Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 8

8

நீ அருகற்ற இக்கொடு வெயில்
மதியத்தை..
உன் சாயல் கொண்டுதான்
கடந்தாக வேண்டும்..

மணமக்களின் வாழ்க்கை ஆரம்பம் பெண்வீட்டில் தான் அவர்கள் பக்கத்தில் ஆரம்பமாகும்.. அதற்கேற்ப மைதிலியின் முதல் நாளிரவு ஏற்பாடுகள் அவள் தாய் வீட்டிலேயே செய்யப்பட்டிருந்தன.. மறுவீட்டு விருந்து முடிந்து கணவன் வீட்டை விட்டு.. குறிப்பாக அந்த எதிர் வீடு கண்ணில் படாமல் வெளியேவதுமே மிக நிம்மதியாக உணர்ந்தாள் மைதிலி.. இல்லையே.. இது சரியில்லையே.. காலம் முழுவதும் அவள் இருக்க வேண்டிய இடமல்லவா.. இங்கிருந்து வெளியேறுவதால் நிம்மதி என்றால் எப்படி.. மைதிலியின் மனம் மிகவும் குழம்பியது..
சரம் சரமாக மல்லிகையை அவள் தலையில் சூட்டிய கிரிஜா, அழகாக அவளுக்கு புடவையையும் கட்டி விட்டாள்.. வியர்த்து வழிந்த அவள் முகத்தை பார்த்து சிரித்தவள் மென்மையாக வியர்வையை ஒற்றி எடுத்தாள்.
“பயப்படாதே மைதிலி.. எல்லாம் சரியாகிடும்.. அவர் மனம் கோணாமல் சொன்னதை கேட்டுக்கனும் சரியா..?” மென்மையான அறிவுரை ஒன்றை நாத்தனாருக்கு வழங்கினாள்..
மைதிலி பயத்தை உதறி தன்னைத்தானே திடப்படுத்திக் கொள்வதை கவனித்தபடி இருந்தவள், “சினிமாவில் போல் கையில் பால் சொம்பெல்லாம் வேண்டாம்.. பால், பழமெல்லாம் ரூமுக்குள்ளேயே வச்சுட்டேன்.. அப்புறமா சாப்பிடுங்க.. சரியா..?”
அவளது விசமத்தில் மைதிலிக்கு திரும்பவும் வியர்க்க ஆரம்பிக்க… “வே.. வேறு என்ன அண்ணி செய்யனும்..?” கொஞ்சம் பாவமாக அண்ணியை பார்த்தாள்.
“வேறு எதைக் கேட்கிறாய்..? சினிமாவில் போல் காலிலெல்லாம் விழ வேண்டிய அவசியமில்லை.. நானெல்லாம் உன் அண்ணனுக்கு ஹாய் சொல்லிக் கொண்டே ரூமுக்குள் நுழைந்தேணாக்கும்.. நீயும் அப்படியே டிரை பண்ணு..”
இந்த இயல்பில் மைதிலிக்கு கொஞ்சம் தைரியம் பிறக்க தலையசைத்தாள்.. அவளை அழைத்துக் கொண்டு அவர்கள் அறை வாசல் வரை வந்த கிரிஜா, அவள் காதருகில் குனிந்தாள்..
“அப்படியே அவரிடம் அந்த “வந்தனா” பற்றிய விபரங்களையும் கேட்டுவிடு சரியா..?”
இறுதியாக சுடுகோல் ஒன்றை சொற்களில் வைத்து நீட்டியவள் அந்த அதிர்வில் தடுமாறி நின்றுவிட்ட மைதிலியின் தோள்களை பற்றி அறையினுள் மென்மையாக தள்ளி, கதவை வெளியே இழுத்துக் கொண்டாள்..
திடுமென அறைக்குள் வந்துவிட்ட மைதிலியை கட்டிலில் அமர்ந்திருந்த பரசுராமன் ஏறிட்டு பார்க்க, அவள் இன்னமும் அண்ணி கடைசியாக கொடுத்த அதிர்ச்சி விலகாமல் அப்படியே சிலையாக நின்றிருந்தாள்.. அவள் முகம் வெளுத்திருந்தது விழிகள் நிலைகுத்தி இருந்தது வந்தனா விசயம் அண்ணிக்கு எப்படி தெரியும்..? எப்போது தெரியும்..? கல்யாணத்திற்கு முன்பா.. பின்பா..? முன்பென்றால் ஏன் இதைப்பற்றி அண்ணி இதுவரை யாரிடமும் பேசவில்லை..?




