Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 4

4

புரிந்தென்ன ஆகப் போகிறது..
இப்போதைக்கு லயித்துக் கிடக்கிறேனே
உன் புல்லாங்குழல் இசையில்..

“அம்மா.. அம்மா..” ராகவனின் குரல் அவன் வாசலில் நுழையும் போதே ஆரம்பித்துவிட்டது..
“ராகவா.. வாடா.. வா.. எப்படியிருக்கிறாய்..? கிரிஜா எப்படி இருக்கிறாள்..?”
விருந்தாளி போல் சொந்த மகனை வரவேற்று உபசரித்தாள் சரஸ்வதி..
“அப்பா ஏன் இப்படி செய்கிறார்..?” தாயின் வரவேற்பு எதற்கும் பதில் சொல்லாது சண்டையிடுவதில் நின்றான் மகன்..
“எப்படிடா செய்கிறார்..?”
“அந்த அருணாச்சலம் அண்ணாச்சி வீட்டில் போய் நம் மைதிலிக்கு திருமணம் பேசிவிட்டு வந்திருக்கிறார்..?”
“ஏன்டா அதனால் என்ன..?”
“என்னம்மா இப்படி சொல்கிறீர்கள்..? நாம் படித்த குடும்பம்.. அவர்கள் படிக்காத பட்டிக்காடுகள்.. அவர்களுக்கு போய் நம் மைதிலியா..?”
“கலெக்டர்.. டாக்டர்னு உன் தங்கைக்கு நீ கொண்டு வந்த வரன்களையெல்லாம் விட்டு விட்டு உன் அப்பா இப்படியா ஒரு அவசர முடிவெடுப்பார்..?” போலியாய் தலையில் கைவைத்துக் கொண்டாள் சரஸ்வதி..
“என்னம்மா தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கலைன்னு என்னைக் குத்தி காட்டுறீங்களா..? இப்போதானே படிப்பையே முடித்திருக்கிறாள்.. அதற்குள் அவளுக்கு என்ன அவசரம்..! இன்னும் இரண்டு வருடங்கள் போகட்மென்று நினைத்தேன்..”
“நீ படிப்பு முடிந்து எத்தனை வருடம் கழித்து கல்யாணம் முடித்தாய் ராகவா..?”
“அம்மா என் விசயம் வேறு.. எனக்கு தோதான, பிடித்தமான வரன் வந்தது.. முடித்தேன்.. மைதிலிக்கு அப்படி இல்லை.. இது அவளுக்கு கொஞ்சமும் பொருந்தாத இடம்..”
“ஜாதக பொருத்தம் பத்து இருக்கிறது ராகவா..”
“ஐயோ வாழ்க்கை பொருத்தம் வேண்டாமா..?”
“அதுவும் இருப்பதாகத்தான் நாங்கள் நினைக்கிறோம்..”
“ம்ஹீம் உங்களிடம் பேசி பயனில்லை.. நான் மைதிலியிடமே பேசிக் கொள்கிறேன்..”
“மைதிலி.. மைதிலி..”
“அவள் மாடியில் இருக்கிறாள்..”
கத்தியபடி படியேறி வந்த அண்ணனை அவன் வீட்டிற்குள் நுழையும் போதே பார்த்து விட்டாள் மைதிலி.. வரட்டுமென்று மாடியிலேயே உட்கார்ந்திருந்தாள்..
“மைதிலி பயப்படாமல் சொல் உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லைதானே..?”
படபடத்து தன் முன் நிற்கும் அண்ணனை பார்த்து புன்னகைத்தாள் மைதிலி..




“அப்படி ஒன்றும் இல்லை அண்ணா.. பிடித்துத்தான் அப்பாவிடம் சம்மதம் சொன்னேன்..”
“முட்டாள்.. எந்த படித்த பெண்ணும் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாள்.. நீ அப்பா அம்மாவிற்காக தியாகம் செய்வதாக நினைத்துக் கொண்டு..”
அண்ணனின் பேச்சை கையுயர்த்தி நிறுத்தினாள்..
“உங்களை போலவே என்னையும் அப்பா அம்மா உணர்வுகளை மதிக்காமல் உதறி விட்டு போய் எனக்கான வாழ்வை அமைத்துக் கொள்ள சொல்கிறீர்களாண்ணா..?”
ராகவன் அதிர்ந்து நின்றுவிட்டான்.. கொஞ்ச நேரம் அவனுக்கு பேச்சே வரவில்லை.. மைதிலி பொறுமையாக அண்ணனின் அடுத்த கேள்விக்கு காத்திருந்தாள்..
