Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 6

6

என் தேவதை சிறகுகளை 
மென்று கொண்டிருக்கும்..
உன் மீசையை
என்ன செய்வது..?

“பொண்ணும் மாப்பிள்ளையும் கையை சேர்த்து வைங்கோ..” ஐயரின் குரலின் பின் தன் முன் நீண்ட அந்த அகன்ற கரங்களை பார்த்தபடி மெல்ல தன் கையை அக் கையின் மேல் வைத்தாள் மைதிலி.. நண்டின் கால்களாய் அவள் கையை பற்றிக் கொண்ட அக் கை தாம்பாளத்திற்கு நேராக அவள் கையை எடுத்துச் செல்ல, இருவரது கைகளின் மேலும் பால் வார்த்து ஏதோ மந்திரங்கள் ஜெபிக்கப்படத் துவங்கியது.. அழுத்தமும் ஆளுமையுமாய் தன் கையை பற்றியிருந்த பரசுராமனின் கையில் ஏதோ 
ஒரு வகை ஆறுதல்.. இதோ திருமணம் நடந்து கொண்டிருக்கிறது என்ற நிம்மதி மைதிலிக்குள் எழுந்தது.
முன்னால் எரிந்து கொண்டிருந்த யாகத் தீயில் எழுந்த புகையை தாண்டி எதிரில் பார்வையை கூர்மையாக்கினாள்.. அங்கே ரவீந்தர் இருந்தான்.. வருபவர்களை வரவேற்க உட்கார வைக்க, சாப்பிட அனுப்ப என பரபரப்பாக மண்டபம் முழுவதும் அலைந்து கொண்டிருந்தான்.. அடிக்கடி மேடையை திரும்பிப் பார்த்து இவளுக்கு ஒரு புன்னகையை கொடுக்க மறக்கவில்லை.. எப்படிப்பட்ட தோழன் இவன்.. மைதிலியின் மனம் நெகிழ்ந்தது.. அவள் மனம் முதல் நாள் இரவுக்கு போனது..
அவளது குரலில் மண்டப இருளுக்குள் வந்து பார்த்த ரவீந்தர் வியப்புடன் விழி விரித்தான்..
“மைதிலி.. நீயா..? என்ன இந்த நேரத்தில்..?”
எப்படி சொல்ல எச்சில் விழுங்கி மௌனம் சுமந்தாள் மைதிலி..
“நாளை காலை உன் கருத்தில் தாலி ஏறும் நிச்சயம் என்றபின் இன்று இரவுதான் என்னைப் பார்த்து பேச உனக்கு தோனியதா மைதிலி..?”
“இல்லை ரவி.. எனக்கு பயமாக இருக்கிறது..”
“என்ன இல்லை..? என்ன பயம்..?”
“வ.. வந்து இந்த கல்யாணம் நின்றுவிடுமோ.. என்று பயமாக இருக்கிறது..”
ரவீந்தர் பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தபடி நின்றான்.. பின் அவளை கொஞ்சம் நெருங்கி அவளுக்கு நேராக நின்றான்..
“மைதிலி நிமிர்ந்து என் கண்களைப் பார்த்து சொல்.. இந்தத் திருமணம் உனது முழு சம்மதத்துடன் தான் நடக்கிறதா..?”
தயக்கமின்றி நிமிர்ந்து அவன் கண்களை சந்தித்தாள் மைதிலி..
“ஆமாம்..”
“இந்த திருமணத்தில் உனக்கு எந்த ஆட்சேபமும் இல்லையே..?”
“நிச்சயம் இல்லை..”
இருவர் பார்வையும் தயக்கமோ, கல்மிசமோ இன்றி நேருக்கு நேராக சந்தித்து நின்றன.. ரவீந்தரின் இதழ்கள் மெல்ல விரிந்து புன்னகைத்தன.. முகம் மலர்ந்து கிடந்தது..