குழப்பமான யோசனையில் மைதிலிக்கு தான் நிற்கும் சூழலே மறந்து போனது.. தலை சுழல்வது போலிருந்தது.. செய்வதறியாது பேந்த விழித்தபடி அப்படியே நின்றிருந்தாள்..
“ம்க்கும்..” எதிரேயிருந்து லேசான கனைப்பு சத்தம்வர கொஞ்சம் தன்னுணர்வு வந்து நிமிர்ந்து பார்த்தாள்.. கட்டிலில் இரு கைகளையும் ஊன்றி அமர்ந்தபடி அவளை தீர்க்கமாக பார்த்தபடி இருந்தான்.. பரசுராமன்.. ஆசை, காதல் என ஒரு முதலிரவுக் கணவனுக்கான உணர்வுகள் எதுவும் அந்த பார்வையில் இல்லை.. ஒரு வித எந்திரத்தனம், உணர்ச்சிகளற்ற மரக்கட்டைத்தனம்..
இப்போது நான் என்ன செய்யவேண்டும்..? மைதிலியினுள் குழப்பம், அவளுக்கு பேசவேண்டும் அவள் கணவனிடம் நிறைய பேச வேண்டும்.. அந்தப் பேச்சுக்களை எப்படி ஆரம்பிப்பது.. அண்ணி சொன்ன “ஹாய் சொல்லிக்கொண்டு..” நினைவு வர, அப்படியே ஆரம்பிப்போமா என வாய் திறந்து விட்டு, ம்ஹீம் என் தலையசைத்துக் கொண்டாள்..
அண்ணனும் அண்ணியும் அவர்கள் திருமணம் நிச்சயமான நாளிலிருந்து, போனில், நேரில் என பேசிப் பேசி.. பேசி என எந்நேரமும் பேசியே தீர்த்தார்கள்.. பார்க், ஹோட்டல், தியேட்டர் என்று கூட சுற்றினார்கள்.. அவர்களது முதலிரவு அது போல் ஒரு “ஹாயில்” ஆரம்பிப்பது சரியாக இருந்திருக்கலாம்.. ஆனால் என்னுடையது.. இதோ.. இவனுக்கும் எனக்கும் என்ன பழக்கம்.. இன்று காலையில் என் கழுத்தில் இந்த செயினை போட்டுவிட்டான் என்பதை தவிர, வேறு எந்த வகையிலும் என்னோடு தொடர்பற்ற ஒருவனுடன் எப்படி நான்.. அப்படி அண்ணி சொல்வது போல் இயல்பாக பழக முடியும்..?
தன் கழுத்து மாங்கல்யத்தை கையால் வருடியபடி மறுப்பான முகபாவத்துடன் நிமிர்ந்தவளுக்கு, இப்போது கட்டிலில் அமர்ந்திருந்த பரசுராமன் மிக அந்நியனாகத் தெரிந்தான்.. இவனுடன் எப்படி பேச..? எதை பேச..? இதழ் மடித்து கடித்தபடி அவள் தவித்து நின்றிருக்க, பரசுராமன் எழுந்து அவளை நோக்கி வந்தான்.
“நகர்ந்து நில்..” அவள் சாய்ந்து நின்ற கதவிலிருந்து அவளை தோள் தொட்டு நகர்த்தினான்.. கதவின் தாழ்பாளை அழுத்தி பூட்டினான்.. படபடக்கும் இமைகளுடன் அவனைப் பார்த்தபடி நின்றவளை..
“கட்டிலுக்கு போ..” என்றான்.. மறுத்து சொல்ல பயந்து வேகமாக காலை எட்டி வைத்து கட்டிலருகே போய் நின்றாள்.. கதவை பூட்டிவிட்டு வந்தவன் அவள் தோள்களை அழுத்தி கட்டிலில் அமர வைத்தான்.. தானும் அவளருகே அமர்ந்தான்.. எந்த பேச்சும் இல்லாமல் சில நிமிடங்கள் அமைதியாக கழிய, அவளது கையை மெல்ல எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.. உற்சாக ரயிலொன்று ‘ஊ’ கூவலுடன் மைதிலியின் தேகம் முழுவதும் தடதடத்து ஓடத் தொடங்கியது.
