Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 9

 

9

மின்சாரம் போன மழையிரவை
இன்னமும் மனமேற்றிக் கொண்டிருக்கிறது
நீ ஊதி அணைத்த
மெழுகுவர்த்தி வாசம்..

இப்போதும் எதிர்வீடு பூட்டியேதான் இருந்தது மைதிலியின் பார்வை கணவன் வீட்டிற்கு வந்ததிலிருந்து எதிர்வீட்டைத்தான் அடிக்கடி பார்த்தது.. கதவு பூட்டி இருந்ததோடு ஆட்கள் நடமாடுவதற்கான அறிகுறிகளும் அங்கு இல்லை.. வீட்டைக் காலி பண்ணிவிட்டு ஊரை விட்டே போய்விட்டார்களே..? தனக்கு சாதகமாக எண்ணங்களை ஓட்டியபடி நின்றிருந்தாள் மைதிலி..

“ஏன் மகாராணி உன் மருமகளுக்கு வீட்டிற்குள் இருப்பதை விடவும், வெளியே போவதுதான் ரொம்ப பிடிக்கும் போலவே.. பார்வை பூராம் வாசலில்தான் இருக்கு..”

“வீட்டிற்குள் இருந்தால் வீட்டு வேலைகளை பார்க்க வேண்டுமே.. வெளியே போனால் ஜாலியாக ஊர் சுற்றலமேன்னு நினைப்பாளாயிருக்கும்..”

“ம் அது சரி இந்த காலத்து பொண்ணுங்க எங்கே குனிஞ்சு வேலை செய்யுதுங்க..? அப்படியே நிமிர்ந்தாக்கல நிக்கிதுங்க.. நடக்குதுங்க..”

“பாட்டி, அத்தை உங்க வேலையை ஆரம்பிச்சுடீங்களா..? சும்மா இருங்க.. அண்ணி புதுசுதானே..? ஏன் அவுங்களை தொல்லை பண்றீங்க..?”

“அட பார்றா கொழுந்தன் சப்போர்ட்டை.. மகாராணி இதை பார்த்தியா..?”

“ம்.. ம்.. பார்த்தேன்.. இந்தாம்மா இப்படிவா.. அங்கே என்ன வேடிக்கை..?”

தன் தோள் தட்டப்பட திரும்பிய மைதிலி விழித்தாள்.. அவள் தோளை தட்டியவள் மகாராணி..

“உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்.. அங்கே என்ன பராக்கு பார்த்துட்டு நிற்கிறாய்..?”

மாமியார் கேட்கவும் தான் அவர்கள் இவ்வளவு நேரமாக நிமிர்ந்தாக்கல நிற்கும், நடக்கும், வீட்டுவேலை செய்ய சோம்பல் பட்டு, ஊர் சுற்ற நினைக்கும் பெண் தான் தானென்பது மைதிலிக்கு தெரியவந்தது..

அந்த வீட்டின் உறவுகளும், உறவு அழைப்புகளும் இன்னமும் மனதில் பதியாது இருக்க யாரோ யாரையோ பேசுகின்றனர் என நின்றிருந்தாள், இப்போது அத்தனை நக்கல் பேச்சுகளுக்கிடையேயும் தனக்கு ஆதரவாக ஒரு குரல் கேட்டதே.. விழிகளை சுழலவிட, அவள் பார்வை பட்டதும், ஓரமாக அமர்ந்திருந்த கல்யாணசுந்தரம் புன்னகைத்தான்..

முதன் முறையாக அந்த வீட்டில் அவள் சந்தித்த அன்பும் வாஞ்சையுமான உறவு பார்வை.. ரவீந்தரனின் பார்வையும் அன்பாக இருந்தாலும், அதில் தோழிக்கான உரிமையே நிறைய தெரியும்.. மகாராணியும், அருணாச்சலமும் தங்கள் மாமனார், மாமியார் உறவுக்கேற்ற அதிகார பார்வையே பார்ப்பார்கள்.. அவள் கணவனைப் பற்றி சொல்ல வேண்டாம்.. எப்போதும் உணர்ச்சிகளற்ற ஒரு பாறை பார்வை பார்ப்பான்..