“அவ்வளவுதான் மைதிலி.. இந்த சம்மதத்தை இந்த உறுதியை உன் வாயிலிருந்து கேட்க வேண்டுமென்று தான் உன்னிடம் தனிமையில் பேச சுற்றி சுற்றி வந்தேன்.. அதென்னவோ அதற்கான சந்தர்ப்பங்கள் அமையாமல் தள்ளிப் போய் கொண்டே இருந்தது.. நீயும் என்னை தவிர்த்துக் கொண்டே இருந்தாய்..”
“அ.. அது.. உ.. உன்னிடம் பேச எனக்கு கூச்சமாக இருந்தது..”
“சரிதான்.. என்னிடம் பேசவே கூச்சமா உனக்கு..? சரி விடு இப்போது உன் பிரச்சனை என்ன..?”
“யாரோ சிலர் இந்த திருமணத்தை நிறுத்த ஏதோ சதி செய்கின்றனர் ரவி..”
“அட.. அது யாரு..?” ரவீந்தர் இடுப்பில் கை வைத்து சுவாரஸ்யமாக கேட்க, மைதிலி அவனை முறைத்தாள்..




“உனக்கு இந்த கல்யாணம் நிற்பது விளையாட்டாக இருக்கிறதா..?”
“ஐயோ.. இல்லைம்மா இல்லை.. நான் என் மனமார இந்த கல்யாணம் நடக்க வேண்டுமென்றுதான் நினைக்கிறேன்.. போதுமா..? இப்போது சொல்லு.. யார் என்ன சொன்னார்கள்..?”
“அது.. நான் மாடிப்படியின் அடியில் நின்று கொண்டிருந்த போது..”
“வெயிட்.. வெயிட் இந்த விபரங்களையெல்லாம் நீ சொல்ல வேண்டிய இடம் நானல்ல..”
“வேறு யாரிடம்..?”
“வா..” கையசைத்து அவளை பின்வருமாறு சைகையிட்டு விட்டு ரவீந்தர் அவளை அழைத்து சென்ற இடம் மணமகனின் அறை..
அறைவாசலில் தயங்கி நின்ற மைதிலியை “மைதிலி உங்கள் திருமணம் நீங்களேதான் பார்த்துக் கொள்ள வேண்டும் வா..” கொஞ்சம் குறும்பாக சொல்லிவிட்டு அறைக்கதவை திறந்து உள்ளே போனான்.. மைதிலி மனம் படபடக்க மெல்ல அறையினுள் நுழைந்தாள்..
“அண்ணா..” ரவீந்தரின் அழைப்பிற்கு திரும்பி பார்த்த பரசுராமனின் பார்வை தம்பியை தாண்டி பின் நின்றவளின் மேல் ஆழமாக படிந்தது..
“என்னடா..?”
“என்னவோ பேசனுமாம்..” தனக்கு பின்புறம் கைகாட்டி விட்டு அவன் ஒதுங்கிக் கொள்ள மைதிலிக்கு தலை சுழல்வது போலானது.. அடப்பாவி இவன் என்ன இப்படி மாட்டி விட்டுட்டான்..?
“என்ன விசயம்..?” பரசுராமன் இப்போது நன்றாக திரும்பி அவளை பார்த்தான்.. மைதிலியின் தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக் கொண்டன..
“இ..இல்லை.. வ.. நா.. நான்..” ஒற்றையெழுத்துக்கு மேல் எதுவும் பேச முடியுமென்று மைதிலிக்கு சத்தியமாக தோன்றவில்லை..
“அதிகாலை முகூர்த்தமாச்சே… சீக்கிரம் எழுந்திரிக்கனுமே… இன்னும் தூங்கலையா…?” பரசுராமனின் குரலில் இப்போது அதட்டல் வேறு சேர்ந்து கொள்ள, மைதிலியின் வாயிலிருந்து வந்த ஒன்றிரண்டு எழுத்துக்களும் நின்றுவிட்டன..
