும் படவேண்டாம் " எச்சரிக்கை போல் பேசினான்.

எந்த கண்டதையும் நினைத்து கொண்டிருக்கிறேனாம்.... அவனது குறிப்பு காட்டிய பேச்சில் ஆத்திரம் அடைந்தாள்.

" கண்டபடி நடப்பவர்களை... கண்டவர்களை நான் எப்போதும் நினைப்பது கிடையாது .என்வழி நேர்வழி " 

 



" ஆ...பெரிய நியாயவாதி ...சரிதான் போடி " 

" என்ன டீ யா ? போடா டேய் ...உன்னை யாரும்  இங்கே தங்க சொல்லவில்லை . நீ வெளியில போய் சுதந்திரமா உன்னுடைய ஊர் பொறுக்கி வேலையை பார்க்கலாம் " 

பொறுக்கி எனும் வார்த்தையை உதட்டுக்குள் மென்றாள் .



ஆனால் அதனை கவனித்து விட்ட ரிஷிதரன் சிவந்த கண்களுடன் அவள் உதட்டை உறுத்தான் ." நான் பொறுக்கிதான் . அதிலும் பக்கா பொம்பளை பொறுக்கி " அறிவிப்பாக சொன்னான்.

" அதற்கு எதற்கு டிவி நியூஸ் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் ? " எரிச்சலுடன் கேட்ட தேவயானி இந்த கேள்விக்கு அவன் முகத்தில் ஒரே ஒரு நொடி தோன்றி மறைந்த புன்னகையின் கீற்றைக்  கண்டுகொண்டு பிறகே தனது கேள்வியின் நகைச்சுவையை உணர்ந்து தானும் புன்னகைக்க முயன்றாள்.

  இருவரும் ஒருவரை ஒருவர் இன்னதென தெரியா ஓர் உணர்வுடன்  பார்த்தபடி நின்றபோது சொர்ணம் உள்ளே நுழைந்தாள்.

" எப்படி இருக்கீங்க தம்பி ? " இயல்பாக கேட்டபடி வந்தவள் அறையின் சூழலில் திகைத்தாள்.

" எங்கே கிளம்புறீங்க தம்பி ? " 

" கொஞ்சம் வேலை  இருக்கிறது .கிளம்பி கொண்டு இருக்கிறேன் ஆன்ட்டி  " சொல்லிவிட்டு துணிகளை பேக்கினுள்  திணிக்க தொடங்கினான் .

" இப்படி இரவோடு இரவாக அவசரமாக கிளம்பும் அளவுக்கு என்ன வேலை இருக்கிறது ? " 

" ஏதோ வேலை ...எதையோ செய்ய போகிறேன் ...விடுங்களேன் " வீட்டேத்தியாக  சொன்னான்.

" உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும் தம்பி " 

" எதுவாக இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்கள் .நான் கிளம்பி கொண்டு இருக்கிறேன் " 

 



" என்ன நடந்தது தம்பி ? "  சொர்ணத்தின் கேள்வி கூர்மையாக வந்தது.

" எங்கே...?  எதைக் கேட்கிறீர்கள் ? எனக்கு புரியவில்லை " 

" அன்று ...அங்கே ...அந்த காட்டு பங்களாவில் என்ன நடந்தது என்று கேட்டேன் " 

" அது எதற்கு உங்களுக்கு ? நான்தான் தெளிவாக போலீசில் சொன்னேனே .நடந்தது தான் சொன்னேன் .சொன்னது தான் நடந்தது " 

" அதை ஏன் மீண்டும் மீண்டும் அடித்துச் சொல்கிறீர்கள் தம்பி ,? " சொரணம் மென்மையாக புன்னகைத்தாள்.

ரிஷிதரன் அவள் முகத்தில் இருந்து பார்வையை திருப்பிக் கொண்டு தனது வேலையில் ஆழ்ந்தான்.

" சிறு பெண்களை வலை போட்டு பிடித்து போட்டோவும் வீடியோவும் எடுக்கும் ஆளா  நீங்கள் ? இதனை என்னை நம்ப சொல்கிறீர்களா ? " 

" நம்புங்க அம்மா .நான் அப்படித்தான் என்று அவர் உறுதி சொல்லிக்கொண்டு இருக்கிறார் " தேவயானி புன்னகைக்க முயன்றாள்.

அம்மாவும் பெண்ணும் என்னவும் பேசிக் கொள்ளுங்கள் என்ற ரீதியில் அவர்கள் பேச்சுக்களை காதில் வாங்காமல் தன் வேலையில் கவனமாக இருந்தான் ரிஷிதரன்.