இவர்கள் அனைவரிடமிருந்து வித்தியாசமாக அன்பை சொறிந்த கல்யாணசுந்தரத்தின் பார்வை மனதினை இதமாக வருட, இதழ் மலர்த்தி அவளுக்கு பதில் புன்னகையை கொடுத்தாள் மைதிலி..




“நம்ம வீட்ல சமையல் வேலையை வீட்டு பொண்ணுங்கதான் செய்யனும்.. சுத்து வேலைக்குத்தான் ஆள் வச்சிருக்கோம்.. உனக்கு சமையல் தெரியுமில்ல..?”

மகாராணி சோபாவில் அமர்ந்து கொண்டு கேட்க, மைதிலி மெல்ல தலையசைத்தாள்..

“தெரியும் அத்தை..”

“சரி அப்போது இன்னைக்கு சமையலை நீயே செய்துடு..” மகாராணி சொல்ல மைதிலிக்கு திக்கென்றது.

அவளது பிறந்த வீட்டில் அப்பா, அம்மா, அவள் என மூன்றே பேருக்கான எளிய சமையல்தான் அவளுக்கு பழக்கம்.. இங்கே இதோ இப்படி வீடு முழுவதும் நிறைந்திருக்கும் உறவுக் கும்பலுக்கு அவளால் எப்படி சமைத்துப் போட முடியும்..? விழித்தபடி நின்றாள்..

“என்ன ராணி உன் மருமகள் நிலைமரமாக நிற்கிறா..?”

“சாம்பாருக்கு உளுந்தம்பருப்பா, கடலைப் பருப்பான்னு அக்கா யோசிக்கிறாங்க..”

“இல்லயில்ல புளியை அரைக்கிறதா.. கரைக்குறதான்னு சிந்திக்கிறாங்க..”

அவளது தயக்கத்தை கிண்டல் செய்தனர் உறவினர்கள்..

“என்னம்மா அவுங்க சொல்ற மாதிரிதானா..? அ.. ஆவன்னால இருந்து நான் வரணுமா..?” மகாராணி அதட்டலாய் கேட்டாள்..

“அம்மா நிதானமாக சொல்லிக் கொடுங்கம்மா.. நீங்க இப்படி மிரட்டுவது போல் கேட்டால் அண்ணி பாவம் பயப்படுகிறார்கள்..”

கல்யாணசுந்தரம் ஆதரவாய் வர,

“டேய் இது பொம்பளைங்க சமாச்சாரம்.. இங்கே உனக்கு என்ன வேலை..? நீ இடத்தை காலி பண்ணு.. கடைக்கு போ..” மகாராணி மகனை விரட்டினாள்..

“நீ அடுப்புக்கு போ.. எல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன்.. சீக்கிரம் சமைத்து முடி..”

அடுப்படிக்குள் நுழைந்த மைதிலி திகைத்தாள்.. காய்கறிகள் சிறு குன்று போல் குவித்து வைக்கப் பட்டிருந்தன.. இவ்வளவு காய்களையும் வெட்டி, உரித்து, கழுவி சமைத்து பிரமித்து நின்றாள்..

“வாம்மா புதுப்பொண்ணு, சமையல் தெரியுமா..? சொல்லித் தரணுமா..?”

ஒரு வயதான பெண் அடுப்படியின் ஓரம் ஒரு சிறு முக்காலியில் அமர்ந்திருந்தவள் எழுந்து கேட்டாள்..

“கொ.. கொஞ்சம் தெரியும் பாட்டி..”