“ஐயோ அண்ணா அவள் ஏற்கெனவே ரொம்ப அமைதியான பொண்ணு.. அதிகம் பேச மாட்டா.. நீங்க இப்படி அதட்டுனீங்கன்னா.. சுத்தமா பேசவே மாட்டா.. கொஞ்சம் சாப்டாக கேளுங்கண்ணா..”
“ப்ச், என்னடா சாதாரணமாகத்தானே கேட்டுட்டு இருக்கேன்.. இப்போது என்ன பிரச்சனையாம்..? உன்னிடம் சொல்லியிருப்பாளே.. நீதான் சொல்லேன்..”
“யாரோ ஏதோ பேசிக் கொண்டிருந்தார்களாம்.. அதை இவள் கேட்டிருப்பாள் போல.. என்ன பேசினார்கள் மைதிலி..?”
மைதிலி பரசுராமனை விட்டு தன் பார்வையை திருப்பி ரவீந்தர் மேல் படித்துக் கொண்டாள், பரசுராமனை பார்த்தால் தொடர்ந்து தன்னால் பேச முடியுமென்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை..
“இரண்டு பேரோ.. மூன்று பேரோ.. நிழல் மட்டும் தான் பார்த்தேன்.. எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்திவிட வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்தார்கள்.”
“ம்..” பரசுராமன் தாடையை தடவியபடி யோசனையில் விழ.. “யாராக இருக்கும் அண்ணா..?” ரவீந்தர் கேட்டான்.
“அவர்கள் பேசியதை.. நீ கேட்டதை அப்படியே வார்த்தை மாறாமல் சொல்லு..” கேட்க வசதியாக கட்டிலின் மேல் சம்மணமிட்டு அமர்ந்தான்.. மைதிலி பேச வாய் திறந்த போது “வசதியாக உட்கார்ந்து கொண்டு நிதானமாக சொல்லு..” என எதிரிலிருந்த ப்ளாஸ்டிக் சேரை கை காட்டினான்..
ரவீந்தர் அந்த சேரை மைதிலிக்கு நகர்த்திப் போட, அதில் அமர்ந்து கொண்டவள், சொல்ல ஆரம்பித்தாள்.
“மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நாளை காலை புரளியைக் கிளப்பிவிடுவோம்..”
“எல்லோரும் நம்ப வேண்டுமே..”
“ஆபத்தில்லாத சிறு சிறு சிவகாசி வெடிகளை மண்டபத்தினுள் ஆங்காங்கே வெடிக்க விடுவோம்..”
“போலிசிடம் இங்கே வெடிகுண்டு இருப்பதாக இங்கிருந்தே போன் செய்து அவர்களை வரவழைப்போம்..”
“இந்தப் பரபரப்பெல்லாம் முடிந்த பிறகு திரும்பவும் கல்யாணத்தை நடத்தி விடுவார்களே..”
“இல்லை இன்று இந்த அதிகாலை முகூர்த்தம் ஒன்றுதான் இருக்கிறது.. முகூர்த்தம் தவறிடுச்சுன்னா, அருணாச்சலம் அண்ணாச்சி திருமணத்தை இன்று நடத்த அனுமதிக்க மாட்டார்.. அடுத்து இரண்டு நாட்களுக்கும் நல்ல முகூர்த்தம் கிடையாது.. அதனால் இந்த திருமணம் இப்போதிற்கு தள்ளிப் போகும்..” இந்த மாதிரி பேசிக் கொண்டிருந்தார்கள்..
“அண்ணா மைதிலி சொல்வதை வைத்துப் பார்த்தால்..” தம்பியை கை உயர்த்தி நிறுத்தியவன்.
“ம் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது நீ போய் நம் ஆட்களை வரச்சொல்.. மண்டபம் முழுவதும் வெளியே யாருக்கும் தெரியாமல் அவர்கள் பரவி நிற்கட்டும்.. இந்த மாதிரி சிவகாசி வெடிகளை முட்டாள்தனமாக வைக்க வருபவர்களை கண்டு பிடித்து தடுக்க சொல்.. நம் ஏரியா இன்ஸ்பெக்டரிடம் நான் போனில் பேசி விடுகிறேன்.. அவரையும் நான்கு கான்ஸ்டபிள்ளோடு இங்கே வரச் சொல்லி விடலாம்..”