" அவர்தான் சொல்கிறார் என்றால் நீயும் அப்படியே சொல்வாயா தேவயானி ?  உனக்கு தெரியாதா நடந்தது என்னவென்று ? " சொர்ணத்தின் பேச்சில் இருவருமே திடுக்கிட்டனர் .ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு பின்பு சொர்ணத்தை பார்க்க அவள் புன்னகைத்தாள்.

" எங்களுக்கு எல்லாம் தெரியும் " 



" எங்களுக்கு...? "  ரிஷுதரன் கேள்வியாய் பார்க்க சொர்ணம் வாசலை கை காட்டினாள் .இருகைகளையும் கூப்பியபடி குடிலின் உள் நுழைந்தாள் பஞ்சவர்ணம்.

 



" என் குடும்ப கவுரவத்தை... என் குழந்தையை காப்பாற்றி தந்திருக்கிறீர்கள் ஐயா .மிகுந்த நன்றி " சொன்னபடி வேகமாக வந்து ரிஷிதரனின் கால்களில் விழுந்தாள் .அவன் பதறி பின்வாங்கினான்.

" ஐயோ என்னம்மா நீங்க ? வயதில் பெரியவர்கள் ...இப்படியா செய்வீங்க ..எழுந்திரிங்க..." 

" என் குலசாமி மாதிரி ஐயா நீங்க. என் குலக்கொழுந்தை காப்பாத்தி என்கிட்ட கொடுத்து இருக்கீங்க .உங்க கால்ல விழுந்தா என்னங்கய்யா தப்பு ? " 

" அதெல்லாம் நான் ஒன்னும் பண்ணல .எல்லாம் தேவயானி கொடுத்த ஐடியாதான் .அவளுக்கு நான் ஹெல்ப் பண்ணினேன் .அவ்வளவுதான்..." எவ்வளவோ பண்ணிவிட்டு அவ்வளவுதான் என்கிறாயே என்ற தேவயானியின் பார்வையை சந்திக்காமலேயே பேசினான் அவன்.

" ஒரே வார்த்தையில் அவ்வளவுதான் என்று சொல்றீங்களே தம்பி .நீங்க செய்திருக்கிற நன்மையின் அளவு உங்களுக்கு தெரியாது " 

" ப்ச் ...சும்மா அதையே பேசாதீங்க .இதெல்லாம் உங்களுக்கு முன்பே தெரியுமா ? " என்று கேட்டபடி தேவயானியிடம் பார்வையை திருப்பினான் .உனக்கு தெரியுமா ...என்று கண்களால் கேட்டான் . அவள் இல்லை என்று தலை அசைத்தாள்.

" தாய் அறியாத சூழ்  இருக்குங்களா ஐயா .என் மகளை எனக்கு தெரியாதா ? அவள் உடம்பு பற்றி எனக்கு தெரிந்த அன்றிலிருந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன் .என் கவலையை சொர்ணத்தம்மாளிடம் சொல்லி அழுதேன் .சுந்தரேசன் அய்யாவிடம் சொல்வதற்கு பயம் .அவர் மானம் போனது என்று எங்களை இங்கிருந்து விரட்டினாலும் விரட்டி விடுவார் .ஆனால் சொர்ணத்தம்மாள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார் .மகனுக்கு தெரியாமல் இதனை சரி பண்ணுவதாக உறுதி சொன்னார் .ஆனால் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை .நேரடியாக மருதாணியிடமும் பேச முடியவில்லை. அவள் சின்னப் பெண் .இந்த விஷயம் எப்படி அவளிடம் கேட்பது... எந்த வழியில் போவது ...என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம் "  பஞ்சவர்ணம் விம்மினாள்.

 



" அப்போதுதான் நீங்கள் திரும்பவும் நமது குடிலுக்கு தங்குவதற்கு வந்தீர்கள் தம்பி .வந்த உடனே போய் மருதாணியை சந்தித்தீர்கள் .அன்று மருதாணியிடம் நீங்கள் ஏதோ சத்தியம் வாங்குவதை நாங்கள் கவனித்தோம் .பிறகு உங்கள் மூவரையும் கண்காணித்துக் கொண்டே இருந்தோம் .நீங்கள் பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் சரியான திட்டமிடலுடன்  அழகாக செய்து கொண்டிருந்தீர்கள். மருதாணியை ஆஸ்பத்திரியிலிருந்து கூட்டிவந்து விட்ட உடன் பிரச்சினை முடிந்தது என்று நாங்கள் இருக்கும் போது உங்களை போலீஸ் கைது செய்து விட்டதாக செய்தி வந்தது .பதறி விட்டோம் ..." பஞ்சவர்ணம் விட்டதை சொர்ணம் தொடர்ந்தாள்.