அந்த பெண்ணின் வயோதிக தோற்றத்தை வைத்து மைதிலி அப்படி அழைக்க, அவள் கண்களை இடுக்கிக் கொண்டு இவளை பார்த்தாள்.. காது வளர்த்து கம்மல் போட்டு, வெள்ளை சேலையும் ரவிக்கையுமாக கிராமத்து பாட்டியின் தோற்றத்தில் இருந்தார் அந்த பெண்..

“நான் உனக்கு பாட்டி முறை கிடையாது உன்  மாமனாருக்கு அத்தை மக.. அவருக்கு கட்டிக்கிற முறை..  என்னை “மாம்டக்கா” ன்னு கூப்பிடு.. தாய்மாமன் பொண்டாட்டியைத்தான் அப்படி கூப்பிடுவாங்க.. இது பரவாயில்லை உனக்கு மாமனாரின் முறைங்கிறதால் என்னையும் அப்படி கூப்பிடலாம்..” உத்தரவாக கூறினாள்..

புதிதாய் படித்த இந்த உறவுமுறை உள்நாக்கை தித்திக்க மாம்டக்கா என உச்சரித்து பார்த்தபடி தலையாட்டினாள்..

“என் பெயர் கௌரி.. நான் இதே தெருவுல கடைசி வீட்ல இருக்கிறேன்.. சின்ன வயசுலயே என் புருசன் செத்து போயிட்டார்.. அப்பா, அம்மா, கூடப்பிறந்தவங்கெல்லாம் யாரும் இல்லை.. எல்லோரும் போயாச்சு.. அருணாச்சலம் தான் இப்போ என்னை பார்த்துக்கிடுறாரு.. நான் இங்கேதான் நிறைய நேரம் இருப்பேன்.. உன் அத்தை மகாராணி இந்த வீட்டுக்கு மருமகளா வந்தப்பவே அவளுக்கு சமையல் சொல்லிக் கொடுத்தவள் நான்தான்.. ம்.. வா இப்படி வந்து அடுப்பு முன் நில்லு..”

குரலுயர்த்தி அழைத்த கௌரியம்மாளின் கம்பீரத்திற்கு தலையாட்டி அடுப்பருகே போனாள் மைதிலி.

“அந்தக் காலத்தில் எங்களுக்கு கல்யாணமாகி வந்ததும் முதல் வேலையாக குடும்பம் முழுமைக்கும் சமைச்சு போடனும்.. அதை மாமியார், அத்தை, மதினி, நாத்தின்னு ஒரு பெரிய கும்பல் முன்னாடி செய்யனும்.. இதுதான் புதுப் பெண்ணுக்குரிய முதல் பரீட்சை.. இதில் பாசாகலைன்னா அவ்வளவுதான்.. காலம் பூராவும் உறவுக்கும்பல் அவளைக் கிண்டல் செய்தே ஒரு வழி பண்ணிடும்..”




முற்காலத்து கதைகளை பேசியபடி கௌரியம்மாள் சொல்லித் தந்த சமையல் வேலை வைதிலிக்கு ஓரளவு சுவாரஸ்யமாகவே இருந்தது..

“முந்திரிப்பருப்பை எண்ணி எடுத்து வைத்துவிட்டு போவார்கள் என் மாமியார்.. வறுக்க எடுத்து தரும் அப்பளமும், வடகமும் எண்ணித்தான் தருவார்கள்.. எண்ணிக்கை மாறாமல் அவை சாப்பாட்டு பந்திக்கு வந்துவிட வேண்டும்.. ஒன்றையாவது எடுத்து வாயில் போட்டு விட்டோம் அவ்வளவுதான் ஒருவேளை சாப்பாடு கிடையாது.”

சாதாரணமாக கௌரியம்மா விவரித்த அக்காலங்கள் பெண்களில் அடிமைத்தனத்தை சொல்லாமல் சொல்லியது.. ஆனால் அவற்றை சாதாரண வாழ்க்கை நிகழ்வுகளாக அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.. போகிற போக்கில் என்பது போல் கௌரியம்மா சொன்ன கதைகளோடு சமையலையும் சேர்த்து சொல்லிக் கொடுத்தார்கள்.. பாரம்பரியம் மாறாத பழைமையுடன் இருந்தன கௌரியம்மாவின் சமையல் முறைகள்..