அவள் கையை விட்டு அவள் இரு கன்னங்களையும் பற்றி, முகத்தை தன்புறம் திருப்பியவன் அவளை எந்த யோசனையும் செய்யவிடாமல் நேரடியாக அவள் இதழ்களை கவ்வினான், திடுமென தேகம் பாய்ந்து விட்ட அதிக பட்ச மின் அதிர்வில் மைதிலி திகைத்து விழிக்க, ஒரு நொடி அவள் முகத்தை பார்த்தவன், பின் எழுந்து அறையின் விளக்கு சுவிட்சை அணைத்தான்..
கட்டிலில் விழுந்தவன் கூடவே அவளையும் தன்னுடன் இழுத்துக் கொண்டான்.. மூர்க்கமாய் அவளுடன் பிணைந்தவனின் ஒவ்வொரு ஆண் செய்கையிலும் தனது பெண்மை அவமானப்படுத்தப் படுவதாக மைதிலி உணர்ந்தாள்.. அதன் விளைவாக எழுந்த அவளது சிறு சிறு தள்ளல்களையும், மறுப்புகளையும் கண்டு கொள்ளாது ஒதுக்கி முழுக்க முழுக்க இரவு முழுவதும் ஆணின் கர்வத்துடன் அவளை வேட்டையாடி முடித்தான் பரசுராமன்..
அழுதுவிட்டால் இப்பாரம் கொஞ்சம் குறையலாம் என மூளை அறிவுறுத்தினாலும், அந்த அழுகையை கூட செய்யும் உணர்வற்று மனமும் உடலும் பாரமேறி கனத்துக் கிடக்க, பெண்ணாய் பிறந்ததற்காக மிகவும் மனம் நொந்து அவன் தூங்கிய பிறகும் தூங்காமல் விழித்தே கிடந்தாள் மைதிலி..
“உங்களுக்கு வந்தனாவை பற்றி முன்பே தெரியுமா..?” அடுப்படியினுள் வெங்காயம் உறித்துக் கொண்டிருந்த கிரிஜாவிடம் அங்கே நின்ற அம்மாவின் காதுகளில் விழாமல் மெல்லக் கேட்டாள்.
கிரிஜா கண்களில் நீர் வடிய மூக்கை உறிஞ்சினாள்.. சரஸ்வதி அடுப்படியை விட்டு வெளியேற, மைதிலியின் அண்ணியின் தோள் தொட்டு அசைத்து சற்று சத்தமாகவே மீண்டும் கேட்டாள்..
“கிரிஜா..” வெளியிலிருந்து சரஸ்வதி அழைக்க மைதிலியின் கையை எடுத்து விட்டு கிரிஜா வெளியே போய்விட்டாள்.. இரண்டு நிமிடங்களில் திரும்ப வந்தவள்.
“மகளின் வாழ்க்கை பற்றி அம்மாவிற்கு கவலை.. நான் நாசூக்காக கேட்டு சொல்ல வேண்டுமாம்.. ம்.. சொல்லும்மா கண்ணு.. எப்படி இருந்தது உன்னுடைய தாம்பத்யம்..?”
வெங்காயத்தால் சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தபடி இருக்க, விசமமும், வன்மமும் போட்டியிடும் குரலோடு இதழ் மலர்ந்து சிரிக்க கேட்டு நின்ற அண்ணியை கன்னத்தில் அறையும் ஆவேசம் வந்தது மைதிலிக்கு..
“அண்ணி முதலில் நீங்கள் நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்க..”
“என்னம்மா கேட்டாய்..?” கிரிஜா மீண்டும் வெங்காயம் உரிக்க ஆரம்பித்தாள்.
“அந்த வந்தனா.. அவளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..?”
“அவள் உன் கணவரின் அத்தை பெண் என்பது தெரியும்.. உன் கணவரும் அவளும் காதலித்தது தெரியும்.. இரண்டு வீட்டிலும் இருவருக்கும் திருமணம் பேசி வைத்திருந்தது தெரியும்.. உன் மாமனார் அருணாச்சலம் அண்ணாச்சிக்கும் அவர் தங்கை ஈஸ்வரியின் கணவர் சுந்தரேசனுக்கும் ஏற்பட்ட சிறு தொழில் தகராறில் இரு குடும்பத்தினருக்கிடையேயும் மனக்கசப்பு வந்து திருமணம் நின்றது தெரியும்.. இன்னும் வேறென்ன விபரங்கள் வேண்டும்..?”