“மைதிலி என்னை முன் வைத்து இந்த திருமணத்திற்கு நீ சம்மதம் சொல்லியிருந்தாயானால் உண்மையிலேயே என் நடத்தைகளுக்கு நான் வருந்துகிறேன்மா.. என் விசயம் முடிந்து விட்டது.. பேசிப் பயனில்லை இப்போது இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம்.. மறுப்பு சொல்லிவிடு..”
குன்றலும், கெஞ்சலுமாக ஒலித்த சகோதரனின் குரலில் மைதிலிக்குள்ளும் சிறு நெகிழ்வு..
“உங்கள் அக்கறைக்கு நன்றி அண்ணா.. ஆனால் நான் சம்மதம் சொல்லி, கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பமாகி விட்டது.. இனி நிறுத்த முடியாது..”
ராகவன் சோர்ந்தான்.. அவன் முகத்தில் வேதனை வெளிப்படையாக தெரிந்தது..
“ஜாக்கிரதை மைதிலி..” தங்கையின் தலையை வருடி விட்டு போய்விட்டான்..
“ம்.. என்னவோ ஓரேடியாகவே நம்மை விட்டு ஒதுங்கி போய்விட்டானென நினைத்தேன்.. இன்னமும் அவனுக்கு நம் வீட்டின் மேல் கொஞ்சம் அக்கறை இருக்கிறது..” சரஸ்வதிக்கு மகனின் செய்கையில் சந்தோசம்தான்..
அதே நிலைதான் மைதிலிக்கும்.. தன் பாதை தனக்கென பார்த்துக் கொண்டு போய்விட்டாலும் அண்ணனுக்கு என் மேல் பாசம் இருக்கத்தான் செய்கிறது.. திருப்திப்பட்டுக் கொண்டாள்..
ஆனால் இரவு வீட்டுக்கு வந்த சிவராமன் மகன் வந்து போன செய்தியறிந்ததும் வேறு சொன்னார்..
“அவனது படித்த மனைவி குடும்பத்தினர்களுக்கு தன் தங்கையை இதுபோல் ஒரு படிக்காத குடும்பத்தில் திருமணம் முடித்துக் கொடுக்க போகிறோமென சொல்வதே அசிங்கமாக நினைத்திருப்பான்..”
இருக்குமோ எனத் தோன்றிவிட்டது.. அம்மாவிற்கும் மகளுக்கும்.. இதை சொல்லும் போது கரகரத்துவிட்ட தந்தையின் குரலிலும், வழிந்து விட்ட கண்ணீரை முகம் திருப்பி துடைத்துக் கொண்ட தாயையும் பார்த்து மைதிலியின் மனது நொந்தது.. மிக ஆணித்தரமாக பரசுராமனுடனான திருமணத்தில் நிலை நின்றது.
பெண் பார்க்கவென்ற பெரிய வேன் நிறைய கும்பலாக மாப்பிள்ளையை தவிர மற்றவர்கள் எல்லோரும் வந்தார்கள்..
“ஏன் மைதிலி இந்த குஞ்சு குளுவானுங்கெல்லாமா உன்னைப் பெண் பார்க்க போகுது..?”
பத்து நேருக்கு குறையாமல் வீட்டிற்குள்ளும், வெளியிலும் ஓடிக் கொண்டிருந்த குழந்தைகளை காட்டிக் கேட்டாள் கிரிஜா.. அவளுக்கு இந்த சம்பந்ததில் படு திருப்தி.. எங்கே நாத்தனர் தன் பிறந்த வீட்டை விட பெரிய இடத்திற்கு மணம் முடித்து போய் விடுவாளோ.. என்ற பயத்தில் இருந்தவளாயிற்றே எனவே கணவனுக்கு விருப்பமில்லா இத்திருமணம் அவளுக்கு மிக விருப்பமான ஒன்றாக இருந்தது..
பெண் பார்க்க வரும்போது நான் வந்து உங்களுக்கு உதவுகிறேன் அத்தை, என்று சரஸ்வதியிடம் போனில் சர்க்கரையாய் பேசி காலையிலேயே வந்துவிட்டாள்.. அதிசயமாக வீட்டை ஒட்டடை அடித்து தூசு தட்டி அள்ளி, துடைத்து பளிச் சென்று மாற்றினாள்..
“நம்ம மைதிலி மணம் முடித்து போகப் போகும் இடம் பெரிய இடம் அத்தை.. அவர்கள் பார்வையில் நம் வீட்டில் சிறு குறையும் தென்பட்டு விடக்கூடாது பாருங்கள்..” அவள் சொன்ன விதத்தில் இவள் குறை இருக்க வேண்டு மென்கிறாளா..? கூடாது என்கிறாளா..? என்ற சந்தேகம் அனைவர்க்கும் வந்தது..
