Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 7

7

 

 

மதிக்கப்படாத என் பிரியங்களுக்கு
அழத் தொடங்கும் முன்,
பச்சை மூங்கிலாய்
தோள் துருத்தாதே..

“ஏய் இந்த ரவியை பாரேண்டி.. ஒரு இடத்துல நிக்கிறானா..? கோட், சூட் போட்டு அமர்க்களமா ஹாலிவுட் ஹீரோ மாதிரி கலக்குறான்.. கொஞ்ச நேரம் முழுசா பார்ப்போம்னா மின்னல் மாதிரி மறைஞ்சு போயிடுறான்.. தாலி கட்டும் போது மேடையில் பார்த்ததுதான்.. அதற்கு பிறகு இரண்டு மணிநேரமாக தேடுறேன்.. ஆளையே காணோம்.. மைதிலி நீ பார்த்தாயாடி..?”
நறுக்கென சௌமியாவின் கையில் கிள்ளினாள் மைதிலி.. 
“அடியேய் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் கொழுந்தனை சைட் அடிக்க என்கிட்டயே கேட்பாய்..?”
“என்னது உன் கொழுந்தனா..?” சௌமியா வாளைய பிளந்தாள்..
“ஆமாம் என் கொழுந்தன்..” கழுத்து தாலியை சரி செய்து கொண்டாள் மைதிலி..
“ஐய்யய்யோ டீ சுமதி இங்கே வாடி.. வந்து இந்த அநியாயத்தை பாருடி, இது எங்கேயாவது நடக்குமா..?” ஏறக்குறைய ஒப்பாரியை ஒத்திருந்தது சௌமியாவின் குரல்..
“ஏய் சௌமியா எதுக்குடி இப்படி கத்துற..?” அதட்டலோடு வந்தாள் சுமதி..
“பாருடி இவளை நேற்று வரை ரவீந்தர்-ரவி.. இன்று என் கொழுந்தனாம்.. திமிராக சொல்றாடி.. கழுத்து தாலியை வேறு தூக்கி காட்டுகிறாள்..”
“அட.. அப்படியா..?” சுமதிக்குமே ஆச்சரியம்தான்..
“என்னடி ஏதோ இல்லாத ஒன்றை நான் சொன்னது போல் பார்க்கிறீர்கள்..? ரவி என் கொழுந்தன்தானே..?”
“இருந்துட்டு போறான்.. அதுக்காக நீ அப்படி பேசலாமாடி..?”
“அப்படி.. எப்படி பேசினாள்..?”
“நம் ரவீந்தரை.. என் ரவியை சைட் அடிக்காதேன்னு சொல்றாடி.. அது என்னால் முடியுமா..? நான் இவ்வளவு நாட்களாக காலேஜீக்கு வந்ததே அதற்காகத்தானேடி..”
“உன் காலேஜ் படிப்புதான் முடிஞ்சிருச்சேடி.. இனி நீ எப்படி ரவியை பார்க்க முடியும்..?”
“அட, ஆமாம்ல.. ஏய் மைதிலி நான் இப்போ என்னடி பண்றது..?” சௌமியா இதோ அடுத்த நொடி அழுது விடுவேன் என நின்றிருந்தாள்..
“சௌமியா திரும்ப திரும்ப என்னிடமே கேட்கிறாய்.. உதை வாங்குவாய்..”
“சீ நீ எப்படிப்பட்ட சிநேகிதத் துரோகியடி..? உன் தோழியின் தவிப்பு உனக்கு புரியவில்லையா..? உன் தோழியின் வேதனையை நீ அறியவில்லையா..?” நீட்டி முழக்கியவள் திடுமென தன் பேச்சை நிறுத்தி,
“ஏன் மைதிலி ரவி மேலே என்ன படிக்க போகிறான்..? எந்த காலேஜில் சேரப் போகிறான்னு கேட்டு சொல்கிறாயா..?”
“வேண்டான்டி என்னைக் கொலைகாறியாக்காதே..”
“ரவி கூட சின்னப்பையன் வேண்டாம்.. நான் பெரிய தலைகிட்டவே போயிடுறேன்னு அன்னைக்கே மிஸ்டர் பரசுராமனை பற்றிக் கேட்டேன்.. நீதான்..”
பேசிக் கொண்டிருந்தவள் நொட்டென்று தலையில் கொட்டு வாங்கினாள்..
“ஏய் என் புருசன், அண்ணான்னு கூப்பிடு..” அவளது உரிமையில் தோழிகளுக்கு ஆச்சரியம் வந்தது..
“பாருடி தாலி கழுத்தில் ஏறி அரை நாள் ஆகலை.. அதற்குள் இவளுக்கு வருகிற பொஸஸிவ்னெஸ்iஸ..”
மைதிலிக்கே கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ எனத் தோன்றத் தொடங்கியது..
“உன் புருசனை அண்ணான்னு கூப்பிடுறதுல எனக்கு ஆட்சேபணையில்லடி, தீபாவளி போனஸ் மாதிரி ரவியும் சேர்ந்து எனக்கு அண்ணாவாயிடுவானேடி..”
சௌமியா சிவாஜி பாணியில் இழுத்து பேசி கண்ணீருக்காக கண்ணை தேயோ தேயென்று தேய்க்க.. மைதிலி பீறிட்டு வந்த சிரிப்போடு..
“கல்யாண சுந்தரமும் உனக்கு அண்ணன்தான்டி..”
“அது யாருடி கல்யாணசுந்தரம்..”
“அவரும் உன் அண்ணன்தாண்டி மிஸ்டர் பரசுராமனின் தம்பி.. மிஸ்டர் ரவீந்தரின் அண்ணன்..” சுமதி விளக்கினாள்..