அம்மி அரைக்கவும், உளுந்து ஆட்டவும் என கடின வேலைகளை எளிதானதாக மாற்றியது கௌரியம்மாவின் பேச்சு..

“எங்க குடும்பங்கள்ல யார் வீட்டில் கல்யாணமாகி புதுப்பெண் வந்தாலும் அவுங்களுக்கு சமையல் குரு நான்தான்.. ஒரே வாரத்தில் முறுக்கு சுத்துறதுல இருந்து, புட்டு அவிக்கிறது வரை சுளுவாக சொல்லிக் கொடுத்துடுவேனாக்கும்..”

தனக்கு தானே பி.எச்.டி பட்டம் ஒன்றை வழங்கிக் கொண்டார் கௌரியம்மா.. இந்த திறமைக்காகத்தான் எல்லோர் வீட்டிலும் சமையல் சொல்லித்தர இவரை அழைப்பார்கள் போலும், நினைத்தபடி தன் உள்ளங்கையை விரித்து பார்த்தாள் மைதிலி..

கனத்த குளவியை தூக்கி வைத்து இழுத்து அரைத்து சிவந்திருந்தன அவள் கைகள்.. கம்யூட்டர் கீ போர்டில் விளையாண்ட விரல்கள், ஸ்கூட்டி ஓட்டிய கைகள்.. இன்று.. ஏனோ அவளுக்கு கண்ணீர் வர, உதட்டை மடித்து கடித்து சுரந்த கண்ணீரை அடக்கினாள்..

“அந்த தேங்காய் எண்ணெயை கையில் தடவு எரிச்சல் குறையும்.. இரண்டே மாதத்தில் கை பழக்கமாகி காய்ப்பு காய்ச்சிரும்.. பிறகு இந்த வேலைக்கெல்லாம் பழகிடும்..” திரும்பிப் பாராமலேயே கௌரியம்மா சொல்ல, மைதிலியின் மனது விரக்தியில் விழுந்தது..

ஆமாம் காய்ந்து வடுவாகி விட்டால் மரத்து வலி தெரியாது.. உடலில் மட்டுமல்ல மனதிலும்.. அவளது மனம் முன தினம் கணவன் நடந்து கொண்ட அராஜக போக்கில் போய் நின்றது.. அதுவும் கூட இப்படித்தான் மரத்து விடுமா..? உணர்ச்சி துடைத்த மரத்தன்மைக்கு போய் விடுமா..? யோசித்து பார்த்தால் இங்கே நிறைய பெண்கள் இப்படித்தான் மனம் மரத்துத்தான் வாழ்வது போல் தோன்றுகிறது..

ஆனால் நான் என் வாழ்க்கையை அப்படி வாழ மாட்டேன்.. இதோ இந்த கௌரியம்மா மாதிரி என் மனதை உடம்பை வடுவாக்க மாட்டேன்.. உயிர்ப்பும், உணர்வுமாக ஒரு உயர் வகை வாழ்வை எனக்கென அமைத்துக் கொள்ளாமல் விடமாட்டேன்.. மனதிற்குள் சிறு சூளுரைப்பு ஒன்றுடன் தேங்காய் எண்ணெய் பாட்டிலிலிருந்து எண்ணெய் எடுத்தாள்.. அது ஒரு மாதிரி இளஞ்சிவப்பாக வழிய.. தேங்காய் எண்ணெய்தானா சந்தேகமாக பார்த்தாள்..

“பாட்டி..” குரல் கொடுத்து விட்டு, நாக்கை கடித்து அந்த உறவுமுறையை நினைவிற்கு கொண்டு வந்து “மாம்டக்கா” என அழைக்க..

