Serial Stories vanavil devathai Vanavil Dhevathai

Vanavil Dhevathai – 27

27

தன் கழுத்தை கட்டிக்கொண்டு விம்மிய சம்யுக்தாவை தர்மனும்  அணைத்துக்கொண்டான் .அம்சவல்லியும் , சத்யேந்திரனும் திகைத்து நிற்க …சபர்மதி பூரணனை முறைத்தாள் .அவனோ தோட்டத்து மயில்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான .

 

” தர்மு இனி எவ்வளவு இடர் வந்தாலும் உன்னை விட்டு பிரிந்து போக மாட்டேன்டா …” உணர்ச்சிப்பிழம்பாய் வசனம் பேசினாள் சம்யுக்தா .

 

” அப்போ எதற்கு பிரிந்து போனாயோ …?” உள்ளுக்குள்ளேயே அவளை கரித்து கொட்டினாள் சபர்மதி .அவளது “டா ” வால் முகம் சுளித்த அம்சவல்லியைப் பார்த்து “எல்லாம் உங்கள் அருமை தம்பி செய்த வேலைதான் அம்மா. என்னவென்று அவரையே கேளுங்கள் “என அம்சவல்லியை தூண்டிவிட்டாள் சபர்மதி .

 

” ம் கேட்கிறேன” ் என்ற அம்சவல்லி பூரணனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு  உள்ளே சென்றாள் .திடீரென ஒன்று தோன்ற திரும்பி பார்த்தாள்  சபர்மதி . அடுப்படி வாசலில் நின்றபடி தர்மனையும் , சம்யுக்தாவையும் உணர்ச்சியற்ற பார்வையால் வெறித்தபடி நின்றிருந்த அனுசூயா , சில விநாடிகள் பார்த்திருந்து விட்டு உள்ளே திரும்பி செல்வதை பார்த்தாள் .மனம் கலங்கினாள்.

 

அடுத்து ஒரு வாரம்  முழுவதும் அந்த வீட்டின் எஜமானி போல் அதிக உரிமை எடுத்துக்கொண்டாள் சம்யுக்தா . வேலையாட்கள் அனைவரையும் விரட்டினாள் .சபர்மதியை , அம்சவல்லியை, சத்யேந்திரனை அலட்சிய பார்வை பார்த்தாள் .தர்மனுடன் கொஞ்சி குலாவினாள் .

 
” இவ்வளவு கண்றாவியாக இந்த வீட்டிற்கு உள்அலங்காரம் செய்தது யார் ?.கண்ணை கொண்டு பார்க்க முடியவில்லை …என பழித்தாள் .” நமது திருமணம் முடிந்ததும் முதலில் இந்த அலங்காரத்தை எல்லாம் மாற்றி விடுவேன் ..சரியா தர்மு ” என பட்டப்பகலில் நட்ட நடு வீட்டில் தரமனின் மேல் சாய்ந்தபடி உதடு குவித்து கொஞ்சினாள் .

 

” அதற்கென்ன மாற்றிக்கொள்ளேன் ” கர்ணனின் வாரிசாக மாறி அவளுக்கு வரமளித்துக்கொண்டிருந்தான் தர்மன் .

 

கொதித்தாள் சபர்மதி .ஒவ்வொரு அலங்காரமாக பார்த்து பார்த்து செய்திருந்தாள் அவள் .அதனை நேற்று வந்த ஒருத்தி மாற்றுவதா …? இந்த அண்ணனை பாரேன் மனநிலை சரியில்லாத போதே என் தங்கை … தங்கையென உயிரை விட்டவன …இப்போது ஒரு வாரமாக என்னை திரும்பியும் பார்ப்பதில்லை .

அந்த நேரத்தில் சபர்மதிக்கு தான் இந்த வீட்டை விட்டு சில நாட்களில் போய் விட நினைத்திருக்கிறோம் என்ற விசயமே மறந்து விட்டது.காலம் காலமாக பெண்களுக்குள் ஊறிக்கிடக்கும் பிறந்த வீட்டு பாசம் தலை தூக்கியது . அதெப்படி அவள் அலங்காரத்தை

மாற்றுகிறாள் என நான் பார்த்து விடுகிறேன் ….இறுக்கமாக முகத்தை வைத்தபடி நின்றிருந்தாள் .மனதின் புகைச்சல் வெளியே தலை நீட்டியதோ …?

 

” விடுடா நம் வீட்டை இதை விட பிரமாதமாக அலங்கரித்து விடலாம் ” என்ற பூரணனின் குரலில் திரும்பிய வளுக்கு , ஆளை மயக்கும் அவனது சிரிப்பு எரியும் நெருப்புக்கு எண்ணெயாயிற்று .

 

” எல்லோரையும் போல என்னையும் இப்படி சிரித்தே மயக்கிவிடலாமென நினைக்காதீர்கள் “

 

” நானும் முயற்சிக்கத்தான் செய்கிறேன் .எங்கே அதுதான் நடக்க மாட்டேனென்கிறதே ” ஏக்கத்துடன் அவளை பார்த்து பெருமூச்செறிந்தான் .என்ன சொல்ல வந்தால் எப்படி பேச்சை மாற்றுகிறார் பார் .