“என்னடி சொல்ற அருணாச்சலம் அண்ணாச்சிக்கு மூணு பசங்களா..? எனக்கு தெரியாதே.. நான் எப்படி அந்த கல்யாணசுந்தரத்தை மிஸ் பண்ணினேன்..? எங்கே அவர்..?” சௌமியா பரபரப்பாக தேட ஆரம்பித்தாள்..
“பாவம்டி சுமதி.. நம்ம ப்ரெண்டுக்கு அந்த இன்னொரு அண்ணனை காட்டிரு..” மைதிலி பரிகாசம் செய்தாள்..
“ஏய் சும்மா சும்மா அண்ணன் அண்ணன்னா அடி பிச்சிடுவேன்.. அந்தக் கல்யாணசுந்தரத்திற்கு மாமா முறை வைக்கலாம்னு நான் நினைக்கிறேன்.. எங்கேடி அவர்..?”
கண்கள் மேல் கைகளை வைத்து தேடுதல் பாவனை செய்தவளின் கையை இழுத்துப் போய், மண்டபத்தில் கீழே நின்று கொண்டிருந்த கல்யாணசுந்தரத்தை காட்டினாள் சுமதி..
இரண்டே நிமிடங்களில் சௌமியா சோர்வுடன் அறைக்குள் வந்தாள்..
“மைதிலி அந்தக் கல்யாணசுந்தரத்தை நான் அண்ணனாகவே ஏத்துக்கிறேன்டி..” மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்..
மைதிலியும், சுமதியும் சிரித்தனர்..
“சிரிக்காதீங்கடி வில்லிகளா..? ஏன்டி அந்த கல்யாணசுந்தரம் இந்த வீட்டு பையன்தானா..? பார்க்க கேயான் மாதிரி ஒரு வகையில் பழம் மாதிரி இருக்கிறாரே..”
சௌமியா சொல்வது உண்மைதான்… அருணாச்சலத்தின் மூன்று ஆண்பிள்ளைகளில் பரசுராமனும், ரவீந்தரும் களையும் கம்பீரமுமாக இருக்க, நடுவில் பிறந்த கல்யாணசுந்தரம் கொஞ்சம் அப்பாவியான அமைதியான பையனாக இருப்பான்.. முறுக்கிய உடம்பும், முறைத்தல் முகமும், சிவந்த பார்வையும் இல்லாது சாதாரணமானவனாக இயல்பானவனாக இருப்பான்.. வெளிப்பார்வைக்கு உகந்தவனாக இருக்க மாட்டான்.. இதைத்தான் சௌமியா ஏமாற்றத்துடன் புலம்பிக் கொண்டிருந்தாள்..
“கண்ணுக்கு தோதாக இருந்த இரண்டு பேரையும் அண்ணனாக நினைக்க சொல்லிட்டீங்க.. நானாகவே ஒருத்தனை அண்ணனாக நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.. இனி இங்கே இருக்கிறதுல எனக்கு என்ன பிரயோஜனம் இருக்க போகுது..? நான் பேசாமல் வீட்டுக்கு போயிடலாம்னு நினைக்கிறேன்..”
“அம்மா தாயே சௌடாம்பிகையே, உன் பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.. நீ சீக்கிரமே இங்கிருந்து போ..”
மைதிலியும், சுமதியும் ஒன்று போல் கையெடுத்து வணங்கி வேண்ட..
“ஏன்டி…? எதுக்காகடி.. நான் போகனும்…? நான் நாளை வரை இருந்து கறிச்சாப்பாடெல்லாம் முடிச்சிட்டுத்தான் போவேன்..” தலையை சிலுப்பினாள்..
“சரியான ஏழரைடி நீ..” மைதிலி சலிக்க,