“இவற்றையெல்லாம் ஏன் எங்களிடம் சொல்லவில்லை.. ஏன் மறைத்தீர்கள்..?”
ஆவேசமாய் நின்ற நாத்தனாரை அலட்சியமாக ஏறிட்டாள் கிரிஜா..
“நீ ஏன் மறைத்தாய்..?” கிரிஜாவின் கேள்வி இடியாய் தலையில் இறங்க மைதிலி விழித்தாள்..
“உன்னிடம் கல்யாணத்தை நிறுத்தி விடுன்னு திரும்ப திரும்ப கேட்டும் பிரயோஜனமில்லாமல்தான் வந்தனா என்னைத் தேடி வந்தாள்.. உன்னிடம் சொல்லி ஒன்றும் நடக்கவில்லை.. அதனால் நானாவது எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்திவிட வேண்டுமென்று கெஞ்சினாள்..”
மைதிலி அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்.. வந்தனாவை தவிர்ப்பதற்காக அவள் வீட்டிற்குள்ளேயே முடங்க, அவள் கிரிஜாவிடம் போய் விட்டிருக்கிறாள்.
“நகையும், பணமும், வசதியான வாழ்வும் மட்டுமே உனக்கு முக்கியமாக இருக்கும் போது, உன் வாழ்க்கை பற்றிய கவலை எனக்கு மட்டும் எதற்கு..? நான் பேசாமல் இருந்து கொண்டேன்..”
அடுத்தொருவளை காதலித்தவனை தன் நாத்தனார்க்கு மணம் முடிக்க காரணமாயிருந்த குற்றவுணர்ச்சி சிறிதும் இன்றி பேசினாள் கிரிஜா..
“உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா அண்ணி..?”




“இல்லையே, வந்தனா அவ்வளவு தூரம் சொன்ன பிறகும், நீயே இந்த திருமணத்தை நிறுத்தும் எண்ணத்தில் இல்லை.. நான் ஏன் நிறுத்த வேண்டும்.. இதற்காகத்தானே அடுத்தவளின் காதலரனென்றாலும் பரவாயில்லை என இந்த தாலியை கட்டிக் கொண்டாய்..?”
கிரிஜாவின் பார்வை மைதிலியின் உடலை தழுவி நின்ற இளம்பச்சை பனாரஸ் பட்டையும், கழுத்தில் கிடந்த காஞ்சிகாமணி மாலையையும், வெள்ளையும் சிவப்புமாக எனாமல் தொங்கும் பேசரி மாடல் கம்மலையும் சுட்டிக் காட்டிக் கேட்டது..
மைதிலிக்கு உடல் முழுவதும் பூரான் ஊறுவது போலானது.. இதற்காகவா இந்தக் கல்யாணம் செய்து கொண்டாள் அவள்..? தன் உணர்வுகளை சொன்னால் அண்ணி புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கை அவளிடம் இல்லை.. சை.. என்ற வெறுத்த பார்வையுடன் வெளியேற போனவளை நிறுத்தினாள் கிரிஜா..
“உன் அம்மாவிற்கு என்ன பதில் சொல்லட்டும் மைதிலி..” மைதிலி திரும்பி அவளை முறைத்தாள்.. கிரிஜா அவளருகே நெருங்கி குரலை குறைத்தாள்..
“பரசு என்னைத் தவிர வேறொருத்தியை தொடமாட்டார்.. அப்படியே கடமைக்காக தொட்டாலும், அந்நேரம் அவர் மனதில் நான் மட்டுமே இருப்பேன்.. இப்படி அந்த வந்தனா சொன்னாள் மைதிலி.. இது எந்த அளவுக்கும்மா உண்மை..?” அப்பாவியாக விழியை படபடத்தாள் கிரிஜா..
மைதிலி அவசரமாக அங்கிருந்து நகர்ந்து பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.. அவள் உடல் தீயாய் எரிந்து கொண்டிருந்தது.. ஷவரை திறந்து விட்டு அப்படியே உடைகளோடு அடியில் நின்றாள்.. குளிர் நீர் பட்டும் மனமும் உடலும் கொதிப்பு அடங்காது மேலும் மேலும் எரிந்தன..

What’s your Reaction?
+1
2
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!