 

” பேச்சை மாற்றாதீர்கள் …என்ன கர்மத்திற்காக இப்போது இந்த அரிப்பு பூச்சியை தேடி இங்கே இழுத்து வந்தீர்கள் “

 

பற்கள் அனைத்தும் தெரிய மீண்டும் பளிச்சென சிரித்தான் அவன் .இவருக்கு தனது சிரிப்பின் வீரியம் நன்கு தெரிந்திருக்கிறது .அதனால்தான் எவ்வளவு இக்கட்டிலும் இப்படி ஒரு சிரிப்பை வீசி எதிரிகளை வசீகரிக்க முயல்கிறார் .

 

” ஹா..ஹா …அரிப்பு பூச்சி …நல்ல பெயர் மதி செல்லம் …”

 

மதியோடு நிறுத்த வேண்டியதுதானே , அது என்ன செல்லம் வேறு என்று முகம் சுளித்தபடி ” சிரித்தே சமாளிக்காதீர்கள் .பதில் சொல்லுங்கள் “

 

” புரையோடிய புண்ணுக்கு அறுவைதான் தேவையானது மதி ” முதன்முதலில் பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு சொல்லும் குரலில் பூரணன் விளக்க முயல , சபர்மதிக்கு கோபம் உச்சிக்கு ஏறியது .

 

” விளக்கம் கேட்டால் விளக்காமல் எதற்கு எனக்கு ,ரைம்ஸ் சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கிறீர்கள் …?” அவனது குழந்தைக்கான விளக்க குரலில் எரிச்சலுற்று கேட்டாள் .

 

” ஓ…குழந்தைக்கு போல் வேண்டாமா …அப்போது பெரியவர்களுக்கு போல் சொல்லித்தரட்டுமா …? ” ஒரு மாதிரி மாறி விட்ட பார்வையுடன் அவன் சபர்மதியை நெருங்க , இவனிடம் சிக்க கூடாதென்ற தன் தீர்மானம் நினைவு வர அந்த இடத்திலிருந்து ஓடி வந்துவிட்டாள் சபர்மதி .

 

” என்னம்மா உங்கள் தம்பியிடம்  கேட்டீர்களா இல்லையா ? எதற்காக இப்படி செய்தாராம் ?” அம்சவல்லியிடம் போய் நின்றாள் .

 

” எல்லாம் நல்லதிற்குத்தான்கான்னு தம்பி சொன்னான்மா .அவன் சொன்னா சரியாத்தான் இருக்கும் ” சுருக்கமாக முடித்துக்கொண்டாள் அம்சவல்லி .

 

எல்லோரையும் ஏதாவது சொல்லி சமாளிச்சிடுறாரே .நினைத்தபடி படியேறியவளின் கண்களில் படிக்கட்டுகளின் அடியில் தூசு தட்டிக்கொண்டிருந்த அனுசூயா தென்பட்டாள் .மொட்டைத்தலையுடன் எளிய காட்டன் சேலையுடன் , துளி மேக்கப் இல்லா முகத்துடன் .

 

தலைக்கு ஸ்கார்ப் கட்டிக்கொள்ளேன் , விக் வைத்துக்கொள்ளேன் என்பது போன்ற சபர்மதியின் அனைத்து யோசனைகளையும் மறுத்து விட்டாள் அனுசூயா .மற்றவர் முன் இப்படி தோற்றமளிப்பேன் என்றுதானே இந்த வேண்டுதல் .அதனையே மாற்ற சொன்னால் எப்படி என்று விட்டாள் .

 
மற்ற நாட்கள் பரவாயில்லை .இதோ இப்படி ஒரு அலங்கார தேர் வீட்டை பவனி வரும்போதாவது இந்த பெண் தன்னை கொஞ்சம் சீர்திருத்திக் கொள்ளலாமே …ஆற்றாமையுடன் நினைத்தாள் சபர்மதி .

 

அன்று தொழில் மீட்டிங் .தனது தொழில் தொடர்பாளர்கள் அனைவரையும் விருந்திற்கழைத்து தன் வாரிசுகளையும் அறிவிக்க போவதாக கூறினார் சத்யேந்திரன் .

தர்மன் பூரண குணமடைந்ததையும் இனி தொழில்களை அவனே பார்க்க போவதையும் அனைவர்க்கும் அறிவிக்கவே இந்த ஏற்பாடு என சபர்மதி அறிந்தாள் .இது பூரணசந்திரனின் ஏற்பாடு என்பதையும் .

 

வீட்டு தோட்டத்திலேயே விருந்திற்கு ஏற்பாடாகி இருப்பதால் , காலையிலிருந்தே வீடு ஒரு வழியாகிக்கொண்டிருந்தது .முதல்நாளே மும்பையிலிருந்து ராஜசேகரனும் வந்து விட விழாக்களை கட்டியது வீட்டில் .ஆளுக்கு ஒரு வேலையை இழுத்து போட்டு செய்தபடி வீடே பரபரப்பாக இருந்தது .கூகுளில் தேடி அலங்காரங்களை தேர்ந்தெடுத்து வீட்டையே தலைகீழாக புரட்டிக்கொண்டிருந்தாள் சபர்மதி .