“என்னது சனியனா நான்.. ஏய் மைதிலி, பரமசிவன் கழுத்தில் ஏறிட்டேன்னு ஆடாதடி..”
“பரமசிவன் கழுத்து இல்லைடி பரசுராமன் தலையில்..” சுமதி விளக்க..
“ஏய் நீங்க சும்மா இருக்க மாட்டீங்களாடி..” மைதிலி முகம் சிவக்க..
“அட ஏய் அவள் முகத்தை பாருடி பரசுராமன்கிற பேருக்கே எப்படி சிவக்குதுன்னு..” தோழிகள் இருவரும் மைதிலியை சூழ்ந்து கொண்டு கேலி பேசினர்..
“சௌமியா என்ன செய்றீங்க இங்க..?”
காதில் விழுந்த குரலில் சௌமியா பரவசமாகி திரும்பி பார்த்தாள்.. ரவீந்தர் நின்றிருந்தான்..
“ரவி.. என்னையா கூப்பிட்டாய்..? என் பெயரையா சொன்னாய்..?”
“உன் பெயர்தானே சௌமியா..?”
“ஆமாம் ஆமாம் நான்தான் சௌமியா.. என் பெயர்தான் சௌம்யா.. நீ உச்சரிக்கும் போதுதான் என் பெயர் ரொம்ப அழகானதுன்னு எனக்கே தெரியுது..”
“சுமதி மைதிலிகிட்ட என்ன பேசுறீங்க..? சும்மா சும்மா அவளை நைக்காதீங்க.. அவள் ரெஸ்ட் எடுக்கட்டும் அவளை விடுங்க..”
ரவீந்தர் சுமதியிடம் பேசப் போயிருக்க, தான் உணர்ச்சிகரமாக பேசிய வசனம் அவன் காதில் விழுந்ததா இல்லையா..? சௌமியா சந்தேகத்திற்குள் போனாள்..
“சரிதான்.. நீங்க இரண்டு பேரும் சரியான ஜோடிதான்.. கொஞ்ச நேரம் முன்புதான் அவள் என் கொழுந்தன்னு உறவு கொண்டாடினாள்.. இப்போது நீ எங்களை இரண்டு வார்த்தை அவளோடு பேசக்கூட விடமாட்டேன்கிற..?” சுமதி பெருமூச்சோடு பார்த்தாள்..
“மைதிலி அங்கே அண்ணன் உனக்காக தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.. நீ அவரிடம் போ.. இவர்களை நான் கவனித்துக் கொள்கிறேன்..”
“என்ன கவனிப்பாய் ரவி..?” சௌமியா ஆவலுடன் அவன் முன் வந்து கேட்க,
“எங்கள் வீட்டு திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை கவனிக்கம் விதத்தில் கவனிப்பேன்..” ரவி அலட்டாமல் சொன்னான்..
“அடப்போடா..” சௌமியா தலையில் கைவைத்தாள்.
“ரவி உன் அண்ணா மைதிலிக்காக காத்திருக்கிறாரா..? இங்கே மைதிலியும் அப்படித்தான்.. சும்மா சொல்லக் கூடாது பரசுராமன்னு பெயர் சொன்னாலே போதும் மைதிலியின் முகம் அப்படியே சிவந்து போகிறது.. அதை நீ பார்க்காமல் போனாயே..”
சுமதி ஒத்த வயதினளாய் தன் தோழியை கிண்டல் செய்ய சக தோழனையும் பங்கு கொள்ள அழைத்தாள்.. 
ரவீந்தர் புன்னகையோடு மைதிலியின் முகம் பார்க்க, மைதிலியின் முகம் இன்னமும் அதிகமாக சிவந்தது.. இவர்கள் எல்லோரும் இப்படியெல்லாம் கேலி பேசுவார்களென்றுதான் அவள் ரவீந்தரை நேரில் பார்க்கக் கூட தயங்கிக் கொண்டிருந்தாள்..