“அது தேங்காய் எண்ணெய்தான்.. வெட்டிவேர், கறிவேப்பிலை, மருதாணி கரிசலாங்கண்ணி எல்லாம் போட்டு காய்ச்சியது.. அப்படித்தான் இருக்கும்..” கௌரியம்மாவின் குரல் கேட்கவும், சமாதானமாகி எண்ணெயை உள்ளங்கையில் தடவிக் கொண்டு பின்வாசலுக்கு வந்து வெளிச்சத்தில் கைகளை விரித்து பார்த்தாள்..

“மைதிலி..” ரவீந்தர் பின்னால் வந்து நின்றான்.. அவளது கைகளை கொஞ்சம் வேதனையுடன் பார்த்தான்.

“ரொம்ப வலிக்கிறதா..? இதுதான் மைதிலி நான் உன்னை எங்கள் வீட்டிற்கு மருமகளாக்க மிகவும் யோசித்தேன்.. இந்த வேலைகள் எல்லாம் எங்கள் வீட்டு பெண்களுக்கு எழுதப்படாத சட்டங்கள்.. அவற்றை உன்னால் தாங்கமுடியாது என்றுதான்.. நீ மென்மையான பெண் மைதிலி.. இவையெல்லாம் உனக்கு பழக்கமற்றவை.. இந்த திருமணத்தால் உனக்கு வரப்போகும் இந்த வகை சுமைகளெல்லாம் வேண்டாம் என்றுதான், நான் உன்னிடம் இந்த திருமணம் வேண்டாமென்று சொல்ல நினைத்தேன்.. ஆனால் அதனை மனம் விட்டுப் பேசும் சந்தர்ப்பம் நமக்குள் வாய்க்கவே இல்லை..”

“என்னடா சந்தர்ப்பம்..?” இப்போது கேட்டபடி வந்தது பரசுராமன்.. அவன் குரல் அதட்டலாய் தம்பியிடம் இருந்தது.. பார்வை மிரட்டலாய் மனைவியிடம் இருந்தது..

மைதிலி உள்ளுக்குள் பதறினாள்.. ஐயோ ரவீந்தர் பேசியதை இவன் கேட்டு விட்டானா..? திருமணம் வேண்டாமென்றதை தவறாக நினைத்துக் கொள்வானோ..?

அவளது பதட்டம் ரவீந்தரிடம் கொஞ்சமும் இல்லை..  அவன் “அண்ணா பாருங்கண்ணா மைதிலியின் கைகளை எப்படி சிவந்திருக்கிறது..? இதுபோல வேலையெல்லாம் அவளுக்கு பழக்கமில்லை அண்ணா, கம்ப்யூட்டரில் ப்ரோகிராம் எழுதச் சொன்னால் நிமிடத்தில் எழுதிவிடுவாள்.. அவளை போய் அம்மி அரைக்க சொன்னால் எப்படி அண்ணா..?” நியாயம் கேட்டான்.. கூடவே மைதிலியின் கைகளை தூக்கி அண்ணனிடம் காட்டினான்..

தம்பியின் பதட்டம் அண்ணனிடம் சிறிதும் இல்லை.. அவன் மனைவியின் கைகளைக் கூடப் பார்க்கவில்லை.

“அம்மியரைக்க கஷ்டமாக இருக்கும் பொம்பளை கல்யாணம் மட்டும் எதுக்கு பண்ணிக்கிறாளாம்.. நம் வீட்டு நடைமுறை இதுதான்னு தெரியும்தானே..? தெரிந்தும் இங்கே எதற்கு வரணும்..? யாராவது கம்யூட்டர் இன்ஜினியரை பார்த்து கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதானே..”

மைதிலி காதில் விழுந்த சொற்களில் துடித்துப் போனாள்.. அவளுக்கு ஆதரவான பேச்சு வேண்டாம்.. சிறு பார்வை கூட போதும்.. ஆனால் பழுக்க காய்ச்சிய இரும்பை நெஞ்சில் சொருகும் இந்த வார்த்தைகள்.. சட்டென்று ரவீந்தரிடமிருந்து தன் கைகளை இழுத்துக் கொண்டாள்..