“மாலை சிறு டிபனாக பஜ்ஜி, சொஜ்ஜி நாங்க செஞ்சிருவோம்.. ஆனால் பொண்ணு பிடித்து விட்டதென்றால் அவர்கள் இரவு கை நனைத்து விட்டுத்தான் போவார்கள்.. அதனை எங்களால் செய்ய முடியாது.. நீங்கள் எதற்கும் பக்கத்து ஹோட்டலில் இட்லி, சப்பாத்திக்கு சொல்லி வையுங்கள்..” கணவனை ஏவினாள்.
“அவர்கள் முதலில் பெண்ணை பிடித்திருப்பதாக சொல்லட்டும்..” பல்லைக் கடித்தான் ராகவன்..
“சொல்லிடுவாங்க ராகவ்.. அப்படிபட்டவங்களைத்தான் மாமா இப்படி வீட்டுக்குள் விடுவார்.. இல்லை மாமா..?”
காலையிலிருந்து எளிதில் கணிக்க முடியாதபடிக்கு இவ்வகையிலேயே பேசிக் கொண்டிருந்தாள் கிரிஜா.. சரஸ்வதிக்கு தன் மகனை மருமகள் பெயர் சொல்லி அழைப்பது பிடிக்காது.. அது தெரிந்தும் அடிக்கடி மாமியார் முன்பாகவே கணவனை பெயர் சொல்லி அழைப்பது கிரிஜாவின் வழக்கம்..
தன் வழக்கத்தை இன்னும் செவ்வனே செய்தபடி, சுறுசுறுப்பாக வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்தாள்.. உதவிக்கென வந்த பக்கத்து வீட்டு பெண்களை நானே பார்த்துக் கொள்வேனென திருப்பி அனுப்பினாள்..
அவர்கள் நல்ல அருமையான மருமகள் சரசு உனக்கு எனப் புகழ்ந்தபடி போனார்கள்.. இந்த அண்ணியின் நோக்கம் என்னவாக இருக்கும் மைதிலி யோசித்தாள்.. இதுதான் என அடிக்கடி கிரிஜா அவளுக்கு காட்டினாள்..
“குக்கர் கூட கிடையதாம் அத்தை.. பானையை அடுப்பில் ஏற்றி சோறாக்குவார்களாம் அவுங்க வீட்டில்..”
“இரண்டு கார் வீட்டில் நின்றாலும் பஸ்ஸில் போவார்களாம்.. அது மாதிரி பைக் இருந்தாலும் சைக்கிள் தானாம் அவுங்க வீட்டில்..”
அங்குமிங்குமாக பரபரத்து வேலை பார்த்தபடி அவள் சொன்ன அவுங்க வீடு – அருணாச்சலம் அண்ணாச்சி வீடு.. மைதிலி மணம் முடித்து புகப் போகும் வீடு.
அந்த வீட்டினை பற்றிய விபரங்களை, வீட்டு ஆட்களின் குணங்களை கிரிஜா விரல் நுனியில் வைத்திருந்தாள்.. எப்படித்தான் இத்தனை விபரங்களை சேர்த்தாளோ தெரியவில்லை.. இதுவே நல்ல விபரங்களாக இல்லை என்பது அதில் கூடுதல் விசேசம்..
இத்தனை தகவல்களை கொடுத்து அதில் பயந்து மைதிலியின் இந்த திருமணம் நின்று போய்விட வேண்டுமென்று அவள் நினைத்தாளா.. என்றால் அப்படி இல்லை..
இத்தனை பயம் தரும் தகவல்களையும் சொல்லிவிட்டு..
“ஆனால் நல்ல வசதி அத்தை.. வெள்ளிக்கிழமை கோவிலுக்கு கூட அந்த வீட்டு பொண்ணுங்க பட்டுப்புடவைதான் கட்டிட்டு வருவாங்க..” என்பாள்..
“அருணாச்சலம் அண்ணாச்சி சம்பந்திண்ணா இனி உங்களுக்கு கடைத்தெருவுல நல்ல மரியாதை இருக்கும் மாமா.. கீழமாசி வீதியே உங்களை பார்த்து எழுந்து நிற்கும் பாருங்க..” என்பாள்..