“சரிண்ணா..” ரவீந்தர் வேகமாக கிளம்பினான்..
“நீ உன் அறைக்கு போய்விடு மைதிலி.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..” இவளிடம் சொல்லிவிட்டு போனான்..
மைதிலி அவன் பின்னாலேயே வேகமாக வெளியேற போக,
“ஒரு நிமிடம் இரு..” அவளை நிறுத்தினான் பரசுராமன்.. ஏதோ யோசித்தான்..
“நானே உன் அறை வரை துணைக்கு வருகிறேன் வா..” எழுந்து அவளை முன்னால் போகச் சொல்லி பின்னால் நடந்தான்.
“கல்யாணப் பெண்ணைக் கடத்திவிடலாமென்று இன்னொரு திட்டத்தை அவர்கள் போட்டு விடக் கூடாது..” தனக்குள் போல் முணுமுணுப்பாய் அவன் சொல்ல மைதிலிக்கு திக்கென்றது.. அடப்பாவிகளா.. அப்படி வேறு செய்வார்களா.. நடந்து கொண்டிருந்தவள் டக்கென்று நின்றுவிட.. அவள் பின்னால் வந்தவன் மேல் லேசாக உராய நேர்ந்தது..
“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்வேன்.. இவ்வளவு பயம் வேண்டாம்..” மிக அருகே பின்னின்று பேசியவனின் குரல் அவள் காது மடல்களை உரசிச் சென்றது.. சிலிர்த்து விட்ட உடலுடன் வேகமாக திரும்ப நடக்க தொடங்கினாள் அவள்..
அந்தப் பெரிய கல்யாண மண்டபத்தின் முதல் மாடியிலிருந்த மணமகன் அறையிலிருந்து, இரண்டாவது மாடியிலிருந்த மணமகள் அறை வரை அவளுக்கு துணையாக வந்தான் பரசுராமன்.. கொஞ்சம் பயந்தாள் என்றோ என்னவோ இப்போது அவளின் மிக அருகேயே பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தான்.. அவன் மூச்சுக் காற்று அவள் பின் கழுத்தை தொட்டு உரசியபடியே வந்தது..
முதல் மாடிக்கும், இரண்டாவது மாடிக்கும் இடைப்பட்ட தூரங்கள் இரண்டு மைல்களாவது இருக்கும் என்று அன்று தான் மைதிலிக்கு தெரிய வந்தது.. திடுமென அந்த மைல்கள் குறுகி அவள் அறைக்கதவின் முன் நின்றாள்.. அவள் பின்னிருந்து அறைக்கதவின் கைபிடி மேல் கை வைத்தவன், திறக்காமல் நின்றபடி..
“யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம்.. நாளை காலை குறித்த நேரத்தில் திருமணம் நடக்கும்..” என்றான்.. கதவை திறந்து விட்டான்.. 
திருப்தியான தலையாட்டலுடன் அவனை திரும்பியும் பாராமல் அறைக்குள் புகுந்து கொண்டாள் மைதிலி..




“மாமன் சாஸ்திர மாலையை சுழட்ட வேண்டாம்னு ஐயர் சொன்னாரு..” எதிரேயிருந்து நினைவுறுத்தியவனின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள், அதிகாலை தாய்மாமன் சாஸ்திரத்திற்கு தன் கழுத்தில் போட்ட மாலையை விட்டு விட்டு, அடுத்த மாலையை சுழற்றினாள்..
பெண்ணின் கழுத்தில் நிறைய மாலை, முகம் மறைக்கிறது.. சரி செய்யுங்க.. என போட்டோகிராபர் சொல்ல, தன் கழுத்து மாலைகளை குறைக்க அவள் நினைத்த போது பரசுராமன் அவளுக்கு குறிப்புகள் கொடுத்தான்..