 

அவளது ஒவ்வொரு தேவைக்கும் சலிக்காமல் ஓடிக்கொண்டிருந்தனர் ராஜசேகரனும் , தீபக்குமாரும் .

 

” சபர்மதி இதோ இந்த சம்கிகள் போதுமா பாரேன் …” என்றபடி வந்தான் ராஜன் .” மேடம் நீங்கள் கேட்ட தினுசு பேப்பர்கள் இங்கே நம் ஊரில் கிடைக்கவில்லை .நான் மலையிறங்கி போய் வாங்கி வந்து விடுகிறேன் .” ஓடினான் தீபக்குமார் .

 

” பாருடா …நான் ஒரு வேலை சொன்னால் ம்…ம்…பார்க்கலாம் ங்கிற மாதிரி தலையாட்டி வைக்கிறார்கள் .மேடம் உதடு அசைந்து மூடும் முன் அந்த பொருள முன்னால் வந்து நிற்கிறது .பேசாமல் நானும் ஒரு சேலையை சுற்றிக்கொள்ளலாமென நினைக்கிறேன் “, என்ற பூரணனின் குரல் பின்னால் கேட்க , மனதிற்குள்ளாகவே அவனுக்கு சேலை அணிவித்து பார்த்ததால் எழுந்த சிரிப்படன் திரும்பியவள் விழிகள் விரிந்தன .இன்னும் இன்னும் எனும் தீராத தாகத்துடன் அவனை அள்ளி பருகின .

 

மதயானையின் நிமிர்வுடன் , எப்போதும் போல் அவள் உயிர் உறிஞ்சும் சிரிப்புடன் கருநீல புல் சூட்டில் கம்பீரமாய் நின்றான் பூரணசந்திரன். மையலுடன் கூடிய அவள் பார்வையை இனம் கண்டவன் ஆவலோடு அருகே நெருங்குகையில் இருவருக்குமிடையே ஒரு பூக்குவளை விழுந்து நொறுங்கியது .

 

ஸ்வாதி …விட்டால் இருவரையும் கொலையே செய்து விடுவாள் போன்ற பாவனையில் நின்றிருந்தாள் .சிறு எரிச்சலுடன் அவளை நோக்கி ,” என்ன ஸ்வாதி இது …? ” என்றான் பூரணசந்திரன் .

 

விழாவிற்கு தயாராகி வந்திருப்பாள் போலும் , ஏதோ நடிக்க வந்தவள் போல் அதீத அலங்காரம் .கையோ , முதுகோ இல்லாத தங்க கலர் மின்னும் ரவிக்கை இல்லையில்லை கச்சை என்றுதான் அதனை சொல்ல வேண்டும் .கறுப்பில் தங்கமும் , வெள்ளியுமாக கற்கள் மின்னும் டிசைனர் சேலை .அழகாகத்தான் இருந்தாள் .ஆனால் முகத் தில் இருந்த அந்த கோபம் இவளுக்கு என்ன வயதிருக்கலாம் என யோசிக்க வைத்தது .

 

ஏனோ அவளை சீண்ட வேண்டும்போல் சபர்மதிக்கு இருக்க ” அட விடுங்க மாமா , அவுங்க என்ன வேண்டுமென்றேவா செய்திருப்பார்கள் .ஏதோ கை தவறி …மாமா ஆட்களை கூப்பிட்டு இதனை சுத்தம் செய்ய சொல்லுங்களேன் .அப்புறம் மாமா நாம் வீட்டினர் மட்டுமாக  இருக்கிறோம் . பாவம் இவர்கள் விருந்தாளி சீக்கிரம் வந்து விட்டார்கள் .கொஞ்சம் அவர்களை ஓரமாக உட்கார வைத்துவிட்டு உள்ளே வாருங்கள் மாமா .கொஞ்சம் அலங்கார வேலையிருக்கிறது ” பூரணனிடம் இவ்வாறு கொஞ்சிய கையோடு …

 

ஒரு சோபாவை இழுத்து ஓரமாக போட்டு அதில் ஸ்வாதியை இழுத்து உட்கார வைத்தாள் .பிரமிப்புடன் தன்னை பார்த்துக்கொண்டிருந்த பூரணனின் கையை பற்றியவள் “உள்ளே வாங்க மாமா ” என இழுத்து போனாள் .

 

வெறிநாய் போன்ற பார்வையுடன் வெப்ப மூச்சுகளை விட்டபடி உட்கார்ந்திருந்த ஸ்வாதியின் அருகே வந்து அமர்ந்த பெண் ” ஹாய் நான் சம்யுக்தா ..” என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள் .

 

 

error: Content is protected !!Our Official Facebook Page Click like For Regular Updates