“ஏய் சும்மா இருங்கடி..” தலை கவிழ்ந்து அவள் முணுமுணுக்க நட்புகள் மூவரும் அவளை சுற்றி நின்று..
“அடடா என்ன வெட்கம்..” எனக் கேலியை தொடர,
“ரவி நீயுமா..? சும்மா இரு..” தன் கையிலிருந்த மணமகள் பூச்செண்டை மைதிலி ரவியை நோக்கி எறிந்தாள்.. அதனை சரியாக அவன் கேட்ச் பிடித்து சிரிக்க..
“என்ன செய்கிறீர்கள்..?” கர்ஜிப்பாய் பரசுராமனின் குரல்.. சட்டென கேலியும், கிண்டலும் அந்த இடத்திலிருந்து துணி துடைத்தாற் போல் மறைந்து போனது..
“சும்மாண்ணா பேசிட்டு இருந்தோம்..”
“ம்.. நம்ம சொந்தக்காரங்க முன்னாடி இப்படி கத்திட்டு இருந்தீங்கன்னா, நாலு பேர் முதுகுக்கு பின்னாடி வேறு மாதிரி பேசுவாங்கள்ல, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கலாம்ல..”
பரசுராமனின் குரலில் உண்மையான கோபமே தெரிய, 
“சாரிண்ணா..” ரவீந்தர் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
மைதிலி தலையை ஒரேடியாக குனிந்து கொள்ள,
“இதென்னடி பேசி சிரிக்க கூட தடையா..?” சுமதி முணுமுணுத்தாள்..
“மைதிலி நம்ம தலைவருக்கு இது மாதிரி கூட்டமெல்லாம் கொஞ்சம் அலர்ஜி.. கண்டுக்காதே..” ரவீந்தர் மைதிலி பக்கம் சாய்ந்து சொல்லிவிட்டு தன் கையிலிருந்த பூச்செண்டை அவளிடம் நீட்டினாள்..
இன்னமும் தீர்க்கமாய் மேலே விழுந்து கொண்டிருந்த கணவனின் பார்வையில் உள்ளங்கை வியர்க்க, பூச்சென்டை வாங்கிக் கொண்டாள் மைதிலி.. சௌமியாவும், சுமதியும் ஒதுங்கிக் கொள்ள, ரவீந்தர் வேலையென தள்ளிப் போய்விட, ஏனோ ஒரு அசௌகர்யமான உணர்வுடன் கணவன் அருகில் அமர்ந்தாள் மைதிலி..
“இப்படி ப்ரெண்ட்சோடு சேர்ந்து கூத்தடிப்ப-தெல்லாம் அம்மா அப்பாவிற்கு பிடிக்காது.. இதெல்லாம் எங்க வீட்டு பழக்கமும் கிடையாது.. இதுவரை நீ எப்படி இருந்தாயோ.. இனி எங்கள் வீட்டு பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நீ மாறித்தான் ஆக வேண்டும்..” உள்ளத்தை உறைய வைக்கும் தன்மையோடு இருந்தது பரசுராமனின் குரல்..
மைதிலி மனம் நைந்தது.. லேசாக கண்கள் கூட கலங்கி விட்டது.. மெல்ல தலையை அசைத்தாள்..
“ம்.. இப்போ நம் சொந்தங்கள் ஒவ்வொருவராய் திருநீறு பூச வருவார்கள்.. கவனத்தை இங்கே வைத்து உன் உறவினர்களை எனக்கு சொல்லு.. என் உறவினர்களை நான் சொல்வதை மண்டையில் ஏற்றிக் கொள்..”