இரண்டு மணி நேரத்தில் மைதிலிக்கு கிரிஜாவின் நோக்கம் புரிந்துவிட்டது.. அவள் இந்த திருமணம் நடக்க வேண்டுமென்றுதான் மிக விரும்பினாள்.. ஆனால் ஐயோ இனி என் வாழ்வு என்னவாகுமோ.. எப்படி போகுமோ..? என்ற பயத்துடனேயே மைதிலி இந்தத் திருமணத்தை செய்து கொள்ள வேண்டுமென்று நினைத்தாள்..
பெரிய இடத்து சம்பந்தம் அமைந்து விட்டதென மாமனாரோ, மாமியாரோ, நாத்தனாரோ ரொம்பவும் அகமகிழ்ந்து விடக்கூடாது.. இதுதான் அவள் எண்ணம்.. மொத்ததத்தில் இந்த திருமணம் நடந்தால் கிரிஜா மகிழ்வாள்.. நடக்காவிட்டால் மிக மகிழ்வாள்..
“நூறா..? நூற்றைம்பதா..? எத்தனைபவுன் கேட்டிருக்காங்க அத்தை..? நீங்க எத்தனை பவுன் போடுறதா சொல்லியிருக்கீங்க..?” அம்மாவின் வாயை கிளறிக் கொண்டிருந்த அண்ணியின் உச்சந்தலையை பிளக்கும் வேகம் மைதிலிக்கு வந்தது.. அவளது போன் ஒலித்து அவளது வேகத்திற்கு தடை விதித்தது..
ரவீந்தர் அழைக்கிறான் என சொன்ன தனது போனை இப்போது எடுத்து பேசவா.. அப்படியே விட்டு விடவா..? என யோசித்து, எடுக்கலாம் என்ற முடிவுக்கு அவள் வந்த போது போன் நின்றுவிட்டது.. ஐயையோ.. எதுவும் முக்கியமான விசயமாக இருக்குமோ..?
அவள் பயத்தை சரிசெய்வது போல் ரவீந்தர் மீண்டும் அழைத்தான்..
“மைதிலி இன்று உன்னைப் பார்க்க வருவதாக இருந்தேன்.. ஆனால் எனக்கு இங்கே ஒரு அவசர வேலை வந்துவிட்டது.. நமது வகுப்பு தோழி நந்தினி, இருக்காள்ல அவளுக்கு ஒரு பிரச்சனை.. அவள் ஊரில் யாரோ அவளை லவ் பண்றேன்னு சொல்லிட்டு, இப்போ நான் எப்போ சொன்னேங்கிறானாம்.. நான் போய் அதை என்னன்னு பார்த்து முடித்துவிட்டு வருகிறேன்.. நாம் இன்னொருநாள் மீட் பண்ணலாம் பை..”
அவளது பதிலை எதிர்பாராமல் படபடத்துவிட்டு போனை வைத்துவிட்டான்.. இவனுக்கு ஊருக்கு உழைப்பதை தவிர வேற வேலை கிடையாது போல, நல்லவேளை இன்றே இவனையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை… பெருமூச்சுடன் போனை அணைத்தவளின் பின் வந்து நின்றாள் கிரிஜா..
“யார் மைதிலி..?” அவள் கண்கள் யாரென்று தெரிந்து கொண்டு விட மாட்டோமா.. என்ற தவிப்புடன் அவள் போனில் பதிந்தன..
“என் ப்ரெண்ட்..”
“ஓ.. ஆம்பளை ப்ரண்டா..? பொம்பளை ப்ரண்டா..?”
மைதிலி அண்ணியை முறைத்தாள்.. எவ்வளவு இன்டீசன்டான செய்கைகள்.. படித்தவள் போன்றா இவள் நடந்து கொள்கிறாள்..? இந்த லட்சணத்தில் இவள் இருந்து கொண்டு, வரப் போகிறவர்களை பட்டிக்காடுகள் என பழிக்கிறாள்..
“அட ஏன்மா முறைக்கிற..? இது மாதிரி போனை எடுத்துட்டு போய் தனியா நின்னுக்கிட்டு குசுகுசுன்னு பேசுறது உன் புகுந்த வீட்டு ஆட்களுக்கு.. அதான் கல்யாணம் முடிச்சு நீ புகப் போறியே அந்த வீட்டு ஆட்களுக்கு பிடிக்காதே.. அதைத்தான் சொல்ல வந்தேன்..” சுற்றி வளைத்து தன் பேச்சை மைதிலியை காயப்படுத்தும் விதமாகவே அமைத்தாள்..
அப்போதுதான் வாசலில் வந்து நின்ற வேனிலிருந்து ஓவென்ற கூச்சலுடன் சுற்றுலா இடத்தை பார்க்கும் பாவனையுடன் குழந்தைகள் கூட்டம் ஒன்றும் உள்ளே நுழைந்தது.. மைதிலி வேகமாக உள்ளறைக்குள் நுழைந்து கொண்டாள்..