" அன்று போலீஸ் ஸ்டேஷனில் உங்கள் மேல் குற்றம் உறுதியாகி விட்டால் என் மகளையே சாட்சியாக கொண்டுவந்து அங்கே நிறுத்தும எண்ணத்துடன் தான் நான் வந்தேன் ஐயா " 

" என்ன முட்டாள்தனம் ...இதற்காகவா நாங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டோம் ? " பஞ்சவர்ணம் முடிக்கும் முன் சீறினான் ரிஷிதரன்.



பஞ்சவர்ணம் மீண்டும் கைகூப்பினாள் ." எவ்வளவு பெரிய மனது ஐயா உங்களுக்கு .மகளை காப்பாற்றியதை கூட தேவயானி அம்மாவோடு சேர்ந்து நீங்கள் செய்ததை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் , என் மகளுக்காக நீங்களே குற்றவாளி என்று போலீசிடம் போய் சரணடைந்தீர்களே ... அதனை எப்படி என்னால் சாதாரணமாக எடுக்க முடியும் ? " 

" என்னை நானே பழிகொடுத்து கொள்ள அப்படி ஒன்றும் பெரிய உத்தமன் இல்லை நான் .நான் போய் சரண்டர் ஆனால் என்னை காப்பாற்றுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் தான் போனேன். இதோ ஒரே நாளிலேயே வெளியே வந்துவிட்டேன் .இதைப் போய் பெரிய தியாகம் போல் பேசுகிறீர்களே " 

" அது எப்படி உங்களை வெளியே விட்டார்கள்  ? " இப்போது ஆவலாக கேட்டது தேவயானி.

" ஆமாம் தம்பி எப்படி யாரை பிடித்து வெளியே வந்தீர்கள் ? " சொர்ணத்திடமும் குறையாத ஆவல்.

 



சொல்லேன் ...எனும் சிணுங்கல் மின்னிய  தேவயானியின் கண்களை பார்த்தவன் விபரம் சொல்லத் துவங்கினான்.

" சசி பேசியது கமிஷனரிடம் இல்லை .அவருக்கும் மேலே பெரிய இடத்தில்..." 

" யாராவது மினிஸ்டரிடமா ? " தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டாள் தேவயானி.

மெல்ல தலையசைத்தான் அவன் " ஆமாம் சீப் மினிஸ்டரிடம் " 

" என்ன...? "  மூன்று பெண்களும் வாயைப் பிளந்தனர்.

" கையில் ஆயுதத்தோடு போய் சரணடைந்தவனை காப்பாற்ற கமிஷனர் பத்தாது .இந்த நாட்டின் முதல்வர் வேண்டும் .முதல்வர் வரை சசிக்கு பவர் இருப்பது எனக்கு தெரியும் .அதனால் தான் துணிந்து இதில் இறங்கினேன் " 

" சீப் மினிஸ்டர் வரை உங்களால் போக முடியுமா ? " ஆச்சரியமாய் கேட்டவர்களுக்கு

" பணம் பாதாளம் வரை பாயும் " என்றான் அவன் .

" இப்போது ஆளும் கட்சியாக இருக்கும் முக்கிய கட்சிக்கு பெருமளவு நிதி வருடந்தோறும் எங்கள் நிறுவனத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. இந்த குற்றவாளியே ஆளும்கட்சியின் மினிஸ்டர் ஒருவருடைய மகன் தான் .மகன் என்றால் அந்த மந்திரியின் சட்டரீதியான மனைவிக்கு பிறந்தவன் கிடையாது .சட்டத்திற்குப் புறம்பான மனைவிக்குப் பிறந்தவன் .அவன் பின்னால் நிழலாக இருந்து கொண்டு சட்டத்திற்கு எதிரான பல காரியங்களை செய்து கொண்டிருந்தார் அந்த மந்திரி" 

" இப்போது இந்த கேசில் அவனை விடுவிக்க வேண்டும் என்ற காரணத்தினால் சாட்சிகள் கலைக்கப்பட்டன ...முடக்கப்பட்டன .அந்த மந்திரியை அடக்கக் கூடிய ஒரு ஆள் வேண்டும் என்று சிந்தித்தே என்மேல் குற்றத்தை சுமத்தி கொண்டு நான் போய் சரண்டர் ஆனேன். சீப் மினிஸ்டருக்கு அந்த மந்திரியை விட எங்களைப்போன்ற பணம் படைத்தவர்கள் மிகவும் முக்கியம் .எங்களுடைய நிதி உதவி இருந்தால் தான் அவரால் கட்சியை நடத்த முடியும் .அதனால் மிக எளிதாக அந்த மந்திரியை தனது கட்சியை விட்டு விலக்கி விட்டார் அவர் " 