இன்னமும் கடுமை குறையவில்லை அவன் குரலில்.
“இது என் அம்மாவுடைய அத்தை பெண்ணின் மகள், இது அப்பாவுடைய சித்தப்பாவின் சம்பந்தி, இது பாட்டியுடைய அக்காள் பேரன்..” இப்படி அவன் அறிமுகம் செய்த உறவுகள் யாரும் அவள் மண்டைக்குள் ஏறவே இல்லை..
வெறுமனே தலையை அசைத்து நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு கைகளில் அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டாள்..
“இவுங்க யாரு..?” அவள் பக்கத்து உறவினர்கள்.. பற்றி இரண்டொரு முறை கேட்டுவிட்டு, அவள் பேச திக்கி திணற, தானாகவே அவர்களின் சொந்தங்களை கேட்டு தெரிந்து கொள்ள தொடங்கினான்.. எந்த இடத்திலும் எந்த தயக்கமோ, பிசிறோ இன்றி இயல்பான மணமகனாக நடந்து கொண்டான்..
மைதிலிதான் தனக்குரிய இடத்தில் இல்லாமல் அந்நிய இடத்தில் மாட்டிக் கொண்ட, பொறி எலியாய் தடுமாறி நின்றிருந்தாள்..
நிமிர்ந்து நில், கேமெராவை பார், சிரி, திருநீரை துடைத்துக் கொள் என அருகிருந்து அவளுக்கான கட்டளைகளை பிறரியாமல் ரகசியமாக பிறப்பித்துக் கொண்டிருந்தான் பரசுராமன் ஒரு கட்டத்தில் இந்த சாதாரண செய்கைகளை கூட அவனது பேச்சு கேட்காமல் தன்னால் செய்ய முடியாதோ என்ற சந்தேகம் மைதிலிக்கு வந்துவிட்டது.. அந்தளவு அவனது ரகசிய குரல் அவளுள் வேரூன்றி விட்டது..
திருமண நிகழ்வுகள் முடிந்து அனைவரும் மண்டபத்தை விட்டு களைய, புது மணமக்கள் மறுவீடு விசேசமாக, மணமகன் வீட்டிற்கு வந்தனர்.. மகாராணியும், சித்ரலேகாவும் சேர்ந்து ஆரத்தி எடுத்து புது மணமக்களை தங்கள் வீட்டிற்குள் அழைத்துக் கொண்டனர்..
கசகசவென அறிமுகமற்ற வேற்றாட்கள் நிறைந்த புது சூழல் மைதலியின் மனதில் ஒரு வித மிரட்சியை உண்டு பண்ணியது.. சிறு பிள்ளைகளும், பெண்களும் அவளை சுற்றி அமர்ந்து ஆராய்வு பார்வையும், விளக்க கேள்வியுமாக இருக்க.. இவ்வளவு நேரமாக அவளை முட்டைக் கோழி போல் அடைகாத்து வந்த பரசுராமன் ஆள் அந்தர்த்தனம் ஆகிவிட்டான்.. பாதுகாப்பான இடத்தில் மனைவி இருக்கிறாலென்ற மனநிம்மதியோ..? சூழ இருந்தவர்களை கவராது தனது பார்வை சுழற்றி கணவனை தேடிக் கொண்டிருந்தாள் மைதிலி..
அவள் அமர வைக்கப்பட்டிருந்த சோபாவிற்கு பக்கவாட்டில் இருந்த பெரிய சன்னல்வழியாக தெருப்பக்கம் காணக் கிடைக்க, தெருவின் எதிர்புறம் அந்த வீடு அவள் கண்ணில் பட்டது.. எதிர் வீடு.. வந்தனா, மைதிலியின் மனம் சுளீரென்றது.. இவ்வளவு நேரமாக இவளை எப்படி மறந்தேன்..?
இன்று இரவே அவரிடம் கேட்டுவிட வேண்டும்.. என அவள் முடிவெடுத்தது வந்தனாவை பற்றிய விபரங்களை, கணவனுடனான தனிமை இரவு எதிர்பார்ப்பை விட ஒரு பயத்தையே அவளுக்குள் விதைத்துக் கொண்டிருந்தாலும், அவனிடம் வந்தனாவை பற்றி பேசி விடுவதில் உறுதியாகவே இருந்தாள்.. ஆனால் அவன்..

What’s your Reaction?
+1
4
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Priya
Priya
4 years ago

Nice mem

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!