சோபா, சேர், பாய், ஜமுக்காளம் என வீட்டினுள் ஒரு இடம் பாக்கியில்லாமல் நிரம்பிய பிறகும் ஐந்து பேர் வீட்டினுள் அமர இடமின்றி வாசல்படியில் நின்று கொண்டிருந்தனர்.. சம்பிரதாயம் மாறாமல் பெண்கள் அனைவரும் பட்டு சேலையும் கழுத்து நெரித்த நகைகளுமாக இருக்க, ஆண்கள் அனைவரும் வெள்ளை வேட்டி, சட்டையும் முறுக்கிய மீசையுமாக இருந்தனர்..
ஹாலின் பாதிப்பகுதி அவர்கள் கொண்டு வந்து வைத்த சீர்வரிசை தட்டுகளிலேயே நிரம்பி விட்டது..
“மாப்பிள்ளை வரலையாம் மைதிலி.. அம்மா, அப்பா பார்த்தால் போதும்.. நான் பார்க்க வேண்டிய அவசியம் இல்லைன்னுட்டாரு எந்த மாதிரி ஒரு அம்மா பிள்ளை பாரேன்.. தனக்கு தேவையில்லை யென்றாலும், அந்த பெண் தன்னை பார்க்க வேண்டுமென்று நினைப்பாளேன்னு யோசிக்க தோன்றிவில்லை பாரு…” ராமாயண கூனியெல்லாம் தன் அண்ணியிடம் ஐடியா பிச்சை எடுக்க வேண்டுமென்று மைதிலிக்கு தோன்றியது..
“அவர் முன்பே என்னை பார்த்திருக்கலாம்..” அன்று நடந்த சம்பவத்தை மனதில் வைத்து சொன்னாள்.. ஆனால் அது அவனுக்கு நினைவிருக்குமா..? அது நடந்த ஒரு வருடம் இருக்குமே.. அத்தோடு அவன் அப்போது அந்த ஆளை வெட்டும் வெறியில் இருந்தான்..
“ஓ நீ அப்படி யோசிக்கிறாயா.. சரிதான்.. ஆனால் நீ அவரைப் பார்க்க வேண்டாமா..?” கிரிஜா தனது துருவலை விடுவதாக இல்லை..
“நானும்தான் அவரை பார்த்திருக்கிறேன்..” மைதிலி பொறுமையிழந்து படபடத்தாள்..
“நீயும் பார்த்திருக்கிறாயா..? எங்கே..? எப்போது..? நேருக்கு நேராக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டீர்களா..?” கிரிஜாவின் கேள்விகள் கூர்மையாக வந்து விழுந்தன.. அவள் கண்களை ஒரு மாதிரி இடுக்கியபடி நாத்தனாரை ஆராய்ந்தாள்..
அதற்குள் பெண்ணை அழைத்து வாருங்கள் என வெளியே சத்தம் கேட்க, கிரிஜா மைதிலியை அழைத்துப் போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள்..
அவ்வளவு பெரிய உறவுக் கும்பலுக்கும் இரண்டு நிமிடம் போதுமாக இருந்தது மைதிலியை பிடித்திருப்பதாக சொல்ல.. இரண்டாவது நிமிட முடிவிலேயே எழுந்த மகாராணி.. அதுதான் அருணாச்சலத்தின் மனைவி பெயர்.. பெரிய மல்லிகை பந்தை மைதிலியின் தலையில் முடியை இழுத்து சொருகினாள்..
“உங்கள் வீட்டு பெண்ணை எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்துவிட்டது.. அவளை எங்கள் வீட்டு மருமகளாக்க சம்மதிக்கிறோம்..” பெரிய மனுசியாக சபை நடுவில் நின்று அறிவித்தாள்..
அதுவரை கிரிஜாவிற்கு ஓ.கேதான்.. ஆனால் அதன் பிறகு நடந்ததுதான் அவளது தலையை கிறுகிறுக்க வைத்தது அனல் மூச்சு விட வைத்தது..
மகாராணி மைதிலிக்கு பரிசாக நீட்டிய வெள்ளி தாம்பாளத்தில் ஐம்பதினாயிரம் மதிப்புள்ள வைர ஊசி பட்டுப்புடவையும், அன்னங்கள் வரிசையமைத்து ஓடிய பட்டையான மரகதக்கல் மாலையும் இருந்தன..

What’s your Reaction?
+1
2
+1
2
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
lavanya
lavanya
4 years ago

super novel….

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!