 



" இது மிகவும் சாதாரணமான இருகோடுகள் தத்துவம்தான் .குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட ஒருவன் நான் பெரிய இடத்துப் பிள்ளை . என் பக்கத்தில் வராதே என தலை நிமிர்ந்து கொக்கரித்து நிற்கிறான் .உன்னைவிட நான் பெரியவன். உனக்கு மேல் அதிக  தப்புகள் செய்தவன் ...என்று நான் போய் நின்றபோது , அதிகாரிகளுக்கு அவனைவிட நான் முக்கியமானவன் ஆகிப்போனேன் .என்னை விடுதலை செய்யும் நோக்கத்தோடு எனக்கு கீழே குற்றவாளியாக இருந்த அவனது தலையில் எல்லா குற்றங்களும் சுமத்தப்பட்டன , நான் செய்ததாக சொன்ன குற்றங்களும் சேர்த்து.... ஆக மிக எளிதாக நான் விடுதலை ஆனேன் .உண்மையான குற்றவாளியான அவன் தண்டனை பெறப் போகிறான் " 

ரிஷிதரன் முடிக்க எல்லோரும் ஆச்சரியத்தில் பேச்சு வராமல் நின்றனர் ." இப்படி எல்லாம் நடக்குமா ? " தேவயானி ஆச்சரியமாக கேட்க விரிந்து கோலமாக நின்ற அவளது விழிகளைப் பார்த்தபடி " இதோ நடந்திருக்கிறதே ... உங்கள் முன்னால் நான் முழுதாக நிற்கிறேனே ,அதற்கு சாட்சியாக ..." என்றான் ரிஷிதரன் மெல்லிய புன்னகையோடு.

" இப்போது இந்த கேஸ் வேறு எங்கும் மாறாமல் மிக சீக்கிரமாக முடிக்கப்பட வேண்டும் .ஏனெனில் இதில் மிகவும் பெரிய இடத்து பிள்ளையான நான் சம்பந்தப்பட்ட இருக்கிறேன் .என்மேல் மீடியாக்களின் கவனம் விழுவதற்கு முன்பாக வேகமாக இந்த கேசை முடிக்கும்படி நம் அரசாங்கத்திடமிருந்து அதிகாரிகளுக்கு ஆர்டர் சென்றுவிடும் .குற்றவாளியின் தந்தையின் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டதால் அவரால் இனி இதில் தலையிட முடியாது .மேலும் அவ்வாறு உள்ளே வந்தாரானால் அவர் செய்த சட்டவிரோத காரியங்களும் வெளிப்பட ஆரம்பிக்கலாம் என்ற பயத்தில் அவர் பின்வாங்கி விடுவார் ...சோ...." 

" அந்த மந்திரி மகன் கூடிய சீக்கிரமே கழுத்தில் சுருக்கு மாட்டிக் கொள்வான் .இது நிச்சயம் " இரு கைகளையும் தட்டினாள் தேவயானி .அவளுடைய உற்சாகத்தை சொர்ணமும் பஞ்சவர்ணமும் பின்தொடர அந்தக் குடில் சந்தோசமும் ஆரவாரமுமாக கலகலத்தது.

அங்கிங்கு  நகராமல் தன் விழிகளை ரிஷிதரனின் முகத்தில் ஊன்றியபடி நின்ற தேவயானியின் பார்வையை ஏற்றபடி ஒரு நிமிடம் நின்றவன்  பிறகு தன் இரு விழிகளையும் அழுந்தி  மூடித் திறந்தான்.இப்போது அவன் பார்வை திசை மாறியிருந்த்து.

" உங்கள் மகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் அம்மா. அவள் எனது தங்கை போல .அவள் படிப்பு முடியட்டும் .பிறகு அவளை நல்ல காலேஜில் சேர்த்து தொடர்ந்து படிக்க வைத்து , வேலை வாங்கிக் கொடுத்து...என்று எல்லாமே என்னுடைய பொறுப்பு " உறுதி போல் பஞ்சவர்ணத்திற்கு கொடுத்தான் ரிஷிதரன் .அவள் மீண்டும் கைகளை உயர்த்த....