மெல்லிய தலையாட்டலுடன் தோழிகளின் துணையோடு மாலைகளை சரிசெய்து கொண்டாள்..
திருமாங்கல்யம் தட்டில் வைக்கப்பட்டு பெரியவர்களின் ஆசீர்வாதத்தின் பிறகு மண்டப வலம் வரத்துவங்கியது.. அடிக் கண்ணால் மண்டபத்தை ஆராய்ந்து போது, வெள்ளை வேட்டி சட்டையில் கட்டுமஸ்தான உடம்போடு ஆங்காங்கே நிறைய பேர் நிற்க கண்டாள்.. ரவீந்தர் அடிக்கடி அவர்களிடம் போய் பேசிக் கொண்டும், எச்சரித்துக் கொண்டும் இருந்தான்..
இவர்கள்தான் இவன் சொன்ன “நம் ஆட்களா..” அதாவது அடி ஆட்கள்.. இப்படி நினைத்து விட்டு உள்ளூற தன் தலையை கொட்டிக் கொண்டாள்.. சீச்சி அப்படி நினைக்ககூடாது இவர்கள் எஜமான விசுவாசிகள்.. தன் நினைப்பை மாற்றிக் கொண்டாள்..
அந்த விசுவாசிகள் திருமணத்திற்கு வந்திருக்கும் யாருடைய கவனத்தையும் கவரா வண்ணம் மிக இயல்பு போல், திருமண வேலை செய்ய வந்த வேலையாட்கள் போல் நின்றிருந்தனர்.. மைதிலிக்கு நிலவரம் தெரியுமாதலாலேயே அவர்கள் இனம் காண அவளால் முடிந்தது.. மற்றவர்களால் அப்படி அவர்களை கண்டறிய முடியாது..
“இங்கே கவனித்து மந்திரம் சொல்…” முணுமுணுப்பாக என்றாலும் அதிகாரமாய் கேட்டது பரசுராமனின் குரல்.. அவள் தனது அலைந்தாடும் விழிகளை நகர்த்தி அவன் பக்கம் பார்த்த போது, அவன் ஐயர் சொன்ன மந்திரங்களை வெகு திருத்தமாக திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான்..
அது எப்படி இப்படி அச்சு பிசகாமல் இவனால் சொல்ல முடிகிறது.. மைதிலி பார்வையை அவன் உதடுகளில் பதித்து கவனிக்க, ஒரு நொடி மந்திர அசைப்பை நிறுத்தியவன் கர்ச்சீப்பால் இதழ் ஒற்றியபடி, “சும்மா பாவனைதான்..” என்றான்..
சட்டென எழுந்து விட்ட சிரிப்பை கேமெரா கோணங்களுக்கு பயந்து மறைத்துக் கொண்டு தானும் உதடசைக்க ஆரம்பித்தாள் மைதிலி.. மண்டபம் முழுவதும் பறந்து பறந்து படமெடுத்துக் கொண்டிருந்தது ஒரு கேமெரா.. இரண்டு பெரிய ஸ்கிரீன்களில் மேடை நிகழ்ச்சிகளும், இரண்டு பெரிய ஸ்கிரீன்களில் மண்டபத்தின் பிற பகுதிகளும் நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.
இத்தனை ஏற்பாடுகளுக்கிடையே யாரும், எதுவும் செய்ய முடியாது என்ற மனஉறுதி மைதிலியிடம் உண்டானது.. திருமாங்கல்ய தட்டு மேடையை நோக்கி வரத்துவங்கியது.. மைதிலியிடம் படபடப்பு கூடியது.. இதோ இன்னும் சற்று நேரத்தில் மாங்கல்யம் அவள் கழுத்தில் பூட்டப்பட்டு அவள் பரசுராமின் மனைவியாகி விடுவாள்..