“என் வாழ்க்கை ரவி.. நான் பார்த்துக் கொள்வேன்.. நீ இதில் தலையிட வேண்டாம்..” தீர்க்கமான பார்வை ஒன்றை கணவனுக்கு கொடுத்து விட்டு வீட்டினுள் சென்றாள்..

பின்னால் அண்ணன் தம்பியின் விவாதம் கேட்டது.. ரவீந்தர் தனக்காக வாதாடுவதை உணர்ந்தாள்.. தனக்காக கணவனிடம் அடுத்தொருவர் வாதாடும் நிலையில் இருப்பதை மிகவும் அவமானமாக உணர்ந்தாள்.

இதனை இப்படியே விடக்கூடாது.. இன்று இரவு கணவனிடம் மனம் திறந்து பேசிவிட வேண்டும், என்ற முடிவோடு இருந்தாள்.. முன்தின இரவிற்கு பின் கணவனோடான தனிமையையும், இரவையும் ஒரு பயத்துடனேயே நினைத்திருந்தவள், தற்போதைய முடிவிற்கு பின் ஒரு எதிர்பார்ப்புடனேயே இரவிற்கு காத்திருந்தாள்..

ஆனால் பரசுராமனோ, அறைக்குள் அவள் நுழைந்ததுமே அணைப்பதிலேயே குறியாக இருந்தான் முதலில் விளக்கை.. பிறகு அவளை.. என்ன இது.. இந்த காட்டுமிராண்டி தனத்திற்கு மனம் ஒவ்வாது மைதிலி முன்னாளை விட இன்று அதிகமாக அவனை எதிர்த்தாள்.

“விடுங்க என்னை.. எனக்கு அலுப்பாக இருக்கிறது..”

“எனக்கு தேவையாக இருக்கிறது.. எனக்கு வேண்டும்..” வலுக்கட்டாயமாக அவளை அணைத்து கட்டிலில் சரித்தான்.

“இல்லை.. முடியாது.. எனக்கு வேண்டாம்..”

“உனக்கு வேண்டாமென்று இருப்பது போல், எனக்கு வேண்டும் போல் இருக்கிறதே..”

அவள் தடுக்க தடுக்க அவன் தீவிரமானான்.. அந்த தீவிரத்தை தாங்க முடியாமல் தவித்தாள் அவள்..

“என்ன இது..? புருசன் பொண்டாட்டின்னா இது மட்டும்தானா..?” அவனது ஆதிக்கத்தின் கீழ் வலுவிழந்து தோற்றபடி கேட்டாள்..

“கல்யாணமான இரண்டாவது நாள் புருசன்கிட்ட கேட்கிற கேள்வியாடி இது..? பொண்டாட்டிங்கிறவளே இதுக்காகத்தான்டி..?” உடலால் அவன் கொடுத்த வலிகளை விட அவன் சொற்கள் கொடுத்த மனவலி மைதிலிக்கு அதிகமாக இருந்தது..

முதலில் சிறு நேரம் அவனுடன் போராடி பார்த்தவள் அதன் பயனின்மையை உணர்ந்ததும் உடலை மரத்துப் போக வைத்துக் கொண்டாள்.. நேரம் செல்ல செல்ல மனதையும்..

அன்றிரவு மைதிலியின் தலையணை நனைந்து ஊறி வெளுத்தது..

What’s your Reaction?
+1
4
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Shuruthikabalan
Shuruthikabalan
3 years ago

Super

Deepa lakshmi
Deepa lakshmi
3 years ago

Yen madam kannam vaitha kalvana next episode podama irukinga please intha korana kalathil patika ungal seriel stories tan yanai ponra vasakargaluku entertainment please maranthudathinga

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!