" ப்ச் ... சும்மா கும்பிட்டுக் கொண்டே இருந்தீர்களானால் எனக்கு கோபம் வரும் .போதும் .நான் சாதாரண மனிதன் .உங்கள் நன்றியை கோவிலில் போய் கடவுளுக்கு சொல்லுங்கள் .இந்த இக்கட்டிலிருந்து உங்களையும் ,உங்கள் மகளையும்  காப்பாற்றியது அவர்தான் " 

" தெய்வம் நேரில் வராதுங்க ஐயா.  உங்களைப் போன்ற ஆட்களை தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கும். அந்த வகையில் நீங்கள்தான் எங்கள் குடும்ப தெய்வம் .இதனை நான் மட்டுமல்ல என் மகளும் மறுக்க முடியாது " சொல்லிவிட்டு வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி வெளியேறினாள் பஞ்சவர்ணம்.

" எல்லாம் சரி இப்போது இவ்வளவு அவசரமாக எங்கே கிளம்புகிறீர்கள் தம்பி ?  உங்கள் அம்மா அண்ணனுக்கு பயந்து  போகிறீர்களாக்கும்  ? சொரணத்தின் குரலில் கேலியோடு லேசான அதட்டலும்  இருந்தது.

ரிஷிதரன் தனது பேக்கிங்கை  முடித்துவிட்டான். பேக்கின்  ஜிப்பை இழுத்து  மூடியவன்  " என்னுடைய குணம் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.நான் காற்று போன்றவன் ஆன்ட்டி .என்னால் ஒரு இடத்தில் அதிக நாட்கள் இருக்க முடியாது .இப்போது இந்த பசுமைக்குடில் எனக்கு மிகவும் போர் அடித்து விட்டது .என்னால் இங்கே மனம் போல்  இருக்க முடியவில்லை.  அதனால் என்னுடைய உல்லாச வாழ்க்கையை தேடி நான் போகிறேன் .என்னை தேட வேண்டாம் என்று உங்கள் தோழியிடமும் ,  தோழியின் மகனிடமும் சொல்லிவிடுங்கள் .குட் பை  " தோளில் பேக்கை தூக்கி போட்டுக்கொண்டு போய்விட்டான்.



கலங்கிய முகத்துடன் தேவயானியும் ,வேதனையுடன் சொர்ணமும் நின்று கொண்டிருந்தபோது மனோரஞ்சிதம் குடிலுக்குள் நுழைந்தாள் .

 



" என்ன ரிஷி போய்விட்டானா ? " விரக்தி சிரிப்போடு கேட்டவளுக்கு இருவரும் தலையசைத்தனர்.

" இவர் எவ்வளவு முயன்றாலும் எதற்கும் கட்டுப்பட மாட்டார் போல்  தெரிகிறதே  மனோ மேடம்..."  வருத்தமாக சொன்னாள் சொர்ணம்.

" ஆமாம் காற்றைப்போல எல்லா இடங்களிலும் பரந்து பரவுபவன் அவன் " 

" இதையேதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அவரும் தன்னையே சொல்லிக்கொண்டார் " தேவயானி சொல்ல அவளைப் புன்னகையோடு பார்த்தாள் மனோரஞ்சிதம்.

" காற்றிற்கு வேலி போட முடியாது என்று சொல்வார்கள் .ஆனால் , சொர்ணம் நான் இந்த சூறைக்காற்றை கூட அடைத்து வைக்கும் குடுவையை கண்டுபிடித்துவிட்டேன் " மனோரஞ்சிதம் பார்வை தேவயானியின் மேலேயே அழுத்தமாக பதிந்திருந்தது.

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Padma Grahadurai

Website Admin

View Comments

Recent Posts

மகாபாரதக் கதைகள்/மகாபாரதம் நடந்தது உண்மைதானா?விளக்கங்கள்-2!

மகாபாரதம் கற்பனை கதை என்று கூறுவது நகைப்புக்குரியது, ஏனெனில் இந்த நூல்கள் கவிதை நடையில் எழுதப்பட்டு உள்ளன. எல்லாவற்றையும் விட…

2 hours ago

மாவட்ட கோவில்கள்:ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சுவாமி திருக்கோவில்

தலச்சிறப்பு : ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் அருள்பாலிப்பது சிறப்பு ஆகும்.  கருட சேவை  மஹோத்ஸ்வம்…

2 hours ago

நாள் உங்கள் நாள் (17.05.24) வெள்ளிக்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 17.05.24 வெள்ளிக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 4 ஆம்…

2 hours ago

இன்றைய ராசி பலன் (17.05.24)

 சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல்…

2 hours ago

விஜய் டிவியின் 5 சீரியலின் கதை..ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி! தான்.

என்னதான் சன் டிவி சீரியலுக்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்து வந்தாலும் இப்ப இருக்கிற ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி தான்.…

13 hours ago

பாக்யா குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி கோபி இனிமே…

13 hours ago