மேடைக்கு வரும் வழியில் தட்டை ஏந்தி வந்தவரிடம் இருந்து அதனை வாங்கிக் கொண்ட ரவீந்தர் தானே மேடையை நோக்கி எடுத்து வரத் துவங்கினான்.. மைதிலியின் நினைவுகள் மீண்டும் தோழனிடம் பாய்ந்தன.
“என் அண்ணாவிற்கு உன்னை மணம் பேசுவது எனக்கு தெரிய வந்தது மைதிலி.. எங்கள் குடும்பம் கொஞ்சம் கடாமுடா குடும்பம்.. நீ அமைதியான பெண்.. உனக்கு எங்கள் குடும்பம் ஒத்து வருமென்று எனக்கு தோன்றவில்லை.. உங்கள் வீட்டில் உன் சம்மதத்துடன் தான் இந்த திருமண ஏற்பாடுகளை செய்கிறார்களா என்று தெரியவில்லை.. இவற்றையெல்லாம் உன்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும், உனக்கு மறுப்பு இருப்பின் இந்த திருமணத்தை நிறுத்தி விடவும்தான், உன்னை சந்தித்து பேச துடித்துக் கொண்டிருந்தேன்.. அதற்கு ஏதேதோ தடங்கள் வந்து கொண்டே இருந்தன..”
அன்று காலை முகூர்த்த நேரத்திற்கு முன் மண்டபத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக இருப்பதாகவும், அவள் பயப்பட வேண்டியதில்லை என்றும் அவளிடம் தகவல் சொல்ல அவள் அறை வாசலில் அவளை சந்தித்தான் ரவீந்தர்… தனது தோழனின் நேர்மையில் மைதிலியின் மனது அவன்பால் நட்பாய் கனிந்தது.. அவன் வீட்டு மனிதர்களை கூட எண்ணாது எனக்காக திருமணத்தை நிறுத்தவும் தயார் என்று கூறுகிறானே..
“என் வருங்கால கணவரின் தம்பி என்ற உறவு முறை தெரிந்ததும் உன்னிடம் பேச எனக்கு ஏதோ கூச்சமாக இருந்தது ரவீந்தர்..” மைதிலி தன் நிலையை சொன்னாள்..
“ஐய்யய்யோ நான் என்ன பாவம் பண்ணினேன்..? என்னிடம் எதற்கு கூச்சம்..?”
ரவீந்தரின் குரல் தோழமையுடனான கேலியுடன் கேட்க ஆரம்பிக்கவும் முகம் சிவக்க அறையினுள் வந்துவிட்டாள் மைதிலி.. இதோ இப்போது கேலிப் புன்னகையோடு அவளை பார்த்தபடிதான் மாங்கல்ய தட்டை எடுத்துக் கொண்டு வருகிறான்..
மைதிலி வேகமாக தலையை குனிந்து கொள்ள, அவளது தாழ்ந்த பார்வையில் அவளைக் கடந்து போன மாங்கல்யம் பட்டது.. அதனைக் கையில் எடுத்த வலிய கரங்களும்..
“கட்டி விடவா..?” கிசுகிசுத்த குரலில் விழித்து நிமிர்ந்து பார்த்த போது, கையில் தாலியோடு அவள் முகம் பார்த்திருந்தான் பரசுராமன்..
புதுவாழ்விற்கு என்னிடம் கேட்கும் அனுமதியா, ஆயிரமாயிரம் மல்லிகள் ஒரே நேரத்தில் மைதிலியின் மனதின் மொட்டவிழ்ந்து மணக்க துவங்க, ‘ம்’ என்ற ஒற்றை எழுத்து சம்மதத்துடன் தலை குனிந்தாள் அவள்.. பரசுராமன் அவள் கழுத்தில் தாலியை கட்டி அவளைத் தன் மறுபாதியாக மாற்றிக் கொண்டான்.. கோடி கோடியான மலர்கள் மணமக்கள் மேல் குவிந்தன.. மிக இனிதாக மைதிலியின் திருமணம் நடந்து முடிந்தது..

What’s your Reaction?
+1
8
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
lavanya
lavanya
4 years ago

super…

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!